நேர்மையின் நாயகன்-டி என்.சேஷன் | T.N.Sesan | Sesan |
நினைவேந்தல்
நேர்மையின் நாயகன் ;
'நான் ஒன்றும் இந்திய அரசாங்கத்தின் ஊழியர் கிடையாது அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, நான் இந்திய நாட்டின் ஊழியர்' என துணிச்சலாக பேசி ஒரு தேர்தல் ஆணையருக்குள்ளான அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக பயன்படுத்தி தேர்தல்களத்தில் பல புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தவர்தான் டி.என்.சேஷன் என்ற திருநெல்லை நாராயண சேஷன் ஆவர். ஆட்சியில் இருப்பவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் அரசு நிர்வாகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு தன்னாட்சி அமைப்பின் அதிகாரி இந்த எல்லை வரை தான் நேர்மையாக இருக்க முடியும் அதற்கு மேல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்துதான் செல்ல வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் உடைத்தெறிந்து சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தான் எனக்கான எல்லை அந்த எல்லைக்குள் என்னைத் தவிர வேறு யாரும் கோலோச்ச முடியாது என்ற அளவுக்கு நேர்மையின் நாயகனாக விளங்கினார்.
பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழகப்பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்தான் தேர்வாகிறார். பல வருடங்கள் மாநில அரசுப்பதவிகளில் பணிபுரிந்தார். சேஷனின் நேர்மை மாநில அரசை சுரண்டி பார்க்க, திடீரென மத்திய அரசுக்கு மாற்றுதலாக்கப்பட்டார். அங்கேயும் நேர்மையானவர்களை மட்டும் குறிவைத்து தாக்கும் ட்ரான்ஸ்வர் நோய் இவரையும் தாக்கியது. இவர் கால்பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு பணி மாறுதல்கள் இவரை துரத்தின. 'காலையில் வீட்டில் இருந்து புறப்படும்போது ஒரு துறையின் அதிகாரியாக புறப்படுவேன். மாலையில் வீடு திரும்பும்போது வேறொரு துறையின் அதிகாரியாக வருவேன். அதிகபட்சமாக ஒரே நாளில் ஆறு துறைகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறேன்' என நேர்மைக்கு கிடைத்த நெருடலான பரிசுகளையும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார் சேஷன். 1990 ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியம்சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக்க பரிந்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 10 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார். அரசிடமிருந்து இப்படி ஒரு அழைப்பு வருகிறது என்று ராஜீவ் காந்தியிடம் கூறுயிருக்கிறார் சேஷன். அதற்கு ராஜீவ் காந்தி "இப்போது உங்களை தாமாக வந்து அழைக்கிறார்கள்.ஆனால் இன்னும் கொஞ்ச காலத்தில் உங்களை எதற்காக அழைத்தோம் என வருத்தப்பட போகிறார்கள்' என கூறினாராம். ராஜீவ் காந்தியின் வார்த்தைகள் சேஷனின் நேர்மைக்கு கிடைத்த மணிமகுடம். ராஜீவ் கூறியிதை போலவே சேஷன் தலைமை தேர்தல் ஆணையர் ஆன பிறகு ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அத்தனை கட்சித் தலைவர்களும் ஏன் அன்றைய பிரதமருக்கும் கூட சேஷனின் நேர்மையான நடவடிக்கைகள் புகைச்சலை கிளப்பின. தேர்தலை ஒழுங்காக நடைமுறைபடுத்த இவர் எடுத்த நடவடிக்கைகள்தான் இன்று உலகளவில் இந்தியா அதிக வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கூறிக்கொள்ள முக்கிய காரணமாகும். முன்பெல்லாம் தேர்தல் பிரச்சாரமென்றால் இரவு பகல் என்று பாராமல் கட்சித்தலைவர்கள் மைக்பிடித்து வாக்குசேகரிப்பார்கள், விளம்பரம் என்ற பெயரில் ஊர்முழுவதும் கொடிகட்டி போஸ்டர்மயமாக்குவார்கள், தேர்தல் நாளன்று ஒவ்வொரு கட்சியினரும் தனித்தனியாக வேன்பிடித்து ஆட்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்வார்கள், அடையாள அட்டைகள் இல்லாததால் சகட்டுமேனிக்கு கள்ள ஓட்டுகளும் அதிகரித்தது, உச்சபட்சமாக வாக்குச்சாடியை கைப்பற்றும் வேலைகளெல்லாம் அரங்கேறியுள்ளன. ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சே.மு அதாவது சேஷனுக்கு முன் என எடுத்துக்கொள்ளலாம். சேஷன் தலைமை தேர்தல் ஆணையர் ஆன பிறகு இந்த சட்டமீறல்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக கடிவாளமிட்டார். ஆட்சியிலிருப்பவர்கள் ஒத்துழைப்பின்மையை கடந்து இந்திய வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இந்திய தேர்தல் வரலாற்றிலே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திட்டம் இதுவாகும்.இதன் மூலமும் தேர்தலில் வாக்களிப்பவர்கள் குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்தனர். தேர்தல் பிரச்சாரங்கள் சுவரொட்டி கலாச்சாரம் போன்றவை முறைப்படுத்தப்பட்டன. தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை கண்காணிக்கப்பட்டது. என் வேலையை நான் சரியாக பார்க்கிறேன் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என ஆட்சியிலிருப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு புரட்சிகரமாக செயல்பட்டார். பஇத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் சேஷனை சூப்பர்ஸ்டாராக பார்க்க தொடங்கினர். அவருக்கென ரசிகர்மன்றங்கள் உருவானது ஒரு தனிக்கதை. 90 களுக்கு பிறகு நேர்மையான அதிகாரிகள் குறித்து தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு சேஷன் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பார்.
சேஷன் புதிதாக எல்லாவற்றையும் செய்தார் எனக்கூறுவதை அவரே ஏற்கமாட்டார் ஏனெனில் அவர் இங்கு ஒரு தன்னாட்சி பெற்ற அரசமைப்பின் அதிகாரிக்கு கட்டமைக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் நின்றுதான் பயணித்தார். ஆனால் முன்னெப்போதும் யாரும் பயன்படுத்திராத அளவுக்கு அந்த கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்திக்கொண்டார். '30 வருடங்களுக்கு மேலாக ஒரு அரசு அதிகாரியாக கொத்தடிமைப் போல் இருந்தேன். ஆட்சியிலிருப்பவர்கள் சொல்வதை கேட்கத்தான் முடியும் நம்மால் பேசமுடியாது.' 90 களில் சேஷன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். சேஷன் காலத்தில் இருந்த அதே நிலை இன்றும் நீடிப்பது பெருந்துயரம். இன்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்களால் முழு சுதந்திரத்தோடு வேலை செய்ய முடியவில்லை என பணியிலிருந்து வெளியேறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இன்றைய தேர்தல் ஆணையம், வருவாய் துறை, சிபிஐ போன்றவை எந்த அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன யாருக்கு கரிசனம் காட்டுகின்றன என்பது ஊரறிந்த விஷயம். இன்றைய நிலையில் ஒரு சேஷன் அல்ல ஒவ்பொரு துறைக்கும் ஒரு சேஷன் உருவாக வேண்டும்.
Comments
Post a Comment