உலகம் மீண்டும் இயங்குவதற்கான அத்தனை நம்பிக்கையையும் ஸ்போர்ட்ஸ் மட்டுமே கொடுக்கிறது! #ThankYouIPL

 

உலகம் மீண்டும் இயங்குவதற்கான அத்தனை நம்பிக்கையையும் ஸ்போர்ட்ஸ் மட்டுமே கொடுக்கிறது! #ThankYouIPL

ஸ்போர்ட்ஸால் என்ன செய்ய முடியும்? தோல்வியை ரசிக்க செய்ய முடியும். அடக்குமுறைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்ய முடியும். பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைய செய்ய முடியும். கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக ஓங்கிய ஒவ்வொரு விளையாட்டு வீரனின் கைகளும், பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டத்திற்காக ஸ்டாண்டிங் ஓவியேசன் கொடுக்கும் இந்திய ரசிகனின் மனமுமே இதற்கு சான்று. வரலாறு நெடுகிலும் பற்றி பரவியிருந்த அடக்குமுறைகள், பிரிவினைவாதங்கள் போன்ற கொடூர நோய்களுக்கு முதல் தடுப்பூசியாக ஸ்போர்ட்ஸ் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இப்போது நுண் கிருமியின் விளைவாக உலகம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து நூற்றாண்டு காணாதது. அரசியல்...அதிகாரம்..பணபலம்..அறிவியல்...மருத்துவம் என அத்தனையும் கையறு நிலையில் கொரோனா வைரஸ் முன்பு ஏறக்குறைய மண்டியிட்டுவிட்டது. ஒலிம்பிக் முதலான முக்கிய போட்டிகளே கொரோனா அச்சத்தினால் தள்ளிப்போனதை பார்க்கும் போது, எப்போதும் இதே மாதிரியான அசாதரணமான சூழ்நிலைகளில் நம்பிக்கை கீற்றாக இருக்கும் ஸ்போர்ஸுமே கூட கொரோனோவிடம் தோற்றுவிட்டதோ என தோன்றியது. ஆம், ஸ்போர்ட்ஸும் கையறு நிலைக்கு சென்றதுதான். ஆனால், வேறெந்த துறைக்கும் முன்பாக முதல் ஆளாக முழித்துக்கொண்டு லாக்டவுணில் முடங்கி கிடந்த உலகத்தை முதன்முதலாக அன்லாக் செய்யத் தொடங்கியது ஸ்போர்ட்ஸ்தான்.

'I Retire' என ஒரு பதிவை சில நாட்களுக்கு முன்பு பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பி.வி.சிந்து பேட்மிண்டனிலிருந்து ரிட்டயர் ஆகிவிட்டார் என சில மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களே அரைகுறையாக அவசரகதியில் புரிந்துக்கொண்டு கம்புசுற்றியது கேலிக்கூத்து. அது ஒருபுறம் இருக்கட்டும். 'கொரோனா பயங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட்டு நாட்டுக்காக ஆடப்போகிறேன்' என்பதுதான் அந்த பதிவின் உண்மையான சாரம்சம்.

கொரோனா பாதிக்கப்படுவதை விட பயங்கரமானது...கொரோனா ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்தால் பாதிக்கப்படுவது. மக்களிடம் ஆட்கொண்டிருந்த அந்த பயத்தை ஓரளவுக்கேனும் நீக்கிய பெருமை ஸ்போர்ட்ஸையே சேரும். உலக சுகாதார நிறுவனமும் சரி உலக நாடுகளும் சரி மக்களுக்கு வழங்கிய ஒரே அறிவுரை. வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், மாஸ் அணியுங்கள் என்பது மட்டும்தான்.
ஒரு 700 கோடி மக்கள் தொகையை மொத்தமாக வீட்டிற்குள் பூட்டி வைக்க இந்த அறிவுரைகள் மட்டும் போதுமென அனைவரும் நம்பினர். ஆனால், நமக்கே தெரியும் லாக்டவுனில் நாம் இது எதையும் முழுமையாக கடைபிடித்திருக்க மாட்டோம். காரணம், அப்படி செய்தால் தொற்று உண்டாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது 'இங்கே பாருங்கள் அவர்கள் இப்படி செய்தார்கள் அதனால் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார்கள்' என உதாரணமாக காட்டுவதற்கு கூட யாரும் இல்லை. அப்படி காட்டப்பட்டிருந்தால், 'விதி வலியது' என்பதையெல்லாம் மறந்து அனைவரும் மாஸ்க்கையும் தனிமனித இடைவெளியையும் முழுமையாக நம்பியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த இடத்தில்தான் ஒட்டுமொத்த ஸ்போர்ட்ஸ் சமூகமும் உலகத்துக்கே உதாரணமாக மாறியுள்ளது. ஜீன்-ஜீலையிலிருந்து எங்கே எந்த விளையாட்டு நடந்தாலும்  'பயோ பபிள்' என்கிற நடைமுறை கடைபிடிக்கப்படுவதை அறிந்திருப்போம். அந்த பயோ பபிள்தான் இந்த கொரோனா ஒழிப்புக்கான ஆகச்சிறந்த உதாராணம். தேவையின்றி வெளியே செல்லாமல், தனிமனித இடைவெளியை கடைபிடித்து, அரசு சொல்கிற அத்தனை கொரோனா விதிமுறைகளையும் கடைபிடித்தால் கொரோனாவை முற்றுமாக ஒழிக்கமுடியும். இதைத்தான் பயோ பபிள்கள் செய்துக்கொண்டிருக்கின்றன. நாடுவிட்டு நாடு பறந்து நூற்றுக்கணக்கான வீரர்களை வைத்து இரண்டு மாதம் கொரோனா அபாயமின்றி ஒரு ஐ.பி.எல் தொடரையே நடத்திவிட முடிகிறதே. (சில வீரர்களுக்கு தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன). கோடிக்கோடியாக வாங்கிவிட்டு அவர்களால் அதையெல்லாம் செய்ய முடியும் நம்மால் எப்படி? என கேள்வி எழலாம். சரிதான், 'பயோ பபிள்கள்' மூலம் வழியற்ற கரடுமுரடான பாதையில் இந்த உலகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக அரசின் விதிமுறைகள் வலியதுதான் அதை கடைபிடித்தால் ஓரளவுக்கேனும் நம்மை காத்துக்கொள்ள முடியும் என்கிற வழியை அனைவருக்கும் படம் போட்டுக்காட்டியுள்ளது இந்த விளையாட்டு சமூகம். மாஸ்க் அணிந்தால், தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் கொரோனாவை நிச்சயம் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது அல்லவா அதை மட்டுமாவது எடுத்துக்கொண்டு தீபாவளி பர்சேஸில் கொஞ்சம் ஜாக்கிரதையாக ஈடுபடுங்களேன்...

கொரோனாவின் மீதான அதீத பயமும் மனச்சிக்கலும் நமக்கு தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது எது? 24/7 நியுஸ் மீடியாக்கள். தினமும் 6 மணிக்கு கொரோனா புல்லட்டினை ப்ரேக்கிங் நியுஸாக போட்டி பிபி ஏற்றியது. ஒருநாளில் 30 கேஸ் என்றாலும் அதே அலறல் மியுசிக்கோடு ப்ரேக்கிங் நியுஸ்தான். 3000 கேஸ் என்றாலும் அதே அலறலோடு ப்ரேக்கிங் நியுஸ்தான். இது அவர்களின் கடமை அதில் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இவை நம் மீது உளவியல் ரீதியாக என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பது ரொம்பவே முக்கியம்.

மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் பார்த்திருப்போம். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வேலை செய்பவரின் மகன் சுடலை என்கிறவன் தான் அந்த படத்தின் வில்லன். சிறு வயதிலிருந்தே தொடர்ச்சியாக தினமும் பிணங்களையும் அழுகுரலையும் மட்டுமே கேட்டு கேட்டு வளரும் அந்த சிறுவனுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் பிணங்கள் எதுவும் எரிபடுவதற்கு வரவில்லை எனில் எரிச்சலாகி மனச்சிதைவு ஏற்படும். ஊருக்குள் சென்று இவனே கொலைகளை செய்ய தொடங்கி பிணங்களை பார்த்து ரசிக்க தொடங்கிவிடுவான். இதற்கு பெயர் 'Sadistic personality disorder'. இது ஒரு மனவியாதி. இது அந்த சுடலைக்குள் மட்டும் இல்லை. நாம் ஒவ்வொருவர்க்குள்ளும் இருக்கிறது. ரோட்டில் திடீரென எதாவது விபத்து நடந்துவிட்டால், கூடி நின்று எட்டி எட்டி பார்ப்போம். அந்த விபத்தில் யாருமே இறக்கவில்லையெனில் நமக்கு எதோ ஒருவித ஏமாற்றம் உண்டாகும். ஒருவேளை, அந்த விபத்தில் யாராவது இறந்திருந்தால் பரிதாபப்படுகிறோம் என்கிற பெயரில் ஒருவித திருப்தி நமக்குள் உண்டாகியிருக்கும். மேலே, அந்த சுடலைக்குள் இருந்தது ஒரு Extreme sadistic personality disorder. நமக்கு இருப்பது ஒரு குறைந்தபட்ச SPD. இது எல்லாருக்குள்ளுமே இருக்கும். நம்மை நாமே ஒருமுறை கவனித்துப்பார்க்கும் போதுதான் இது புரியும். கொரோனா காலத்தில் இந்த மனநிலை நம்மிடம் அதிகமாக வெளிப்பட்டது. விபத்துகளின் போது கூட்டத்திலிருந்து எட்டிப்பார்ப்பதை போல ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அனிட்ச்சையாக நாம் நியுஸ் சானல்களை அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தோம். இதெல்லாம் எப்போது முடியும் என மேலோட்டமான கவலையின் வெளிப்பாடாக இது தெரிந்தாலும், உள் மனதில் தினமும் கொரோனா எண்ணிக்கை கூடுவதில் எதோ ஒருவித புரிந்துக்கொள்ள முடியாத திருப்தி உருவாவனது. தினமும் தெருவில் நாம் ஒரு விபத்தை சந்தித்து 'நான் இன்னைக்கு ஒரு ஆக்சிடண்ட பார்த்தேன்பா...ஆளு ஸ்பாட் அவுட்டு' இப்படியெல்லாம் பார்க்கிறவர்களிடம் எல்லாம் கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், தினமும் இத்தனை கேஸ்..இத்தனை இறப்பு...எங்க ஏரியால அவருக்கு வந்துட்டு...இவருக்கு வந்துட்டு" என நெகட்டிவ்வாகவே தினமும் பேசுவதற்கான சூழ்நிலையை இந்த கொரோனா ஏற்படுத்திக்கொடுத்தது. அதாவது நம்மிடம் 4% மட்டுமே இயல்பாக இருக்கும் Sadistic personality disorder படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இது கொடுத்த ஒரு வித பயமும் மனிதநேயமற்ற தன்மையும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களையும் கூட அமைதியான முறையில் புதைக்கவிடாமல் சிலரை எதிர்ப்பு தெரிவிக்க வைத்தது.

மொபைல் திறந்தால்..பேப்பரை திறந்தால்..டிவியை திறந்தால்..நம் வாயை திறந்தால் என எங்கேயும் கொரோனாமயமாக இருந்தால் 2050 ஆனாலும் நாம் கொரோனாவை விட்டு மீண்டிருக்க முடியாது. இப்போது இந்த கொரோனா பேச்செல்லாம் கொஞ்சம் அடங்கி கவனம் வேறு பக்கமாக திரும்பியிருக்க காரணம் ஐ.பி.எல். இதுவரை இல்லாத அளவுக்கு பார்வையாளர்களை உள்ளே இழுத்து விவாதங்களை கிளப்பி விட்டது. கொரோனா பேச்சை முற்றிலுமாக மறந்து கடந்த இரண்டு மாதங்களாக மும்பை இந்தியன்ஸ் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றியும் விவாதித்து சண்டை போட்டு ட்ரோல் செய்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் கொரோனா இருக்கிறது, ஆனால் நம்மிடம் பயமில்லை. ஒரே நெகட்டிவ் அலைகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்த மனவோட்டத்தை குதூகலப்படுத்தி புதிய இயல்பு நிலையில் உற்சாக நடைபோட வைத்துள்ளது.

டென்னிஸ், ஃபுட்பால் என அத்தனை விளையாட்டுகளும் தொடங்கியிருந்தாலும் இந்தியர்களுக்கு சரியான பலனை கொடுத்தது என்னவோ கிரிக்கெட்தான்.

இங்கிலாந்து சம்மர் சீசன், CPL  என எல்லாமே இந்தியர்களுக்கு ஒரு மனவெழுச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக, கடந்த 52 நாட்களில் நடந்த 60 ஐ.பி.எல் போட்டிகளுக்கும் தனி நன்றி சொல்ல வேண்டும். இந்த உலகம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதற்கான அத்தனை நம்பிக்கையையும் ஸ்போர்ட்ஸ் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறது. #ThankYouSports #ThankYouIPL #ThankYouCricket

- Vj Sriram


Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review