Stalin Vs EPS #ADMK #DMK

வெற்றி நடைபோடும் தமிழகமே Vs உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின் வர்றாரு விடியல் தர்றாரு... கிரிக்கெட் விளையாட ஒரு காலத்தில் வீரர்கள் மட்டும் போதுமானவர்களாக இருந்தார்கள். அதன்பிறகு அவர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர் குழு தேவைப்பட்டது. அதன்பிறகு கொஞ்ச கொஞ்சமாக வீடியோ அனலிஸ்ட், டேட்டா அனலிஸ்ட் போன்றவர்கள் உருவாகத் தொடங்கினர். இப்போது எல்லா அணிகளிலும் இந்த எதிரணியின் பலம் பலவீனத்தை ஆய்ந்து கொடுக்கும் அனலிஸ்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேமாதிரிதான், அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் காலங்களில் வியூகங்களை வகுக்க முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகளும் மூத்த தலைவர்களுமே போதுமானவர்களாக இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. எல்லா கட்சிகளுக்கும் வியூகங்கள் வகுத்துக்கொடுப்பதற்கு என்றே இப்போது பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்களின் பங்கு பெரிதாக இருக்கப்போகிறது. தி.மு.க பல கோடிகளை கொடுத்து பிரஷாந்த் கிஷோரின் IPAC நிறுவனத்தை வியூக வகுப்பாளர்களாக நியமித்திருக்கிறது. அ.தி.மு.க வுக்கு சுனில் தலைமையிலான OMG நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த சுனில் என்பவர் கடந்த தேர்தல்களில் தி.மு.க வுக்காக வியூகங்களை வகுத்துக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நிறுவனங்களும் இரண்டு கட்சிகளுக்கும் செல்வாக்கை உயர்த்தும் வேலைகளில் ஏற்கனவே ஈடுபட தொடங்கிவிட்டன. ஸ்டாலின் வர்றாரு விடியல் தர்றாரு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ஆகிய பிரச்சார திட்டங்களை இதுவரை IPAC தி.மு.க வுக்கு கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க வுக்கு வெற்றிநடைபோடும் தமிழகமே என்கிற விளம்பர திட்டத்தை OMG செயல்படுத்தி வருகிறது. இரண்டு நிறுவனங்களும் இரண்டு கட்சிகளுக்கு கொடுத்துள்ள இந்த பிரச்சார விளம்பரங்களின் அடிப்படை நோக்கம் அதிகப்படியான வாக்களர்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதே. ஆக, இதுவரை வெளியாகியுள்ள விளம்பரங்களில் யாருடைய விளம்பரம் அதிக நபர்களை சென்று சேர்ந்திருக்கிறது? என்பதை பார்ப்போம். இணையத்தில் எந்த பக்கத்தை திறந்தாலும் எந்த வீடியோவை க்ளிக் செய்தாலும் முதலில் தி.மு.க வின் விளம்பரமே வருகிறது. இணையம் முழுவதும் தி.மு.க விளம்பரங்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது. நல்ல யுக்தி, நல்ல விளம்பரம். ஆனால், இதனால் என்ன பயன்? ஏற்கனவே இணையத்தில் தி.மு.க வின் ஐடி விங் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இணையத்தில் உலாவும் இளைஞர்களில் பாதி பேர் தி.மு.க க்கு சார்பாகத்தான் இருக்கிறார். இதைத்தாண்டி இணையத்தில் இருக்கும் படித்தவர்கள், நல்ல உத்யோகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவு மனநிலையிலேயே இருக்கிறார்கள். இப்படி ஏற்கனவே வலுவான நிலையில் இருக்கும் இடத்தில் மேலும் மேலும் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? இங்கே ஒரு 10% வாக்காளர்கள்தான் இருப்பார்கள். மீதம் 90% வெளியேதான் இருக்கிறார்கள். பிறகு எதற்கு இணையத்திற்கு மட்டும் அவ்வளவு அதீத கவனம்? அதேநேரத்தில் அ.தி.மு.க பக்கம் வருவோம். இவர்களின் வெற்றிநடை போடும் தமிழகமே விளம்பரம் பெரியளவில்(தி.மு.க அளவுக்கு) இணையத்தில் வருவதில்லை. மாறாக, அத்தனை செய்தித்தாள்களின் முதல் பக்கத்திலும், அத்தனை டிவி சேனல்களின் இடைவேளையின் போதும் வருகிறது. சன் டிவியில் கூட அ.தி.மு.க வின் விளம்பரம் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க வின் வாக்கு வங்கி பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள், கிராமத்தினர், வயதானவர்கள் ஆகியோர்தான். இணையத்திற்கு வெளியேதான் இவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களை முழுமையாக சென்று சேர மற்றும் அவர்களின் வாக்குகளை இழக்காமல் இருக்க அவர்கள் அதிகம் புலங்கும் இடங்களில்தான் விளம்பரம் செய்தாக வேண்டும். இதை OMG சரியாக புரிந்துக்கொண்டு விளம்பரம் செய்கிறது. வெற்றிநடை போடும் தமிழகம் என்பது உண்மையோ பொய்யோ அந்த விவாதங்களை பிறகு வைத்துக்கொள்வோம். ஆனால், அவர்களின் அந்த விளம்பர யுக்தி மக்கள் மத்தியில் நல்ல சென்று சேர்ந்திருப்பதாக தெரிகிறது. வெ.ந.போ.த வை கலாய்த்தோ விமர்சித்தோ கேலி செய்தோ எப்படியோ அது அவர்கள் டார்கெட் செய்த கூட்டம் வரை சென்று சேர்க்ப்பட்டுவிட்டது. வெற்றிநடை போடும் தமிழகமே பாசிட்டிவ்வாகவோ நெகட்டிவாகவோ எப்படியோ மக்களின் மனதில் பதிந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் தி.மு.க கூடாரம் சறுக்கியிருக்கிறது. இணையத்தில் மட்டுமே இவர்கள் முழு கவனம் செலுத்துகின்றன. செய்தித்தாள்களில் தொலைக்காட்சிகளில் இவர்களின் விளம்பரத்தை பெரிதாக காணமுடியவில்லை. 90% வெளியே இருக்கும் வாக்காளர்கள் மத்தியில் தி.மு.க வின் பிரச்சாரம் பெரிதாக சென்று சேரவில்லை. ஒன்றிணைவோம் வா, ஸ்டாலின் வர்றாரு விடியல் தர்றாரு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என மாதத்துக்கு ஒரு பெயரில் பிரச்சாரத்தை திட்டமிடுவதும் மக்கள் மனதில் பெரிதாக இடம்பெறாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கலாம். 'நமக்கு நாமே' மாதிரியாக ஒரே பிரச்சார திட்டத்தை முழுமையாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினால் இன்னும் அதிகமாம சென்று சேர்ந்திருக்க முடியும். கடந்த முறை ஸ்டாலினுக்கு 'நமக்கு நாமே' திட்டத்தை வகுத்துக்கொடுத்த சுனில்தான் இந்த முறை அ.தி.மு.க வுக்கு 'வெற்றிநடைபோடும் தமிழகமே' என்கிற ஒற்றை திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார். செய்தித்தாள்களிலும், டிவிக்களிலும் தி.மு.க பெரிய கவனம் செலுத்தாமல் இருப்பதால் போட்டியேயின்றி இந்த களத்தில் புகுந்து விளையாடுகிறது வெற்றிநடைபோடும் தமிழகமே! தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கும் 100 நாட்களில் குறைகளை தீர்க்கும் திட்டம் மிகப்பெரிய வரவேற்கக்கூடிய முயற்சி. இது மக்களுக்கு பெரும் நன்மையை கொடுக்கலாம். ஆனால், முதலில் இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு, அ.தி.மு.க வை போன்று 90% வாக்காளர்களை டார்கெட் செய்து விளம்பரம் செய்ய வேண்டும். மேலும், இந்த திட்டத்தை வைத்து ஸ்டாலினை ஒரு பாசிட்டிவ்வான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி 'நியாய்' என்ற திட்டத்தை பற்றி பேசியிருந்தார். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழைகளுக்கி மாதம் 6000 ரூபாய் அதாவது வருடத்திற்கு 72000 கொடுக்கப்போவதாக அறிவித்தார். இது மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய வகையிலான மிகப்பெரிய திட்டம். ஆனால், காங்கிரஸ் இதை முதன்மையாக வைத்து அந்த திட்டத்தால் பயனடையப்போகிற வாக்காளர்களை குறிவைத்து பிரச்சாரம் செய்யாமல் 'சௌகிதார் ஜோர்ஹை' என மோடி எதிர்ப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. ரிசல்ட் என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்கிற திட்டம் காங்கிரஸின் 'நியாய்' ஐ விட மிகப்பெரும் பயனளிக்கக்கூடிய திட்டம். இந்த திட்டத்தால் பயனடையப்போகும் பாமரர்களை சென்று சேரும் வகையில் அவர்களின் விளம்பர யுக்தி அமைய வேண்டும். மேலும், இந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் விளம்பர யுக்தியையே முதன்மையாக பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 நாளில் வேறு எதோ ஒரு வாசகத்தோடு வேறு எதோ யுக்தியோடு களமிறங்கினால் நிச்சயமாக எந்த விளம்பரமும் மக்கள் மனதில் பதியாது. ஸ்டாலின் வர்றாரு விடியல் தர்றாரு என்கிற வாசகம் அச்சடித்த போர்டிங்குகளை பெட்டி கடைகளில் கடந்த ஒன்றிரண்டு நாட்களாக பார்க்க முடிகிறது. இதேமாதிரியான யுக்திகளை தொடர்ந்து செய்தால்தான் தி.மு.க வின் விளம்பரங்கள் எடுபடும். - உ.ஸ்ரீ #Stalin #EPS #DMK #ADMK #IPAC #OMG

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review