ஸ்டார்க் எனும் இரும்புக்கை மாயாவி! #Starc #IndVsAus
ஸ்டார்க் எனும் 'இரும்புக்கை மாயாவி'
சம்பவம் 1: 2015 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணியின் கேப்டன் ஆன ப்ரெண்டன் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஒரு அசுரத்தனமான யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுக்கிறார்.
சம்பவம் 2: 2017 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் வின்ஸ் இன்கம்மிங் டெலிவரி என நினைத்த ஒரு பந்து திடீரென டீவியேட் ஆகி போல்டை தகர்க்கிறது.
சம்பவம் 3: 2019 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இடையேயான ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் ஒரு இன்ஸ்விங்கிங் யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுக்கிறார்.
மேலே குறிப்பிட்ட இந்த மூன்று சம்பங்களும் வெவ்வெறு காலக்கட்டதில் வெவ்வேறு போட்டிகளில் நிகழ்த்தப்பட்டவை. ஆனால், அந்த சம்பவத்தில் பலிகடாவான மெக்கல்லம், வின்ஸ், ஸ்டோக்ஸ் என மூவரின் முகத்திலும் ஒரே ரியாக்சன்தான். அது மிரட்சி. இங்கே ஒரு எண்ட்டில் இவர்கள் பேட் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் இன்னொரு எண்ட்டிலிருந்து அவர் ஓடிவந்தார். அவர் கையிலிருந்து பந்து ரிலீஸ் ஆனது. அதன்பிறகு என்ன நடந்தது? நிச்சயமாக தெரியவில்லை. என்ன நடந்தது? மொத்த கூட்டமும் கூச்சலிடுகிறது. அப்போதுதான் புரிகிறது அவர்கள் தங்களின் விக்கெட்டை இழந்துவிட்டார்கள். இரும்புக்கை மாயாவியிடமிருந்து மின்னல் வேகத்தில் வந்த பீரங்கிக்குண்டுகள் அவர்களை மொத்தமாக ஏமாற்றிவிட்டது. வீழ்த்தவே முடியாதவர்கள் என்பது போன்ற தோரணையை வெளிப்படுத்திய பேட்ஸ்மேன்களின் இருமாப்பை உடைத்தெறிவதற்கு அவருக்கு எப்போதுமே ஒரே ஒரு பந்து போதுமானதாக இருந்தது. மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் அப்படிப்பட்ட ஒரு பந்தைதான் அவர் வீசினார். இவ்வளவு பில்ட் அப் கொடுப்பதற்கு உரித்தானவராக உலகக் கிரிக்கெட்டில் இப்போது ஒரே ஒரு பௌலர்தான் இருக்கிறார். அந்த பௌலர் 'மிட்செல் ஸ்டார்க்' தான் என்பதை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம், அவரே அந்த இரும்புக்கை மாயாவிக்குதான் இன்று பிறந்தநாள்.
பந்துவீசுவதற்கு முன்பு பந்தை கையில் எடுத்தவுடனேயே பேட்ஸ்மேனை மிரண்டு போகச் செய்யும் விசித்திரமான சக்தி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அந்தளவுக்கு பேட்ஸ்மேனை பயமுறுத்தும் வகையிலான பௌலர்கள் இப்போது மிகக்குறைவாகவே உருவாகிக்கொண்டு இருக்கின்றனர். டி20யின் வளர்ச்சி, பேட்ஸ்மேன்களின் மீதான ரசிகர்களின் அதீத ஈர்ப்பு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதிமுறைகள் என இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி இவ்வளவு சிரமங்கள் உள்ள இந்த டிகேடில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமாகி வந்து நின்றாலே பேட்ஸ்மேன்களை பதற வைக்கும் வகையில் ஸ்டார்க் உயர்ந்திருப்பது பெரும் ஆச்சர்யம்.
குட் லெந்த், ஷார்ட் பிட்ச் ஆகிய லெந்தில் தொடர்ந்து வீசி விக்கெட்டுகளை எடுப்பதுதான் பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்டைல். இந்த லெந்தில் தொடர்ந்து வீசும் பௌலர்களைத்தான் டீசண்ட்டான சரியான லைன் & லெந்தை பிடித்து வீசும் பௌலர்கள் என பண்டித்கள் விவரிப்பர். ஆனால், மிட்செல் ஸ்டார்க் இந்த இலக்கணத்தை உடைத்து உயர்ந்தவர். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் ஃபுல் லெந்த் டெலிவரிக்களிலும் யார்க்கர்களிலும் வந்தவையாகவே இருக்கும். உதாரணமாக, கடந்த 2019 உலகக்கோப்பையில் 27 விக்கெட்டுகளை ஸ்டார்க் வீழ்த்தியிருந்தார். இதில் 13 விக்கெட்டுகள் ஃபுல் லெந்தாகவும் யார்க்கராகவும் வீசப்பட்டு பவுல்டு மற்றும் lbw ஆகியிருக்கும். ஃபுல் லெந்தில் வீசப்பட்டு கேட்ச்சான விக்கெட்டுகளை இதில் சேர்க்கவில்லை. அதையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். இந்த டிகேடில் ஸ்டார்க் அளவுக்கு ஃபுல் லெந்தில் பந்துவீசி விக்கெட் எடுத்த பௌலர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
குட்லெந்த் மற்றும் ஷார்ட் பிட்ச்சாக வீசப்படும் டெலிவரிகளில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்கள் அடிப்பதை விட ஃபுல் லெந்தில் ஸ்லாட்டில் வீசப்படும் பந்துகளில் எளிதாகவே பெரிய ஷாட்களை அடித்துவிடுவார்கள். இதனாலயே இதை ஒரு நல்ல லெந்தாக ஏற்பதற்கு பலரும் மறுக்கின்றனர். ஐ.பி.எல் ன் போது 'யார்க்கர் ஒரு ஓவர் ரேட்டட் டெலிவரி' என நெஹ்ராவும் பேசியிருந்தார். ஆனால், ஸ்டார்க் இந்த லெந்த்களில்தான் அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். இந்த முரண் எப்படி அவருக்கு ஒர்க் அவுட்டானது?
140+ க்கு மேல் வீசும் திறனுடைய அவருடைய வேகமும் அவரின் பந்தை ஸ்விங் செய்யும் திறனும் அவருக்கு பெருமளவில் கைக்கொடுக்கிறது. அவரின் வேகம் சில நேரங்களில் பேட்ஸ்மேனை ஏமாற்றிவிடும். அவரின் ஸ்விங் சில நேரங்களில் பேட்ஸ்மேனை ஏமாற்றிவிடும். மேலே, குறிப்பிட்ட மூன்று சம்பங்களையுமே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
2015 உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகளை எடுத்து ஆஸியின் வெற்றிக்கு பெரியளவில் உதவிபுரிந்திருந்தார். அந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஸ்டார்க்தான். 2019 உலகக்கோப்பையில் 27 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டியிருந்தார். அந்த உலகக்கோப்பையிலும் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் ஸ்டார்க்தான். வெறுமென ஃபுல் லெந்த்தை மட்டுமே நம்பியிருக்கும் பௌலரால் நிச்சயமாக இரண்டு உலகக்கோப்பை போட்டிகளிலெல்லாம் ஆதிக்கம் செலுத்திவிடவே முடியாது. ஸ்டார்க் அதையும் தாண்டி குட் மற்றும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களிலும் அதிக கவனம் செலுத்துகிறார். நியுபால்களில் அவரின் குட்லெந்த் பந்துகளும் அபாயகரமானதாக இருப்பதால்தான் அவரால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. மேலும், அவரின் ஃபுல் லெந்த் பந்துகளும் அவரின் குட்லெந்த் பந்துகள் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைவதற்கு காரணமாக அமைகின்றன. ஃபுல் லெந்த் பந்துகள் பேட்ஸ்மேனை ஷாட் ஆட தூண்டி பேட்டை இழுக்கும் சக்தி படைத்தவை. இந்த பந்துகளில் ஒரு பேட்ஸ்மேன் ஷாட் ஆட முடியாமல் திணறுகிறார் எனில் அது தனிப்பட்ட முறையில் அவருக்கு பெரும் கோபத்தை உண்டாக்கி ஈகோவை தூண்டும். இது ஸ்டார்க் வீசும் மற்ற லெந்த் பந்துகளிலும் பேட்ஸ்மேனை ஷாட் ஆட தூண்டும். அப்படி தூண்டப்பட்டுவிட்டாலே அந்த விக்கெட் ஸ்டார்க்கின் பெயரில் எழுதப்பட்டுவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம்.
மெக்ராத், ப்ரெட்லீக்கு பிறகு ஆஸியின் வேகப்பந்து வீச்சு முகமாக மிரட்டலாக எழுந்து நிற்கிறார் ஸ்டார்க். உச்சத்தில் இருந்தாலும் தன்னுடைய மனைவி கிரிக்கெட் ஆடும் போட்டியை காண்பதற்காக லீவ் போட்டுவிட்டு மைதானத்துக்கு வந்து எதோ ஒரு ஓரத்தில் உட்காந்து மனைவியை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த பண்பில் பெரிதாக கவர்ந்திழுத்துவிடுகிறார் ஸ்டார்க். இப்போது பெரிய அளவில் அவர் ஃபார்மில் இல்லையென்றாலும் 2023 உலகக்கோப்பை வரைக்கும் அவர்தான் ஆஸியின் கீ பௌலராக இருக்கப்போகிறார். அதனால் அவர் சீக்கிரமே மீண்டு வருவார். ஷேன் வார்னே ஒரு முறை ஸ்டார்க்கை கடுமையாக விமர்சித்த போது, 'நான் பந்துவீசுவதற்காக காசு வாங்குகிறேன். அவர் பேசுவதற்காக காசு வாங்குகிறார். ஆனால், நான் எதையும் கேட்பதில்லை' தேவையின்றி அவர் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு ஸ்டார்க்கின் பதிலடி இதுதான். So, Keep Calm.. He will arise soon!
- Vj Sriram
Comments
Post a Comment