ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவரே!! #RossTaylor

ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவரே!! உலகளவில் கொண்டாடப்படுபவர்கள் எல்லாருமே எதோ ஒரு வகையில் தனித்துவமான திறமையை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், திறமையானவர்கள் அத்தனை பேருமே இங்கே கொண்டாடப்படுகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஸ்டார் அந்தஸ்துடைய ஒரு முன்னணி பிரபலத்துக்கு கிடைக்கும் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்கு பின்னால் இரண்டாம் வரிசையில் நிற்கும் பிரபலங்களுக்கு கிடைத்ததேயில்லை. கிரிக்கெட் உலகில் ராஸ் டெய்லரும் அப்படியான கொண்டாட மறந்த இரண்டாம் வரிசையில் நிற்கும் வீரர்தான். ஆனால், அவரின் பெர்ஃபார்மென்ஸ்கள் என்றைக்கும் நியுசிலாந்தை முதல் வரிசையை நோக்கியே நகர்த்தியிருக்கின்றது. நியுசிலாந்தை நெடுங்காலமாக 'அண்டர்டாக்ஸ்' என்கிற வகைமைக்குள்ளேயே கிரிக்கெட் உலகம் வைத்திருந்தது. இதனாலேயே அந்த அணியின் பெரும் திறமையாளர்கள் பலரும் பெரிதாக புகழ் வெளிச்சத்தை பெறாமலேயே இருந்தனர். மெக்கல்லம் கேப்டனாகி அதிரடியாக நியுசிலாந்து அணியை முன்னகர்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற காலக்கட்டத்தில்தான் நியுசிலாந்து ஒரு அணியாக முழுமையாக புகழ் வெளிச்சம் பெற்றது. இதற்கிடையில் சிக்கிக்கொண்டவர்தான் ராஸ் டெய்லர். 2006 இல் ஃப்ளெம்மிங்கின் காலக்கட்டதில் அறிமுகமாகினார் ராஸ் டெய்லர். மெதுமெதுவாக சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம்பிடித்த சமயத்தில் ப்ரண்ட்டன் மெக்கல்லம் அதிரடி சூரராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டார். அதன்பிறகு வில்லியம்சன், கப்தில் என அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க எப்போதுமே பெரிய புகழ் வெளிச்சம் படியாத நிலையிலேயே ராஸ் டெய்லர் இருந்தார். கொண்டாடப்படவில்லை என்பதற்காக அவரின் சாதனைகளையும் தனித்துவங்களையும் பதிவு செய்யாமல் இருந்துவிடமுடியாதே! ராஸ் டெய்லர் கிரிக்கெட் புக்கில் உள்ள அத்தனை ஷாட்களையும் ஆடும் பேட்ஸ்மேனோ அல்லது நவீன டி20 பேட்ஸ்மேன்கள் போல 360* ஷாட்களோ உடையவர் கிடையாது. ஸ்லாக் ஸ்வீப், புல் ஷாட், லேட் கட் என ஒன்றிரண்டு டெம்ப்ளேட் ஷாட்களை மட்டும்தான் ஆடுவார். பெரும்பாலும் லெக் சைடில் மட்டுமே ஷாட்கள் ஆடுவதால் இவருக்கான லைன் & லெந்தை பிடிப்பதை சுலபம். ஃபீல்ட் செட் செய்வது சுலபம். இப்படி குறைபாடுகளுடைய எளிதில் கணிக்கக்கூடிய டெக்னிக்குகளை உடைய ஒரு பேட்ஸ்மேன் ஒரு சில சீரிஸ்களுக்கு தாக்குப்பிடிப்பதே சிரமம். ஆனால், இந்த அமைதிப்புயலான ராஸ் டெய்லர் 15 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் வெற்றிகரமாக ஆடி வருகிறார். அதுதான் ஆச்சர்யம்! அதுதான் ராஸ் டெய்லரை கொண்டாடி தீர்க்க வேண்டிய வீரராக மாற்றுகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் ஏறக்குறைய 50 ஆவரேஜ் வைத்திருக்கிறார். டெஸ்ட், டி20 போட்டிகளில் ஆடினாலும் ஒருநாள் போட்டிகள்தான் ராஸ் டெய்லருக்கு ரொம்பவே ஸ்பெசல். ஒருநாள் போட்டிகளில் இந்த டிகேடில் நியுசிலாந்து அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ராஸ் டெய்லர் மிக முக்கிய காரணமாக இருந்தார். ஓப்பனிங்கிலும் லோயர் மிடில் ஆர்டரிலும் வீரர்கள் வருவார்கள், போவார்கள். சீரற்ற பெர்ஃபார்ம்களை கொடுப்பார்கள். ஆனால், நம்பர் 4 இல் நியுசிலாந்துக்கு அப்படி எதுவும் நடந்ததே இல்லை. காரணம், அது டெய்லருடைய ஸ்பாட். 20-40 ஓவர்களில் அவ்வளவு சீராக ஸ்கோர் செய்திருக்கிறார். சேஸிங்கின் போது பல சிறப்பான சம்பவங்களை செய்திருக்கிறார். 330+ சேஸிங்கின் போது இங்கிலாந்துக்கு எதிரான 181* இந்தியாவுக்கு எதிரான 109* இரண்டும் வெகு சமீபத்திய உதாரணங்கள். கடந்த மூன்று வருடங்களில் கேன் வில்லியம்சை விட ஒருநாள் போட்டிகளில் அதிக ஆவரேஜை வைத்திருக்கிறார். ஆனாலும், கிரிக்கெட் உலகம் அவரின் மீது போதுமான வெளிச்சத்தை இன்னமும் பாய்ச்சவே இல்லை. ஆனால், இதைப்பற்றியெல்லாம் ராஸ் டெய்லர் கவலைப்படுவதாகவே இல்லை. 2010 இல் இந்தியா,நியுசிலாந்து,இலங்கை மோதிய ஒரு ட்ரை சீரிஸின் போட்டியில் நியுசிலாந்திடம் இந்தியா 88 ரன்னில் ஆல் அவுட் ஆகியிருக்கும். முதல் பேட்டிங் செய்த நியுசிலாந்து சார்பில் ராஸ் டெய்லர் 95 ரன்களை அடித்ததற்காக அவருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டிருக்கும். எந்த சலனமும் ஆர்ப்பரிப்பும் இல்லாமல் சிறிய புன்னகையுடன் வந்து விருதை வாங்கியிருப்பார் டெய்லர். அங்கிருந்துதான் ராஸ் டெய்லர் என்னை ஈர்க்க ஆரம்பித்தார். அந்த 95 ரன்கள்தான் ராஸ் டெய்லரின் ஆட்டங்களை இன்று வரை பூரிப்போடு பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது. யாரும் கொண்டாடாவிட்டாலும் எந்த புகழ் வெளிச்சமும் அவர் மீது விழாவிட்டாலும் அதே மென் சிரிப்போடு மிட்விக்கெட்டில் பொளேரென ஷாட்களை ஆடிக்கொண்டே இருப்பார். அதுதான் ராஸ் டெய்லர்! HappyBirthdayRoss!

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz