கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz
கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்!
#WTCFinals #Kohli #IndVsNz
பேராண்மை படத்துல ஜெயம் ரவி ஒரு வசனம் பேசுவாரு. 'இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சிட்டா..வெறும் சுண்ணாம்பு மட்டும்தான் மிஞ்சும்' இதே மாதிரியே 'கடந்த 10 ஆண்டுகளுக்கான இந்திய அணியில் கோலியின் பங்களிப்பை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சாது'. அப்படி கோலி இல்லாத ஒரு அணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு தசாப்தத்தை முழுக்க முழுக்க தன்னுடையதாக்கியிருக்கிறார். விஜய் ஹசாரேவிலிருந்து ஆரம்பித்து கபில்தேவ், சச்சின், தோனி வரிசையில் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவெடுத்திருக்கிறார். ஆனாலும் நான் கோலியை ஒரு சபிக்கப்பட்ட மாவீரன் என்றே கூறுவேன்.
கபில்தேவ், சச்சின், தோனி என முன்னவர்கள் எதிர்கொள்ளாத அத்தனை விமர்சனங்களையும் வெறுப்புகளையும் கோலி எதிர்கொண்டிருக்கிறார். அவருக்கு ஞாயமாக வழங்கப்பட வேண்டிய க்ரெடிட்கள் கூட வழங்கப்பட்டதில்லை. அது கூட பரவாயில்லலை. ஆனால், விமர்சனங்கள். அதை விமர்சனம் என்று கூட சொல்ல முடியாது. கோலி டக் அவுட் ஆனதற்கு அனுஷ்கா சர்மா குறித்து பக்கம் பக்கமாக ரைட் அப் எழுதுவதையும் மீம் போடுவதையும் விமர்சனம் என்றா சொல்ல முடியும்?. அது ஒரு வெறுப்பு பிரச்சாரம். ஆழ்மன வக்கிரம். இதை யாரை தெருவில் செல்லும் நபர் பேசினால் கடந்து போகலாம். ஆனால், கோலி விஷயத்தில் அப்படியில்லை. பத்திரிகைகள், கமெண்டேட்டர்கள் தொடங்கி பேஸ்புகள் விஞ்ஞானிகள் வரை இதுதான் நிலைமை. கடந்த ஐ.பி.எல் ன் போதெல்லாம் கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் வைத்தே அனுஷ்கா சர்மா குறித்து லூஸ் டாக் விட்டிருந்தார்.
கோலி அனுஷ்கா சர்மாவை கூடவே கூட்டி செல்வதுதான் உங்களுக்கு பிரச்சனையா?? கோலி மட்டும்தான் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா? இப்போது இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய குடும்பத்தை அணியுடனேயே தங்கவைத்துள்ளனர். மற்ற வீரர்கள் அப்படி செய்வதில் உங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை. சிஎஸ்கே கேம்ப்பை எதோ பிக்னிக் ஸ்பாட் மாதிரி தோனி மாற்றினாரே. அது உங்களுக்கு பிரச்சனையாக இல்லையா? அது என்ன கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் மட்டும் ஓவராக குரல் எழுப்புகிறீர்கள்? சிஎஸ்கேவின் தோல்வியை கேதார் ஜாதவின் தலையில் கட்டியதை போல இந்தியாவின் தோல்விகளை அனுஷ்கா சர்மாவின் தலையில் கட்டிவிடுகிறீர்கள். நான் அடித்து சொல்கிறேன், ஒரு வேளை இந்த போட்டியை இந்தியா தோற்றால் நிச்சயம் அனுஷ்கா சர்மாவை உள்ளிழுத்து கோலியை விமர்சிப்பார்கள். நான் ஒரு வெறித்தனமான தோனி ரசிகன். கோலி ஒவ்வொரு முறை சென்ச்சூரி அடிக்கும் போதெல்லாம் ஜெலுசில் குடிக்காத குறையாகத்தான் இருக்கும். ஆனால், அந்த ரசிக வெறியில் கூட இப்படி மலினமான விமர்சனங்களை கோலி பற்றி நான் பேசியதில்லை.
இது ஒரு மாதிரியான வக்கிர மனநிலை என்றால் கோலி பற்றி இன்னொரு விமர்சனமும் அடிக்கடி முன்வைக்கப்படும். அது கோலியினுடைய அக்ரசன் சார்ந்தது. மைதானத்தில் கோலி வெளிப்படுத்தும் உணர்வுகள் இவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. சரிதான், கோலியின் அக்ரசனை விமர்சிக்கலாம் தப்பில்லை. ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்கிற பழைய பாட்டி போல விமர்சித்து கோலியை ஒரு கோட்டியாக திரிக்க முயல்கிறார்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எல்லாரும் தோனி, வில்லியம்சன் மாதிரி கமுக்கமாகவே இருக்க வேண்டுமா? அது ஒரு கேரக்டர். இது ஒரு கேரக்டர். ஆனால், இங்கே கொஞ்சம் அக்ரசனோடு இருக்கும் கோலியை நம்பியார் மாதிரியும் கமுக்கமாக இருப்பவர்களை எம்.ஜீ.ஆர் மாதிரியுமல்லவா கட்டமைக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம். வில்லியம்சன் ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும்? என கேட்டால், அவர் நல்லவரு அதுனால ஜெயிக்கனும் என்று சொல்கிற கூட்டத்திற்கு நடுவில் இருப்பதை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இதற்கு கோலியே நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பதில் கூறியிருந்தார். நியுசிலாந்து வீரர்கள் ரொம்ப நல்லவங்க அவங்கள் எதிர்க்கிறத பத்தி என்ன நினைக்கிறீங்க? கோலி : நல்லவங்களா?? எனக்கு புரியல. அப்ப மத்த டீம்ல கெட்டவங்கல்லாம் இருக்காங்களா? நானும் வில்லியம்சனும் நல்ல நண்பர்கள்தான். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் நான் என்னுடைய வேலையைத்தான் பார்ப்பேன்.
கோலியை மட்டும் விமர்சிப்பதற்கு காரணம் இல்லாமல் கண்ட இழவு காரணங்களையெல்லாம் எடுத்து வந்து விமர்சிப்பார்கள்.
கோலியை ஒரு சபிக்கப்பட்ட மாவீரன் என்று சொல்வதற்கான காரணம் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
கோலிக்கு சொல்ல நினைப்பது ஒன்றுதான். தயவு செய்து இந்த கோப்பையை வென்றுவிடுங்கள். இல்லையேல் இந்திய அணிக்கு நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை என வரலாற்றையே மாற்றி எழுதிவிடுவார்கள்.
ஒரு Sports writer ஆக ஒரு உறுதியை மட்டும் கொடுக்கிறேன். இந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் நான் கோலியின் கேப்டன்சி அணுகுமுறை குறித்தும் பேட்டிங் குறித்தும் இன்னபிற கிரிக்கெட் சார்ந்த விஷயங்களை வைத்து மட்டுமே விமர்சிப்பேன். WTC சார்ந்த என்னுடைய எந்த ரைட்டப்பிலும் அனுஷ்கா சர்மா குறித்தோ கோலியின் கேரக்டரை காலி செய்யும் விதத்திலான வக்கிரங்களோ எதுவும் இருக்காது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
-உ.ஸ்ரீ
Comments
Post a Comment