நெஞ்சு பொறுக்குதில்லையே - சுதந்திரம் ?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்றான இந்தியா தனது 72 வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. சுதந்திரம் என்றால் என்ன? என்றால், வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை காந்திஜி,நேரு,நேதாஜி போன்ற தலைவர்கள் போராடி சுதந்திரம் பெற்று தந்தனர் என்பதே பதிலாக வரும்.

அடிமைத்தனத்திலிருந்து மீள்வது மட்டுமே சுதந்திரம் அல்ல. இன்று வறுமை, வேற்றுமை , வன்முறை போன்றவை ஒரு தரப்பினரால் மற்றொரு தரப்பு மீது திணிக்கப்பட்டு வருகிறது.

வன்முறை :
ஓடி விளையாடு பாப்பா- நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி
காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா வில் 8 வயது சிறுமி ஆஸிபா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுவே மிகப்பெரிய கொடுமை இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாட்டை ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே ஊர்வலம் செல்கின்றனர் இதை என்னவென்று சொல்வது ? ஓடி விளையாடிக் கொண்டிருந்த பாப்பாவை ஒரேடியாக ஓய்வெடுக்க செய்து விட்டனரே..

வறுமை :

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இன்று இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய டெல்லியில் மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ரிக்ஷா காரர் ஒருவரின் ரிக்ஷா திருடு போகிறது, தந்தை ரிக்ஷாவை தேடி சென்று விட, தாய் மற்றும் பெண் குழந்தைகள் பட்டினியில் இருக்க, ஒரு வார காலமாக தந்தை வரவில்லை.விளைவு மூன்று குழந்தைகளும் பட்டினியால் அவதியுற்று இறந்தனர். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் என்று பாரதி சொன்னார். இன்று முழு மனிதனாகவே மாறாத மூன்று குழந்தைகளின் உயிரை பட்டினி நோய் சூறையாடி இருக்கிறது.

வேற்றுமை :

திருப்பூர் அவினாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு சத்துணவராக வருகிறார் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்த பெண். அவர் சமைத்து கொடுத்து எங்கள் பிள்ளைகள் சாப்பிட கூடாது என்று கூறி அதே பகுதியைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சாதியினர் பிரச்சனைகள் செய்ய சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். மறுநாள் 29 பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும் அந்த சத்துணவரை பள்ளியை விட்டு விரட்ட பிள்ளைகளையே கருவியாக கொண்டு சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

" சாதிகள் இல்லையடி பாப்பா " என்று பள்ளியில் பாரதி பாடலை பாடிக்கொண்டிருக்கும் வயதில் சாதி என்றால் என்ன அதன் சக்தி என்ன என்று தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே செயல்முறை கல்வி அளித்த பெற்றோருக்கு பாராட்டுகள்.

மேற்குறிப்பிட்ட பாரதி பாடல்கள் அனைத்தும் இந்தியா " முப்பது கோடி முகமுடையாள்" ஆக இருக்கும் போது பாடப்பெற்றது. ஆனால் இன்று 120 கோடி முகமுடையாளாக இருக்கும் போதும் இவை தொடர்வதுதான் நாம் எந்த அளவுக்கு சுதந்திரத்தை பயன்படுத்தியிருக்கிறோம் என்பதற்கான அளவுகோல்.

இவற்றை எல்லாம் களைந்தால் தான்

" ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திர அடைந்துவிட்டோமென்று"  பாட தகுதியானவர்கள் ஆவோம்.

' Happy Independence Day '

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review