உங்கள் ஓட்டு ; உங்கள் உரிமை | YourVoteYourRight
உங்கள் ஓட்டு : உங்கள் உரிமை
சரியாக இன்னும் ஒருவாரத்தில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. மக்களாட்சியின் அழகியலே நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் நாமே வாக்களித்து தேர்ந்தெடுப்பதுதான். நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் அடுத்த 5 வருடத்தில் எடுக்கப்போகும் ஒவ்வொரு நடவடிக்கையும் செயல்பாடுகளும் நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் , பொருளாதாரத்திலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது. ஒரு நல்ல அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமக்கு கிடைத்திருக்கும் அற்புத பரிசுதான் வாக்குரிமை. நமது ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கபோகின்றன. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஜனநாயகம் வலுப்பெறும். நம் நாட்டில் இருப்பதை முழுமையான ஜனநாயகம் என்று கூட சொல்லலாமா என தெரியவில்லை. ஏனெனில் இங்கு பெரும்பான்மை பெறும் வேட்பாளருக்கு செலுத்தப்படும் வாக்குகளுக்கு மட்டுமே மதிப்பு. உதாராணமாக ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருந்தால் 51 வாக்குகளை ஒருவர் பெற்று மீதமுள்ள 49 வாக்குகளும் எதிர் தரப்பினருக்கு சென்றாலும் பெரும்பான்மை பெற்றவர் என்ற அடிப்படையில் 51 வாக்குகளை பெற்றவருக்குத்தான் பதவி வழங்கப்படும். ஆனால் அவரை எதிர்த்து வாக்களித்த 49 வாக்குக்கும் எந்தவித மதிப்போ அங்கீகாரமோ வழங்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட அரைகுறை ஜனநாயகத்தில் நமது ஒவ்வொரு வாக்குமே முக்கியமானதுதான்.
எங்க பார்த்தாலும் ஊழல், எங்க பார்த்தாலும் லஞ்சம், தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ, எம்.பி க்கள் தொகுதி பக்கம் தலையே காட்டுறது இல்ல, தண்ணீ வரல, ரோடு போடல, பஸ் டிக்கெட் உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, படிச்சு முடிக்கிறவனுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்ல ன்னு நம்மக்கிட்ட இருக்கிற மொத்த ஆதங்கத்தையும் கோபத்தையும் விரலின் நுனியில் இறக்கி வாக்கு இயந்திரத்தில் பட்டனை அழுத்த வேண்டிய நேரம் இது.
மதிப்புமிக்க விலைமதிப்பற்ற உங்களுடைய ஓட்டை பணத்துக்காகவும் பரிசுப்பொருளுக்காகவும் விற்பது எவ்வளவு பெரிய அவலம் என்று சிந்தித்து பாருங்கள். உங்களுடைய காரையோ பைக்கையோ வேறு ஒரு நபருக்கு விற்று வீட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வாங்கியவர் அந்த காரையோ பைக்கையோ அடித்து நொறுக்கி குப்பையில் போட்டால் உங்களால் ஏன் என்று கேட்க முடியுமா? முடியாதல்லாவா..ஏனெனில் நீங்கள் அவரிடம் உங்கள் காரை மட்டும் விற்கவில்லை அந்த காரின் மீதான உங்களின் உரிமையையும் சேர்த்து விற்றுவீட்டீர்கள். அதேபோல தான் ஓட்டுக்கு வாங்கும் பணமும். தேர்தல் நாளில் நீங்கள் போடப்போகும் ஓட்டை மட்டும் நீங்கள் விற்கவில்லை. அடுத்த 5 வருடங்களுக்கான உங்களுடைய உரிமையையும் சேர்த்தே நீங்கள் விற்கிறீர்கள் . அதன் பிறகு எங்கள் எம் எல்.ஏ , எம்.பி தொகுதிக்கே வரவில்லை என்று கூறுவதற்கோ, உங்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கோ உங்களுடைய அடிப்படை தார்மீக உரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள். சூதாட்டக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் மீதும் அணியின் மீதும் நமக்கு எந்தளவுக்கு கோபம் வருகிறது. கிரிக்கெட்டே மேட்ச் பிக்சிங் எனக்கூறி கிரிக்கெட்டையே வெறுக்கிறோம். தேர்தலில் பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பதும் எலெக்சன் பிக்சிங் காக இருக்காதா? நாம் ஒவ்வொரும் நம் மீதே கோபப்பட்டு கொள்ள வேண்டாமா?
இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக ஓட்டுக்கு பணம் வாங்குவோம் ஆனால் எங்களுக்கு பிடித்தவர்களுக்குத்தான் வாக்களிப்போம் என்று கூறுவார்கள். கடந்த 50 வருடத்தில் இப்படி வாக்களித்து என்ன மாற்றத்தை கண்டுவிட்டீர்கள்? இருக்கிற இரண்டு கட்சிகள் தானே மாறி மாறி ஆட்சியில் அமர்ந்துள்ளன. இன்னும் சிலர் எல்லாரும் வாங்குகிறார்களே நான் ஒருவன் பணம் வாங்காமல் இருந்தால் என்ன மாறிவிடப்போகிறது ? என கேட்பார்கள், ஒரு புள்ளியிலிருந்துதான் கோடு பிறக்கிறது என்பதை உணருங்கள் மாற்றத்தை விரும்பினால் மாற்றம் என்பது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பணம் கொடுத்தார்கள் வாங்கினோம் , எல்லாரும் வாங்கினார்கள் நானும் வாங்கினேன் என்று கூறுவதெல்லாம் பெருமை கிடையாது. ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் ஆனால் நாங்கள் வாங்கவில்லை என கூறுவதுதான் பெருமை என்பதை உணர வேண்டும்.
சரி, பணத்தை வாங்கிவிட்டு ஓட்டு போடாமல் , நேர்மையாக வாக்களித்தால் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்து நல்லது செய்து விடுவார்களா? என்ற சந்தேகம் எழும். இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மிகப்பெரிய உத்தமர்கள் ஒன்றும் கிடையாது. அவர்களின் கட்சிகள் எதுவும் மக்களின் நலனுக்காக போராடி உரிமைகளை மீட்டெடுத்து கொடுக்கும் இயக்கங்கள் அல்ல. அவர்களின் ஒரே குறிக்கோள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது மட்டும்தான் அதை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எந்த லெவலுக்கும் இறங்குவார்கள். அரசியல்வாதிகள் முக்கியமாக கருதும் தேர்தல் வெற்றியையே உங்கள் துருப்புச்சீட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கின்ற, தேர்தலுக்கு பிறகு மக்களை எட்டிக்கூட பார்க்காத , உங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத, உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாத, வாரிசு அரசியலை தூககிப்பிடிக்கும்,கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் எதிராக வாக்களித்து தோற்கடியுங்கள். ஒரு இரண்டு தேர்தலில் இவ்வாறு தோல்விகளை பரிசாக அளித்தால் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட அரசியல் கட்சியினர் யோசிப்பர்.வெற்றிக்கான வழியை தேடுவர். ஓட்டுக்கு பணம் கொடுக்க தயங்குவார்கள், வேட்பாளர்கள் தொகுதிக்குள் இறங்கி மக்களின் குறைகளை கேட்பர், வாரிசுகள் ஓரம் கட்டப்படுவார்கள். அப்படி நடந்தால் நல்லதொரு அரசியல் மாற்றம் தென்படும். அந்த மாற்றத்திற்கு உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. அதனால 18+ அனைவரும் ஏப்ரல் 18 அன்று கண்டிப்பாக வாக்களித்துவிடுங்கள்....
#YourVoteYourRight
#April18
#ElectionDay
Comments
Post a Comment