சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

முத்தமிழறிஞர் கலைஞர்,


ஐந்து முறை தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும்  வெற்றி,  சட்டமன்றத்தில் வைர விழா கொண்டாடியவர் என பல வரலாற்றுச் சிறப்புகளை பெற்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 96 வது பிறந்த நாள் இன்று.

1957 ம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த திமுக சார்பில் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட   15 பேர் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்கு சென்றனர். அப்போதிலிருந்து கலைஞர் மறைவு வரைக்கும் எத்தனையோ முறை அவரின் கரகர காந்தக் குரலினால் சட்டசபையை அதிரவைத்துள்ளார். முதன்முதலில் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு சென்ற கலைஞர், 1957 ம் ஆண்டு மே4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தனது முதல் சட்டமன்ற உரையை ஆற்றினார். கலைஞரின் கன்னிப்பேச்சு இதோ...

கவர்னர் உரைக்குப் பிறகு தனது கன்னிப்பேச்சை ஆரம்பித்த கலைஞர் அவர்கள்,

'அவைத்தலைவர் அவர்களே, இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை; என்னுடைய கருத்துரையைஆற்றவே வந்திருக்கிறேன்.

கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி இங்கு நண்பர்கள் அபிப்ராயம் தெரிவித்த நேரத்தில், எதிர்க்கட்சியினரைப் பற்றி இங்கு பேசப்பட்ட நேரத்தில், குறை கூறுவதையே எதுர்க்கட்சியினர் தொழிலாக கொண்டு பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. குறைகளை எடுத்துச் சொல்லி நிறைவு பெறுவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமே தவிர, செய்திருக்கிற காரியங்களை  சொல்லி அவைகளை பாராட்டுவதற்காக நாம் இங்கு வரவில்லை. அத்தகைய காரியங்களுக்காக நடத்தப்படுகிற பாராட்டு விழாக்கள் எல்லாம் வெளியிலே அந்த காரியங்களால் பயன் பெறுகிறவர்களால் நடத்தப்படுவது மிகப்பொருத்தமுடையது என்பதை நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. குறைகளை எடுத்துச் சொல்லி சரி செய்து கொள்வதற்காகவே சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோம்.

அந்தக்காலத்தில் மன்னர்கள், மக்களின் குறைகளைத் தெரிந்து அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதற்கு இரவு நேரங்களில் 'நகர் சோதனை' என்ற பெயரால் மாறுவேடம் தாங்கி, மக்களைச் சந்தித்து, அவர்களுடைய குறைகளை எல்லாம் தெரிந்து, கொலுமண்டபத்தில் உட்கார்ந்து அந்த குறைகளைப் போக்கினார்கள் என்று பழைய கால சரித்திரத்திலிருந்து படித்திருக்கிறோம். இது மன்னர்கள் ஆளும் காலம் அல்ல, மக்கள் ஆளுகின்ற காலம். இந்தக் காலத்திலும், அதேபோல் மந்திரிகள் மாறுவேடம் தாங்கி மக்களின் குறைகளை கண்டு வரவேண்டுமென்று நான் கோரவில்லை. நாடகத்திலே அனுபவம் பெற்ற நாங்கள் ஒரு வேளை ஆளும் கட்சியினராக வந்தால் அந்த வேடங்களை போட்டு, மக்களின் குறைகளை கண்டுபிடிக்க முடியும். அந்த அனுபவம் இல்லாத மந்திரிகளை அதைச் செய்ய வேண்டுமென்று நான் கோரமாட்டேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எதிர்க்கட்சி ஒன்று தேவையென்பது எதையெடுத்தாலும் எதிர்த்து பேசுவதற்காக அல்ல என்பதை இங்குப் பேசிய பலர் சுட்டிக் காட்டினார்கள் ஆளுகின்றவர்கள் யாரை துணைக் கொள்ள  வேண்டுமென்பதை பற்றி , வள்ளுவர் பெருமான் தன்னுடைய திருக்குறளில், ' பெரியாரைத் துணைக்கோடல்' என்ற அதுகாரத்தில் ஆளுகின்றவர்கள் பெரியாரைத் தங்களுடைய துணைவராகக் கொள்ள வேண்டுமென்று கூறினார் என்றால் எதையும் 'சரி,சரி' என்று சொல்லி கண்டுக்காமல் இருக்கின்ற பெரியரை அல்ல;

' இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்'

 என்று வள்ளுவர் குறள் வகுத்திருக்கிறார். சபையிலே ஆளுகின்ற தம்மை இடித்துச் சொல்லுகின்ற பெரியாரைத் துணைவராக கொள்ளாத மன்னன் பகைவர்கள் இல்லையாயினும் தன்னைத்தானே கெடுத்துக்கொள்வான் என்று சொல்லியிருக்கிறார்.

கவர்னருடைய உரையைப் பற்றி இங்கு பேசிய பல நண்பர்கள் ' கன்னியாகுமரியை வரவேற்கிறோம்' என்று கூறியிருக்கிறார்கள், அந்தக் கன்னியாகுமரியை நாம் தேவிக்குளக் கரையிலோ அல்லது பீர்மேட்டின் மீதோ நின்றுகொண்ட்டு வரவேற்காமல் சிதைந்துபோன செங்கோட்டையின் மேல் நின்றுகொண்டு வரவேற்கிறோம் என்று எண்ணும் போது, தேவிககுளம் பீர்மேட்டை பெறுவதற்கு வழிவகை காணப்படவில்லை, கவர்னர் உரையில் - என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'.

எக்காலத்திலும் விவசாயிகள் பாடு பெரும்பாடுதான் போலும், அன்றைய விவசாயிகளின் நிலைகுறித்து தனது கன்னிப்பேச்சில் கலைஞர்,

அடுத்து நிலச்சீர்திருத்த சட்டங்களின் பெயரால் , நியாய வாரச் சட்டங்களின் பேரால் விவாசாயிகள் திருப்தியடைந்து சுமூகமான  நிலைமையில் இருக்கிறார்கள் என்று கவர்னர்கள் அவர்களுடைய உரையில் குறிப்பிட்டுருக்கிறார். என்னுடைய குளித்தலை தொகுதியை பொறுத்தவரயிலும் திருச்சி மாவட்டத்திலும் இன்றைய தினம் இந்த நியாய வாரச் சட்டத்தின் காரணமாகவும் எழுந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று அங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மக்களுக்கு வேதனையை உண்டாக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதை யாரும் மறந்துவிடவில்லை.மறுத்துவிடவும் முடியாது.விவசாயிகளின்  வீடுகளில் தங்களின் மனைவி மக்களிடம் வேதனையடைந்து புழுங்கிக்கொண்டிருக்கிறார்கள், குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த நியாய வாரச் சட்டம் காரணமாக குளித்தலை தொகுதி நுங்கவரம் பகுதியிலும் திம்மாச்சிபுரம் பகுதியிலும் விவசாயிகள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தினம் தினம் பத்திரிகைகளில் வரும் செய்திகளை கண்டும் விவசாயிகள் பகுதியில் எழுப்பப்படும் கூக்குரலைக் கண்டும் எந்த முறையில் அங்கு நிலைமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

திருச்சியை பொறுத்தவரையோ அங்கு கையேரு வாரம் என்றும் மாட்டு வாரம் என்றும் இரண்டு விதவாரம் இருக்கின்றன.இப்படி இரண்டு விதமான வாரம் இருப்பதன் காரணமாக அவர்களுக்கு இந்த நியாய வாரச்சட்டம் பயன்படக்கூடாது என்று கருதி அதை விவசாயிகள் பயன் அடையாத முறையில் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று அங்கு தீர்ப்பு வாங்கி வந்திருக்கிறார்கள் . அந்தத் தீர்ப்பின் காரணமாக விவசாயிகள் நியாய வாரச்சட்டத்தின் பயனை அடைய முடியாமலும், வெளியேற்றத் தடுப்புச் சட்டத்தின் பயனை அடைய முடியாமலும் இருக்கிறார்கள். இன்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த ரீதியில் வழங்கி இருக்கிறதும் அதன் காரணமாக மாட்டு வார எருக்காரர்கள் என்றால் யார், கையெருக்காரர்கள் என்றால் யார் என்ற பிரச்சனை எழும்பி அதைப்பற்றி விளக்கத்தை கவனிக்கும்போது தான் நிமைமை தெரிய வருகிறது. மாடும் தந்து அவர்களிடைய சொந்த உழைப்பை சிந்தி நிலம் உடையவர்களிடத்தில் விதை, உரம், எரு இவைகளைப் பெற்று அப்படிப் பெறுகிற அந்த பொருள்களுக்காக விளைச்சலில் அவர்கள் தனியாக தானியமாக அல்லது பொருளாகவோ எடுத்துக்கொண்ட பிறகு 60:40 என்று பெற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் இன்றைய தினம் மாட்டு எருக்காரர்கள் விவசாயிகள் அல்ல என்று உயர்நீதிிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதைப்போல கையேருக்காரர்கள்  யார் என்றால் அவர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடி மக்கள் என்கின்ற பிற்பட்ட மக்கள் பாட்டாளி மக்கள் அப்படிப்பட்ட வர்க்கத்தினருக்காகதான் இந்த நியாய வாரச் சட்டம் செய்யப்பட்டது. அந்த அடிப்படயில் அவர்களுக்கென்று இந்த நியாய வாரச் சட்டத்தையும் நில வெளியேற்ற தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வந்தாலும் அவர்கள் அவைகளின் பயனை அடைய முடியாமல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது. அந்த அடிப்படையிலாவது எந்த அளவிலாவது இந்த நியாய வாரச் சட்டம் அவர்களுக்கு நன்மை வழங்கி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட மாட்டு எருக்காரர்களும் கையேறுக்காரர்களும் சாகுபடியாளர்கள் அல்ல என்கின்ற தீர்ப்புக்கு இன்று ஆளாகி இருக்கிறார்கள். அதன் மேல் அப்பீல் செய்யப்பட்டு மீண்டும் வழக்கு  ஜீலை மாதம் மூன்றாவது வாரத்தில் எடுத்துக் கொள்ளப்போவதாக இருக்கிறது. அதற்குள் விவசாயிகளுடைய நிலைமை என்னவென்றால் முத்து முத்தாக வியர்வை சிந்தி மணி மணியாக நெற்குவியலைத் தந்தவர்கள் களத்துமேட்டிலே காவலர் புடைசூழ அதைக் கொட்டிவிட்டு வீட்டிலே வறுமைத்தேள் கொட்டிட வாடிக்கிடக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் இப்பொழுது நிலவி வருகிற, இப்படிப்பட்ட நிலைமையைப் பற்றி கவர்னர் அவர்கள் தன்னுடைய உரையில் குறிப்பிட மறந்தது வருந்ததக்க ஒன்று. நெருக்கடிக்கு ஆளாகி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உயர்நீதிமன்றம் ஜீலை மாதம் மூன்றாவது வாரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக புதிய இரு திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதையும் துரிதமாகக் கொண்டு வரவேண்டும். ஏழைத் தொழிலாளர்களுடைய, ஏழை விவசாயிகளுடைய அவல நிலைமையை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போகிறது என்பதை பற்றி கவர்னர் அவர்களுடைய  உரையில்  ஒன்றுமே இல்லை என்பதை மிகவும் கவலை கொண்டு தெரிவித்துக் கொள்கிறேன்..

நாடும் முழுவதையும் வாட்டி வதைத்த உணவுப் பஞ்சத்தையும் விலைவாசி உயர்வையும் பற்றி பின்வருமாறு பேசியுள்ளார்,

அடுத்து உணவு பற்றாக்குறை நிலையைப் பற்றியது ! கவர்னர் அவர்களுடைய உரையில் உணவு விலை குறையவில்லை என குறிப்பிட்டாலும் உணவு விலை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எங்குப் பார்த்தாலும் உணவு விலை விஷம் போல் தினம் தினம் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஆந்திராவிலுள்ள பெருவாரியான உபரி அரிசி தமிழகத்திற்கு பயன்படாமல் வடநாட்டில் கோரப் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் அங்கு எடுத்துச் செல்லப்படுகிறதும் அங்குள்ள கோதுமையைக் கொண்டு வடக்கே சரிக்கட்டுவதற்கு பதிலாக ஆந்திராவிலுள்ள உபரியான அரிசியை தமிழ்நாட்டிற்கு பயன்படாத முறையில் எடுத்துச் சென்றதும்தான் இங்கு விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது. இதைப் பற்றி கவர்னர் அவர்களுடைய உரையில் எந்தவிதமான குறிப்பும் காணப்படவில்லை. இப்படி விலைவாசி உயர்வைத் தடுக்க எப்படிப்பட்ட வழிவகை செய்யப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.


இதற்க்கெல்லாம் காரணமான அரசாங்கத்தை பற்றி பேசும்போது,

உணவு நிலைமையை சமாளிப்பதற்கு சர்க்கார் உணவு பெருக்கத்திற்கு திட்டங்கள் செய்ய வேண்டும். இந்த சர்க்கார் கையில்லாத ஊமையின் நிலைமையில்தான் இருக்கிறார்கள். தங்களுடைய நிலைமை என்ன என்று சொல்ல முடியாமல் ஊமையாக இருந்து சுட்டிக்காட்டுவதற்காகவும் கையற்ற முறையில் இருந்துக்கொண்டிருந்தால் உணவு நிலை பற்றாக்குறை இது போன்ற எப்பொழுதும் நீடித்துக் கொண்டே இருக்கும் . திராவிடம் விடுபட்டு திராவிடம் தனித்து, செழித்து நின்று, வளம் பெற , வாழ, நல்ல முறையில் திட்டங்களை தீட்ட வேண்டும். அதற்கு குறிப்பாக உதாரணத்திற்காக  ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். குடகனார் திட்டம் தேவை என்ற முயற்சி ஒன்று குளித்தலைத் தொகுதியில் 1952ம் ஆண்டு முதற்கொண்டே இருந்து வருகிறது. அதை பற்றி அடிக்கடி எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. கனம் முதல் அமைச்சர் அவர்களிடமும், கனம் ரெவினியூ அமைச்சர் அவர்களிடமும், கனம் மராமத்து அமைச்சர் அவர்களிடமும், கனம் நிதியமைச்சர் அவர்களிடமும் பல தடவை மனுக்கள் மூலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.அங்குள்ள P.W.D சூப்ரவைசர் அவர்கள் இந்த திட்டத்தை எடுத்து துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து சொல்லியிருக்கிறார். அழகாபுரி என்கிற இடத்தில் ஒரு அணை கட்டினாக் அதன் மூலமாக சுமார் பத்தாயிரம் ஏக்கர் புஞ்சை நிலத்தை நஞ்சையாக மாற்றக்கூடிய வசதி இருக்கிறது. அதற்கு 12 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கவனிப்பார் அற்றுக் கிடக்கிறது. இப்பட்டிப்பட்ட நல்ல திட்டங்கள் அலட்சியப்படுத்தபடுவதையெல்லாம் கவர்னர் அவர்கள் தன்னுடைய உரையில் சிறிதும் குறிப்பிடவில்லை என்பதை  வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.


( கலைஞரின் சட்டமன்றப் பொன்விழா நினைவுக் கட்டுரைகள் - க.திருநாவுக்கரசு புத்தகத்திலிருந்து.....)

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz