தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டதா தமிழ் சினிமா? - என்ன சொல்கிறார்கள் திரையுலகினர்??

சேர்ந்தே இருப்பது விருதுகளும் சர்ச்சைகளும்...

தேசிய விருதில் தழிழ் புறக்கணிக்கப்பட்டதா?

#Nationalawards

2018 ம் ஆண்டுக்கான 66 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்த ஆயிரக்கணக்கான படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தாதுன்,பத்தே கூ, உரி, பத்மாவத்,மகாநட்டி, கே.ஜி.எப், நதிச்சார்மி போன்ற பிறமொழி படங்கள் விருதுகளை வாரிக்குவித்துள்ள நிலையில் தமிழில் 'பாரம்' என்ற ஒரு படம் மட்டுமே சிறந்த பிராந்திய மொழி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த போட்டி பிரிவுகளிலும் தமிழ்ப்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை இதனைத் தொடர்ந்து தேசிய விருதுகள் பரிந்துறையில் தமிழ்ப்படங்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற கண்டனக்குரலை தமிழ்த் திரையுலகினர் எழுப்பியுள்ளனர். 'சேர்ந்தே இருப்பது விருதுகளும் சர்ச்சைகளும்' என்பது போல ஆஸ்கர் முதல் டிவி சேனல் விருதுகள் வரை  எந்த விருதுகளாக இருந்தாலும் சர்ச்சைகளுக்கு தப்பியதில்லை இதில் தேசிய விருதுகளும் விதிவிலக்கல்ல. தேசிய விருதுகளில் பாலிவுட் படங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது தொடங்கி விருது பெற்றவர் தேர்வுக்குழு உறுப்பினருக்கு நெருங்கியவர், இந்தப் படம் விருதுக்கு தகுதியானதுதானா?வரை பல சர்ச்சைகளையும் குற்றச்சாட்டுகளையும் கடந்த காலங்களில் தேசிய விருது சந்த்தித்துள்ளது. ஆனால் இந்த முறை தமிழ்ப்படங்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த்திரையுலகம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு சர்ச்சைகளை தாண்டி விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் 1992ல் 39 வது தேசிய திரைப்பட விருதுகளில் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின்' வண்ண வண்ண பூக்கள்' திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்ற போட்டிப் பிரிவுகளில் அந்த ஆண்டு தமிழ்ப்படங்கள் எதுவும் விருது வாங்கவில்லை. அதன்பிறகு அடுத்தடுத்த அனைத்து ஆண்டுகளிலும் பிராந்திய மொழி விருதை தாண்டி பல விருதுகளையும் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2001 ம் ஆண்டு பாரதி, வெற்றிக்கொடிகட்டு, வானத்தைபோல போன்ற படங்கள் 11 விருதுகளை அள்ளியிருந்தன. அதன்பிறகு 2011 ம் ஆண்டு ஆடுகளம், எந்திரன், தென்மேற்குபருவக்காற்று போன்ற படங்கள் மொத்தமாக 13 விருதுகளை அள்ளிவந்தன. 2018 ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள், பேரன்பு, 96, வடசென்னை, ராட்சசன், 2.o போன்ற விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட தரமான படங்களான இவை பல தேசிய விருதுகளை கையிலேந்தும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 'பாரம்' என்ற ஒரு படத்திற்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பத்தை அதிர்ச்சியோடும் ஆதங்கத்தோடும் பார்க்கிறது திரையுலகம். இதுதொடர்பாக திரையுலகை சார்ந்த சிலரிடம் பேசினோம்,

தேசிய விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில் உள்ள சிக்கல்கள் குறித்து நம்மிடம் பேசிய இயக்குனர் வசந்தபாலன்,  "இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 30 நாட்கள்  தங்கியிருந்து  நடுவர் குழுவில் அங்கம் வகிக்க டெல்லிக்கு கிளம்பி வருமாறு ஒரு நாள் முன்னதாக எனக்கு அழைப்பு வந்தது. ஒரு நாள் முன்னதாக அழைத்தால் இருக்கிற பணிகளை விட்டுவிட்டு எப்படி திட்டமிட்டு செல்ல முடியும். வெறுமென சம்பிரதாயத்திற்காக ஒரு நாள் முன்னதாக அழைப்பது வர இயலவில்லை என்றவுடன் அவர்களுக்கான வேறொருவரை தேர்வு செய்கிறார்கள். பேரன்பு படத்தை மாநில தேர்வுக்குழுவே தேசியக்குழுவுக்கு பரிந்துரைக்கவில்லையென தேசிய தேர்வுக்குழு கூறியுள்ளது. சரியான நடுவர்களை தேர்வு செய்யாமல் போனது யாருடைய தவறு? தேர்வுக்குழு உறுப்பினர்களாக திரை ஆளுமைகள், தேசிய விருது பெற்றவர்கள், எழுத்தாளர்கள் எல்லாவற்றையும் விட முக்கியமாக நிகழ்கால சினிமாவை நன்கு புரிந்தவரான ஒருவர் தமிழிலிருந்து இருக்க வேண்டும் ஹிந்தி படங்களுக்காக நடுவர் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தங்கள் தரப்புக்கு திறமையாக  போராடி விருதுகளை பெற்றுவிடுகின்றனர். தமிழ் சார்பில் நடுவர்குழுவில் சரியான நபர்கள் தேர்வு செய்யப்படாதது தழிழுக்கு பின்னடைவாக உள்ளது.அதனால் தமிழ்ப்படங்கள் மொத்தமாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளது. . பேரன்பு,பரியேறும் பெருமாள், வடசென்னை போன்ற படங்கள் வியாபாரத்தை தாண்டி விருதுகளுக்கு மிகத்தகுதியாக எடுக்கப்பட்ட படங்கள் இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என எல்லாமும் அற்புதமாக இருந்த அந்த படங்களை  புறக்கணிப்பட என்ன காரணம் இருக்க முடியும். ஏதோ ஒரு பிரிவில் கூட விருது பெற முடியாத அளவுக்கு மோசமான படங்களா அவை?. .நல்ல படத்திற்கு கிடைக்கும் விருதுகளும் அங்கீகாரமும் தான் தொடர்ந்து படைப்பாளியை வேகமாகவும் ஊக்கத்துடனும் இயங்க வைக்கும். நல்ல படங்கள் தமிழில் இருந்தும் அங்கீகாரம் மறுக்கப்படுவது தமிழகத்தையே புறக்கணிப்பது போன்றது. . தமிழில் அதிகம் கம்ர்ஷியல் படங்கள் வெளியாவதால் விருதுகள் கிடைக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இந்த முறை விருது பெற்றுள்ள அந்தாதுன், உரி, கே.ஜீ.எப் போன்ற படங்கள் கமர்ஷியல் படங்கள் தான் பிறகு ஏன் தமிழ் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. நிச்சயம் இந்த விஷயத்தில் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும். இயக்குனர் சங்கம் , தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் ஒன்றாக கூடி திறமையான நபரை  நாமே தேர்ந்தெடுத்து நடுவர்கள் குழுவுக்கு அனுப்ப வேண்டும். திறமைமிக்க தமிழ் ஆளுமை ஒருவர் நடுவர் குழுவில் இருந்தால் மட்டுமே தமிழ் சினிமாவின் குரல் டெல்லியில் பலமாக ஒலிக்கும்." என ஆதங்த்தோடு பேசி முடிக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்

இது தொடர்பாக நம்முடன் பேசிய எழுத்தளர் மற்றும் இயக்குனர் அஜயன் பாலா,
"காலம் காலமாக தமிழ்ச்சினிமா புறக்கணிக்கப்பட்டு கொண்டேதான் வந்திருக்கிறது. விருதுகள் வழங்கப்படுவதில் மத்திய அரசின் தலையீடு நிச்சயம் இருக்கிறது. கடந்த 10 வருடத்தில் இந்த நிலை மாறி பல தமிழ்ப்படங்கள் ஓரளவுக்கு விருதுகளை பெற்றது. பரியேறும் பெருமாள், பேரன்பு, மேற்குத்தெடர்ச்சி மலை போன்ற படங்கள் பேசிய விஷயங்கள் மிக முக்கியமானவை இவற்றிற்கு எந்த அங்கீகாரமும் அளிக்காமல்  வெளியானதா என்று கூட தெரியாத' 'பாரம்' என்ற படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது கொடுத்திருப்பது வெறும் கண்துடைப்பே.மேலும் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான பல படங்கள் வெளியாகியிருந்தன அதற்கு கூட விருதுகள் கொடுக்கப்படவில்லை. சரியான நேரத்தில் ஒரு படைப்பாளிக்கு வழங்கப்படாத அங்கீகாரமென்பது அவரை அவமதிப்பது போன்றது. கலை பண்பாடு மட்டுமே ஒரு கலாச்சாரத்தின் அடையாளம். தெற்கு வளர்வதை  திட்டமிட்டே இவர்கள் தடுக்கிறார்கள். இப்போதைக்கு இதை வேறொரு கோணத்திலும் பார்க்க விரும்புகிறேன் நம்மூரின் ஆடுகளம் போன்ற படங்கள் விருதுகளை குவித்த போது எல்லா தரப்பினரும் வரவேற்றார்கள் அதேபோல இந்த முறை அவர்கள் விருதுகள் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என நினைத்துக்கொள்வோம் அடுத்த முறை என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்."

'தேசிய விருதில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு' என மறுப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தேசிய விருது தேர்வுக்குழு உறுப்பினர் தனஞ்செயன்,

"பெரும்பாலும் தேசிய விருதுகளுக்கு வெகுஜன சினிமாக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாது. தமிழ் சினிமாவில் 95% கமர்ஷியல் படங்களே வெளிவருகின்றன. ஆனால் முழுமையான கலைப்படைப்புகள் மட்டுமே விருதுக்கு பரிசீலிக்கப்படும். யதார்த்தமும் அழகியலும் சார்ந்த படங்களுக்கு மட்டுமே அங்கு இடம் யதார்த்தை தாண்டிய கமர்ஷியல் படங்களுக்கு அங்கு இடமில்லை. இந்த முறை விருது பெற்றுள்ள 'பாரம்' படமும் டூலெட் படம் போன்ற 90 நிமிடங்கள் ஓடக்கூடிய யதார்த்த படம்தான்.பாரம் படம் உலக சினிமா பாணியில் விருதுக்கென்றே எடுக்கப்பட்ட ஆவணப்படம் மாதிரியானது. அதைத்தாண்டி கடந்த வருடத்தில் வெளியான தமிழ் படங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே தேசிய விருதுக்கு தகுதியானவை. அந்த படங்களும் எந்த பிரிவிலும் விருது பெறாததற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. முதலில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேர்வுக்குழு 5 உறுப்பினர்களை கொண்டது இதில் ஒருவர் மட்டுமே தமிழர் மற்ற நால்வரும் வெளி மாநிலத்தவர்கள்.தேசிய விருது வாங்கிய தமிழ் சினிமா இயக்குனர் அல்லது தயாரிப்பாளரை  நடுவர் குழுவுக்கு மத்தியிலிருந்து அழைப்பார்கள். நடுவர் குழுவில் இடம்பெறுபவர்கள் டெல்லியில் 25 நாட்கள் தங்கியிருந்து பரிந்துரைக்கப்பட்ட படங்களை பார்த்து முடிவு எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவிலிருந்து யாரை நடுவர் குழுவுக்கு அழைக்கலாம் என என்னிடம் கருத்து கேட்டார்கள். நானும் தேசிய விருதுபெற்ற முக்கிய இயக்குனர்களை குறிப்பிட்டு அவர்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தேன். அவர்களும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் ஆனால் இயக்குனர்கள் அனைவரும் பிஸியாக இருப்பதால் செல்ல முடியவில்லை என தவிர்த்துள்ளனர். முக்கியமான நபர்கள் தவிர்த்ததால் கார்த்திக் ராஜா என்ற ஒளிப்பதிவாளர் ஒருவரை உறுப்பினராக தேர்ந்தெடுத்துவிட்டனர். கார்த்திக் ராஜா 10 வருடங்களுக்கு முன்பே சினிமா விட்டு போய்விட்டார் அதனால் அவர் எந்த அளவுக்கு பரியேறும் பெருமாளையும், பேரன்பையும் புரிந்துகொண்டுள்ளார் என்பது சந்தேகமே. தமிழ் சினிமாவை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அந்த மொழிக்கு அதிக விருது கொடுக்கிறார்கள் இந்த மொழிக்கு விருது கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள் என்பதுக்கெல்லாம் முகாந்திரமே கிடையாது. . தேர்வுக்குழு அழைக்கும்போது செல்லுங்கள் தமிழின் சிறந்த படங்களுக்காக போராடுங்கள். அவர்கள் தமிழிலிருந்து யாரையும் அழைக்காமல் இருந்தால் குற்றம் சொல்லலாம் அவர்கள் அழைத்தும் செல்லாமல் இருந்தால் யார் மேல் தவறு. தவறை நம் மேல் வைத்துக்கொண்டு தேர்வுக்குழுவை குறை சொல்வதில் ஞாயமில்லை.
தேர்வுக்குழு அழைத்ததின் பேரில் திறமையான இயக்குனர் ஒருவர் இங்கிருந்து சென்றிருந்தால் நிச்சயம் பேரன்பு, பரியேறும் பெருமாள் படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும்." என தீர்க்கமாக பேசுகிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

விருதுகளில் சர்ச்சைகளும் குழப்பங்களும் தவிர்க்கமுடியாதவை ஆனால் முற்றிலுமாக ஒரு தரப்பினரை புறக்கணிக்கத்தல் அல்லது தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற அச்சத்தை அந்த  சமூகத்தில் ஏற்படுத்துவதே கலை என்னும் உன்னத ஆத்மாவின் மீது ஏவப்படும் கொடுந்தாக்குதல் ஆகும். தன் சமூகத்தின் உணர்வுகளை உயிர்ப்போடு வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தும் கலைக்கும் கலைஞர்களுக்கும் உரிய நேரத்தில் முறையான அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

-உ.ஸ்ரீ

(இந்த வார புதியதலைமுறை இதழில் வெளியான எனது கட்டுரை)

#Nationalawards
#Pariyerumperumal
#Peranbu

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review