வேலூர் தேர்தல் யாருக்கான அலாரம்?? | Vellore Election Results | #DMK #ADmk
பணப்பட்டுவாடா பிரச்சனையினால் தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தற்போது நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வை தோற்கடித்து திமுக வெற்றிப்பெற்றுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தில் எதிர்த்து நிற்கும் கட்சியை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் வெற்றிதான் என்றாலும் திமுக தற்போது பெற்ற வெற்றிக்குப்பின்னால் பல விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருந்தது. இதில் முக்கால்வாசி தொதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியை தோற்கடிந்ந்திருந்தது. இதேநிலை வேலூரிலும் தொடரும் அரசின் மீதான அதிருப்தியே தங்களை பெருவாரியாக வெற்றிப்பெற செய்துவிடும் என்பதே திமுகவின் கணிப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்த முறை அதிமுக, திமுக விற்கு மரண பயத்தை காட்டிவிட்டனர் என்பதே உண்மை.
38 தொகுதிகளில் 37 ல் வெற்றிப்பெற்றதற்கு ஸ்டாலினின் தலைமைதான் காரணமா? இல்லை பிஜேபியின் மீதான வெறுப்பும் ஆண்டி-மோடி அலையும்தான் காரணமா? என பல விவாதங்கள் கிளம்பியிருந்தன. தற்போது அந்த பேச்சுகள் மேலும் வலுப்பெறுகின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரம் முழுவதும் பிஜேபி எதிர்ப்பையும் மோடி எதிர்ப்பையும் மையப்படுத்தியே இருந்தது. அதே வேளையில் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முன்னிருத்தியும் பிரச்சாரம் செய்தனர். விளைவு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்று கெத்துக்காட்டியது திமுக+ . அதே வேளையில் எடப்பாடி அவர்கள் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க விரும்பிய திமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் 22ல் 13 ல் மட்டுமே வெற்றிப்பெற்றது. இந்த 22 தொகுதிகளையும் வென்றிருந்தால் இன்றைக்கு திமுக தான் ஆளுங்கட்சி.
ஸ்டாலின்-ராகுல் Vs எடப்பாடி-மோடி என வந்தபோது மக்கள் தெளிவாக ஸ்டாலின்-ராகுல் கூட்டணியையே டிக் அடித்துள்ளனர். இன்னொருபுறம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஸ்டாலின் vs எடப்பாடி என வந்தபோது மக்கள் ஒருபக்கமாக சாயாமல் இருவருக்கும் சம அளவிலான வெற்றியை கொடுத்துள்ளனர்.நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 1 தொகுதியை மட்டுமே வென்ற நிலையில் இடைத்தேர்தலில் 9 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்தது அதிமுக. இதிலிருந்து அதிமுக விற்கு பிஜேபி ஒரு சுமையாக இருப்பது வெட்டவெளிச்சமாகிறது. இதை உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிமுகவும் வேலூர் தேர்தலில் பிஜேபியை முழுவதுமாக தவிர்த்துவிட்டு எடப்பாடியே பிரதானமாக முன்னின்று பிரச்சாரம் செய்தார்.
சரி, அப்படியே திமுக பக்கம் வருவோம், அவர்கள் கொண்டாடக்கூடிய பெருவெற்றி நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தாலும், திமுக எதிர்பார்த்த வெற்றி சட்டமன்ற இடைத்தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த இடத்தில்தான் திமுக சுதாரித்திருக்க வேண்டும் மக்கள் கொடுத்த பெருவெற்றி மோடிக்கும் பிஜேபிக்கும் எதிரானது மட்டுமே அதை திமுக தலைவர் ஸ்டாலின் தனது தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று தவறாக நினைத்திருக்கக்கூடாது. ஆனால் ஸ்டாலின் அவ்வாறு நினைத்துக்கொண்டுதான் வேலூரில் தன் தனையனோடு தனித்து இறங்குகிறார்.
மேலே கூறியது போல மே மாத தேர்தல் முடிவுகளிலிருந்து ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டு செய்த தவற்றை உணர்ந்து எடப்பாடி மற்றும் அதிமுக களத்தில் இறங்கியது. ஆனால் திமுக மே மாத தேர்தல் முடிவுகளிலிருந்து கூட்டணிபலம் மக்கள் மனநிலை என்பதையெல்லாம் தாண்டி ஒப்பற்ற வலிமையான தலைமையே வெற்றிக்கு காரணம் என்ற மாயப்பிம்பத்தோடு ஸ்டாலின் மற்றும் திமுக களத்தில் இறங்கினர்.
இப்போது வேலூரில் போட்டி ஸ்டாலின் vs எடப்பாடி என வந்து நின்றது. இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கடந்த இரண்டு வருடமாக நடைபெற்ற போராட்டங்களை மக்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டு பாருங்கள். ஜல்லிக்கட்டு, நீட், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை என எல்லாமே மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளே தற்போதிருக்கும் அதிமுக அரசு இந்த பிரச்சனைகளில் தீவிரமாக செயல்படவில்லையே தவிர இந்த பிரச்சனைகளுக்கு மூலக்காரணம் மத்தியில் ஆளும் அரசுதான். இந்த இரண்டு வருடத்தில் ஸ்டெர்லைட் தவிர்த்து மாநில அரசின் நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்பது மிகக்குறைவு. மாறாக நல்லதோ கெட்டதோ அவ்வபோது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வறுமையில் இருப்பவர்களுக்கு 2000 ரூபாய் என வாரி வழங்கி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்லப்பெயரை பெற்றுவிட்டார். இந்த விஷயங்கள்தான் மோடி , ராகுல் தவிர்த்து ஸ்டாலின் vs எடப்பாடி என்று வரும்போது முக்கியப்பங்காற்றுகிறது. இதிலிருந்தே மக்கள் அதிமுகவை பிஜேபி கூட்டணியில் ஒரு விதமாகவும் தனித்து எம்.ஜீ.ஆர், ஜெ வின் அதிமுக வாக இருக்கும்போதும் ஒருவிதமாகவும் பார்க்கின்றனர் என்பது புரிகிறது. அதேமாதிரி, மோடி எதிர்ப்பு பேசும் திமுக வை ஒரு விதமாகவும் அதிமுக எதிர்ப்பு பேசும் திமுக வை மக்கள் ஒருவிதமாகவும் பார்க்கின்றனர் என்பதும் புரிகிறது. வேலூர் தேர்தலில் அதிமுக வுக்கும் திமுகவுக்கும் உள்ள 8000 என்ற சிறிய வாக்கு வித்தியாசமும் இதைத்தான் காட்டுகிறது. இரண்டு கட்சிகளிலும் மாற வேண்டிய மாற்றப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மாற்றங்கள் ஏற்படும் பட்சத்திலேயே 2021 தேர்தலில் திமுக வோ அதிமுக வோ யாராயினும் தாங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும்.
-உ.ஸ்ரீ
#VelloreElection
#VelloreLoksabhaElection
#DMK
#ADMK
#Stalin #Edappadi
Comments
Post a Comment