அவர்களும் ; அண்ணாவும் #Anna111 #அண்ணா111 அண்ணா பிறந்தநாள் பகிர்வு

அவர்களும் ; அண்ணாவும்

#அவர்கள் : இந்தியாவில் பெரும்பான்மையானோர் பேசும் மொழி ஹிந்தி அதனால் இந்திய நாடு ஹிந்தியால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதில் என்ன குற்றம் இருக்கிறது ?

#அண்ணா : இந்திய மக்களில் 42% பேர் பேசும் மொழியாக இந்தி இருப்பதால் அதற்கு ஆட்சிமொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.  இந்த 42% பேரும் நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்தால் இந்த வாதத்துக்கு தர்க்க நியாயம் இருக்கும். உ.பி, ம.பி, ராஜஸ்தான், பிஹார் மாநிலங்களில் பேசும் மொழிதான் தேசியமொழி என்பதை எவ்வாறு ஏற்கமுடியும்? ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான எண்ணிக்கை அடிப்பைடையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள்,உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி அவற்றைக் காப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம்.

#அவர்கள் : ஹிந்தியை எதிர்ப்பவர்கள் ஆங்கிலத்தை மட்டும் தூக்கிப்பிடிப்பது ஏன்? இதிலிருந்தே இவர்களின் உண்மை முகத்தை அறிய முடிகிறது.

#அண்ணா :  நான் ஆங்கிலத்துக்காக மன்றாடுகிறேன், ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்- ஆங்கிலத்தால் மிகவும் கவரப்பட்டு அல்ல; என்னுடைய தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு உயர்ந்ததொரு இடத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக அல்ல.இந்திய மாநிலங்களுக்கிடையே உரையாடலுக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் ஆங்கிலம் எளிதான மொழியாக இருக்கிறது என்பதற்காக. நன்மைகளையும் தீமைகளையும் சரிசமமாக பகிர்ந்து கொடுக்க ஆங்கிலம் நமக்கு நல்ல ஊடகமான மொழி.

#அவர்கள் : அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ள முடியும்போது இந்திய மொழியான ஹிந்தியை ஏற்றுக்கொள்ள முடியாதோ?

#அண்ணா : இந்தியா 'ஒற்றை நாடு' என்றால் இந்த வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால் இந்தியா 'கூட்டாட்சி நாடு' இந்திய சமூகம் பன்முகத்தன்மை கொண்டது. எனவே ஒரேயொரு மொழியை பொது மொழியாக வைத்துக்கொள்வது ஏனைய மொழி பேசுவோர்க்கெல்லாம் அநீதியை செய்வதாகிவிடும். ஒரு வேளை இந்தி ஆட்சி மொழி ஆகிறது என வைத்துக்கொள்வோம். இந்தி பேசும் மாநிலங்களில் - இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய் மொழி; அதுவே அரசு மொழி; அதுவே பயிற்று மொழி; அதுவே மத்திய அரசின் மொழி யாகவும் இருக்கும் ! இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள். இந்தி பேசாத எம் போன்ற மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்? நாங்கள் எவ்வளவுதான் திறமையாக படித்தாலும் சரளமாகப் பேசினாலும் நமக்கு தாய்மொழியாக இல்லாத ஒன்று அனுகூலங்களைத் தராது.

#அவர்கள் : பிறகு இந்தியா முழுவதுக்குமான பொதுமொழிக்கு என்னதான் தீர்வு?

#அண்ணா : மாநில மொழிகளை தேசிய மொழிகள் என்றே கூறுகிறோம். என் மாநிலத்தில் தமிழ்தான் தேசிய மொழி, அதுதான் ஆட்சிமொழியும். ஒவ்வொரு தேசிய அ மாநில மொழியும் தத்தமது வழியில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  ஆந்திரத்தில் தெலுங்கு, கேரளத்தில் மலையாளம், உ.பி ம.பி யில் இந்தி என அவரவர் மொழிகளை அவரவர் தேசிய மொழியாக வளர்க்கின்றனர். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களுக்கு என்னுடைய வேண்டுகோளெல்லாம் , உங்களுடைய மாநில மொழியை வளப்படுத்துங்கள், மாநில ஆட்சிமொழியாக்குங்கள்; நீங்கள் விரும்பினால் அனைவரும் விரும்பும் மொழியாக்குங்கள் என்பதுதான்.

1963 ல் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசிய உரையின் ஒரு சிறுபகுதிதான் மேலே உள்ளது. 'அண்ணா' வை அண்ணா வென்று குறிப்பிட்டுவிட்டு அவருக்கு எதிர்திசையில் இருந்தவர்களை குறிப்பிட்டு எழுதாமல் 'அவர்கள்' என்று குறிப்பிடதற்கு காரணம் உண்டு. அன்று காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது இன்று பிஜேபி ஆட்சியிலிருக்கிறது ஆனால் இருவரின் இலக்கும் ஒன்றாகவே இருக்கிறது. 'அவர்கள் vs அண்ணா' இதில் அவர்கள் என்ற இடத்தில் காங்கிரஸ் , பாஜக, மூன்றாவது அணி என எது வந்து திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் , மாநில உரிமைகளை நசுக்க முற்பட்டாலும் எதிர்த்து நிற்க அண்ணாவே போதுமானவர். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வந்து யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அண்ணாவின் இந்த எதிர்வினைகள் அவர்களை பின்வாங்க செய்யும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு 'அந்த' தலைவரின் தலைமைப்பண்புதான் காரணம் என்றும் சரியாக 'கூட்டணி' அமைத்ததும் தான் காரணம் என்றும் கூறலாம்.ஆனால் அண்ணா வை படித்தவர்கள் இந்த வெற்றிக்கு முழுக்காரணமும் அண்ணா தான் ! என்பதை உணர்வார்கள்.

தமிழ் வெல்லும் !

உ.ஸ்ரீ

#Anna111
#அண்ணா

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review