விளையாட்டு வயதில் விபரீத தேர்வா?

விளையாட்டு வயதில் விபரீத தேர்வா?..

5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அவசியமா?

 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மீதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தது அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சுமையை குறைக்கும் பொருட்டு மொத்த மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாநில அளவில் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடம் இரணடாமிடம் என அறிவிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வை பற்றியே முழுமையாக அறியாத சிறுவயது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு எந்த வகையில் அவர்களின்  கல்வித்தரத்தை உயர்த்திவிடும் ? என்ற கேள்வி எழுகிறது. இந்த புதிய பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் குறிப்பாக பெண்கல்விக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

"குழந்தை பருவத்தில் நடத்துகிற தேர்வு எதற்கான தேர்வுங்ற பெரிய கேள்வி இருக்கு , குழந்தைகள் எதை கற்றுக்கொண்டார்கள் எதை கற்க இயலவில்லை என்பதை அளவிட்டு கற்க முடியாததை கற்க வைக்கனும். அதுதான் இடைநிற்றல் தவிர்ப்பு திட்டத்தின் அடிப்படை " என குழந்தைகளுக்கான தேர்வுமுறை குறித்தும் இடைநிற்றல் குறித்தும் பேசத்தொடங்கினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
தொடர்ந்து,
2010 ஜீலை 12 ம் தேதி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 8 ஆம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லா தேர்வுமுறை நடைமுறைபடுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லை (No Detention Policy) என்பது தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுமத்தின்(Central Advisory Board on Education - CABE) 65வது கூட்டம் புது தில்லியில் 2016, அக்டோபர் 25 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இடைநிற்றல் இல்லாத் தேர்வை இரத்து செய்யும் ஆலோசனையை மத்திய அரசு முன்வைத்தது. கூட்டத்தில்  பங்கேற்ற தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை  & உயர் கல்வித் துறை அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்ததோடு தமிழ் நாடு அரசு இடைநிற்றல் இல்லாத் தேர்வைத் தொடர விரும்புகிறது என தெரிவித்தனர்.

இத்தகைய ஆட்சேபணைகளை வேறு சில மாநிலங்களும் தெரிவித்த நிலையில், இடைநிற்றல் இல்லாத் தேர்வைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற முடிவை எடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கப்படும் என அக்கூட்டம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. திருத்தத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ் நாடு அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் வருகின்றன. அமைச்சரவை கூடி முடிவெடுப்பதற்கு முன்னரே பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசரக்கதியில் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது சட்டமீறலாகும்.குழந்தைகளின் கல்வியில் விளையாடுவது தவறான விஷயம்.
                                                         
ஒரே ஒரு எழுத்துத்தேர்வின் மூலம் மாணவர்களின் திறனை தீர்மானித்து விடலாம் என நினைக்கின்றனர்.நேற்று வரைக்கும் பாடாத, பேசாத, எழுதாத குழந்தை இன்று பாடுகிறது, பேசுகிறது, எழுதுகிறது என்பதுதான் தொடக்கக்கல்வியின் அடிப்படை மதிப்பிடலாக இருக்க வேண்டும். 5 ஆம் வகுப்பு படிக்கின்ற சிறுபிள்ளைகளுக்கு பாஸ் ஃபெயில் என்றாலே என்னவென்று முழுமையாக தெரியாது. குழந்தைங்க சிறுவயது முதலே தங்களை சுற்றி நடக்கிற விஷயங்கள் மூலம் பேசுவது, நடப்பது, சாப்பிடுவது போன்ற பலவற்றை கற்றுக்கொண்டுதான் பள்ளிக்கு  வருகின்றனர். பள்ளிக்கு வந்த பிறகு கற்றல் குறைபாடு ஏற்பட்டதென்றால் அதற்கு யார் காரணம்? .

இந்திய அரசியலைமப்புச் சட்டம் பிரிவு 14 சமத்துவ கோட்பாட்டை சொல்கிறது. ஆனால் பல்வேறு பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளுடனும் பாகுபாடுகளுடனும் மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேலான பிறகு தற்போதுதான் பல பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் முதல்தலைமுறை பட்டதாரியாக சேர்ந்து வருகின்றனர். இங்கே வசதியான அரசு அதிகாரிகளின் பிள்ளைகளும் பேரன்களும் படிக்கும் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என வசதிகள் உள்ளது. ஆனால் அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு 1 மற்றும் 2 ஆம் வகுப்புக்கு சேர்த்து ஒரு ஆசிரியர் 3,4,5 வகுப்புகளுக்கு சேர்த்து ஒரே ஆசிரியர் என்ற நிலைதான் நீடிக்கிறது. சமத்துவமான கற்றல் வாய்ப்பு சூழல் வாய்ப்பு கொடுக்கப்படாமல் சமமான பொதுத்தேர்வு என்பது மட்டும் எந்த வகையில் நியாயம் ?

ஒரு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே விதிமுறைகள் சொல்லப்பட வேண்டும். பாதி ஆட்டம் முடிந்ததற்கு பிறகு விதிமுறைகளை கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது. அதேபோல தான் கல்வி ஆண்டு முடியப்போகிற நேரத்தில் பொதுத்தேர்வு என்ற புதிய அறிவிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் பருவத்தில் படித்துவிட்டு தூக்கி எறிந்த புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டால் மாணவர்கள் எங்கிருந்து பதிலளிப்பார்கள் ?. ஏப்ரல் மாத எக்சாமில் ஃபெயிலாகிவிட்டால் அடுதது ஜீன் மாதம் மறுதேர்வு என்கிறார்கள். 10 வயது சிறுபிள்ளைகளின் கோடைவிடுமுறையை அனுபவிக்க விடாமல் தடுக்கப்பார்க்கின்றனர். ஏப்ரல் வரை படிக்காத குழந்தை மே மாதம் மட்டும் படித்து விடுமா என்ன?  தேர்வு என்றால் என்ன என்பதை புரிந்துக் கொள்ள இயலாத குழந்தைப் பருவத்தில் தேர்வு, அதில் தேர்ச்சியில்லை என்றால் உடனடித் தேர்வு, அதிலும் தேர்ச்சியில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் அக்குழந்தை பயில வேண்டும் என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையாகவே கருத வேண்டியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் கட்டணமில்லா கட்டாயக்கல்வி என்று சொல்கிறது பிறகு எதற்கு தேர்வுக்கட்டணம் வசூலிக்கிறீர்கள் ?

முன்பெல்லாம் பள்ளிகளில் கிராஃப்ட் டீச்சர் என்று ஒருவர் இருப்பார். அவர்ப்படிப்பை தாண்டி கலை சார்ந்த விஷயங்களை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார். ஆனால் இப்போது ஓவியம், மியுசிக், கேம்ஸ் என்று தனித்தனியாக ஆசிரியர்கள் இருக்கிறார்களா? எல்லா பாடத்துக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் பிறகு எப்படி மாணவர்களுக்கு கல்வியின்  மீது ஆர்வம் வரும்.மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதுதான் சிறந்த கல்வியாக இருக்க முடியும்.கற்றல் குறைபாட்டிற்கு மாணவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது நியாயமற்றது. கற்றல் கற்பித்தல் பணியல்லாத பிற பணிகள் செய்வதற்கு ஆசிரியர்களைப் பணித்தல், அன்றாட பள்ளி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர் அல்லாத வேறு பணியிடங்களே இல்லாத நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அரசு நடத்திவருதல், மாணவர் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்விடச் சூழலைக் கருத்தில் கொண்டு அதற்கு உகந்த கற்றல் சூழல், கற்றல் செயல்பாடு ஆகியவற்றை அமைத்துத்தர முன்வராமல் கற்றல் குறைப்பாட்டிற்கு மாணவரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது சமத்துவக் கோட்பாடு, வாழ்வுரிமை உள்ளிட்ட மனித உரிமைளை மறுக்கும் செயலாகும்.
 வேண்டியுள்ளது.

கல்வியில் குறிப்பாகப் பள்ளிக் கல்வியில் உலக முழுவதும் நடந்து வரும் மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பல நாடுகளில் தேர்வு முறை கிடையாது. மாணவர்களின் கற்றல் அடவுகளை பார்க்கிறார்கள் அதில் குறையிருப்பின் அந்த குறைகளை களைவதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நாம் விடுதலை அடைவதற்கு முன்பாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த மதிப்பீட்டு முறைக்கே மாறுகிறோம் என்பது தமிழ் நாட்டைப் பின்னுக்கிழுக்கும் செயலாகும். விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை இத்தகைய முடிவுகள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கும். ஒருகட்டத்திற்கு மேல் பெண்கள் பள்ளிக்கு செல்வதே சிரமமாகிவிடும். பள்ளியை விட்டு இடைநிற்றல் அதிகரிக்கும்.  சட்டத்தை சமூகத்தை சமூகச்சிக்கல்களை பற்றி கவலைப்படாமல் எடுக்கப்படுகிற நிர்வாக முடிவு இது" என ஆதங்கத்தோடு பேசி முடிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

உ.ஸ்ரீ

(சில மாதங்களுக்கு முன்பு புதியதலைமுறை கல்வி இதழில் வெளியான எனது கட்டுரை)

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review