இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?

உ.ஸ்ரீராமநாராயணன்

இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?


24×7 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழக  அரசியல் களத்தை தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பு மேலும் பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறவுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளுமே திமுக மற்றும் அதன் கூட்டணியான காங்கிரஸ் வசம் இருந்த தொகுதிகள். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ கு.ராதாமணி யின் மரணமும் நாங்குநெரி தொகுதியின் எம்.எல்.ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி யானதும் தான் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் உண்டாவதற்கான முன்கதை . தமிழகத்தை பொறுத்தவரை  கருணாநிதி-ஜெயலலிதா காலக்கட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும்கட்சியே வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் மாபெரும் வெற்றியைப் பெற்றார். அதன்பிறகு நடந்து  முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக 8 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றிருந்தது. இந்த முடிவுகள் இருபெரும் கட்சகளுக்கும் முழுமையான திருப்தியை கொடுத்துவிடாத நிலையில் தற்போது நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தினகரனின் அமமுக வும் போட்டியிலிருந்து ஒதுங்கி விட தற்போது  அதிமுக vs திமுக vs நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி புதிய சக்தியாக களத்தில் நின்றாலும் நடைபெற இருப்பது இடைத்தேர்தல் என்பதால் நேரடிப்போட்டி திமுக vs அதிமுக என்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை 1952 முதல் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் காங்கிரஸ் அதிகபட்சமாக 6 முறையும் அதிமுக 5 முறையும் திமுக 2 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இதுவரையிலான செயல்பாடகளும் நாங்குநேரியில் உள்ள தேசிய கட்சிகளுக்கான வாக்குவங்கி மற்றும் கணிசமான அளவில் உள்ள சிறுபான்மையினரின் வாக்குகளும் இந்தமுறை இத்தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் உள்ளன. நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்து தற்போது கன்னியாகுமரி எம்.பி யாக தேர்வாகியுள்ள வசந்தகுமாரின் தனிப்பட்ட செல்வாக்கும் காங்கிரசுக்கு கூடுதல் பலமாக இருக்கும். அதேநேரத்தில் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக அதிகமுறை வெற்றிப்பெற்றுள்ள ஆளும் கட்சியான அதிமுக வும் சளைத்தது இல்லை.லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததிலிருந்து மீண்டு வந்து வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது அதிமுகவினரிடையே புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் களம் என்பது அ முதல் ஃ வரை ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது அதிமுக வுக்கு கூடுதல் பலம்.

விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒன்றில் சிபிஎம் ம் ஒன்றில் திமுக வும் வெற்றிப்பெற்றுள்ளது. கடைசியாக திமுக வெற்றிப்பெற்றிருந்த நிலையில் இந்த முறையும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக களமிறங்குகிறது. விக்கிரவாண்டி தொகுதி இடம்பெற்றுள்ள வடக்கு மாவட்டமான விழுப்புரத்தில் பாமக வுக்கு உள்ள செல்வாக்கு அதிமுக வுக்கு ஓரளவுக்கு உதவலாம். அதேநேரத்தில் திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார். சிலபல அரசியல் கணக்குகளுக்காக கவுதமசிகாமணி உதயநிதி ஸ்டாலினுக்காக வேட்புமனு அளித்திருந்தாலும் விக்கிரவாண்டியில் உதயநிதி போட்டியிடுவாரா என்பது சந்தேகம்தான். இந்த ஆட்சியின் ஆயுளே இன்னும் ஒன்றரை வருடம்தான்  என்பதால் தேவையற்ற முயற்சிகளில் இறங்கமாட்டார் என்றே தெரிகிறது. உதயநிதி போட்டியிடாத பட்சத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் இரு கட்சியினருக்கும் இடையே சவலான போட்டி இருக்கும். இடைத்தேர்தல் களத்தை எவ்வாறு அணுகபோகிறார்கள் என்பது குறித்து அரசியல் கட்சியினர் சிலரிடம் பேசினோம்,

"கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை, சுகாதாரத்துறை என பல துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளோம்" என அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டபடி பேசத்தொடங்க்குகிறார் அதிமுக வின் செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல், மேலும் பேசிய அவர்,
". வெளிநாடுகளில் மட்டுமே செய்யப்படக்கூடிய பல அறுவை சிகிச்சைகளும் இன்று தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்துகொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது, கல்வித்துறக்கு வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்படுகிறது, பல்வேறு வழக்குகளையும் தாண்டி தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொரு துறையிலும் தமிழகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவே முடியாத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் இருந்தாலும் வெறும் வாயில் அவலை மெல்லுவது போல வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குறை கூற்ஜ் வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர். அதன் பிறகு நடைபெற்ற வேலூர் தேர்தலில்  வாக்குகளை வாரி வழங்கினர் அதன் மூலம் சிலஆயிரம் வாக்குக்ச்ள் வித்தியாசத்திலேயே தோற்றோம். இது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் எங்களுக்கு மிகப்பெரிய சோதனை. மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம் நிச்சயம் திமுக வின் இரண்டு தொகுதிகளையும் இரட்டை இலை வெல்லும்" என நம்பிக்கையுடன் பேசி முடிக்கிறார்.

சரவணன்,
அதிமுக அரசின் சாதனைகள் எனக் கூறப்படுவதையெல்லாம் மறுத்து பேசும் திமுக வின் செய்தித்தொடர்பாளர் சரவணன்,
"5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொதுதேர்வு , பால் விலை உயர்வு போன்றவைதான் இந்த அரசாங்கத்தின் சாதனைகள். இவற்றின் மூலம் இந்த அரசாங்கம் மிகப்பெரிய மக்கள் அதிருப்தியை தான் சம்பாதித்துள்ளது. 2014 ல் வேலூர் தேர்தலில் அதிமுக பெற்றது 7 லட்சம் ஓட்டுகள் அதேநேரத்தில் திமுக 2 லட்சம் வாக்குகளே பெற்றது. ஆனால் 2019 ல் திமுக கூடுதலாக 2 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது அதிமுக 3 லட்சம் வாக்குகள்குறைவாகவே பெற்றுள்ளது. பிறகு எப்படி வேலூர் தேர்தலை வைத்துக்கொண்டு அதிமுக பலம் பெற்றுவிட்டது எனக்கூறமுடியும்?  வெற்றி பெற்ற திமுக எம்.பி க்களால் என்ன பயன் என்று கேட்கிறார்கள். திமுக எம்.பி க்களால் தான் இன்று இந்தி திணிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆளுநரே நேரில் அழைத்து போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கூறுகிறார். இதெல்லாம் திமுக வால் மட்டுமே சாத்தியம். மக்களின் சிறுசிறு பிரச்சனைகளை கேட்டறிவதற்கு கூட உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. மக்கள் மகிழ்ச்சியடைய செய்யும் எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்போம். நாங்குநேரி , விக்கிரவாண்டி இரண்டும் எங்களின் தொகுதிகள் நாங்களே வெற்றி பெறுவோம்." என்கிறார் உறுதியாக

கோபண்ணா,
"ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இடைத்தெர்தலில் திமுக வென்றது அதன் பிறகு திமுக ஆட்சியில் இடைத்தேர்தலில் எம்.ஜீ.ஆர் வெற்றி பெற்றார் அதே போல தற்போதைய அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியான எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்." என வ்ரலாற்றை லேசாக புரட்டியலடி பேசத்தொடங்கினார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆர்.கோபண்ணா,
ஆட்சி இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தான் இன்னும் எம்.எல்.ஏ க்கள் அதிமுகவில் நீடித்து வருகின்றன..அதிமுக அரசின் முறைகேடுகள், ஊழல்கள், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மக்களின் கருத்துகளுக்கு எதிராக செயல்படுத்துதல் மற்றும் மத்திய மாநில அரசுகள் கொண்டு வருகிற திட்டங்கள் பலவும் மக்களிடையே எதிர்ப்பை பெறுகின்றனர் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வோம். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆ ட்சி அமைத்திருந்தால்  நிச்சயம் திமுக மற்றும் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்பட்டிருக்கும்.இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அத்துமீறலும் பணப்பட்டுவாடா வும் கட்டாயம் இருக்கும். இருந்தாலும் இவற்றை முறியடித்து மக்களின் உதவியோடு பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயக முறையில் வெற்றிபெறுவோம." என்கிறார்.

(புதிய தலைமுறை இதழில் வெளியானது)

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review