அடித்தட்டு மக்களை தள்ளி வைத்து பார்க்கிறதா அறிவியல் உலகம்??

#MyVoice

அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை தள்ளி வைத்து பார்க்கிறதா  அறிவியல் உலகம்?

நிலவுக்கு மனிதரை அனுப்ப 10,000 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தான், மேகாலயாவில் நிலக்கரி  சுரங்கத்தில் சிக்கிய 17 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக காப்பாற்ற முடியாமல் திணறி வந்தனர், மீட்புக்குழுவினர். இராணுவம் , தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் என நாட்டில் இருக்கிற அனைத்து மீட்புக்குழுவினரும் கடுமையாக போராடி 1 மாதத்திற்கு அப்புறமாக 2 ஹெல்மெட்களை மட்டுமே கண்டுபிடித்தனர். அதன்பிறகு சில நாட்களில் 17 பேரில் வெறும் 2 பேரின் உடலை மட்டுமே கண்டுபிடித்தனர். தேடித்தேடி ஓய்ந்து போன மீட்புக்குழுவினரும் இராணுவத்தினரும் 2 மாதத்திற்கு பிறகு மீட்புபணியையே கைவிட்டுவிட்டனர். சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரை உறிஞ்சி வெளியேற்ற சக்தி வாய்ந்த பம்புகள் மீட்புக்குழுவினரிடம் இல்லாததே மீட்புப்பணிகள் தொய்வடைய காரணமாக கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உயர்தர மீட்புப்படையிடம் சக்திவாய்ந்த ஒரு மோட்டார் பம்ப் இல்லை என்பதை எந்தவிதத்தில் எடுத்துக்கொள்வது ?

டிஜிட்டல் இந்தியா ! புதிய இந்தியா ! என முழக்கமிடும் இந்த நாட்டில் தான் கடந்த சில வருடத்தில் மனித மலத்தை மனிதனே சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் 50% அதிகரித்துள்ளனர். தூய்மை இந்தியாவுக்காக மலக்குழிக்குள் இறங்கும் இவர்கள் அடிக்கடி விஷவாயு தாக்கி பலியாகும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவ்வாறு விஷவாயு தாக்குவதையும் , மனித மலத்தை மனிதனே சுத்தம் செய்வதை தவிர்ப்பதற்கும் எந்த கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை

அரசாங்கமோ அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கூட நல்ல முறையில் ஏற்படுத்திக்கொடுப்பதில்லை. பிரச்சாரத்தின் போதெல்லாம் அவர்களின் காலை துடைத்து விட வேண்டாம், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழி செய்யுங்கள். அவர்களின் நிலையை உயர்த்தும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் கொஞ்சம் செலவளியுங்கள்.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் கசிந்து கருப்பாக காட்சியளித்த கடலிலிருந்து எண்ணெய்யை துப்புரவுப்படுத்த இவர்கள் கையிலெடுத்த ஆயுதம் பிளாஸ்டிக் வாளிதான். இதனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இன்னலுற்றனர் .

நிலவுக்கும் செவ்வாய்க்கும் ராக்கெட் விடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்திருந்தாலும் அது சாமானியனின் பிரச்சனைகளை சற்று தள்ளி நின்றே அணுகவதற்கான காரணம் என்ன என புரிபடவில்லை. இந்தியாவின் ஏவுகணை மனிதன் என போற்றப்படும் மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஏராளமான கண்டுபிடிப்புகளில் பங்குக்கொண்டிருந்தாலும் "மாற்றுத்திறனாளிகளுக்காக குறைந்த எடையில் அவர் கண்டுபிடித்த செயற்கை கால்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கண்டுபிடிப்பு" என குறிப்பிட்டுள்ளார். சாமானியனின் பிரச்சனையை தீர்ப்பதில்தான் அறிவியலின் உண்மையான அர்த்தம் உள்ளதென அவர் உணர்ந்திருந்ததால் தான் அவர் இன்றும் மக்களால் போற்றப்படுகிறார்.

ஒரு நாட்டின் அந்தஸ்தையும் மதிப்பையும் விண்வெளி சாதனைகளை வைத்தே தீர்மானிக்கும் இந்நாளில் அதற்கென நிதி ஒதுக்குவதெல்லாம் சரிதான், ஆனால் அதற்கு ஒதுக்குகின்ற நிதியில் ஒரு சிறுபங்கையாவது அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஒதுக்க வேண்டும். அறிவியல் அடித்தட்டு மக்களுக்கும் பயனுள்ளதாகட்டும் !

உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review