வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பாணியில் இந்தியாவை உலுக்கிய 20,000 கோடி ஊழல் | வியாபம் ஊழல் | Vyapam Case | Madhya Pradesh |


வசூல் ராஜா எம்பிபிஎஸ் பாணியில் இந்தியாவில் நடந்த 20,000 கோடி  ஊழல் !



இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்ட 30 பேருக்கு 7 ஆண்டுகள் மற்றும் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது, சிபிஐ சிறப்பு நீதிமன்றம். சொத்துக்குவிப்பு மற்றும் பல ஊழல் வழக்கிலும் பெரிய தலைகளுக்கே  4 ஆண்டு சிறை தண்டனை தான் வழங்குகிறார்கள் அப்படியிருக்கும் போது இவர்களுக்கு ஏன் இத்தனை வருடம் என யோசித்தால் விஷயமும் கொஞ்சம் பெருசுதான்.
வியாபம் ஊழல் என்றால் என்ன?
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் தனக்கு பதிலாக அதே கல்லூரியை சேர்ந்த மருத்துவரான கிரேஷி  மோகனை நுழைவுத்தேர்வை எழுதச் செய்து எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவார் கமல்ஹாசன். கல்லூரியில் சேர்ந்த பிறகு எக்சாமில் பாஸ் ஆவதற்கும் பல மைமா வேலைகளையும் கிமோ உதவியுடன் நிகழ்த்துவார்  கமல்.  இந்த சிரியஸ் மேட்டரில் இருந்தே வியாபம் ஊழல் என்னும் சீரியஸ் மேட்டருக்குள் பயணிப்போம். வசூல் ராஜா படத்தில் கமல் தேர்வுகளில் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் ஒரு அரசாங்க அமைப்பும் அதன் ஊழியர்களுமே செய்தால் எப்படி இருக்கும்? அதுதான் வியாபம் ஊழல்.
தமிழகத்தில் அரசு பணிக்கான தேர்வுகளை நடத்துவதற்கு TNPSC என்ற அரசு அமைப்பு இருப்பதை போல, மத்திய பிரதேசத்தில் அரசுப்பணிக்கான தேர்வுகளையும் மற்றும் மருத்துவம் உட்பட உயர்கல்விக்கான தேர்வுகளை நடத்தும் அமைப்புதான் வியாபம் (MPPEB). ஹிந்தியில் , வியாவ்சயிக் பரிக்சா மண்டல்  இதன் சுருக்கம் தான் வியாபம்.
ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் இந்த வியாபம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இதில் தான் ஆள்மாறாட்டம் , விடைத்தாள் மாற்றம்  உட்பட பல வழிகளில் முறைகேடு  நடைபெற்றுள்ளது.
அரசுப்பணிகளுக்கும், மருத்துவம் போன்ற உயர் படிப்புகளுக்கும் முறைகேடாக தேர்வாக நினைப்பவர்கள்  இடைத்தரகர்கள் மூலம் 5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை பணம் கொடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். பணத்தை பெற்று கொண்ட வியாபம் ஊழியர்கள் மொத்தம் 3 வழிகளில் தேர்வில் முறைகேடுகளை அனுமதித்துள்ளனர்.

 ஆள்மாறாட்டம் :
வசூல் ராஜாவில் கமலுக்கு பதில் கிமோ தேர்வு எழுதுவாரே அதே விஷயம்தான் இங்கேயும். மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு பதில் பணத்தை பெற்றுக்கொண்டு மருத்துவர்களே தேர்வெழுதியுள்ளனர்.
இன்ஜின் போகி முறை :
பள்ளியில் படிக்கும்போது க்ளாஸ் டெஸ்ட்டுக்கு படிக்காமல் சென்றுவிட்டால் எவன் நல்லா படிச்சிருக்கான்னு பார்த்து அவன் பக்கத்துல இடத்த போட்டு உட்காந்து அப்பாடா...ன்னு எக்சாம் எழுதுவோமே அந்த சிஸ்டம் தான் இன்ஜின் போகி. இங்கே பணம்கொடுத்த இரண்டு மக்கு மாணவர்களுக்கு நடுவில்  ஒரு நன்றாக படிக்கும் மாணவனுக்கு சீட் போட்டுவிடுவார்கள். அதன்பிறகு என்ன நடக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும்.

OMR Sheet குளறுபடி :
தேர்வில் பதிலளிக்க வழங்கும் OMR சீட்டில்  உறுதியாக நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து பெயர்,எண் உட்பட எதையும் குறிப்பிடாமல் பேப்பரை கொடுத்துவிடுவார்கள். நமபர் இல்லாத பேப்பரை சரியாக எடுத்து அதிக மதிப்பெண்ணை வழங்கி விடுவார்கள் உள் உளவாளிகள். மாணவர் பிறகு சாவகாசமாக RTI மூலம் தனது பேப்பரை வாங்கி பதிலளிக்காமல் விட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விவரத்தையெல்லாம் நிரப்பி இடைத்தரகர்கள் மூலம் அலுவலகத்தில் சேர்த்து விடுவார்.

இப்படி டிசைன் டிசைனாக ஒன்றிரண்டு வருடம் அல்ல,  கிட்டத்தட்ட 1995 லிருந்து 2013 வரை 18 வருடங்கள் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. 95 லிருந்து 2004 வரை பல ஊர்களிலும் இந்த முறைகேடுகள் குறித்து அளிக்கப்பட்ட புகார்கள் பெரியதாக கவனம் பெறவில்லை. 2007-08 ல் மத்திய பிரதேச அரசின் தணிக்கைத் துறைக்கு வியாபம் அமைப்பின் மீது சந்தேகம் ஏற்பட்டு புகார் கூறுகிறது.
                       சிவராஜ் சிங் சவுகான்

 அப்போதைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் இது குறித்து விசாரிக்க தனிக்குழுவை நியமித்தார். இதன் பிறகு தான்  புற்றிலிருந்து பாம்பு வெளிவருவதை போல ஒவ்வொரு விஷயமாக வெளியே வர ஆரம்பிக்கிறது.
2011 ல் ஒரு சிலர் இத்தொடர்பாக கைது செய்யப்பட்டனர். 2013 ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலததில் விடுதியில் தங்கியிருந்த  சிலரை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் வியாபம் நடத்த இருந்த மருத்துவ நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்காக ஆளுக்கு 50000 முதல் 100000 வரை பெற்றுக்கொண்டு தேர்வெழுத  வந்திருப்பதும் தெரியவந்தது. இதன் பிறகான விசாரணையில் தான் இந்தியாவே திரும்பி பார்க்கும் சம்பவங்களெல்லாம் நடைபெற்றது.

அப்போதைய ம.பி ஆளுநராக இருந்த ராம் நரேஷ் யாதவ் முதல்  பாஜக வின் முன்னாள் கல்வி அமைச்சர் லெட்சுமி காந்த் மற்றும் சில அமைச்சர்களின் உறவினர்கள் காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் என பெரிய தலைகள் பலரும் விசாரணையில் சிக்கின.
 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும்  இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். முறைகேடாக மருத்துவம் படித்து வந்த  600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே வழக்கில் சம்பந்தபட்ட 25 க்கும் மேற்பட்டோர் விபத்து, தற்கொலை என மர்மான முறையில் இறந்தனர். இறந்தவர்களில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆளுநர் ராம் நரேஷின் மகனும் ஒருவர்.

ஊழலாக ஆரம்பித்து மர்மத்தை நோக்கி நகர்ந்த இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த வழக்கில் குற்றவாளிகளான இடைத்தரக டாக்டர்கள் ஜெகதீஸ், சஞ்சீவ் மற்றும் சுதீர் ராய், சந்தோஷ் குப்தா, தரங் ஆகியோரின் குழுக்களை கைது செய்தது.
20,000 கோடிக்கும் அதிகமாக நடைபெற்ற இந்த ஊழலை கண்டுபிடிப்பதில் டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஸ் சவுத்ரி , பிரசாந்த் பாண்டே என்ற மூன்று சமூக ஆர்வலர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இன்றைக்கு வெளியான தீர்ப்பில் பலருக்கும் தண்டனை வழங்கப்படிருந்தாலும், உயர்ரக முக்கிய குற்றவாளிகள் இந்த வழக்கிலிருந்து தப்பித்துவிட்டதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

வியாபம் ஊழல் போன்றே தமிழகத்தில் நீட் ஆள்மாறட்ட வழக்கு வெளிப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. முறையாக விசாரித்தால் இந்த வழக்கிலிருந்தும் வியாபம் போன்ற பூதம் வெளிக்கிளம்பலாம்.

-உ.ஸ்ரீ

(Source : இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் - சவுக்கு சங்கர், Wikipedia & News media)

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review