வங்கி இணைப்பும் சர்ச்சைகளும் - பொருளாதார நிபுணர்களுடன் ஒரு அலசல் | Bank Merger |
வங்கி இணைப்பும் சர்ச்சையும்...
பொருளாதார மந்தநிலை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கப்பட்டு 4 பெரிய வங்கிகளாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 21லிருந்து 12 ஆக குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷ்னல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஒன்றாகவும், கனரா வங்கி சிண்டிகேட் வங்கிஒன்றாகவும், யுனியன் வங்கி, ஆந்திரா வங்கி,கார்ப்பரேசன் வங்கி ஆகியவை ஒன்றாகவும், இந்தியன் வங்கி அலகாபாத் வங்கி ஆகியவை ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இந்த நிலையில் வங்கி இணைப்பு நடவடிக்கை என்ன பலனைத் தரும்? வங்கி இணைப்பின் மூலம் என்னென்ன விளைவுகள் உண்டாகும்? இதனால் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்படுமா? என பல கேள்விகளோடு நிபுணர்களிடம் பேசினோம்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பொருளாதார ஆலோசகர் வி.நாகப்பன்,
"குறிப்பிட்ட ஒரே இடத்தில் வெவ்வேறு பொதுத்துறை வங்கிகள் அதிகளவில் உள்ளன.எல்லாமே ஒரே முறையில் இயங்கக்கூடிய ஒரே வேலையை செய்யக்கூடிய வங்கிகள்.எல்லா வங்கிகளும் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்கின்றன இருந்தும் அனைத்து வங்கிகளும் முறையாக மக்களுக்கு சேவை செய்கிறதா என்பது கேள்விக்குறியே.மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு முறையாக சேவை வழங்காமல் ஒரு தெருவிற்கு பத்து வங்கிகள் இருந்தும் பிரயோஜனமில்லை. ஒரே வேலையை செய்வதற்கு ஒரே இடத்தில் எதற்கு இத்தனை வங்கிகள்? இதனால் எல்லாவிதத்திலும் வீண் செலவுகள்தான் அதிகரிக்கும்.20 வங்கிகள் இருந்தால் ஒவ்வொரு வங்கியிலும் இயக்குனர் குழு என்ற வகையில் 15 பேர் இருக்கிறார்கள் இவர்கள் ஒவ்வொருவரும் பெரும்பணக்காரர்கள் மற்றும் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்கள். ஒரு வங்கியில் இயக்குனர் குழு ஆலோசனைக்கூட்டம் என வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு கூட்டங்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் இயக்குனர்களுக்கு 10000 லிருந்து 1 லட்சம் வரை கட்டணம் வழங்கப்படுகிறது. இப்போது வங்கிகள் இணைக்குப்படுவதன் மூலம் இயக்குனர்களின் எண்ணிக்கை குறையும் போது இந்த செலவுகளெல்லாம் கட்டுக்குள் வரும். சில மாதங்களுக்கு முன் சில வங்கிகளை ஒன்றாக இணைத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இதை பார்க்க வேண்டும்.இதற்கு முன் பல அரசாங்கங்கள் இதுபோன்று வங்கிகளை இணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை.80 களில் வங்கிப் பணிக்கான தேர்வு ஐ.ஏ.எஸ் தேர்வு போல நடக்கும் ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. அதன்பிறகான காலக்கட்டத்தில் தொழில்நுட்பரீதியாக வங்கிகள் முன்னேற்றம் அடைந்ததால் பணியாட்களையும் பணியிடங்களையும் குறைத்து விட்டார்கள் அதனால் இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான் மிகப்பெரிய அளவில் வேலையிழப்பு ஏற்படும் என்பதற்கு குறைவான வாய்ப்பே உள்ளது.அப்படியே ஏற்பட்டாலும் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் அளவில் தான் ஆள்குறைப்பு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த விஷயத்தில் வங்கி ஊழியர்களும் அரசாங்கமும் சுமூகமாக பேசிக்கொள்ள வேண்டும்.இதை முறையாக கையாண்டால் தேவையற்ற செலவுகள் குறைந்து வங்கிகள் லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படும்இ. அதிகப்படியான கிளைகள் இருக்கின்ற இடத்திலிருக்கும் வங்கிகளை கிளைகளே இல்லாத இடத்திற்கு மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் வங்கிச்சேவைகள் மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளன. ஆனால் வட இந்தியாவில் வங்கிகளே இல்லாத கிராமங்களும் இருக்கின்றன அங்கெல்லாம் இந்நடவடிக்கை நல்ல பயனைக் கொடுக்கும். இந்நடிவடிக்கை மட்டுமே தற்போதைய சூழலை சீராக்கிவிடாது. மீண்டும் பழையபடியே விஜய் மல்லையா போன்றோர்களிடம் கடனை வாரி வழங்கிவிட்டு பொதுமக்கள் ஏடிஎம் பயன்படுத்துவதற்கெல்லாம் கட்டணம் விதித்துக்கொண்டிருந்தால் இன்னும் நிலைமை மோசமாகத்தான் போகும்.வங்கி இணைப்பே தனியார்மயத்திற்கு வழிவகுத்துவிடும் என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால் வங்கிகளை இணைத்து பெரிதாக்குவதன் மூலம் தனியார்மயமாதலுக்கான வாய்ப்பு குறைகிறது.இன்றைக்கு வேறு எந்த காப்பீட்டு நிறுவனமும் LIC ஐ நெருங்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் LIC ன் மிகப்பெரிய நிர்வாக அமைப்பே. இன்றைக்கு தனியார் வங்கிகளுடன் பொதுத்துறை வங்கிகள் போட்டி போட வேண்டுமானால் அது போன்ற மிகப்பெரிய நிர்வாக அமைப்பை கொண்டிருக்க வேண்டியது அவசியம். இணைக்கப்படுகிற இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், கடன் .வாங்கியிருப்பவர்கள் எந்த பதற்றமும் அடையத் தேவையில்லை. முன்பு வங்கிச் சேவையை பயன்படுத்தியதை போலவே இப்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம் அதில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது."எனத் தெளிவாக கூறுகிறார்.
வங்கி இணைப்பை ஆதரிக்கும் அதே வேளையில் சில விமர்சனங்களையும் முன்வைத்து பேசுகிறார் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்,
"தனியார் வங்கிகள் வீடிதேடி வந்து வங்கிச்சேவையை வழங்குகின்றன. மக்களுக்கு கடன் கொடுப்பதிலும் பொதுத்துறை வங்கிகள் ஆர்வம் காட்டுவதில்லை அதனால் இது வரவேற்கப்பட வேண்டிய முதல் நடவடிக்கை. ஆனால் இதற்கு முன்னால் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளில் தவறிவிட்டார்கள்.பொதுத்துறை வங்கிகளில் வேலை செய்தாலும் ஒரே சம்பளம் செய்யாவிட்டாலும் ஒரே சம்பளம் அதனால் பொதுத்துறை வங்கிகளில் முறையாக வேலை செய்வது மேனேஜர் மட்டுமே அவர் ஒருவர்தான் கடன் கொடுப்பதிலிருந்து அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்கிறார். முதலில் இந்த முறையை மாற்ற வேண்டும். கடன் கொடுப்பது கடன் வசூலிப்பது ஆகியவற்றை தனியாகவும், சேமிப்புக்கணக்குகளை தனியாகவும் பிரிக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். வாராக்கடன் பிரச்சனையை போக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 4 லட்சம் கோடியாவாது மூலதனமாக வழங்க வேண்டும். அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது ஒருமுறை 2.20 லட்சம் கோடி கொடுக்கப்போவதாக கூறினார்.அதன்பிறகு அது குறித்து நடவடிக்கைகள் என்னவானது எனத் தெரியவில்லை. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் 90000 கோடி கொடுக்கப்போவதாக சொன்னார் அதன் பிறகு 70000 கோடி என சொன்னார். இதில் எது உண்மையென தெரியவில்லை. தேனா வங்கி, விஜயா வங்கி, பரோடா வங்கி மூன்றையும் இணைத்தார்கள். அந்த இணைப்புக்கு பிறகு பரோடா வங்கியின் பங்குவிலை 40% இறங்கிதான் உள்ளது. திவாலான ஐடிபிஐ வங்கியை எல்.ஐ.சி தலையில் கட்டினார்கள் எல்.ஐ.சி 61 ரூபாய்க்கு வாங்கிய பங்குகளின் விலை இன்று 28 ரூபாயாக சரிந்துள்ளது. எல்.ஐ.சி மக்கள் போட்டிருந்த பணத்தை நஷ்டப்படுத்திவிட்டார்கள். இந்த இரண்டு விஷயத்திலும் ஒழுங்காக நடவடிக்கை எடுக்காதவர்கள் இப்போது இந்த வங்கிகள் இணைப்பை மட்டும் எப்படி சரியாக செய்வார்கள்? வங்கிகளில் இணைப்பு என்ற முதல் படி சரியானதுதான் ஆனால் அடுத்தடுத்த படிகளில் தவறிவிடுகிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் ஊழியர்கள் வேலைக்குறைப்பெல்லாம் பெரிய அளவில் இருக்கப்போவதில்லை.இணைக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், கடன் வாங்கியிருப்பவர்களுக்கு எந்த சிரமமும் ஏறடப்போவதில்லை. மிகவும் அருகிலிருக்கின்ற வங்கிகலில்தான் வாடிக்கையாளர்களின் கணக்குகளை மாற்றிவிடுவார்கள். கணக்கு எண் மட்டும் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது அதுவும் வங்கியிலிருந்து முறையாக தெரியப்படுத்திவிடுவார்கள். . 2013 ல் இதே நடவடிக்கையை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அமைத்த நாயக் தலைமையிலான குழு பரிந்துரைத்த போது பிஜேபி இதனை எதிர்த்தது. அதே நேரத்தில் கடந்த எஸ்பிஐ வங்கியுடன் சில வங்கிகளை இணைத்தார்கள் அப்போதே இந்த வங்கிகளையும் இணைத்திருக்கலாம். பொருளாதார மந்தநிலையை மறைப்பதற்குத்தான் இப்போது வங்கி இணைப்பு என்பதை கையிலெடுத்துள்ளனர்." என்ற விமர்சனத்தோடு பேசி முடிக்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கை ஏன்? இதன் சாதகங்கள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் பா.ஜ.க வின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதென்பது இன்று நேற்றல்ல பல காலங்களாக வங்கித்துறை சீர்திருத்தங்களில் முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது வரை பல சிறிய வங்கிகள் பெரிய வங்கிக்ச்ளுடன் இணைக்கப்பட்டுள்ளன அதில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. மக்களுடைய பணத்தில் இயங்கும் வங்கிகளில் நஷ்டம் ஏற்படும் போது அதை நஷ்டத்திலிருந்து மீட்பது அரசின் கடமை. நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படும் போது மக்களுடைய சேமிப்பு காக்கப்படுகிறது. அதே நேரத்தில் மூலதனம் அதிகமாவதன் மூலம் தொழில்துறைக்கு அதிக மூதலீடுகளை வழங்க முடியும் அதன்மூலம் வளர்ச்சி அதிகரிக்கும் இதன் மூலம் பொருளாதாரம் மேம்படும். வங்கிகள் இணைப்பு என்பது எப்போதும் லாபகரமானதாகவே அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் குறைகூறுபவர்கள் ஆதாரத்தோடு பேச வேண்டும். 2008 ல் 18 லட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் கடன் 2014 மார்ச் - ல் 54 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் தான் ரியல் ஸ்டேட் துறையில் ஊதிப்பெரிதாக்கப்பட்ட வளர்ச்சி உண்டானது. இதனால் பணவீக்கம் அதிகரித்து குறிப்பிட்ட சிலர் மட்டும் பயனடைந்தனர். இந்த காலக்கட்டத்தில் அதிகப்படியான கடன் வழங்கிய வங்கிகள் பாதிப்புக்குள்ளாயின. இந்த பாதிப்ப்புகளை களைவதற்குத்தான் சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது.இதன் மூலம் கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இதுவரையில் நடந்த வங்கி இணைப்புகள் மூலம் எத்தனை ஊழியர்கள் வேலையிழந்துள்ளார்கள்? அதற்கு ஏதாவது புள்ளி விபரம் இருக்கிறதா? தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆட்கள் செய்ய வேண்டிய வேலை கணினிகள் செய்வதால் வேண்டுமானால் வேலையாட்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் வங்கி இணைப்பினால் ஒருபோதும் வேலையிழப்பு ஏற்படாது.வங்கி இணைப்பின் மூலம் கடன்வட்டி விகிதாச்சாரம் குறையும். அதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கிராமப்புறங்களிலும் அதிகப்படியான கிளைகள் திறக்கப்படும் அதன் மூலம் மக்கள் அதிகம் பயனைத்தான் அடையப்போகிறார்கள்." என உறுதியாக கூறுகிறார் நாராயணன் திருப்பதி.
-உ.ஸ்ரீ
( கடந்த செப்டம்பர் மாதம் புதிய தலைமுறை இதழில் வெளியான கட்டுரை )




Comments
Post a Comment