எச்சரிக்கை - இது காய்ச்சல் காலம் ! நெல்லை மருத்துவர் திருமலைக்கொழுந்துவின் பேட்டி | #Dengue #Fever #டெங்கு
எச்சரிக்கை- இது காய்ச்சல் காலம்
பருவமழைக்கான அறிகுறி தொடங்கும் போதே போட்டி போட்டுக் கொண்டும் காய்ச்சல் சீசனும் தொடங்கிவிட்டது.
இக்காலத்தில் பரவும் டெங்கு மாதிரியான காய்ச்சல்கள் சாதாரண காய்ச்சல் போல் அல்லாமல் ஒரு படி மேலே சென்று மரணம் வரை விடாப்பிடியாக இழுத்து செல்லும் எமனாக விளங்குகின்றன.
எந்த காய்ச்சலாக இருந்தாலும் 48 மணி நேரத்தில் ஆரம்பநிலையிலே மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் 98 சதவீதம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது தொடர்பாக பொது மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ். திருமலைக்கொழுந்து அவர்களிடம் பேசினோம்.
திருமலைக்கொழுந்து
பொதுவாகவே மழைக் காலங்களில் வைரஸ் கிருமிகளால் தாக்கக்கூடிய நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஃப்ளூ , பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவைஅக்டோபர், நவம்பர் மழைக்காலங்களில் அதிகம் பரவும்.
பன்றிக்காய்ச்சல் பற்றி?
சாதாரண ஜலதோஷம் என்று சொல்வது போல் மூக்கில் நீர் வடிதல், இருமல், தொண்டை கரகரப்பு ,எரிச்சல் ,தலைவலி, காய்ச்சல் போன்றவை படிப்படியாக மெதுவாக ஏற்பட்டால் அது சாதாரண காய்ச்சலாகவே இருக்கும்.
இந்த பிரச்சனைகள் வேகமாக ஏற்பட்டால் அது ஃப்ளூ காய்ச்சலாக இருக்கலாம். இதனுடைய அடுத்தக்கட்ட வீரியமான தன்மையே H1N1எனப்படும் பன்றிக்காய்ச்சல், இதனுடைய பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கும்.
அறிகுறிகள்:
அதிகமான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, கண் மற்றும் தலையில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் போது மூன்று நாட்களுக்கு மேல் காத்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். உடனடியாக குடும்ப மருத்துவரையோ, அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாருக்கு பாதிப்பு அதிகம்?
பன்றிக்காய்ச்சலை பொறுத்தவரை நாள்பட்ட நோய்களான சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, கர்ப்பிணி பெண்கள், 5 வயதிற்குள உள்ள குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டால் இதனால் உண்டாகும் பாதிப்பு அதிகம். எனவே இவர்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
பன்றிக்காய்ச்சல் பாதிப்பை குறைப்பதற்காக காய்ச்சல் தடுப்பூசிகள் மருத்துவமனைகளில் போடப்படுகின்றன. 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளில் இருந்து யார் வேண்டுமானாலும் வருடத்திற்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம். இதனால் பன்றிக் காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவு குறைக்கலாம்.
டெங்குக் காய்ச்சல் பற்றி?
பெரும்பாலான டெங்கு காய்ச்சல்கள் சாதாரணமாக வந்துவிட்டு சாதாரணமாக போய்விடும். ஒரு சில டெங்கு காய்ச்சல்கள் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவை நன்னீர் மற்றும் தேங்கிய நீரில் வளரும் கொசுக்கள் மூலம் அதிகம் பரவுகிறது.
அறிகுறிகள்:
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை மூன்று நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்றே இருக்கும். காய்ச்சல், தலை வலி, அதிகமான உடல் வலி, உடலில் ஆங்காங்கே சின்னம்மை தடிப்புகள் போன்று ஏற்படும்.
அதிகமான வாந்தி, வயிறு வலி, மூக்கு மற்றும் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல், ரத்த அழுத்த குறைவு , சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை டெங்குவானது ஆபத்தான நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள்.
இரத்த தட்டணுக்கள் குறைவு பற்றி?
பொதுவாகவே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். இரத்தக்குழாய்களில் உள்ள நீர் வெளியேறி இரத்தத்தில் நீரின் அளவு குறையும். நீர்ச்சத்து,இரத்த அழுத்தம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை தானாகவே உயர்ந்து விடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கொசுக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் இருப்பவர்களும், அருகில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியை சேர்ந்தவர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். முடிந்த அளவு கொசு கடிக்காமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது. நிலவேம்பு கசாயம் போன்றவற்றை அருந்தலாம். இருந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடரும் போது மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழ்ப்புகள் பற்றி ?
எந்த காய்ச்சலாக இருந்தாலும் மூன்று நாளில் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொண்டால் அநேகமாக உயிரிழப்புகள் ஏற்படாது. சிலர் தாங்களாகவே மருந்துக்கடைகளிலேயே மாத்திரை வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு வாரம் கழித்து ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். அதுபோன்ற நேரங்களில் சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடுகிறது.
-உ.ஸ்ரீ
(புதிய தலைமுறை இதழுக்காக எடுத்த பேட்டி)

Comments
Post a Comment