உணவு ; உடல் ; உண்மை ! | நெல்லை மக்களின் அபிமானத்துக்குரிய மருத்துவர் திருமலைக்கொழுந்து பகிர்ந்துகொள்ளும் ஹெல்த் டிப்ஸ் ! | Health Tips by Dr.ThirumalaiKolunthu
உணவு ; உடல் ; உண்மை !
முன்பெல்லாம் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை எங்காவது ஒருவருக்குத்தான் இருக்கும் . இப்போதோ நம் குடும்பத்தில் ஒருவருக்கோ இல்லை நமக்கு தெரிந்த ஒருவருக்கோ இத்தகைய நோய்கள் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கமும் தவறான வாழ்க்ககைமுறையும் நோய் நிரம்பிய வாழ்க்கைக்கு சிகப்பு கம்பளம் விரித்துவிட்டன. ஜவுளிக்கடைகளில் கூட ஆடிமாதம் மட்டும்தான் தள்ளுபடி அளிக்கின்றனர் ஆனால் நம் ஊரில் புற்றீசல் போல் பெருகியுள்ள மெடிக்கல்களில் வருடம் முழுவதும் தள்ளுபடி அளிக்கின்றனர். ஹோட்ட்
ஹோட்டல்களில் இருக்கும் கூட்டத்தை விட மெடிக்கல்களில் மருந்து வாங்க நிற்கும் கூட்டம் அதிகம். உணவே மருந்து என்ற வாழ்க்கை முறையிலிருந்து மருந்தே உணவு என்ற வாழ்க்கைமுறைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் , புற்றுநோய் போன்றவை அரிதினும் அரிதாகத்தான் இருக்கும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி ஒரு கூட்டமே நோயாளியாக மாறியுள்ளனர். தவறான உணவுப்பழக்க வழக்கங்களே இவற்றிற்கு காரணம் என்றும் சரியான சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமே முக்கால்வாசி நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது மருத்துவ உலகம்.
இதுதொடர்பாக மருத்துவர் திருமலைக்கொழுந்து அவர்களிடம் பேசினோம்:
திருமலைக்கொழுந்து
சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்றவை தற்போது சிறுவயதினரையும் அதிகம் பாதிப்பதற்கான காரணம் என்ன?
அதிகமான ட்ரான்ஸ் கொழுப்பு, அதிக உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதனால் இரத்தக்கொதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் போன்றவற்றை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். ஆனால் இது உடல்நலத்திற்கு உகந்ததல்ல. சிலவற்றில இனிப்பு சுவைக்காக ஹை ப்ரக்டோஸ் கார்ன் சிரப் என்பது சேர்க்கப்படுகிறது இது விலையும் குறைவு அதே நேரத்தில் அதிக இனிப்பை அளிக்கக்கூடியது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, உடல்பருமன், புற்றுநோய் வரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பெற்றொர்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற திண்பண்டங்களை கொடுப்பதை தவிர்த்து பழங்கள், கீரைகள் போன்றவற்றை கொடுத்து பழக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேளை உணவுகளின் முக்கியத்துவம் என்னென்ன?
மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட்டுவிட வேண்டும். இவற்றில் காலை உணவு முக்கியமானது இரவு உணவுக்கு பிறகு 12 மணி நேரத்திற்கும் மேல் வயிறு காலியாக இருப்பதால் காலை உணவு உடலுக்கு மிகவும் முக்கியம். அதே போல இரவு நேரம் குறைவாகவும் சீக்கிரமாகவும் சாப்பிட்டுவிட வேண்டும். இரவு அதிகமாக சாப்பிட்டால் குடலுக்கு ஓய்வில்லாமல் போய் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். காலை உணவை பொறுத்தவரை திருப்தியாகவும், மதிய உணவை அளவாகவும், இரவு உணவை குறைவாகவும் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையில் குறைந்த 3 மணி நேரமாவது இடைவெளி இருப்பதே செரிமானத்திற்கு உதவும். சிலர் செரிமானம் ஆகவில்லையென்று கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்களை வாங்க்கி அருந்துகின்றனர். இதனால் அதிகமான அமில சுரப்பு, அல்சர், வய்ற்றுப்புண் போன்றவை ஏற்படும். இதனால் செரிமானத்திற்காக குளிர்பானங்ககளை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும்போது அதிகம் தண்ணீர் குடிப்பது சரியா?
சிலர் சாப்பிடும் போது அதிகம் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்றது என நினைக்கின்றனர். அது தவறு, சாப்பிடும் தண்ணீர் குடிப்பதனால் தண்ணிர் உள்ளே சென்று உணவுகளை நொறுக்கி எளிதில் செரிமானம் ஆகுவதற்குத்தான் உதவுகின்றது. சாப்பிடும் போது தண்ணிர் குடிப்பதில் தவறில்லை.
இறைச்சி உணவுகள் உடல்நலத்திற்கு நல்லதா?
மீன், முட்டை,சிக்கன், மட்டன் போன்றவை உடலுக்கு நல்லதே. மீன் மற்றும் முட்டையில் அதிக அளவு நல்ல புரதம் உள்ளதால் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம். இறைச்சி உணவுகளை முடிந்தவரை எண்ணெய் அதிகம் சேர்த்து பொரித்து சாப்பிடாமல் நல்ல முறையில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லதே.
எண்ணெய் அதிகம் சேர்ப்பது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமா?
பொதுவாக எண்ணெய்களில் மூன்று விதமான கொழுப்புகள் அதிகம் உள்ளன். தேங்காய் எண்ணெய்யில் சேச்சுரேட்டட் கொழுப்பும், கடலை எண்ணெய் , நல்லெண்ணெய் போன்றவற்றில் பாலி அன்சேச்சுரேட்டட் கொழுப்பும், ஆலிவ் ஆயிலில் மோனோ சேச்சுரேட்டட் கொழுப்பும் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு தேவையானவையே. ஒரே எண்ணெய்யாக பயன்படுத்தாமல் இரண்டு மூன்று எண்ணெய்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் கெட்ட வேதிவினைகள் நடைபெறும் இது உடலுக்கு உகந்ததல்ல
ஆரோக்கியமான உடலுக்கு பழங்கள் காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றி ?
பழங்களை பொறுத்தவரை வெறும் வயிற்றிலோ உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலோ சாப்பிடுவது நல்லது. பழங்களின் சிறப்பே அதில் உள்ள பைபர் எனப்படுகிற நார்ச்சத்துதான் இது மலச்சிக்கல் பெருகுடல் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதை தவிர்க்கும். ஜீஸாக குடிப்பதால் இந்த நார்ச்சத்து முழுவதும் வடிகட்டப்பட்டு வெறும் இனிப்பு மட்டுமே இருக்கும். பழங்களை பச்சையாக சாப்புடுவதே உடலுக்கு நல்லது.
காய்கறிகளை பொறுத்தவரை ஒவ்வொரு நிற காயிலும் ஒவ்வொரு விதமான சத்து உள்ளது. எனவே காய்கறிகள் வாங்கும்போது எல்லா நிறங்களில் உள்ள காய்கறிகளையும் வாங்கி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
சரிவிகித உணவுப்பற்றி ?
மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது உப்புகள் போன்றவை சரியான விகிதத்தில் கலந்திருப்பதே சரிவிகித உணவு. அரிசி, கோதுமை, மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பால், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வதே சரிவிகித உணவு.
காபி, டீ அதிகம் பருகுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?
காபி, டீ போன்றவை மூளையின் நரம்பு மண்டலத்தை தூண்டுபவை அதிகமாக காபி , டீ அருந்துவதால் அதிகமுறை நரம்பு மண்டலத்தை தூண்டும். இது உடலுக்கு நல்லதல்ல.
சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது சரியா?
நிச்சயம் நல்லதல்ல. குறிப்பாக முதியவர்கள் சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வதையோ, மாடி ஏறுவதையோ தவிர்க்க வேண்டும். அந்த நேரங்களில் செரிமானத்திற்க்காக அதிக அளவு இரத்தம் குடல் பகுதிக்கு செல்லும் இருதய பகுதிகளில் குறைந்த அளவு இரத்த ஓட்டமே இருக்கும். சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அதிகாலை அ மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.
-உ.ஸ்ரீ
( சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை இதழுக்காக எடுத்த பேட்டி )

Comments
Post a Comment