சுட்டதெல்லாம் தங்கம் - இது இளவேனில் ஸ்டைல் | Ilavenil Valarivan | World cup Shooting 2019 |

சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்  குறித்த ஸ்டோரி.

(கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிய தலைமுறை இதழில் வெளியான கட்டுரை )

' இது தங்கமழை பொழியும் "இளவேனில்" காலம்'

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலின் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாளறிவன்.ரியோவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அனுபவமிக்க சீனியர் வீராங்கனைகள் சொதப்ப சிங்கிளாக நின்று தோட்டாக்களை தெறிக்கவிட்டு தங்கம் வென்றுள்ளார் இளவேனில். தங்கப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மானசி ஜோஷி வரிசையில் இளவேனிலும் இணைந்து ஆகஸ்ட் மாதத்தை 'கோல்டன்' மாதமாக மாற்றியுள்ளார். இன்று இந்தியா முழுவதும் பெருமிதம் பேசிக்கொண்டிருக்கும் 20 வயதே ஆன இளவேனிலின் இன்றைய சாதனைப் பக்கங்களுக்கு முன்புள்ள வாழ்க்கை பக்கங்கள் அத்தனையும் நம்மை ஆச்சரியபடவைக்கும் மோட்டிவேஷ்னல் பக்கங்கள்.
.
தமிழகத்தின் கடலூரில் உள்ள காராமணிக்குப்பம் என்ற கிராமம் தான் இளவேனிலின் தந்தை வாளறிவனின் சொந்த ஊர். வாளறிவன் சென்னை ஐஐடியில் பி.ஹெச்.டி முடித்தவர். இளவேனிலின் அம்மா ஒரு தனியார் கல்லூரியின் முதல்வர்.  இளவேனில் கடலூரில் பிறந்திருந்தாலும் தந்தையின் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு குஜராத்துக்கு குடிபெயர்ந்தனர். ஒரு நாள் அப்பாவின் நண்பர் ஒருவரின் மகள் துப்பாக்கிச்சுடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறார் இளவேனில் விளையாட்டாக அவர் நீயும் ஒருமுறை முயற்சி செய்து பாரேன் என துப்பாக்கியை கையில் திணிக்க அன்றிலிருந்து தவிர்க்கமுடியாமல் தொடர்கிறது இளவேனிலுக்கும் துப்பாக்கிக்குமான பந்தம்.  இளவேனிலின் அண்ணன் இராணுவத்தில் பயிற்சி புரிவதால் அவரின் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி குறித்த கதைகளும் இளவேனிலை உசுப்பேற்றிவிட்டன. உசுப்பேறியவுடன் உம்மென்று இல்லாமல் தன்னுடைய ஆர்வத்தை பெற்றோரிடம் தெரிவித்த வேனிலை துப்பாக்கிச்சுடுதல் வீரர் ககன் நரங் கின் அகாடமியில்  பயிற்சிக்காக சேர்ர்துவிட்டனர் பெற்றொர்கள். ககன் நரங் 2012 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமைசேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ககனின் அகாடமியில் துப்பாக்கிச்சுடுதலை தாண்டி உடலையும் மனதையும் வலுவாக்கிக்கொள்ள அதிக பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறார் வேனில். பலகட்ட பயிற்சிக்கு பிறகு துப்பாக்கியும் தோட்டாவும் இளவேனிலின் கையசைவிற்கு கட்டுப்படும் சகாக்களாக மாறிப்போயின. கொஞ்சம் கொஞ்சமாக அகாடமியிலிருந்து வெளிப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு அடுத்தக்கட்டத்துக்கு முன்னேறும் நிலையில் வேனிலின் பாதையில் ஒரு ஸ்பீட் பிரேக்கர் குறுக்கிடுகிறது. 12 ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த இளவேனிலுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டு துறை கல்லூரிகளிலுமே சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. துப்பாக்கிச்சுடுதலை விட்டுவிட்டு டாக்டராவதற்கு இளவேனிலுக்கு மனமில்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு சென்றால் முழுமூச்சாக விளையாட்டில் ஈடுபடமுடியாது என்பதால் பி.ஏ ஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுக்கிறார். மருத்துவம் மற்றும் பொறியியலில் சேர்ந்து படித்தால் இப்போது இருப்பதை விட எல்லா விதத்திலும் உயரலாம் என்று தெரிந்தும் தனது லட்சியமான துப்பாக்கிச்சுடுதலுக்காக அவற்றை தியாகம் செய்துள்ளார். இந்த நேரத்தில் இளவேனிலின் முடிவுக்கு தடங்கல் சொல்லாமல் அவருக்கு தோளொடு தோளாக துணை நிற்கின்றனர் குடும்பத்தினர்.


"நான் இதுவரை 8 பதக்கங்களை வென்றுள்ளேன். இளா அதை விட அதிக பதக்கங்களை குவிக்க வேண்டும். ஒலிம்பிக்கிலும் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் அதற்கான ஆலோசனைகளை அவருக்கு வழங்குவேன்" இளவேனில் தங்கம் வென்றபிறகு அவரது பயிற்சியாளர் ககன் பேசிய வார்த்தைகள் இவை. ஈகோக்களற்ற இப்பேற்பட்ட பயிற்சியாளரின் கீழ் முழுமூச்சாக உயிரைக்கொடுத்து பயிற்சி செய்ததன் விளைவு அடுத்தடுத்து ஜீனியர் உலகக்கோப்பை, ஜீனியர் உலக சாம்பியன்ஷிப் என பங்கேற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கவேட்டையை நடத்தினார். 2018 ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜீனியர் உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கிச்சுடுதல் களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தார். இடையில் ஏற்பட்ட சில காயங்களையும் தோல்விகளையும் கடந்து இந்த ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிராவில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கு தயாரானார்.இந்தியா சார்பில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில், அபூர்வி சண்டிலா, அஞ்சும் மௌகில் ஆகிய மூவரும் கலந்துக்கொண்டனர். இதுவரை ஜீனியர் போட்டிகளில் ஆடிவந்த இளவேனில் முதல் முறையாக சீனியர் உலகக்கோப்பையில் பங்கேற்பதாலும் உலகக்கோப்பைக்கு முன் நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்டிருந்த தோல்வியினாலும் இளவேனில் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தார். ஆனால் இந்த பதற்றங்கள் எல்லாம் அவர் துப்பாக்கியை கையிலேந்தியவுடன் தூள்தூளாகின. இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான அபூர்வி சண்டிலா தகுதிச்சுற்றிலே வெளியேற இளவேனிலும் அஞ்சுமும் மற்றும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகினர். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே ஒவ்வொரு சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தார் இளவேனில். சீராக புள்ளிகளை சேர்த்த இளவேனில் ஒரு சுற்றை தவிர மற்ற எல்லா சுற்றுகளிலும் 10 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றார். இறுதியில் 251.7 புள்ளிகளை பெற்று தங்கம் வென்ற இளவேனில் மகளிர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் அஞ்சலி பகவத், அபூர்வி சண்டிலா வுக்கு பிறகு தங்கம் வென்ற 3 வது பெண் என்ற பெருமையை பெற்றார். " இளாவேனில் தங்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிக்கு சென்றுவிடுவார். ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 10 லிருந்து 12 மணி நேரம் பயிற்சியிலேயே ஈடுபட்டார். 2020 ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதுதான் அவரின் இலக்கு" என பெருமிதம் தெரிவிக்கின்றனர் இளவேனிலின் பெற்றோர்கள். "இதற்கு முன்னர் ஒலிம்பிக் நடைபெற்ற மண்ணில் தங்கம் வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பதக்கத்தை எனது பெற்றொர் மற்றும் எனக்கு துணை நின்றவர்களுக்கும் குறிப்பாக இராணுவத்தில் பணிபுரியுன் என் அண்ணனுக்கும் சமர்ப்பிக்கிறேன்." மேலும் பேசிய அவர் " தோல்வியென்பது பிரச்சனையே இல்லை. அதை தூக்கி எறிந்துவிட்டு 'ஜஸ்ட் ஒன் மோர் ட்ரை' என்பதை மட்டும் மனதில் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்." "ஜஸ்ட் ஒன் மோர் ட்ரை" இது இளவேனில் பேசிய அலங்கார வார்த்தை இல்லை. சாதிக்கத்துடிப்பவர்களுக்கு தேவையான அத்தனையும் இந்த "ஜஸ்ட் ஒன் மோர் ட்ரை" என்ற வாக்கியத்துக்குள் அடங்கியுள்ளது.

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review