டேட்டா விலை உயர்வும் பிண்ணனியும் ! | தொடர்பு எல்லைக்கு வெளியே | #jio #Airtel #Vodafone
தொடர்பு எல்லைக்கு வெளியே...!
மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தில் புதிய நோயாளியாக சேர்ந்திருக்கிறது தொலைதொடர்புத் துறை.இன்றைய தேதிக்கு சந்தையில் உள்ள மூன்று முக்கிய தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏறக்குறைய 74000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. வோடாபோன் நிறுவனத்தை பொறுத்தவரை 2019 ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 4973 கோடி ரூபாயை சந்தித்திருந்தது ஆனால் இந்த நிதியாண்டில் இந்த தொகை அப்படியே 10 மடங்காக அதிகரித்து 50,922 கோடி நஷ்டமாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 118.8 கோடி லாபத்தில் இயங்கிவந்த ஏர்டெல் நிறுவனம் இப்போது 23,045 கோடி நஷ்டத்தில் சிக்கியுள்ளது. ஜியோ வருகைக்குப் பிறகு பல நிறுவனங்களும் போட்டியை சமாளிக்கமுடியாமல் டெலிகாம் சந்தையிலுந்தே வெளியேறின. சமீபத்திய உதாரணம் ஏர்செல் நிறுவனம். ஐடியா நிறுவனம் வோடாபோனுடன் தன்னை இணைத்துக்கொண்டது. ஜியோ புயலில் சிக்கி சின்னாபின்னமாகி சந்தையில் ஓரளவு ஊன்றி நின்ற நிறுவனங்கள் தலையிலும் தற்போது இடியாக விழுந்துள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு.
"நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய AGR தீர்ப்பின் மூலம் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.தொலைதொடர்பு மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே லைசன்ஸ் கட்டணம் கட்டமுடியும் என தனியார் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது . அரசோ தொலைதொடர்பு மட்டுமில்லாமல் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் உட்பட அனைத்து வழிகளில் வருகின்ற வருமானத்திற்கும் லைசன்ஸ் கட்டணம் கட்ட வேண்டும் என கூறியது. இதுதொடர்பாக 2005 ல் தொடுக்கப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு அரசிற்கு சாதகமாக வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 92000 கோடி அளவிலான பணத்தை தொலைதொடர்பு நிறுவனங்கள் அரசிற்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதிகபட்ச தொகையை செலுத்த வேண்டியுள்ளது" என விளக்கும் தொலைதொடர்புத்துறை நிபுணர் சுப்பிரமணியன், "இந்த தீர்ப்பு மட்டுமே நிறுவனங்களின் நஷ்டத்திற்கு காரணமாகிவிட்டது என கூறமுடியாது. 2016 க்கு பிறகு ஜியோவின் வருகையிலிருந்தே மற்ற நிறுவனங்கள் கடினமான சூழலையே சந்தித்து வருகின்றனர். ஜியோ வருவதற்கு முன் 1995ல் இருந்து நிறுவனங்கள் அனைத்தும் முதலில் 2ஜி உரிமம் பெற்று மக்களுக்கு சேவையை வழங்கின. அதன்பிறகு 3ஜி உரிமம் பெற்று சேவை வழங்கின. அதன்பிறகு இப்போது 4ஜி சேவை வழங்கி வருகின்றன. ஆனால் இப்போது ஜியோ நேரடியாக 4ஜி உரிமம் பெற்று வாடிக்கையாளார்களுக்கு சேவை வழங்கி வருகிறது. ஆனால் மற்ற நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே வழங்கிய 2ஜி,3ஜி சேவையை முற்றிலும் நிறுத்தமுடியாமல் 4ஜி யோடு சேர்த்து அதையும் பராமரித்து வழங்கிவருகின்றனர் இது மிகப்பெரிய சுமையாகும்.
சுப்பிரமணியன்
"அரசு ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் தொலைதொடர்புத் துறை தொழில் செய்வதே கடினமாகிவிடும்" எனப் பேசியுள்ளார் வோடாபோன் நிறுவனத் தலைவர் நிக் ரீட்.
ஆனால், "இன்றைக்கு டெலிகாம் சந்தையில் ஜியோ,ஏர்டெல்,வோடாபோன் ஐடியா ஆகிய 3 பெரிய தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஏறக்குறைய தலா 30 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளனர். இந்நிலையில் மூன்று பேரில் எந்த ஒரு நிறுவனம் சந்தையை விட்டு வெளியேறினாலும் அதன் 30 கோடி வாடிக்கையாளர்களையும் ஒரேடியாக வேறு சேவை நிறுவனத்திற்கு மாற்ற முடியாது. ஏனெனில் 60 கோடி பேருக்கு சேவை வழங்கும் வகையில் மிகப்பெரிய கட்டமைப்புகள் எந்த நிறுவனத்திடமும் கிடையாது.புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கபட்டாலும் முழுமையாக சேவையை வழங்க ஐந்து வருடம் ஆகும். அரசும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இணைந்து பேசி நிவாரணம் மற்றும் மீள் நடவடிக்கை உதவிகள் பெறுவது போன்ற தீர்வுகளை அடைய வேண்டும்" என உறுதிபட கூறிகிறார் தொலைதொடர்புத் துறை நிபுணர் சுப்பிரமணியன்.
தனியார் நிறுவனங்கள் தடுமாறும்போது நஷ்டமே ஏற்பட்டாலும் கடைசி வரை களத்தில் நின்று மக்களுக்கு சேவை அளிப்பது என்னவோ பொதுத்துறை நிறுவனங்கள் தான். ஆனால் இங்கே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிலையோ அந்தோ பரிதாபம் !
பி.எஸ்.என்.எல் ஐயும் எம்.டி.என்.எல் ஐயும் இணைக்கப்போகிறோம் விருப்ப ஓய்வு வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்த ஒரு வாரத்தில் 70000 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
"பி.எஸ்.என்.எல் மக்களினுடைய வரிப்பணத்தில் இயங்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனம். பி எஸ் என் எல் நஷ்டத்திற்குள்ளாகக்கூடிய நிறுவனமே கிடையாது. 4 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துக்களைக் கொண்டது பிஎஸ்என்எல். நாடு முழுவதும் மலைப்பகுதிகள் முதல் கிராமங்கள் வரை விரிவுபடுத்தப்பட்ட சேவையை உடையது.ஆனால் மக்கள் மத்தியில் பி.எஸ்.என்.எல் க்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி விட வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகின்றனர் பி.எஸ்.என்.எல் டவர்கள் வைத்துள்ள பகுதிகளுக்கு கட்ட வேண்டிய மின்கட்டணங்களை முறையாக அரசாங்கம் கட்டுவதில்லை. அதனால் அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க முடிவதில்லை. இப்படி பல சிரமங்களை அரசு பி.எஸ்.என்.எல் க்கு அளித்து வருகிறது.பல விலையுயர்ந்த முக்கியத்துவமான நிலங்கள் எல்லாம் சொத்துக்களாக பி.எஸ்.என்.எல் இடம் உள்ளன. பி.எஸ்.என்.எல் ஐ பலவீனபடுத்துவதன் மூலம் இந்த நிலங்களை தனியாருக்கு மிகக்குறைந்த விலையில் கைமாற்றிவிடலாம் என்பதே இவர்களது திட்டம்.
இங்கே வேலை செய்யக்கூடிய ஒப்பந்த ஊழியர்களுக்கு 8 மாதமாக சம்பளமே வழங்கப்படவில்லை. 8 மாதம் சம்பளம் இல்லையென்றால் அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும். ஊழியர்களை வெளியேற்றுவதன் மூலமும் ஆட்குறைப்பு செய்வதன் மூலமும் எப்படி லாபமடைய முடியும்?ஊழியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிப்பதற்காக 17500 கோடியை செலவிடுகின்றனர். இதே தொகையை வைத்து நிறுவனத்தின் பிரச்சனைகளை தீர்த்து நிறுவனத்தை லாபகரமானதாக மாற்ற முடியும்.
எல்லா டெலிகாம் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கும்போது ஜியோ மட்டும் லாபத்தில் இயங்குகிறது. திட்டமிட்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் சார்புடையதாக இருக்கும்போது மற்ற நிறிவனங்கள் சிரமத்தை சந்திக்கின்றன. இன்னும் கொஞ்ச நாட்களில் பி.எஸ்.என்.எல் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஏதாவது தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிடுவார்கள். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மூலம் மக்களுக்கான சமூக நலத்திட்டங்களுக்கு செலவிடுவதில் பாதிப்பு ஏற்படும்." என கொதிக்கிறார் பி.எஸ்.என்.எல் ஊழியர் மற்றும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.
"டேட்டாதான் புதிய பெட்ரோல்" 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ள சூழ்நிலையில் தொலைதொடர்பு துறை என்பது போட்டிச்சூழலின்றி ஒட்டுமொத்த சந்தையும் ஒரு நிறுவனத்தின் கையில் செல்வது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை யூகித்துக்கூட பார்க்க முடியாது. "3 ஆப்பரேட்டர்கள் இருக்கும்போதே இப்படியென்றால் ஒரு நிறுவனத்தின் கையில் ஒட்டுமொத்த சந்தையும் செல்லும்போது அதிக பாதிப்புகள் ஏற்படும்.டெலிகாம் துறையை ஜியோவின் வருகைக்கு முன் வருகைக்கு பின் என பிரிக்கக்கூடிய சூழலாக மாறிவிட்டது.டெலிகாம் துறையில் போட்டி இருக்க வேண்டும் என்பதற்காகவே தனியார் துறை அனுமதிக்கப்பட்டது.டெலிகாம் துறையை பொறுத்தவரை ஏகபோகம் இருக்கக்கூடாது என்பதே ட்ராய் கூறும் விதி ஆகும். ஜியோ விற்கு 4ஜி அலைக்கற்றை வழங்கப்பட்ட விதமும் அதற்கு பிறகு சந்தையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையும் ஏகபோகத்திற்கு வழிவகுத்துவிட்டது. . 92000 கோடி அபாராதம் என்றவுடன் இவ்வளவு கட்டணத்தை கொடுப்பது கஷ்டம் என தனியார் நிறுவனங்கள் புலம்புகின்றனர். இதற்கு முன்னாள் இருந்த அரசுகள் பி.எஸ்.என்.எல் ஐ நெருக்கடிக்குள்ளாக்கி இதே தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காண்பித்தப்போது அவர்கெளுக்கெல்லாம் சந்தோசமாக இருந்தது. இன்றைக்கு ஜியோ நிறுவனத்திற்கு இந்த அரசு சலுகை காட்டும்போது மற்ற நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. ஆகமொத்தத்தில் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்களும் ஒட்டுமொத்த இந்திய தொலைதொடர்பு துறை நெட்வொர்க்கும் தான். ஒரு வேளை இந்த நிறுவனங்கள் களத்திலிருந்து வெளியேறும்பட்சத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மொபைல் மற்றும் டேட்டா சேவைகள் கிடைக்காமல் அவதிப்படுவார்கள்.இன்றைக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமே சந்தையில் இருக்கும் நிலைக்கு கொண்டுவந்து போட்டிச்சூழ்நிலையை குறைத்துவிட்டனர். இது ட்ராயின் அடிப்படை விதிமுறைகளுக்கே எதிரானது. இனி வரும் காலங்களில் டேட்டாதான் உலகின் அத்தனை துறைகளையும் தீர்மானிக்க போகிறது. 5ஜி யினுடை வருகை ஒட்டுமொத்த தொழில்துறையையும் தீர்மானிக்கப்போகிறது. 5ஜி வருகையும் அதனுடன் சேர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ஆதிக்கமும் இணைந்தால் அது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால்விடும் வகையில் இருக்கும். தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதுதான் இந்தியாவுடைய எதிர்காலம் என்று மாறும். அரசின் கையில் பி.எஸ்.என்.எல் இல்லையென்றால் அந்த சூழலை அரசினால் சமாளிக்கவே முடியாது. பி.எஸ்.என்.எல் ஐ மீட்பதற்காக எடுக்கின்ற நடவடிக்கைகள் என்பவை வெறும் கண்துடைப்பாகும். இன்னும் 4ஜி அலைக்கற்றையே பிஎஸ்என்எல் க்கு வழங்கப்படவில்லை. 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகும் பொழுது இந்தியா தனியார் நிறுவனங்களை நம்பிதான் இருக்குமென்றால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே பெரும் கேள்விக்குறியாக அமையும். ஸ்பெக்ட்ரத்திற்கான லைசன்ஸ் மட்டும் அரசாங்கம் கொடுக்கிறது சேவையை தனியார் நிறுவனம் கொடுக்கிறது. போட்டிச்சூழல் இன்று அழிக்கப்பட்டுவிட்டது. பிஎஸ்என்எல் ல் ஏற்படும் பாதிப்பால் வெறும் கட்டண அதிகரிப்பு பாதிப்பு மட்டுமின்றி ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும்." என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன்.
சிந்தன்
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து நம்ம்பிடம் பேசிய பிஜேபியின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,"தனியார் தங்களுடைய போட்டிக்காரணமாக நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும் போது அதற்கு அரசு உதவ வேண்டும் என நினைப்பது எந்தவகையில் சரியாக இருக்கும்? பி.எஸ்.என்.எல் மீதான குற்றச்சாட்டுக்கள் நேற்று இல்லை கடந்த 30 வருடமாக கூறப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் இல்லையென்றால் வேறு எந்த தொலை தொடர்பு நிறுவனங்களும் இயங்கவே முடியாது ஏனெனில் பி.எஸ்.என்.எல் உடைய கட்டமைப்பதான் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் நிர்வாக திறமையோடு செயல்பட்டு கடன்களையும் வரியையும் செலுத்த வேண்டியது அவர்களுடைய கடமை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத்தான் பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறதே தவிர வேறு காரணம் எதுவுமில்லை." என்கிறார்.
"எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்தியாவை விட்டு வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை." என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதும் "தொலைதொடர்புத் துறையில் ஏகபோகத்திற்கு வழிவிட மாட்டோம் " என தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதும் தொலைதொடர்பு நிறுவனங்களை சற்று இளைப்பாற வைத்துள்ளது. எது எப்படியோ....மக்களை பொறுத்தவரை டெலிகாம் நிறுவனங்கள் தொடர்பு எல்லையை விட்டு வெளியேறாமல் சிறந்த சேவையை வழங்கினாலே போதும்.
(22.11.19 ல் புதிய தலைமுறை இதழில் வெளியான எனது கட்டுரை)



அருமையான பதிவு. நான் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த வாரத்தில் BSNL பணம் கட்டச் சென்றேன். அந்த கட்டிடத்தில் FOR RENT போர்டு தொங்க விட்டிருக்கிறார்கள். எல்லா டெலிகாம் கம்பெனிகளையும் ரெலையன்ஸ் கையில் ஒப்படைத்து விடுவார்கள். அது தான் நடக்கப் போகிறது. இப்போது நடப்பவையெல்லாம் நாடகம் தான். நன்றி
ReplyDelete