Chating முதல் Videocall வரை அரசே உங்கள் மொபைலை உளவு பார்க்கப் போகிறதா? | விவாதம் | முழு விளக்கம் | #Modi #Amitshah #Congress #CentralGovernment



கணினி கண்காணிப்பு

நாட்டு நலனா ?  உரிமை மீறலா ?

விவாதம்

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69 (1) ன் படி, நாட்டு நலனுக்காக நாட்டில் உள்ள அனைத்து கண்னிகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ, ஐபி, என்ஐஏ, ரா, அமலாக்கத்துறை உட்பட 10 அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தனிமனித உரிமையில் தலையிடும் செயல், தனிமனித நலனா ? பொது நலனா என்றால் பொது நலம்தான் முக்கியம்,  அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு குரல்களும், எதிர்ப்பு கண்டனங்களும் வலுக்கத் தொடங்கியுள்ளது.  இது தொடர்பாக இருதரப்பு விவாதம்....


நாட்டு நலனே !



தமிழ்தாமரை VM வெங்கடேஷ்,

பாஜக சமூகஊடக பிரிவின் மாநில இணை அமைப்பாளர்,


ஆம் இது  நாட்டு நலன், தேச நலன் சார்ந்த நடவடிக்கையே,  இன்று இந்தியாவில் கைபேசி, கணினி  மற்றும் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அது இன்று  50 கோடியை தாண்டி விட்டது. பொதுவாக எந்த ஒன்றின்  பயன்பாடும், வளர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க அது சார்ந்த குற்றங்களும் அத்துமீறல்களும் அதிகரிக்கும். இது பொதுவான விதி.  எனவே அதைக் கண்காணிக்க,  கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை  காண வேண்டியது அரசின் கடமையாகிறது.

இதன் அடிப்படையில் தான் நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக சிபிஐ, ரா,  வருமான வரித்துறை  போன்ற அமைப்புகள் ஒரு வழக்கில்  முகாந்திரம் இருந்தால் மட்டுமே, ஒருவரின் வீட்டையோ,  வணிக   நிறுவனத்தையோ சோதனைக்கு  உட்ப்படுத்தும்.  அதிகாரம் இருக்கிறதே என்று நாட்டிலுள்ள 130 கோடி  மக்களிடமும் அத்துமீறுவது இல்லை. அதேபோன்றுதான் சந்தேகத்துக்கு ஆளாபவர்கள் கண்காணிக்க படுவார்கள்,  வலுவான முகாந்திரம் உள்ளவர்களின் கணினி தகவல் மட்டுமே  ஆராயப்படும்,


இன்று ஒருவரின் கைபேசியை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் ப்ளூவேல், மோமோ  வைரஸ்கள் போன்ற ஆப்ஸ்கள் பெருகிவிட்டன. தீவிரவாதிகளும்,  பொருளாதார குற்றவாளிகளும் கணினி போன்ற நவீன தொழில்நுட்பங்களையே  அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது?. இன்று நாம் பயன்படுத்தும்  சீன தொழில்நுட்ப சாதனங்கள் அன்றாடம்  நமது தகவல்களை திருடுகின்றன, பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் பயனாளிகளின் விவரங்களை காசுக்காக  விற்றே  விடுகின்றன,  ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத  எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் தேச நலன் சார்ந்த நடவடிக்கைகளை மட்டும் பூதகரமாக்குவது ஏனோ?.


காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதானே , 2009-ஆம் ஆண்டு விசாரணை அமைப்புகளுக்கு கணினிகளைக் கண்காணிப்பதற்கான விதிகளை உருவாக்கி தத்து. அந்த விதிகளின் அடிப்படையிலேயே தானே தற்போதைய மத்திய அரசும்  அனுமதி தந்துள்ளது.  இதில் எங்கே அரசியல்.இருக்கிறது?. தவறு  செய்பவர்கள் தானே இதைக்கண்டு அஞ்ச வேண்டும்






வழக்கறிஞர் சரவணன்,
தி.மு.க செய்தி தொடர்பாளர்.


      உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே தனிமனித உரிமை ( அ ) சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு இந்த தீர்ப்பை பாதிக்கின்ற வகையில் உள்ளது. இதை நிச்சயம் ஒரு சரியான நடவடிக்கையாக பார்க்க முடியாது தனிமனித உரிமை மீறலாகத்தான் பார்க்க முடியும். அசாதாரண சூழ்நிலையில் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துக்கொள்ளலாம் என்றுதான் சட்டத்தில் உள்ளது. அதுவும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் இணைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து அதற்கென்று உள்ள கமிட்டி அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் தற்போது பிறப்பித்த உத்தரவு மூலம் யாருடைய அனுமதியும் இல்லாமல் தன்னிட்சையாகவே கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உண்மையிலேயே இந்த பிரிவு எதற்கு கொண்டு வந்தார்கள் என்றால்
தேசப்பாதுகாப்புக்காகவும், கோல்டன் ட்ரையாங்க்ள் என்கிற பாகிஸ்தானிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காகத்தான் இந்த சட்டப்பிரிவை கொண்டு வந்தார்கள். இப்போது புதிதாக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்றால் 3 அடிப்படையான கேள்விகள் எழுகிறது. இந்த புதிய சட்டத்தினால் என்ன பலன் ? பழைய சட்டத்தினால் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை? அதை இந்த புதிய சட்டம் எந்த வகையில் தீர்க்கும் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை. பொதுவாக டெல்லி வட்டாரங்களில் ஒரு பேச்சு நிலவுகிறது என்னவென்றால் இதற்கு முன்பே இவர்கள் இதுபோன்ற கண்காணிப்பு வேலைகளில் ரகசியமாக ஈடுபட்டிருந்ததாகவும் தற்போது  அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது . இதையும் ஒதுக்கிவிட முடியாது. இதே போன்ற திட்டத்திற்கு வழிவகை இருந்தாலும் காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தவில்லையே.இவர்கள் அனுமதியளித்திற்கும் 10 அமைப்புகளில் எந்தவிதமான மாநில அமைப்புகளும் இல்லை. ஏன் எல்லையோர மாநிலங்களை சேர்ந்த காவல்துறை தேசப்பாதுகாப்பில் பங்கெடுக்கக்கூடாதா ? இதை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்பார்க்கிறார்கள். இது மாநிலங்களின் சுயாட்சிக்கு விடுக்கப்பட்டிருக்கிற மறைமுக சவால்.

-உ.ஸ்ரீ

புதிய தலைமுறை இதழில் வெளியான கட்டுரை

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review