நிர்பயா நிதியில் அசால்ட்டு காட்டும் மாநில அரசுகள் ! - பிரியங்காவின் மரணத்திற்கு யார் காரணம்?? #Priyanka #Telengana #RIPPriyanka #Justice4Priyanka


நிர்பயா நிதியில் அசால்ட்டு காட்டும் மாநில அரசுகள் ! -  பிரியங்காவின் மரணத்திற்கு யார் காரணம்?


தெலுங்கானா வை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரியங்கா வை எரித்து கொலை செய்த லாரி டிரைவர்கள் நால்வரையும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளது தெலுங்கானா காவல்துறை, பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு மட்டுமே முடுக்கமடைந்து விரைந்து செயல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? குற்றவாளிகளை தேடிப்பிடித்து கைது செய்வது மட்டுமே காவல் துறையின் வேலை இல்லை. மக்களை குற்றங்கள் தீண்டாமல் இருக்கும் வகையில் கண்காணித்து பாதுகாக்க வேண்டியதும் காவல் துறையின் கடமை தான். பெண்கள் சம்பந்தமான வழக்கில் அலட்சிய போக்கு அரவேக்கூடாது என்பதற்கு தெலுங்கானா சம்பவம் மீண்டுமொரு துயரமான உதாரணமாக மாறியுள்ளது.

டோல்கேட் அருகில் நிற்கிறேன் என சொன்ன  பிரியங்காவின் மொபைல் சற்று நேரத்தில் சுவிட்ச் ஆஃப் ஆனவுடன்  ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த பிரியங்காவின் குடும்பத்தினர் அருகில் உள்ள ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் இரவு 11 மணிக்கு புகார் கொடுக்க சென்றிருக்கின்றனர். ஆனால் ஷம்ஷாபாத் காவலர்கள் இந்த ஏரியா எங்கள் லிமிட்டில் வராது எனக்கூறி , அருகில் உள்ள வேறொரு காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளனர். 10 மணிக்கு பிரியங்காவை கடத்திய லாரி ட்ரைவர்கள் 2 மணி வரை  பிரியங்காவை லாரியிலேயே வைத்துக்கொண்டு அந்த ஏரியா விலேயே சுற்றியுள்ளனர். குத்துயிரும் குலையுயிருமாக இருந்த பிரியங்காவை அதன் பிறகு தான் எரித்துக்கொலை செய்துள்ளனர். ஒருவேளை, ஷம்ஷாபாத் காவல்துறையினர் உடனடியாக புகாரை பெற்றுக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தால் பிரியங்கா உயிருடன் கூட காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

காவல்துறையின் அலட்சியத்தை குறிப்பிடும் அதேவேளையில் மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்பில் காட்டும் அலட்சியத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் நினைவாக பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ள  மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருகிறது. 2015லிருந்து ஒவ்வொரு ஆண்டிற்கும்  ஏறக்குறைய 1000 கோடி வீதம் இதுவரை 4000 கோடி ரூபாயை 28 மாநிலங்களுக்கும் 7 யுனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மாநில அரசுகளோ இந்த நிதியில் வெறுமென 20% க்கும் குறைவான நிதியைதான் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளது. மீதமுள்ள பணம் அனைத்தும் அரசு கஜானாவில் தூங்குகிறதா ? இல்லை வேறு ஏதேனுன் டீலிங்கில் சிக்கியுள்ளதா என்பது யாருக்கும் தெரியாது.


தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு அவசர காலத்தில் உதவுவதற்காக மட்டும் மத்திய அரசு கிட்டத்தட்ட 9.5 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது, இதில் தெலுங்கான அரசு வெறும் 25 லட்சத்தை மட்டுமே செலவு செய்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரண நிதி அளிக்க மட்டும் மத்திய அரசு ரூபாய் 5.90 கோடியை தெலுங்கான அரசுக்கு அளித்துள்ளது. இதில் ஒரு பைசாவை கூட தெலுங்கானா அரசு பயன்படுத்தவில்லை. அதேமாதிரி பெண்கள் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு 28 லட்சத்தை ஒதுக்கியுள்ளது, பெண்களுக்கெதிரான சைபர் குற்றங்களை தடுக்க ஏறக்குறைய 4 கோடிக்கும் அதிமான பணத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவற்றிலும் தெலுங்கானா அரசு அதிகாரிகள்ஒற்றை பைசாவை கூட செலவளிக்கவில்லை. பெண்களின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் விதத்தில் ஒன் ஸ்டாப் செண்டர்களை உருவாக்க கிட்டத்தட்ட 12 கோடியை மத்திய அரசு தெலுங்கானாவிற்கு ஒதுக்கியுள்ளது.  இந்த நிதியில் கிட்டத்தட்ட 1.16 கோடியை மட்டுமே தெலுங்கானா அரசு பயன்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மட்டுமில்லை  இருக்கின்ற 28 மாநிலங்களில்(370 நீக்கத்திற்கு முன்பான நிலவரப்படி) பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. கொடூரம் என்னவெனில் தலைநகர் டெல்லிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த நிதியில் வெறுமென 0.8 சதவீதத்தை மட்டும்தான் டெல்லி பயன்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, மணிப்பூர் போன்ற மாநிலங்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியில் ஒரு பைசா வைக்கூட செலவளிக்கவில்லை. மாநில அரசுகளெல்லாம் என்ன நினைக்கிறது? இந்த நிதியையெல்லாம் அதிகம் பயன்படுத்திவிட்டோமெனில் தங்கள் மாநிலத்தில் தான் அதிகமான பெண்கள் வன்மத்துக்குள்ளாகின்றனர் என்பதை உலகுக்கு தாங்களே வெளிச்சம் போட்டு காட்டுவது போல் ஆகிவிடும் என அஞ்சுகின்றனவா? வெறுமென ஆங்காங்கே மூன்றாவது கண் போல சிசிடிவியை பொருத்துவது மட்டுமே பெண்கள் பாதுகாப்புக்கு போதுமானதா? சிசிடிவிக்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டத்தான் உதவுமே தவிர குற்றம் நடக்காமல் தடுப்பதற்கு ஒரு போதும் உதவாது. சிசிடிவியை தாண்டி காவலர் சமூகம் பெண்களை பாதுகாக்க சமூகத்தில் இன்னும் பல மூன்றாம் கண்களை அலையோட விட வேண்டும்.இதற்கு மாநில அரசும் மத்திய அரசும் எல்லா விதத்திலும் எல்லா நேரத்திலும் காவலர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும், அதற்கு நிர்பயா நிதிகள் முறையாக உபயோகப்படுத்தபட வேண்டும்.

( வாய்ப்பிருந்தால் முழுமையாக ஒவ்வொரு மாநிலமும் நிர்பயா நிதியை எவ்வாறு செலவளித்துள்ளனர் என்பது குறித்து தனியாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு எழுதுகிறேன்.)

-உ.ஸ்ரீ

Comments

  1. நிர்பையா நிதி பற்றிய அடுத்த கட்டுரைக்காக காத்திருக்கிறோன்!

    ReplyDelete
  2. Thandanaikal kadumaiyakka pada vendum

    ReplyDelete
  3. அலட்சியம் மற்றும் பெண்களின் மீது உள்ள தவறான பார்வையே காரணம்... சமுதாயத்தில் ஒரு பெண் சுங்கச்சாவடியின் ஓரங்களிலோ தெருவின் முனைகளிலோ இரவு 10 மணிக்கு மேல் நின்றால் தவறாகப் பார்பார்கள் என பயந்தே பிரியங்கா அந்த சுங்கச்சாவடியின் அருகே செல்ல தயக்கம் காட்டியயால் அந்த தயக்கமே அவரின் மரணத்திற்கு காரணமாய் அமைந்தது.. கடும் தண்டனையால் மட்டும் இந்த மாதிரியானத் தவறுகளைத் தவிர்த்துவிட முடியாது.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் மீதான தவறான கண்ணோட்டத்தை நம் கற்பனையால் முடிவு செய்யாமல் இருப்பதன் மூலமே அவர்களுக்கான பாதுகாப்பை நம்மால் தர முடியும் என்னும் நம்பிக்கையை பெற இயலும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review