ஒத்தையடி பாதையில் வழியை மறைக்காதீர்கள் ராகுல்...| #RahulGandhi #Congress #Elections
ஒத்தையடி பாதையில் வழியை மறைக்காதீர்கள் ராகுல் !
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி திட்டம்? என்ற செய்தியை இன்று இந்து தமிழில் படித்தேன். இந்த செய்தியை பற்றியும் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகான ராகுலின் மௌனம் குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும் ராகுலுக்கும் விழுந்தது மிகப்பெரிய அடிதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதன் பிறகு தற்போது நடைபெற்று முடிந்த ஹரியானா மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மக்கள் இன்னும் காங்கிரஸின் மீது நம்பிக்கை வைத்திருப்பதையே வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
மகாராஷ்டிரா நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போது சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதேபோல, ஹரியானா வில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வை விட அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 5 மாத இடைவெளியில் நடைபெற்ற இந்த மாநில தேர்தல்களில் காங்கிரஸ் இவ்வளவு தூரம் மீண்டு வந்துள்ளது.
இந்த வெற்றியில் டெல்லி தலைமை காங்கிசுக்கும் ராகுலுக்கும் எந்த அளவுக்கு பங்கு இருக்கிறது என்பது கேள்விக்குறியே.
ராகுலை முன்னிறுத்தி சந்தித்த நாடாளுமன்ற தேர்தலில் நெகட்டிவ்வான முடிவையும் மாநில தலைவர்களை முன்னிறுத்தி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாசிட்டிவ்வான முடிவும் கிடைக்கிறதென்றால் காங்கிரசின் மத்திய தலைமை பொறுப்பில் இருப்பவர் மக்களை கவருவதற்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் மாறாக தோல்வியை தழுவியவுடன் உடைந்துபோய் உள்ளேயே தங்கிவிடக்கூடாது.
மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் மொத்தமாக சேர்த்து 378 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பாஜக வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவிலும் ஹரியாணா விலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதிலும் , ஹரியாணாவில் இருக்கிற அத்தனை தொகுதிகளிலும் வென்று அசுர வெற்றியை பதிவு செய்தது, இருந்தும் தற்போது நடைபெற்ற சட்டமன்றதேர்தலுக்காக 25 க்கும் அதிகமான மாநாடுகளிலும் பிரச்சாரக் கூட்டஙகளிலும் பிரதமர் மோடியும் , அமித்ஷாவும் கலந்துகொண்டனர். ஆனால் ராகுலோ இந்த இரண்டு மாநிலத்திற்கும் சேர்த்தே மொத்தமாக மூன்று நாட்கள் தான் பிரச்சாரம் செய்தார். சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவே தெரியவில்லை. சமீபத்தில் இமாலய வெற்றியை பெற்ற கட்சி இமாலய உழைப்பைக் கொட்டி தேர்தலை சந்தித்த போது சமீபத்தில் வரலாறு காணாத தோல்வி கண்ட கட்சி மீண்டு எழுவதற்கு எவ்வளவு வீரியத்துடன் போராடியிருக்க வேண்டும்?
காங்கிரஸ் கடின உழைப்பை கொட்டாவிட்டாலும் மக்கள் அளித்திருக்கும் இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியின் இருப்பின் அவசியத்தை காங்கிரசும் அதன் மூத்த தலைவர்களும் உணரந்ததை விட மக்கள் அதிகமாக உணர்ந்திருக்கின்றனர் என்றே எடுத்துக்கொள்ள முடிகிறது. இதை மனதில் வைத்து இனிமேலாவது ராகுல் பழைய உற்சாகத்தோடு களத்தில் இறங்குவார் என்று எதிர்பாத்திருந்த சூழ்நிலையில் தான், இன்றைய செய்தித்தாளில் ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தை தவிர்ப்பது அல்லது மேலோட்டமாக ஒன்றிரண்டு கூட்டத்தில் மட்டும் கலந்து கொள்ள ராகுல் முடிவெடுத்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இன்றைய தேதியில் காங் தலைவராக ராகுல் இல்லாவிட்டாலும் இன்றைக்கும் கட்சியினர் ராகுலைத்தான் தலைவருக்கான பிம்பத்தோடு அணுகுகின்றனர். இந்நிலையில் ராகுல் ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தை தவிர்ப்பது எந்தவிதத்தில் சரி? மக்கள் நம்பிக்கையோடு கைகொடுத்து தூக்கி விடும்போது கையை தட்டிவிடுவது போன்ற செயல் நியாமா? இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் என்ற நிலையில் களத்தில் நின்று கடைசி வரை துணிச்சலாக போராட வேண்டாமா?
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி மூவரும் கட்சியினுள் அதிகார மையமாக இருக்கும் வரை குடுபத்தில் இல்லாத வேறொருவரை தலைவராக நியமிப்பதெல்லாம் நடக்காத காரியம். அப்படியே நியமித்தாலும் புதிய தலைவர் எந்த அளவுக்கு சுதந்திரத்தோடு செயல்படமுடியும்? அந்த தலைவரின் முடிவில் இந்த குடும்பம் தலையிடாமல் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தற்போதைய நிலையில் காங்கிரஸ் மீண்டெழ வேண்டுமாயின் என்னைப் பொறுத்தவரை இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளது.
முதல் வாய்ப்பு, ராகுல் மொத்தமாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு பொதுவாழ்க்கையிலிருந்து விலகியிருக்கலாம் அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக உரையாற்றி விட்டு மோடியை கட்டித்தழுவி கண்ணடித்தாரே அதே எனர்ஜியுடன் கூடிய ராகுல் மீண்டும் வந்து தலைமையேற்று ஜார்க்கண்ட் உட்பட மாநிலம் மாநிலமாக சென்று மக்களை சந்தித்து காங்கிரஸை மீட்டெழுப்ப முயற்சிக்க வேண்டும். ஆனால் இரண்டும் இல்லாமல் ஒத்தயடி பாதையில் முன்னும் செல்லாமல் பின்னும் செல்லாமல் வழியைமறைத்து நிற்பது யாருக்கும் பிரயோஜனப்படாது. அது, கட்சிக்கும் சரி மக்களுக்கும் சரி.
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி அசுரபலத்தோடு வெற்றி பெற்று, பல புதிய திட்டங்களையும் தங்கள் கொள்கைகளையும் முழு மெஜாரிட்டியின் உதவியுடன் அமல்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் வலிமையான எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகமாகியுள்ளது என்பதை ராகுலும் உணர வேண்டும்.
-உ.ஸ்ரீ

Crt ah eluthirukika sir
ReplyDeleteஅருமையான அரசியல் பதிவு!
ReplyDeleteவிமர்சனத்தோடு வீண் விரயம் செய்யாமல் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய விசயங்களையும் கையாண்டுள்ளீர்கள் உங்களது கருத்து நிச்சயம் வெற்றிபெறும் !
@வாய்ப்பை தவறு விடுகிறார் ஸ்டாலின் பேன்ற அரசியல் ஆளுமை கொண்ட கட்டுரை எதிர்காணவுள்ள அரசியலை பின்ப படுத்துகிறது