2021 ல் அதிசயம்..!அற்புதம்...! நிகழுமா? - ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெசல் ! #HBDSuperStarRajiniKanth #Rajini #SuperStar


கலைஞர் சொன்ன அந்த அரசியல் சூடு ! ஜெயலலிதா, ஸ்டாலினுக்கு கிடைத்த அந்த  Boom ! டிடிவி க்கு கிடைத்த அந்த பரபரப்பு ரஜினிக்கும் கிடைக்குமா?



ரஜினியின் இந்த 70வது பிறந்தநாளில் அவரின் சினிமா காலக்கோடை அனைவரும் சிலாகித்து கொண்டிருக்க அவரின் அரசியல் குறித்து பேசுவோமே என்பதற்காகத்தான் இந்த பதிவு.

ரஜினி சொன்ன "அற்புதம், அதிசயம்" ஆகியவற்றிற்கு தமிழக அரசியலில் இதற்கு முன்னர் பல உதாரணங்கள் உள்ளன. 1989 நாடாளுமன்ற தேர்தலில் கலைஞர் சொன்ன அந்த 'சூடு' தொடங்கி டிடிவி யின் ஆர்.கே.நகர் வெற்றி முதல்  நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினின் அசுரத்தனமான  வெற்றி வரை தமிழக அரசிலும்  தேசிய அரசியலும்  பல அதிசய அற்புதங்களை சந்தித்துள்ளன.  ஆனால் இதையெல்லாம் அதிசயம், அற்புதம் என்ற ரஜினியின் வார்த்தைகளில் பதிவு செய்யாமல் ஒரு பரபரப்பு,  ஒரு Momentum, ஒரு Boom ( தமிழில்; சராசரியான வேகத்திலிருந்து பெரும் உந்துதலுக்கு உள்ளாகி வேகமெடுத்தல் என்ற வகையில் புரிந்து கொள்ளுங்கள்) என்ற வேறு வார்த்தைகளில் பதிவு செய்துள்ளனர்.

80களின் கடைசிகாலட்டம் அது. 1989 ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. இந்தியா முழுவதும் இருந்து பல கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேசிய முண்ணனியில் கலைஞர் தலைமையிலான திமுகவும்  அங்கம் வகித்திருந்தது. எம்.ஜீ.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ-ஜா என பல குளறுபடிகளை கடந்து அதிமுக இந்திரா காங்கிரசுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் இந்தியா முழுவதும் வி.பி.சிங் உட்பட முக்கிய தலைவர்கள் அங்கம் வகித்த தேசிய முண்ணனி நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் தமிழகத்தில் தேசிய முண்ணனியில் இடம் பெற்றிருந்த திமுக கூட்டணியால் நாகப்பட்டினம் தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதிமுக-காங் கூட்டணி மீதமிருந்த 38 தொகுதிகளிலும் பெரு வெற்றியை பதிவு செய்தது. அந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கலைஞரிடம் செய்தியாளர்கள், தெற்கில் மட்டும் தேசிய முண்ணனி சோபிக்க தவறியதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த கலைஞர் "தேர்தலில் வெற்றி தோல்விகளை ஒரு கட்சியின் கொள்கை கோட்பாடு அதன் தொலைநோக்கு திட்டங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பது என்று இல்லாமல் தேர்தல் நேரத்து சூடான பிரச்சினைகளில் மட்டுமே தங்கள் மனதை பறிகொடுத்து வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதை தமிழக அரசியலை நெருங்கி உணர்ந்தவர்கள் நினைவில் கொண்டே உள்ளனர்" என்றார்.

 கலைஞர் சொன்ன அந்த அரசியல் பரபரப்பை, சூடை இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற நிகழ்வோடு ஒப்பிட்டு பார்க்கலாம். அதிமுக விலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் சுயேட்சையாக ஆர்.கே.நகரில் களமிறங்கினார் தினகரன். மேலே இருக்கிறவரின் கரிசனப் பார்வையால் இரட்டை இலையை  ஓபிஎஸ்-இபிஎஸ் அணி பெற்றுக்கொண்டது. ஜெ இறந்ததிலிலிருந்து ஆர்.கே.நகர் தேர்தல் முடிகிற வரைக்கும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அனைத்து செய்தித்தாள்களிலும் தினகரனும் அதிமுக வும் மட்டுமே பரபர செய்திகளாக ஓடிக்கொண்டிருந்தனர். அரசியல் செய்தி என்றாலே தினகரன் vs ஓபிஎஸ்-இபிஎஸ் என்பது மட்டுமே மக்கள் மனங்களில் ஓடிக்கொண்டிருந்தது. திமுக ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. இந்த பரபரப்பு,  நான் முற்பகுதியில் சொன்னது போல் ஒரு Boom ஐ தினகரனுக்கு உண்டாக்கியது. தினகரனுக்கு கிடைத்த momentum இரட்டை இலையையும் உதய சூரியனையும் தாண்டி ஆர்.கே.நகரில் தினகரனின் குக்கரை சத்தமாக விசிலடிக்க வைத்தது. இந்த வெற்றிக்கு காரணமாக 20 ரூ டோக்கன் உட்பட பல சமாச்சாரங்கள் சொல்லப்பட்டாலும் எல்லா கட்சிகளும்தானே பணத்தை வாரி இரைத்தார்கள்? நியாயப்படி பார்த்தால் திமுக தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். திமுக டெபாசிட் கூட பெறமுடியாமல் போனதற்கு காரணம், கலைஞர் அன்றே சொன்ன அந்த பரபர அரசியல் 'சூடு'. ரஜினி வார்த்தைகளில் சொன்னால்  ஆர்.கே.நகர் தினகரனுக்கு வசமானது ஒரு அதிசயம்...! அற்புதம்...!

ஆர்.கே.நகரில் திமுக வுக்கு கையில் சிக்காத அந்த Boom or Momentum நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வின் கைகளில் துள்ளி விளையாடியது. பணமதிப்பிழப்பு  ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான கட்சி களேபரங்கள், ஜல்லிக்கட்டு போரட்டம் ஆகியவற்றிலிருந்து தமிழகத்தில் துளிர்விட தொடங்கிய மோடி எதிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொண்டே வந்தது திமுக. கலைஞரின் இறப்பிற்கு பிறகு இயல்பாகவே திமுக பக்கம் திரும்பிய அரசியல் பரபரப்பும், திமுக பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயாராக வைத்திருந்த  மக்களின் பிஜேபி எதிர்ப்பும்   திமுக விற்கு ஒரு வெறித்தனமான Momentum ஐ கொடுத்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மட்டும் தனித்த வெற்றியை பதிவு செய்தது. ரஜினியின் வார்த்தைகளில் சொன்னால் திமுக நிகழ்த்திக்காட்டிய அற்புதம் அது !

2019 தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களில் 2014 தேர்தலை போன்ற ஒரு பாசிட்டிவான Momentum ஐ உண்டாக்ககூடிய மோடி பிம்பம் கிடைக்காமல் பிஜேபி திணறிக்கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் இணைவது போன்ற நிகழ்வுகள் நடைபெற இந்த முறை நிச்சயம் பிஜேபி தடுமாறும் என்ற நினைத்திருந்த நிலையில்தான் துணை ராணுவப்படையினர் மீதான அந்த துயரமான தாக்குதல் நடைபெற்றது. அந்த இடத்திலிருந்து பிஜேபிக்கான Boom உருவாக தொடங்கியது. தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றை விஷயத்தை முன்னிறுத்தி 'சௌக்கிதார்' என்ற  தனக்கான Momentum ஐ கட்டியெழுப்பியது. அந்த Momentum மோடி 2.o  உருவாவதற்கான அஸ்திவாரமாக அமைந்தது. 'சௌக்கிதார்' என்ற பிஜேபி யின் Boom க்கு எதிராக காங்கிரஸ் 'நியாய்' என்ற Boom ஐ நிச்சயம் உண்டாக்கியிருக்க முடியும். காங் தவறவிட்டுவிட்டது, ரஜினி சொன்ன அதே அதிசயம் அற்புதம் பிஜேபிக்கு நிகழ்ந்துவிட்டது.


திமுக வின் முரட்டுத்தனமான மின்வெட்டால் 2011ல் ஜெயலலிதா வுக்கு கிடைத்த Momentum, கூட்டணி களேபரங்களால் 2016 ல் திமுக வுக்கு கிடைக்காமல் போன Momentum, 2019 ல் எந்த பரபரப்பையும் ஏற்படுத்தாமல் கமலஹானின் கட்சி கடந்து சென்ற விதம் என ரஜினி சொன்ன அதிசயம் மற்றும் அற்புதத்திற்கு தமிழகம் மற்றும் தேசிய அரசியலில் பல உதாரணங்களை குறிப்பிடலாம்.
கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோருக்கு நிகழ்ந்த அதிசயம் அற்புதம் ஆகியற்றுக்கு பின்னால் தாங்கள் எந்த பக்கம் நிற்க போகிறோம் என்ற சரியான முடிவும் சரியான திட்டமிடலும் ஒரு சேர இருந்தது. ஒரு வேளை ஸ்டாலின் கடந்த இரண்டு வருடமாக பிஜேபி க்கு எதிரான நிலைப்பாடை தக்கவைத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால், தேர்தலில் பிஜேபி க்கு ஆதரவான வளையத்திற்குள் நின்றிருந்தால் அதிசயமும் அற்புதமும் ஸ்டாலினுக்கு கிட்டியிருக்குமா? என்பதை யோசித்து பாருங்கள்.

எந்த வகையில் அரசியல் சூட்டை கிளப்ப போகிறோம்? எந்த பக்கம் நிற்க போகிறோம்? யாருக்கு எதிராக அரசியல் பேச போகிறோம்? என்பதிலெல்லாம் உறுதியான முடிவை எடுப்பதில்தான் ரஜினிக்கான Momentum காத்திருக்கிறது.  அதிசயமும் அற்புதமும் அந்த Momentum ஆல் மட்டுமே நிகழ முடியும்.

2021 ல் ரஜினி சொன்ன அதிசயம்..! அற்புதம்...! உண்டாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்