இனி ரேஷனில் அரிசி பருப்பெல்லாம் கிடைக்குமா? - ஒரே நேஷன் ஒரே ரேஷன் யாருக்கு லாபம்? #OneNationOneRation




'ஒரே நேஷன் ஒரே ரேஷன்'


மத்திய அரசின் 'ஒரே' வரிசை திட்டங்களில் அடுத்ததாக இணனைந்திருக்கிறது 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்ற திட்டம். இத்திட்டத்தின் படி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் இதனால் பணிநிமித்தமாக இடம்பெயர்பவர்கள் பெரிய அளவில் பயனடைவர் எனவும் கூறப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா, மகாராஷ்ட்ரா,ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய 8 மாநிலங்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் இணைந்துள்ளன. 2020 மார்ச் மாதத்திற்குள் இன்னும் 16 மாநிலங்களிலும் அதன்பிறகு ஜீன் 2020 க்குள் இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என மத்தியமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏறக்குறைய 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவை அனைத்தும் ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றப்பட்டு கணினியில் இணைக்கப்பட்டவை.இந்த அட்டைகள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தின் நிலைக்கேற்ப பொருள்கள் வழங்கப்படுகிறது. மிகவும் வசதிபடைத்த சில லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களை தாண்டி அனைவரும் ரேஷன் கடைகளின் மூலம் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் பொருள்களை முறையாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு 240 சேமிப்புக்கிடங்குகள் உட்பட 34773 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் மாதிரியான பரந்துபட்ட பொது விநியோக முறையை செயல்படுத்த முடியாத மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை வரவேற்கின்றன.ஆனால் தமிழகம் போன்று பொது விநியோக திட்டத்தில் முண்ணனியில் இருக்கும் மாநிலம் இத்திட்டத்தில் இணைந்தால் இப்போது இருக்கும் விநியோக முறை பாதிக்கப்படும். மாநிலத்தின் கையில் இருக்கும் உரிமையை மத்திய அரசு அபகரிக்கும் திட்டம்தான் இந்த 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்பது இத்திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் குரலாக உள்ளது.' இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.இடம்பெயரும் மக்களுக்காக மத்திய அரசு கொடுக்கின்ற உணவுப்பொருள்களை அவர்களிடம் இருந்து வாங்கி மக்களுக்கு நாம் விநியோகம் செய்யப்போகிறோம் அவ்வளவுதான். இத்திட்டத்தின் மூலம் எக்காரணம் கொண்டும் தமிழக மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்படாது.' என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் லஸ்வான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னதாக கூறியிருந்தார்.



'வேலைநிமித்தமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக்கொள்ளலாம் என்பதையெல்லாம் பெரிதாக பேசுகிறார்கள் ஆனால் உணவுப்பொருள்களுக்கு வழங்கப்படும் மானியத்தை பெருமளவு குறைப்பதற்கான முதல் படிதான் இந்த திட்டம்' என அதிர்ச்சியளிக்கிறார் அரசியல் விமர்சகர் அய்யநாதன், தொடர்ந்து பேசிய அவர்,

                               அய்யநாதன்

'தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் நியாய விலைக்கடைகளில் பொருள்களை பெற்று வருகின்றனர். மத்திய அரசு மானிய விலையில் பொருள்களை தமிழக அரசுக்கு அளிக்கிறது தமிழக அரசு மக்களுக்கு மானிய விலையில் பொருள்களை வழங்கிவருகிறது. இதுமட்டுமில்லாமல் கேஸ் மானியம், உர மானியம் போன்றவை சேர்த்து 2,40,000 கோடி ரூபாயை மானியத்திற்காக மத்திய அரசு செலவிடுகிறது. இதில் அதிகபட்சமாக ரேஷன் மானியத்திற்காக 1,20,000 கோடியை செலவு செய்கிறது.இதனால் மானியங்களை குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த  நிதிப்பற்றாக்குறையை குறைக்கலாம் என மத்திய அரசு நினைக்கிறது. அதே நேரத்தில் உலக வர்த்தகமையம் 10% மேல் வெளியில்ருந்து கொள்முதல் செய்யக்கூடாது எனக் கூறுகிறது. ஆனால் இந்தியா 30% அளவுக்கு வெளியிலிருந்து கொள்முதல் செய்தே உணவுப்பற்றாக்குறையை போக்குகிறது. உலக வர்த்தக மையத்தின் ஆணைக்கினங்க கொள்முதலை குறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் எவ்வளவு உணவுதானியங்கள் கிடப்பில் உள்ளன என்பதை மத்திய தெரிந்துகொள்ளும்.இதன்மூலம் மாநில அரசின் கொள்முதலை குறைப்பதற்கான வாய்ப்புள்ளது. மத்திய அரசு மொத்தமாக மானியத்தை நிறுத்திவிட்டு மாநில அரசின் தலையில் மொத்த செலவையும் கட்டுவதற்கான வேலைதான் இது. புலம்பெயர்பவர்களுக்கு எப்று ஒரு திட்டம் என்றால் அதை தனிப்பட்ட முறை ஒவ்வொரு மாநிலமுமே செய்துவிடலாமே அதற்கு ஏன் பொதுவாக ஒரு திட்டம்? என கேள்வியோடு முடிக்கிறார் அய்யநாதன்.


மத்திய அரசின் மானியங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என உறுதியளிக்கும் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,
                      நாராயணன் திருப்பதி

"தமிழகத்தின் ஒரு மூலையில் இருப்பவர் இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் தன்னுடைய அடிப்படை உரிமையான நியாயவிலை பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்தியா முழுவதும் 90% க்கும் அதிகமான பொதுவிநியோக திட்டம் கணினிமயமாக்கப்பட்டு விட்டது. எல்லா மாநிலத்திலும் 3 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்கள் கையிருப்பில் உள்ளன. ஒரிசாவிலிருந்து வந்த ஒருவர் தமிழகத்தில் அரிசி சாங்கினால் அவருக்கு 3 ரூபாய் என்ற அளவில்தான் விற்கப்படும். கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் பொது விநியோக திட்டத்தையும் கணினிமயமாக்குவதற்கு 680 கோடி ரூபாயை ஒதுக்கி கொண்டுவரப்பட்ட திட்டம் இது. அதன் தொடர்ச்சியாக 2013 ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது.இதன் நீட்சியாக கொண்டு வரப்படுவதுதான் ஒரே நாடு ஒரே ரேசன் என்கின்ற திட்டம். 2013 ல் உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 82000 கோடி அளவிலான நிதி தற்போது 1,60,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும் மிகப்பெரிய பலனை அடையப்போகின்றன.75% கிராமப்புறங்கலிலும் 50% நகர்ப்புறங்களிலும் இருப்பவர்களுக்கு கிட்டத்தட்ட 81 கோடி மக்களை இத்திட்டம் சென்றடையப்போகிறது. இனி நியாய விலைக் கடைகளுக்கு பொருள்களை கொண்டு சேர்ப்பதற்கான விநியோகத்திற்கான செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளப்போகிறது. . வடமாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழகத்துக்குள் திணிப்பதற்காக எடுக்கப்பட நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதில் துளியும் ஆதாரமில்லை. 2013 ல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு உணவுப்பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்த கட்சிகள் தற்போது இந்த திட்டத்தை எதிர்த்து அரசியலாக்குவது வருந்தக்கூடிய விஷயம். . இந்த விவகாரத்திப் எந்த இடத்திலுமே மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை.பயனாளிகள் யார் என்பதை முடிவு செய்வதிலிருந்து பொருள்கள் விநியோகம் வரை மாநில அரசுதான் செய்யப்போகிறது. இதில் உரிமைப் பறிப்பு என்பதற்கு இடமே இல்லை.'  என்கிறார்.


இது தொடர்பாக நம்முடன் பேசிய திமுக செய்திதொடர்பாளர் சரவணன்,
                                  சரவணன்

"புலம்பெயரும் 2% மக்களுக்காக ஒட்டுமொத்த மக்களையும் ஏன் ஒரு புதிய முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என கேள்வி எழுப்பும் திமுகவின் செய்துத்தொடர்பாளர் சரவணன், 'ரேஷன் கார்டு வெறுமென பொருள்கள் வாங்குவதற்கான அட்டையாக மட்டும் பயன்படுவதில்லை. அது அடையாள அட்டையாகவும் இருப்பிடச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.வெளிமாநிலத்தில் இருந்து வருகிறவர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியுள்ளார். தமிழகம் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் ஆனால் ஏற்கனவே தமிழகத்தில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒரே நாடு ஒரே ரேஷன் என்பதன் மேலும் அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளையே எடுத்தால் தமிழர்களை பற்றி கவலைப்பட வேண்டாமா? வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் யாரும் எங்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கவில்லைல்யே. அதேநேரத்தில் வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களும் தமிழகத்தில் ரேஷன் அட்டை பெற முடியும் அதற்கான வழிமுறைகல் ஏற்கனவே இங்கு உள்ளன. புலம்பெயரும் 2% மக்களுக்காக அனைத்து மக்களையும் புதிய திட்டத்தில் இணைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.ரேஷன் கார்டு உரிமையை மத்திய அரசுக்கு கொடுத்யுவிட்டால் மாநில அரசுக்கு எந்த அதிகாரமுமே இருக்காதே. உணவுப்பாதுகாப்பு சட்டத்தில் எந்த அதிகாரமும் மாநில அரசுக்கு கொடுக்கப்படவில்லை. எல்லாமே மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் முதல் நீதிபதிகள் வரை பலரும் பாராட்டியுள்ளன. தமிழகத்தில் அனைத்து மக்களும் ரேஷன் அட்டையௌ பெற்றுள்ளனர் ஆனால் மற்ற மாநிலஙளில் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.அந்த மாநிலங்களுக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் பெரியதாக தெரியலாம்.தமிழகம் இதையெல்லாம் தாண்டிய வளர்ச்சியை ஏற்கனவே பெற்றுவிட்டது ' என்கிறார்.


மக்கள் குரல் !

தமிழகத்தில் ஏற்கனவே ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு மிக குறைந்த விலையில் பொருள்களை வழங்கிவருகின்றன. இந்நிலையில் இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரேஷன் பொருள்களின் விலை அதிகரிக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி அதிகரிப்பின் அது ஏழை மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். - சந்தோஷ்


நான் கிட்டத்தட்ட நான்கு வருடமாக கேரளாவில் வேலை பார்த்து வருகிறேன். நான் வேலைப் பார்க்கின்ற இடத்தில் நிறைய வடமாநிலத்தவர்களும் வேலை பார்க்கிறார்கள்.எங்களை போன்று வெளியூர்களில் கஷ்டப்பட்டு வேலைப்பார்ப்பவர்களுக்கு அங்கேயே ரேஷன் பொருள்கள் வழங்குவதால் ஓரளவுக்கு செலவு குறையும் என்பதால் இத்திட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.- பால்பாண்டி


எந்த ஊருக்கு போனாலும் ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்பது நல்ல விஷயம் தான் ஆனால் இப்போதே ரேஷன் கடைகளில் முழுமையாக பொருள்களை வழங்குவதில்லை இந்நிலையில் வெளிமாநிலத்தவர்களுக்கும் நம்மூரில் ரேஶன் பொருள்கள் வழங்கப்போகிறார்கள் என்றால் நம் மக்கள் பொருள்களை பெறுவதில் மேலும் சிக்கல் ஏற்படும்.- விஷ்ணு தேவி


திடீர் வேலை மாற்றத்தால் வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கக்கூடியதாக இருக்கும். இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் மும்பை, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும் அதிகம் பயனடைவர்.  அரசியல்கட்சிகள் எதிர்க்கின்ற அளவுக்கு மோசமான திட்டம் இல்லை இது.- செல்வம்



-உ.ஸ்ரீ

(புதிய தலைமுறை இதழில் வெளியான கட்டுரை)

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review