தண்டனைக்கு முன் இறந்துவிட்டாலும் இறந்த உடலை மூன்று நாட்கள் தூக்கிலிடுங்கள்..! | முஷரஃப் எனும் சர்வாதிகாரி வீழ்ந்த கதை | #Pakistan #Musharaff

ஒரு சர்வாதிகாரி வீழ்ந்த கதை..!




"இந்த உலகம் யாருடைய ஏகபோகத்தின் கீழும் அடங்காது, என்பதை நீங்கள் அறியாமல் இருப்பது வியப்பாக உள்ளது. நீங்கள் பின்பற்றும் வழியிலேயே வளர்ந்து நீங்கள் பயன்படுத்திய ஆயுதத்தை கொண்டே யாரோ ஒருவர் உங்களை தாக்கலாம். அப்போது உங்கள் மக்கள் பெருமைபடும் வகையிலான எந்த மரபையும் நீங்கள் விட்டு சென்றிருக்கமாட்டீர்கள்" 1940 ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் தொடக்கக்காலத்தில், சர்வாதிகாரியான ஹிட்லருக்கு காந்தியடிகள் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. சர்வாதிகாரம் குறித்த காந்தியின் பார்வைக்கு நிகழ்கால உதாரணமாகியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப்.
முஷரஃப் மீதான தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தானின் பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவருக்கு மிகக்கடுமையான தூக்குத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளனர். பாகிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் நபர் ஒருவருக்கு முதல்முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முஷரஃப் தூக்குதண்டனை பெறும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார்? இராணுவத்தளபதி முஷரஃப் முதல் சர்வாதிகாரி முஷரஃப் வரை வேலியே பயிரை மேய்ந்த அந்த கதையின் சிறிய ப்ளாஷ்பேக் இங்கே..

1943 ஆம் ஆண்டு டெல்லியில் சையது முஷரஃப் - ஷரின் முஷரஃப் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் பர்வேஷ் முஷரஃப். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது முஷரஃப் ன் குடும்பம். பாகிஸ்தானின் இஸ்தான்புல், கராச்சி போன்ற நகரங்களில் இளமை காலத்தை கழித்த முஷரஃப் லாகூரின் ஒரு கல்லூரியில் பாதுகாப்புத்துறையில் பட்டம் பெற்றார். 1961 ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்த முஷரஃப் 1965 ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தார். 1980 ஆம் ஆண்டு பீரங்கிப்படை கமாண்டர், இராணுவச் செயலாளர் உட்பட பாகிஸ்தான் இராணுவத்தில் பல பொறுப்புகளை வகித்தார். 1998ம் ஆண்டு நவாஷ் ஷெரீப் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக பதிவியுயர்வு பெற்றார்.

தன்னால் பதவி உயர்வு பெற்ற முஷரஃப் தான், தன் பிரதமர் பதவிக்கு வேட்டு வைக்க போகிறார் என்பதை, நவாஷ் ஷெரீப் அன்று உணர்ந்திருக்கவில்லை. அன்றைக்கு இராணுவத்தை கையில் வைத்துக்கொண்டு முஷரஃப் ஆடிய ஆட்டம்தான் இன்று  அவருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபகரமான நிலைக்கு முழு முதற் காரணம்.
பாகிஸ்தானை பொறுத்தவரை அந்த நாட்டை அரைகுறையான ஜனநாயக நாடு என்றுகூட முழுவதுமாக சொல்லிவிட முடியாது. 1958 ம் ஆண்டு அப்போதைய அதிபர் மிர்சாவை பதவியிலிருந்து இறக்கிவிட்டு இராணுவத் தளபதி ஆயுப் கான் இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 33 வருடங்கள் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. நேரடியாக ஆட்சிபுரிந்தது 33 வருடங்கள்தான் என்றாலும் இன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரை ஆட்சியிலிருந்த அனைவரும் இராணுவத்தின் கைப்பாவையாக இருந்துள்ளனர்.
அதிகாரத்தின் ருசியை காலம்காலமாக சுவைத்து வந்த பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த தளபதியான முஷரஃப் க்கு அப்போது ஆட்சியை கைப்பற்ற ஒரு அற்புதமான வழி கிடைத்தது.
இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவை மேம்படுத்த 1999ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 'தோஸ்தி' எனப் பெயரிட்டு டெல்லியிலிருந்து லாகூருக்கு பேருந்து மூலம் பயணம் செய்தார். பாகிஸ்தானில்  நவாஷ் ஷெரீப் வாஜ்பாய் க்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார். ஆனால் அந்த வரவேற்பில் முக்கியமான ஒருவர் மட்டும் மிஸ்ஸிங். பாகிஸ்தானின் இராணுவத் தளபதியான முஷரஃப் தான் அவர். இந்த 'தோஸ்தி' நிகழ்வு நடந்து முடிந்த மூன்றே மாதத்தில் இந்தியாவுக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் நுழைந்தனர். கார்கில் போர் மூண்டது. பாகிஸ்தான் வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தியா கார்கிலை கைப்பற்றியது. இந்த தோல்வி இராணுவத்தளபதி முஷரஃப் க்கும் பிரதமர் நவாஷ் ஷெரீப் க்கும் இடையே மோதலை உண்டாக்கியது. பாகிஸ்தான் இராணுவத்தை தவறாக வழிநடத்திவிட்டதாக முஷரஃப் மீது குற்றச்சாட்டு எழ கார்கில் தோல்விக்கான பொறுப்பை இராணுவம் ஏற்க மறுத்தது.

இந்நிலையில் இராணுவத்தளபதி பொறுப்பிலிருந்து முஷரஃபை நீக்க நவாஷ் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த நேரத்திலேயே இராணுவ வீரர்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி இராணுவ புரட்சியை உண்டாக்கினார் முஷரஃப்.
1999ம் ஆண்டு அக்டோபர் 13 ம் தேதி  தொலைக்காட்சியில் தோன்றிய முஷரஃப் நவாஷ் ஷெரீப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும், பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ ஆட்சி அமைவதாகவும் பேட்டி அளித்தார். இராணுவ ஆட்சி அமலிலிருந்த போதே 2001 ம் ஆண்டு ஜீன் 20ம் தேதி அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அதிபராக பதவியேற்ற பிறகும் இராணுவத்தளபதி பதவியையும் விட்டுக்கொடுக்காமல் அவரே வைத்துக்கொண்டார்.நவாஷ் ஷெரீப் கைது செய்யப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதகுக்கு பிறகு தீவிரவாதத்தை ஒழிப்பதில் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.

2007 ம் ஆண்டு மீண்டும் அவசரநிலையை பிரகடனப்படுத்திய முஷரஃப் தேர்தலை நடத்தி அவரே வெற்றிப்பெற்றதாக அறிவித்துக்கொண்டார். இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்து உலகநாடுகளின் கவனம் பாகிஸ்தான் பக்கமாக திரும்ப வேறுவழியில்லாமல் இராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த அவசரநிலை காலக்கட்டத்தில் தான் கொடுங்கோண்மையின் உச்சத்தை எட்டினார் முஷரஃப். உச்சநீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்கி 61 நீதிபகளை கைது செய்தார். நாட்டில் ஊடகங்கள் அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட பெனாசீர் பூட்டோவின் கொலையிலும் சந்தேகிக்கப்படும் நபராக முஷரஃப் இருந்தார்.
அதன்பிறகு 2008 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இராணுவத்தளபதியாக, அதிபராக பாகிஸ்தான் அரசியலின் சர்வத்தையும் அடக்கி ஆண்ட முஷரஃப் ன் வீழ்ச்சி தொடங்க ஆரம்பித்ததும் இந்த காலக்கட்டத்தில் தான்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் குறித்து கேள்வி எழுப்பி முஷரஃப் க்கு சம்மன் அனுப்பப்பட்டது. 2013 ம் ஆண்டு நவாஷ் ஷெரீப் பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட 1956 ம் ஆண்டுக்கு பிறகு அரசியலைப்பு சட்டத்தின் 6 வது ஷரத்துப்படி காரணமின்றி அவசரநிலை பிரகடனப்படுத்தியதற்காக 5 தேசத்துரோக வழக்குகள் முஷரஃப் மீது தொடுக்கப்பட்டது. 2016 ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட  'அமிலாய்டோசிஸ்' என்ற விசித்திரமான நோய்க்கு சிகிச்சை எடுக்க நீதிமன்றத்தின் அனுமதியோடு துபாய் பறந்து சென்ற முஷரஃப் இன்னும் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தான் இந்த வழக்கை விசாரித்த பெஷாவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மூவரில் இருவர் முஷரஃப் க்கு தூக்குத்தண்டனை அளித்துள்ளனர். தலைமை நீதிபதியான வாக்கர் அகமது செத் வாசித்த தீர்ப்பில் " குற்றவாளியானவர் தண்டனையை பெறும் முன்பே இறந்துவிட்டால் அவரது உடலை இஸ்தான்புல் அருகே உள்ள டி-சதுக்கத்தில் 3 நாள் தூக்கிலிட வேண்டும்" என கூறியுள்ளார். "இது மனிதத்தன்மைதற்ற செயல். 40 வருடம் இராணுவத்திற்காக உழைத்தவரை இப்படியா தண்டிப்பது? " என பாக் இராணுவம் கேள்வி எழுப்பியுள்ளது. " தீர்ப்பு வழங்கிய நீதிபதி மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம்"என பாகிஸ்தான் அரசும் குற்றம்சாட்டியுள்ளது.

துபாயில் படுத்தபடுக்கையாக சிகிச்சை எடுத்துவரும் முஷரஃப் வீடியோப்பதிவு மூலம் " நீதிமன்றத்தில் என் தரப்பு வாதத்தை எடுத்துவைக்க போதிய அவகாசம் கொடுக்கவில்லை. இது அரசியல் பழிவாங்கும் செயல். எனக்கு உறுதுணையாக இருந்த இராணுவத்திற்கு நன்றிகள்." என பேசியுள்ளார்.

முஷரஃப் க்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டாலும் அவர் மேல்முறையீடு செய்வதற்கான சட்டவாய்ப்புகள் உயிர்ப்புடன் இருப்பதாகவே கூறப்படுகிறது. முஷரஃப் மீதான தண்டனை மற்றும் சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவத்தளபதி பஜ்வா வின் மூன்றாண்டு பதவி நீட்டிப்பை ஆறுமாதமாக குறைத்தது, என தொடர்ச்சியாக வெளிவந்துள்ள தீர்ப்புகள் பாகிஸ்தான் இராணுவத்தின் தன்னிட்சையான சர்வாதிகார போக்கை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் கொடுத்துள்ள சாட்டையடி என்கின்றனர், உலக அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

சுவற்றில் எரியும் பந்து போன்றது சர்வாதிகாரம், அது எவ்வளவு வேகத்தில் எரியப்படுகிறதோ அதைவிட இருமடங்கு வேகத்தில் எரிந்தவர் மீதே பாயும். சர்வாதிகாரி அசாதாரணமானவர், சர்வாதிகாரியின் வீழ்ச்சியும் அசாதாரணமானதாகவே இருக்கும் என்பதே முஷரஃப் ன் வீழ்ச்சி நிகழ்கால உலக அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்.


-உ.ஸ்ரீ

( புதியதலைமுறை இதழில் வெளியான கட்டுரை )

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review