அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு ! - யாருக்கு லாபமளிக்கும் இந்த நடவடிக்கை? #Privatisation #CentralGovernment #Modi #BJP


தனியார்மயபடுத்துதல் யாருக்கு லாபம்?



ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், இந்திய சரக்கு பெட்டக கழகம் உட்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயபடுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 2014 ம் ஆண்டு பிஜே அரசு ஆட்சியமைத்ததிலிருந்து இதுவரையில் 2017 - 2018 ம் ஆண்டில் அதிகபட்சமாக 1,00,642 கோடி மதிப்பிற்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியுள்ளது. 2019-2020 காலக்கட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாயை தனியார்மயப்படுத்துவதற்கான இலக்காக நிர்ணையித்துள்ளது மத்திய அரசு. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படு அதன் பலன் கடைக்கோடி சாமானியனையும் சென்றடைந்து பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக நிற்கின்றன.நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் விற்பதென்றால் கூட சரி ஆனால் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கான காரணம் என்ன? என பல தரப்பிலிருந்தும் விமர்சன கணைகள் மத்திய அரசை நோக்கி பாய்ந்து வருகின்றன. இது தொடர்பாக சிலரிடம் பேசினோம்,


"இந்தியாவில் உள்ள 280 பொதுத்துறை நிறுவனங்களும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானவை  எனவே அவற்றை தனியார்மயப்படுத்துவது என்பது  பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பது போன்றதாகும்" என ஆதங்கத்தோடு பேசத்தொடங்குகிறார் அரசியல் விமர்சகர் அய்யநாதன், சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடரும் அவர் "1991 ஆம் ஆண்டு  மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் முக்கிய அங்கமே தனியார்மயமாக்கல் தான். பொதுத்துறை நிறுவனங்களை திறமையாகவும் லாபத்தோடும் நிர்வகிக்கும் பொருட்டும் தனியாருக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.1992 இல் இருந்து இதுவரை பல பொதுத்துறை நிறுவனங்களிலும் அரசாங்கம் பங்கு விலக்கல் நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மூலம் ஒரு லட்சத்து ஐயாயிரம்  கோடியை பெற வேண்டுமென இந்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்த வரிசையில்தான் ஏர் இந்தியா , பாரத் பெட்ரோலியம்  போன்ற நிறுவனங்களை தற்போது தனியாருக்கு கைமாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது .


 பாரத் பெட்ரோலிய நிறுவனம் மட்டுமே ஆண்டிற்கு 68,000 கோடியை அரசுக்கு வருமானமாக ஈட்டித் தருகிறது.இந்த நிறுவனத்தை தற்போது ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடிக்கு தனியாருக்கு விற்பனை செய்யப் போகிறார்கள். மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடம் மட்டுமே பல ஆயிரம் கோடிகளை மதிப்புடையது.  பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலம் அரசுக்கு ஒருமுறை மட்டும் தான் வருமானம் வருகிறது. இந்நிறுவனங்களை வாங்கும் தனியாருக்கு இதன் மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கப்போகிறது. தனியார்மயமாக்கலின் மூலம் கிடைக்கின்ற நிதியை சமூக நலத் திட்டங்களுக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பயன்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறுகிறது.  ஆனால் உண்மையில் தனியார்மயமாலின் மூலம் கிடைக்கப்போகும் பணத்தை இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையான 7 லட்சம் கோடியை சமாளிப்பதற்கு மத்திய அரசு பயன்படுத்தப் போகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கையகப்படுத்தும்போது ஏற்படும் முதல் பாதிப்பு வேலை இழப்பு ஆகும். பொதுத்துறை நிறுவனங்கள் பொன் முட்டையிடும் வாத்து போன்றவை.பொதுத்துறை நிறுவனங்களை சரியான முறையில் நிர்வகித்து முறையாக உபயோகப்படுத்தினால் எந்த அளவுக்கு நன்மை தரும் என்பதற்கு நெய்வேலி நிலக்கரி ஆலை  சிறந்த உதராரணம் . நெய்வேலி  ஆலையின் மூலம்  கிடைத்த லாபத்தை வைத்துக்கொண்டு இந்திய அனல்மின் நிலைய கழகம்  உத்தர பிரதேசத்தில் இரண்டு அனல் மின் நிலையம் ராஜஸ்தானில் 2 அனல்  மின் நிலையங்களையும் புதிதாக திறந்தது.
 பங்கு விலக்கல் என்பது முதலாளித்துவ நாடுகளுக்கே உரித்தானது  19 92 இல் இருந்து இதுவரை பல பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளது  அதனால் வேலைவாய்ப்பு அதிகரித்துவிட்டதா ? வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தற்போது தான் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 1992 ல்  இருந்து இதுவரை கிட்டத்தட்ட 2.2 லட்சம் பேர் தனியார்மயமாக்கலினால் வேலை இழந்து உள்ளனர் தனியார்மயமாதல் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று கூறும் வகையில் ஒரு புள்ளி விவரமும் இல்லை.

அமெரிக்கா போன்ற முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடுகளையே வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியவில்லை என்ற போது ஜனநாயக நாடான இந்தியாவில் முதலாளித்துவத்தை உண்டாக்குவதன் மூலம் எப்படி வேலைவாய்ப்பையும் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் ? என்ற கேள்வியோடு முடிக்கிறார் அய்யநாதன்.


அடுத்ததாக தனியார்மயப்படுத்துதகின் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயருமா?  குறிப்பிட்ட சில முதலாளிகளுக்கு மட்டுமே ஆதாயம் அளிக்கிறதா தனியார்மயம்? தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையினால் சாமானியர்களுக்கு எதேனும் பாதிப்பு ஏற்படுமா? உட்பட அடுக்கடுக்கான கேள்விகளோடு பொருளாதார நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

வி.நாகப்பன்,
பொருளாதார நிபுணர்.



"பழைய அரசாங்கங்களின். செயல்பாடுகளின் உடைய நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் தான் இதைப் பார்க்கிறேன். 1992 லிருந்து 25 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. .மக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை அரசாங்கம் ஏற்கனவே தனியார்மயபடுத்திவிட்டது. இந்நிலையில் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஏர் இந்தியா விமான சேவையை தனியார்மயப்படுத்துவதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.   நாட்டில் மறைமுக வரிகள் மூலம் வரி அதிகமாக வரி  செலுத்தும் ஏழை மற்றும்  நடுத்தர மக்களின் பணத்தில்தான் ஏர் இந்தியா இயங்கி வருகிறது.. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெருவாரியாக விமான சேவையை பயன்படுத்துவதில்லை. இது பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படும் சேவை.  இப்படி வரிகட்டும் பெருவாரியான மக்களுக்கு பயன்படாத நிறுவனம் அதிலும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதில் தவறில்லை. ஏர் இந்தியா வை லாபகரமானதாக மாற்ற கடந்த அரசாங்கமும் சரி இப்போதைய அரசாங்கமும் சரி பல முயற்சிகளை எடுத்தது. ஏர் இந்தியா வை தனியார்மயமாக்குவது என்பது மக்களுடைய வரிப் பணத்தை சேமிப்பதற்கான வழிதான்.  நிர்வாகம் செய்வது மட்டும்தான் அரசின் வேலை.  சட்டம் ஒழுங்கு தொழில்துறைக்கு சாதகமான சூழலை உருவாக்குவது பணியாளர் சீர்திருத்தங்கள் செய்வது மட்டும்தான் அரசின் வேலை . தனியார்மயப்படுத்துவதில் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலரின் கையில் மட்டும் பொதுத்துறை நிறுவங்கள் செல்வதை  தவிர்க்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை வாங்க முன்வரும் நிறுவனங்கள் இதற்கு முன்னர் திவால் அடைந்து இருக்க கூடாது நிறுவனத்தின் மீது வழக்குகள் எதுவும் இருக்கக்கூடாது போன்ற விதிமுறைகளை இன்னும் கடுமை படுத்தி சரியான நிறுவனத்திடம் பொதுத்துறை நிறுவனங்களை ஒப்படைக்கலாம்.அத்தியாவசியமான துறைகளில் அரசின் தலையீடு நிச்சயம் இருக்க வேண்டும் அத்தியாவசியம் இல்லாத துறைகளில் அரசு தலையிட்டு மக்களின் வரிப்பணம் வீணாவதை தவிர்க்க வேண்டும் . சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை பாதிக்காத வகையில் தனியார்மய படுத்துவது சரியே" சில கட்டுப்பாடுகளோடு தனியார்மயப்படுத்துதல் சரியே என்ற வாதத்தோடு முடிக்கிறார் பொருளாதார நிபுணர் வி.நாகப்பன்.

"பொது துறையாக இருக்கும்வரை ஒரு சமூகப் பார்வையோடு அந்நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் .தனியாரிடம் செல்லும்போது தனியார் முதலாளிகளுக்கு லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும்". என பேசத்தொடங்கும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தொடர்ந்து "எந்த துறை எல்லாம் லாப நோக்கத்தோடு செயல்படக்கூடாதோ அந்த துறை எல்லாம் தனியார்வசம் ஒப்படைக்கக்கூடாது. நெடுஞ்சாலைகளை தற்போது தனியார் பராமரித்து அதற்கு கட்டணம் வசூலித்து வருகிறது ஆனால் எதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள்?  என்ன சேவை வழங்குகிறார்கள்? என்பது யாருக்கும் வெளிப்படையாக தெரியாது இதையெல்லாம் முறை படுத்துவதற்கு என் ஹெச் ஏ ஐ (NHAI)என்ற அமைப்பு இருந்தாலும் எதுவும் முறையாக செயல்படுவதில்லை . தனியார் மயப்படுத்தும் எல்லாத் துறைகளையும் கண்காணிக்க ஓர் அமைப்பு இருக்க வேண்டும்.ஆனால்  இங்கு யார் சட்டம்  இயற்றுகிறார்ளோ அவர்களே  கண்காணிக்கும் அமைப்பாக இருந்து கொள்கிறார்கள்.அரசு  பொதுத்துறை  நிறுவனங்களை என்ன விலைக்கு யாருக்கு  கொடுக்கிறார்கள் என்பதும் தெரியாது. நஷ்டத்தில் இயங்குவதால் தான் தனியார்மய படுத்துகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என்ற நிறுவனம் லாபத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் அதையும் தனியார்மய படுத்துகிறார்கள் ஏர் இந்திய விஷயத்தில் விமானங்கள் வாங்கும்போது இவர்கள் பல்வேறு முறைகேடுகளை செய்திருக்கிறார்கள் இவர்கள் செய்த முறைகேடுகளுக்கு  தனியார்மயம் எப்படி தீர்வாகும்?  இந்த அரசாங்கம் எடுத்த தவறான பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் தான் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை என்ற காரணத்தை கூறிக்கொண்டே பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்க பார்க்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டோடு முடிக்கிறார்.


பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் விமர்சர்கர்களெல்லாம் தனியார்மயப்படுத்துதல் குறித்து கூறிய கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து பிஜேபியின் செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,
"பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்வதென்பது ஒரு துணிச்சலான நடவடிக்கை" என கனீர் குரலில் பேசத்தொடங்கிய அவர்



 "முதலில் தனியார்களை  வில்லன்கள் போல் பார்க்கும் பார்வையை தவிர்க்க வேண்டும். .  முதலீடுகளை விலகிக் கொள்ளுதல் என்பது தான் அரசாங்கத்தின் கொள்கை.தொழில் செய்வது அரசாங்கத்தின் வேலை இல்லை நிர்வாகம் செய்வது மட்டுமே அரசாங்கத்தின் வேலை
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை மட்டும்தான் தனியார்மய படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. தனியார்மய படுத்துவதன் மூலம் மக்களே அதிகம் பயன் பெற வாய்ப்பு உள்ளது . தனியார் நிறுவனங்களும் நம் நாட்டைச் சேர்ந்தவர் தானே பிறகு எப்படி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அவர்கள் தலையில் கட்ட வேண்டும் என்று நினைப்போம்.   முந்தைய ஆட்சியிலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன.  நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்தி வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வைதான் இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை. தனியார் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்கும் . பொதுத்துறை நிறுவனங்களை வாங்குகின்ற அளவுக்கு ஒரு சில தொழிலதிபர்கள் தான் வலிமையோடு இருக்கின்றனர். அதனால் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை வாங்குகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது என தெரியவில்லை. தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி முதலீடுகளை அதிகப்படுத்தி கட்டமைப்புகளை வலுப்படுத்தி அதிக வேலைவாய்ப்புகளை வழங்கப் போகின்றன. தொலைதொடர்பு நிறுவனங்கள் தொலைக்காட்சிகளும் ஊடகங்கள் போன்ற எல்லாம் தனியாரிடம் தானே இருக்கிறது இவையெல்லாம் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன தனி யாருடைய பங்களிப்பு இல்லாத எந்த நாடும் முன்னேறாது அரசாங்கம் தான் எல்லாவற்றையும் கையாளவேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தமெல்லாம் மங்கிவிட்டது"என குற்றச்சாட்டுகளுக்கு பலத்த பதிலடியோடு முடிக்கிறார் நாராயணன் திருப்பதி.

-உ.ஸ்ரீ

( இந்த வார புதியதலைமுறை இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை )

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்