வருது...வருது..! விலகு...விலகு..! - உள்ளாட்சித் தேர்தலில் நழுவும் கமல்-ரஜினி | #SuperStarRajinikanth #KamalHasan #LocalBodyElections
அஸ்திவாரம் இன்றி கட்டிடம் எழுப்பும் ரஜினி-கமல் ?
'வரும் ஆனா வராது' என்ற நிலையில் இருந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டோடு ஆழ்வார்பேட்டை மற்றும் போயஸ்கார்டனில் இருந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியுமில்லை யாருக்கும் ஆதரவுமில்லை என்ற அறிக்கைகள் வெளியாகியுள்ளது. வெற்றிடத்தை நிரப்பப்போகும் மாற்று நாங்கள்தான் என தொடங்கப்பட்டு ஆரம்பநிலையில் உள்ள கமலஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இன்னும் கட்சியாக தொடங்கப்படாத ரஜினி மக்கள் மன்றமும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழத்தை பொறுத்தவரை 15 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் இவற்றை உள்ளடக்கிய 160000 க்கும் அதிகமான உள்ளாட்சி பதவிகள் என பரந்துபட்ட உள்ளாட்சி அமைப்பை கொண்டது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிமான பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்திவிட்டாலே ஒரு கட்சி தமிழகம் முழுவதும் கிளை பரப்பி வலுவாக உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.
2001 இல் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அரசியல் ஆழத்தை புரிந்துகொள்ள உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர்களை களத்தில் இறக்கினார். 300 ரசிகர்கள் மக்கள் செல்வாக்கை பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகளாக வந்து நிற்க அதே உற்சாகத்தோடு கட்சி தொடங்கி 2006 சட்டமன்ற தேர்தலில் 8% வாக்குகளை அள்ளினார். வளர்ந்து வரும் கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் என்பது வரப்பிரசாதம் போன்றது. உள்ளாட்சியில் கணிசமான இடங்களை பிடிப்பதன் மூலம் தங்கள் கட்சியை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்துவிடலாம். கட்சி ரீதியாக பார்த்தாலும் சட்டமன்றத்திற்கு 234 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் ஆனால் உள்ளாட்சியில் களம் காண்பதன் மூலம் கட்சியின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அது அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் உத்வேகத்தோடு பணியாற்ற உதவியாக இருக்கும்.
தெருவை கூட்டிப் பெருக்க துடைப்பம் வாங்குவதில் முறைகேடு தொடங்கி வெளியே வராத ஆகபெரிய ஊழல்களுக்கெல்லாம் உறைவிடமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள் தான். 'சிஸ்டமே சரியில்லை' எல்லாம் ஊழல்மயம் என பேசி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்துக்கு உள்ளாட்சி தான் அரசியலமைப்பின் அடிப்படை 'சிஸ்டம்' என்பது தெரியாதா? கிடைக்கிற மேடைகளிலெல்லாம் 'கிராம சபை'யை பேசி கவனம் ஈர்த்த கமலஹாசானுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லையா?
ரஜினி-கமல் போன்று மாற்றத்தை ஏற்படுத்த போகிறோம், ஊழலை ஒழிக்க போகிறோம் எனக்கூறுபவர்கள் முதலில் களமிறங்க வேண்டியது உள்ளாட்சி தேர்தல்தான். உள்ளாட்சி தேர்தலை விட்டு விட்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவது என்பது அஸ்திவாரமில்லா கட்டிடம் போல அத்தனை வலுவாக இருக்காது. ரஜினி-கமலின் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவு பற்றி சிலரிடம் பேசினோம்,
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் அய்யநாதன்,
"நம் நாட்டினுடைய அரசியல் மூன்று நாடாளுமன்றம் , சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று படிநிலைகளை உடையது. மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து செல்வதற்கு இந்த மூன்றுமே மிக முக்கியமானவை.மக்களாட்சியில் உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களுக்கு மிக நெருங்கிய நிலையில் இருக்கக்கூடிய ஜனநாயக அமைப்புகள். கட்சியை மேலும் வளர்க்க வேண்டும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் முதலில் உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிட வேண்டும். மூன்று நான்கு தெருக்களை உடைய வார்டில் ஒரு கட்சியின் பிரதிநிதி வார்டு உறுப்பினராக இருக்கிறார் என்றால் அந்த அடிமட்டம் அளவுக்கு ஒரு கட்சி சென்று சேர்ந்திருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவருடைய அரசியல் புரிதல் என்னவென்பதே நமக்கு புரியவில்லை. உள்ளாட்சி தேர்தலை தவிர்த்துவிட்டு நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் ஆகிவிடுவோம் என்பதெல்லாம் பழிக்கக்கூடிய கனவு இல்லை.ரஜினி-கமல் சொல்வது போலவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து விட்டாலும் அவர்கள் கட்சியினுடைய உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் பல சிரமங்கள் ஏற்படும். இப்போது தேர்தலை தவிர்ப்பதற்கு இரு திராவிட கட்சிகள் மீதும் குற்றம்சாட்டுகிறார் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே திராவிட கட்சிகள் இதே குற்றச்சாட்டுகளோடு தேர்தலில் போட்டியிட்டன. பிறகு எதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் போட்டியிட்டார்? அதையும் தவிர்த்திருக்கலாமே.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் எளிதில் வெல்ல முடியாது என்பதை அறிந்து தான் தேவையில்லாத சாக்கு போக்குகளை கூறி ஒதுங்கி நிற்க பார்க்கிறார்கள். ரஜினி, கமல் இருவரும் வெற்றியை நினைத்து தான் கவலைப்படுகிறார்களே தவிர மக்களை நினைத்து கவலைப்படவில்லை." என ரஜினி-கமலின் இந்த முடிவுக்கு கண்டணம் தெரிவிக்கிறார் அரசியல் விமர்சகர் அய்யநாதன்.
சிந்தன்,
"உள்ளாட்சி என்பது அரசியலமைப்புச்சட்டம் உறுதிப்படுத்தியிருக்கின்ற மக்கள் உரிமை .உள்ளூர் அளவில் உள்ளூர் மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை திட்டமிட்டு பெற்றுக்கொள்வதற்கு உள்ளாட்சி அமைப்புகளை ஆதாரமாக உள்ளன." என உள்ளாட்சியின் முக்கியத்துவம் குறித்து பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன்,
"தேர்தலை விமர்சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ரஜினியை பொறுத்தவரை கட்சியே இன்னும் ஆரம்பிக்கவில்லை, கமல்ஹாசனை பொறுத்தவரை "கிராமியமே தேசியம்" என்று மேடைதோறும் பேசிவந்தார் ஆனால் இந்த தேர்தலில் இருந்து விலகியிருப்பது முரணாக உள்ளது. எல்லா தேர்தல்களிலும் பெரிய கட்சிகளின் அழுத்தம் மற்ற சிறிய கட்சிகள் மீது இருக்கத்தான் செய்கிறது ஆனால் இத்தகைய அழுத்தங்கள், தேர்தல் முறைகேடுகள் அனைத்தையும் தாண்டிதான் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றனர். மாற்றம் வேண்டும் என்றால் தேர்தல் பங்கேற்பு என்பது மிக முக்கியமானது. களத்தில் நின்று போராட வேண்டும் அல்லது சட்டப் போராட்டம் செய்ய வேண்டும். ரஜினி-கமல் போன்று ஒதுங்கி நிற்பது சரியாக இருக்காது. போட்டி களத்தில் இவர்கள் இல்லாதது மக்களுக்கு எத்தகைய இழப்பையும் ஏற்படுத்திவிடாது.
உள்ளாட்சிக்கு உண்மையான அதிகாரம் வேண்டும் ஊழல்மயம் இல்லாத உண்மையான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கும் தேர்தல் மீதும் தேர்தல் ஆணையம் மீதும் விமர்சனங்கள் இருந்தாலும் போராடுவதை நிறுத்த மாட்டோம்.
முதல்வராவதற்காக மட்டும்தான் கட்சி தொடங்கி இருக்கிறோம் என்றால் அதைவிட தவறான அரசியல் வேறெதுவும் இருக்க முடியாது. ஏற்கனவே திரைத்துறையில் இருந்து முதலமைச்சர் ஆனவர்கள் கூட மக்கள் பிரச்சினைகளுக்கு மக்களோடு உடன் நின்று போராடி படிப்படியாக முன்னேறியே முதலமைச்சர் என்ற நிலையை அடைந்திருக்கின்றன. வந்தால் முதலமைச்சராக தான் வருவோம் என்று கூறுவதற்கு அரசியல் ஒன்றும் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் கிடையாது. இந்த நிலைப்பாடு அவர்களின் அரைகுறையான அரசியல் புரிதலையே காட்டுகிறது.ரஜினி-கமல் மட்டுமின்றி அவர்களுடைய ரசிகர்களுக்கும் அரைகுறையான அரசியலையே ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் . அரசியல் களத்தில் மக்களோடு மக்களாக நிற்காத எவரையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்பதை இவர்கள் வருங்காலத்தில் புரிந்து கொள்வார்கள்."
சுமந்த்.சி.ராமன்,
"உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் ரஜினி காந்த் ஐயும் கமலஹாசனையும் ஒரே புள்ளியில் வைத்து பார்க்க முடியாது" எனப் பேசத்தொடங்கும் ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன்,
ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை அதனால் அவரை ஏன் போட்டியிடவில்லை என்று கேட்பது நியாயமாக இருக்காது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கிராமங்கள்தோறும் பிரதிநிதிகளை வைத்துக்கொள்வது ஒரு கட்சியின் அடித்தளம் வலுப்பெற பெரு உதவியாக இருக்கும். உத்தரபிரதேச எடுத்துக்கொண்டோம் என்றால் அங்கே மாயாவதி சில நேரங்களில் உள்ளாட்சித் தேர்தலையும் இடைத்தேர்தலையும் புறக்கணித்து விடுவார் இருந்தும் அந்த கட்சி வலுவோடு இருக்கும் ஏனென்றால் அது வளர்ந்த கட்சி ஆனால் வளருகின்ற கட்சிக்கு அடிப்படையே உள்ளாட்சித் தேர்தல்தான். கமல்ஹாசன் ஊர் ஊராகச் சென்று கிராமசபை நடத்திவிட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. உள்ளாட்சிகளில் உறுதியாக இருக்கும்போது தான் சட்டமன்றத் தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் உறுதியோடு எதிர்கொள்ள முடியும் இந்த தேர்தலில் போட்டியிட்டு ஒரு பத்து உள்ளாட்சி பிரதிநிதிகளை பெற்றால் கூட அந்த கட்சிக்கு லாபம் தான் ஆனால் பங்கேற்காமல் இருப்பது பின்னடைவுதான். கமலின் முடிவை வேறு விதத்தில் பார்க்க வேண்டுமானால் ஒருவேளை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கும் பணத்தை செலவழித்து விட்டு அடுத்து வருகின்ற சட்ட மன்றத்திற்கும் மீண்டும் பணத்தை செலவழிக்க வேண்டும் என்றால் சிரமம் ஏற்படும் என்று யோசித்துக் கூட இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம்." என்கிறார்.
" நிர்வாக ரீதியான கட்டமைப்பை பொருத்தவரை நாங்கள் இருபடிநிலைகளை கொண்ட ஒரு புதிய முறையை கையாள்கிறோம். வழக்கமாக மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை பதவியை உருவாக்கி விட்டோம் இன்னொன்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என்ற அணியை உருவாக்கி நாடாளுமன்ற,சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி வரைக்கும் பிரதிநிதிகளை நியமித்து வருகிறோம். இந்த இரண்டாவது கட்டமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கட்சியிலும் கிடையாது இந்த பணிகள் எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் முழுமையாக முடிந்துவிடும்" என கட்சி கட்டமைப்பு வேலைகள் குறித்து பேசத்தொடங்கிய செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ்,
" 2021 தேர்தலையும் இந்த இருபெரும் கட்சிகளிடமும் கொடுத்துவிட்டு அடுத்த ஐந்து வருடங்களும் வேடிக்கை பார்ப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான குறிக்கோள்" என உறுதிபட கூறுபவர் தொடர்ந்து,
" நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய 4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தோம் பல இடங்களில் இருவரும் கட்சிகளுக்கு சவால் அளிக்கக்கூடிய வகையில் வாக்குகளைப் பெற்றிருந்தோம் ஆனால் சில இடங்களில் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது . தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த ஏற்றத்தாழ்வான நிலையை ஆய்வு செய்ததில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்னும் முடிவுக்கு வந்து கிராமங்கள்தோறும் கட்சியின் கிளைகளை உருவாக்க தொடங்கினோம். அதனால் சட்டமன்றத்தை இலக்காக கொண்டு வருகிற 50 வாரங்களில் வலுவான திட்டமிடலுடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
இந்த உள்ளாட்சித் தேர்தலை தவிர்ப்தினால் பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
கிராமப்புறங்களுக்கு ஒரு முறையும் நகர்ப்புறங்களுக்கு ஒரு முறையும் எனப் பிரித்து தேர்தல் நடத்துகிறார்கள் இது தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத ஒன்று . அதிலும் தற்போது கிராமப்புறத்தில் நடக்கும் தேர்தலில் கூட ஒன்பது மாவட்டங்களை விட்டு விட்டு மீதம் இருக்கிற மாவட்டங்களுக்கு தான் தேர்தல் நடத்துகிறார்கள் . குறை பிரசவம் ஆன இந்த தேர்தலை நடத்துவதற்கே இருபெரும் கட்சிகளும் விருப்பம் இல்லாமல பல நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வு உற்பட பல பிரச்சினைகளால் மக்களும் இந்த தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை . நாங்கள் 2021 ஐ தவறவிட்டால் 2026 மிகப்பெரிய தூரம் ஆகிவிடும் நாலு சதவீத ஓட்டில் இருந்து 40 சதவீத ஓட்டிற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். 2021ல் நாங்கள் நினைத்தது நடந்து விட்டால் சீர்திருத்தப்பட்ட புதிய புதிய உள்ளாட்சித் தேர்தலயே நடத்தலாம். " எனக்கூறுகிறார்.
"ரஜினிகாந்தை பொறுத்தவரை அரசியல் பிரவேசத்தை அறிவிக்கும் போதே சட்டமன்றம்தான் இலக்கு என்பதை தெளிவாக சொல்லிவிட்டாரே? எனக் கேள்வியோடு தொடங்கும் எழுத்தாளார் மற்றும் ரஜினிகாந்த் ஆதரவாளர் ராம்கி.
"ரஜினிகாந்த் பெயரை வேறு எந்த கட்சியினரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கை இது . இது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன்னரும் தேர்தல் சமயங்களில் இதுபோன்ற அறிக்கை ரஜினியிடமிருந்து வெளியாகியுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புகளை எல்லாம் பார்த்தால் ஏதோ சம்பிரதாயத்துக்கு நடத்துகிற தேர்தல் போல் தான் தெரிகிறது. இதில்பெரிய மாற்றங்கள் உருவாக்க வாய்ப்புகள் இல்லை. ரஜினி மக்கள் மன்றம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு கிளை மன்றம் அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. அதில் 60 சதவீதத்துக்கு மேல் பணி நிறைவு பெற்றுவிட்டது. 1996 தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட தமாக கட்சி அதன் பிறகு மூன்று மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. தாமாக போன்ற கட்சியே வெற்றி பெறும்போது வாக்குச்சாவடிக்கு 30 உறுப்பினர்களை கொண்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்திற்கு உள்ளாட்சி தேர்தல் என்பது மிக எளிதாகத் தான் இருக்கும்.
விஜயகாந்தை பொறுத்தவரை விஜயகாந்த் ரசிகர்கள் தன்னிட்சையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் விஜயகாந்த் சொல்லி தேர்தலில் அவர்கள் தேர்தலில் நிற்கவில்லை. அவர்களாகவே ஆங்காங்கே தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர். இது விஜயகாந்திற்கு கட்சி தொடங்குவதற்கு ஒரு உந்து கோலாக இருந்தது. அன்றைக்கு இருந்த இருபெரும் கட்சிகளைத் தவிர மூன்றாவது சக்தியாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார் அதனால் அந்த இரு கட்சிகள் மீதும் அதிருப்தியில் இருந்தவர்களுக்கு விஜயகாந்த் மட்டுமே ஒரே தேர்வாக இருந்தார். அவர் மட்டுமே களத்தில் நின்றதால் விஜயகாந்தின் உள்ளாட்சி தேர்தல் பார்முலா வெற்றி பார்முலா வாக அமைந்தது. ஆனால் இன்று மூன்றாவது கட்சியாக பல கட்சிகள் களத்தில் உள்ளன விஜயகாந்த் அரசியலில் இறங்கிய சூழலும் ரஜினிகாந்த் அரசியல் இறங்கும் சூழலும் வேறு. மேலும் விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களுடன் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது." எனக்கூறி முடிக்கிறார்.
மக்களுக்கு எளிதில் எட்டக்கூடிய, மக்கள் எளிதில் நெருங்க முடிகிற இடத்தில் இருக்கிற ஜனநாயகத்தின் முக்கிய வார்ப்பு உள்ளாட்சி பதவிகள் தான். மக்களை நோக்கி நெருங்கி செல்வதை தவிர்ப்பவர்களை மக்களும் நெருங்க யோசிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உ.ஸ்ரீ
(புதிய தலைமுறை இதழில் வெளியான கவர் ஸ்டோரியின் எடிட் செய்யப்படாத வெர்ஷன்)






Comments
Post a Comment