20 வயது புதியவர் அல்ல; 70 வயது பெரியவர் என்பதை உணர்ந்து பேசுங்கள் சூப்பர் ஸ்டாரே...! #Rajinikanth #Periyar #SuperStar #Sorry

20 வயது புதியவர் அல்ல; 70 வயது பெரியவர் என்பதை உணர்ந்து பேசுங்கள் சூப்பர் ஸ்டாரே...!



தன் மீதான எந்த சர்ச்சைக்கும் பதிலளிக்காதவர், அப்படியே பேசினாலும் அங்குட்டும் இல்லாமல் இங்குட்டும் இல்லாமல் பேசுபவர், இந்த முறை கொஞ்சம் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறார். உறுதியான வெளிப்பாடா என்பதில் உறுதியில்லை. பொறுத்திருந்து பார்த்தால் புரியுமென நம்புவோம். விஷயத்திற்கு வருவோம், 50 வருடத்திற்கு முன்னால் நடந்த, இன்றைய தேதிக்கு பேசினால் அரசியல் லாபத்தை தவிர ஐந்து பைசாவிற்கும் ப்ரயோஜனமில்லாத ஒரு சர்ச்சையை தூக்கி கொண்டு வந்து களமாடியது ஏன்? 'ஒரு வரி பேசுனா நியுஸுதான் தெரிஞ்ச்சுக்கோ' என்று தர்பார் பாடலில் ஒரு வரி வரும். நிஜத்துலும் கூட உண்மை அதுவே. நீங்கள் பொதுவெளியில் தும்மினால் கூட செய்தியாகிவிடும். அப்பேற்பட்ட ஊடக வெளிச்சத்தின் வீச்சில் சிக்கியிருக்கும் நபர் தாம் பேசும் பேச்சில் அசுர ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். அரசியல் அறிவிப்புக்கு பிறகு சூப்பர்ஸ்டார் பேசிய எந்த பேச்சும் இந்த ஜாக்கிரதை ரகத்தில் சேராது. ஒரு கொள்கையை பற்றிக்கொண்டு உறுதியான கருத்துக்களை வெளிப்படுத்தும் பேச்சை இதுவரை அவர் உதிர்க்கவேயில்லை. 1971ல் பெரியார் மற்றும் தி.க, ராமச்சந்திர மூர்த்தியை அவமதித்தது மறுக்க முடியாத மறக்ககூடிய உண்மை என்ற சூப்பர் ஸ்டாருக்கு இந்த இடத்தில் ஒரு ரிமைண்டர். 2018 ஆம் ஆண்டு வெளியான காலா படத்தின் க்ளைமாக்ஸில் சூப்பர் ஸ்டாரை ராவணன் போலவும் வில்லன் நானா பட்டேக்கரை ராமன் போலவும் சித்தரித்து அத்தனை கட் ஷாட்கள் வைத்திருப்பார்கள்.இறுதியில் நானா பட்டேக்கர் முகத்தில் கரியை பூசி ராவணப்படை வெல்லும். 2017 லேயே ஆன்மீக அரசியல்தான் செய்வேன் என்று அறிவித்த சூப்பர்ஸ்டார் இந்த காட்சிகளை தங்கள் படத்தில் வைத்தது ஏன்? இதனால் யாருடைய தெய்வ நம்பிக்கையிலும் கறைபடவில்லையா? இன்று சூப்பர்ஸ்டாருக்கு ஆதரவாக ஹைடெசிபிளில் வாய்ஸ் கொடுக்கும் அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் காலா கறை மட்டும் நல்ல கறையாக தெரிந்திருக்குமோ. இதுமட்டுமல்ல மூன்று மாதம் முன்பு எனக்கு யாரும் காவி சாயம் பூச முடியாது எனக்கூறியவர் இந்த முறை அந்தபக்கமே கரை ஒதுங்கிவிட்டாரே. பிரச்சனைக்கு பிரச்சனை கருத்துகள் மாறலாம் ஆனால் கொள்கை மாறக்கூடாது. 20 வயதில் புதியவனாக இந்த சமூகத்தில் காலடி எடுத்து வைக்கும் இளைஞனுக்குத்தான் எந்த அரசியல் நமக்கானது? எந்த கொள்கை நியாயமானது? என்ற குழப்பமெல்லாம் இருக்கும். கொஞ்ச காலம் அவரும் கொஞ்சநாள் இவரும் பேசுவது நல்லதாக தோன்றும். இது 20 வயது இளைஞனுக்கு. ஆனால் நீங்கள் 20 வயது புதியவர் அல்ல, 70 வயது பெரியவர். இன்னமும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டில் நிற்பதற்கும் சர்ச்சையின்றி கருத்தாட தடுமாறுவதும் அவ்வளவு சிறப்பாக இல்லை. நிதர்சன பிரச்சைனைகளிலிருந்து திசைதிருப்ப சல்லி பைசாவிற்கும் பிரயோஜனமில்லாத சர்ச்சைகளை தூக்கி கொண்டு வருவது கொஞ்சமும் அறமற்ற அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற பாலிட்டிக்ஸ் பப்ஜிகள்.அந்த விளையாட்டை இங்கே நிறைய கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக விளையாடிக்கொண்டிருக்கின்றன.'சிஸ்டத்தையே மாற்ற போகிறேன்' எனக் கூறி அரசியலில் நுழையும் நீங்களும் இந்த பாலிட்டிக்ஸ் பப்ஜியை கையில் எடுக்காதீர். இங்கே பேசி பேசி விவாதித்து விவாதித்து டயர்ட் ஆகும் அளவுக்கு பல பிரச்சனைகள் உள்ளன, இந்த மண் எல்லா பக்கத்துக்கும் சொந்தமானதுதான் எந்த பக்கம் நின்றாவது நிதர்சனமான மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள். மக்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள்தான்....

வின்னர்....வின்னர்....! எலெக்சன் வின்னர்..!

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்