செக்கச்சிவந்த ஆஸ்(தீ)ரேலியா....| Australia Wild fire | Climate Emergency |
செக்கச்சிவந்த ஆஸ்(தீ)ரேலியா.....
'எனக்கு அற்புதங்களின் மீது நம்பிக்கை உண்டு' கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரதமாரக பதவியேற்றுக்கொண்ட ஸ்காட் மாரிசனின் கூற்று இது. உண்மையில் ஸ்காட் நம்புவது போன்ற ஒரு அற்புதம் அரங்கேறினால்தான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியுமோ? என்ற துயரமான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை காட்டுத்தீ என்பது நூற்றாண்டு காலமாக நிகழும் ஒரு சகஜமான சம்பவம். ஆனால் இந்த முறை கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ சகஜம், சராசரி என்ற நிலைகளை தாண்டி மக்களுக்கும் வன உயிரினங்களுக்கும் பெருத்த வாழ்வியல் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை பருகி தாகம் தீர்த்த உயிரினங்கள் கருகிப்போய் குற்றுயிரும் குலையுயிருமாக மீட்புப்படையினரின் பாட்டில் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. செப்டம்பரிலிருந்து இதுவரை நியுசவுத் வேல்ஸ், விக்டோரியா போன்ற பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 5 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன. உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் 9 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிதான் அழிந்திருந்தது. இதிலிருந்து ஆஸ்திரேலிய காட்டுத்தீ எப்பேற்பட்ட அழிவை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் 2018 ம் ஆண்டு சராசரி வெப்பநிலையை விட 1.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிலும் டிசம்பர் மாதம் வரலாறு காணாத அளவாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது. மேலும் கரியமில வாயு வெளியேற்றத்தினால் அசாதாரண நெருப்பு மேகங்கள் ஆஸ்திரேலியாவில் உண்டாக தொடங்கியுள்ளன. சாதாரண மேகங்கள் போல் அல்லாமல் லேசான மழையை கொடுத்துவிட்டு நெருப்பை தூண்டும் வகையிலான மின்னல்களை இந்த மேகங்கள் உருவாக்கிவிடுகின்றன.
செப்டம்பர் மாதம் எரியத்தொடங்கிய காட்டுத்தீக்கு இதுவரை 23 பேர் மற்றும் 1500 வீடுகள் இரையாகியுள்ளன. எவ்வளவு வன உயிரினங்கள் இறந்துள்ளன என்பதற்கான சரியான விவரங்கள் இல்லை. இருப்பினும், கிரிஸ் கிக்மேன் என்ற சிட்னி பல்கலைக்கழக பேராசிரியரின் ஆய்வுப்படி 1 ஹெக்டேருக்கு 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள் 129.5 ஊர்வன போன்றவை இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் 50 கோடி வனவாழ் உயிரினங்கள் தீக்கரங்களால் சுட்டெரிக்கப்பட்டுள்ளன எனக்கூறப்படுகிறது.
கலிபோர்னியா, அமேசான், ஆஸ்திரேலியா என கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட மூன்று மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் மூச்சடைக்க வைத்துள்ளன. பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற சூழலியல் காரணிகள்தான் இவையனைத்திற்கும் காரணமென அறிவியல்பூர்வமாக எடுத்துரைக்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள். பருவநிலை மாற்றம் மற்றும் இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இருதுருவ விளைவின் காரணமாக ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம் உண்டாகி கடுமையான வறட்சி ஏற்பட்டு காற்றி ஈரப்பதம் குறைந்து வழக்கமான காட்டுத்தீயை பேரழிவு ஏற்படுத்தக்கூடியதாக மாற்றிவிட்டதாக கூறுகின்றனர்.
தற்போதைய இயற்கை சூழ்நிலைகளையும் பருவநிலை மாற்றத்தையும் கருத்தில்கொண்டு ஆட்சியாளர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என உலகளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது.
153 நாடுகளை சேர்ந்த 11000 அறிவியல் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து 'உலக பருவநிலை அவசரம்' குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட பல நூறுமுறை பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தும் வார்த்தையாக 'Climate Emergency' உருவெடுத்து ஆக்ஸ்போர்டு அகராதியின் 2019க்கான வார்த்தையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கால்பங்கு ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் கொளுந்துவிட்டு எரிகையில் ஹவாய் தீவுக்கு குடும்ப சுற்றுலா சென்றிருந்த ஆஸ்திரேலிய பிரதமர், மக்களின் விமர்சனத்துக்கும் கோபத்துக்கும் பிறகு சுற்றுலா வை பாதியில் கேன்சல் செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் இறங்கிய ஸ்காட் 'இந்தக்காட்டுத்தீ சம்பவத்திற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை' என அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஜீலை மாதம் தொடங்கி இரண்டு முறை காட்டுத்தீ குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் பேசுவதற்கு ஸ்காட்டிடம் அனுமதி கேட்ட முன்னாள் மூத்த மீட்புக்குழுவினரை கடைசி வரை அவர் சந்திக்கவே இல்லை.
ஸ்காட் மாரிசன் மட்டுமின்றி இன்றைய உலக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பருவநிலை மாற்றம் குறித்து செவிசாய்க்க தயாராக இருப்பதாக தெரியவில்லை. அமேசான் தீயை அசால்ட்டாக கருதும் பிரேசில் அதிபர் போல்சனரோ ஒருபுறமிருக்க மற்றொருபுறம் சூழலியல் சார்ந்து பேசிவரும் 15 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்கை டிவிட்டரில் கலாய்த்துக்கொண்டும் வம்பிழுத்துக்கொண்டும் இருக்கிறார் ட்ரம்ப். தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி ஆகியவை மட்டுமே இவர்களின் ஒற்றை குறிக்கோளாக உள்ளது. 90 களிலிருந்து இதுவரை காற்று மாசுவினால் மட்டும் ஏறக்குறைய 4 கோடியே கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஐநா வின் அறிக்கை இவர்களின் கவனத்திற்கு சென்றிருக்காது போல. நிலக்கரி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா கடந்த மட்டும் 42 பில்லியன் டாலர் வருவாயை நிலக்கரி மூலம் ஈட்டியுள்ளது. ஆனால் இதேபோல் நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டே பசுமை இல்ல வாயுவான கரியமில வாயு போன்றவற்றை காற்றில் கலக்கவிட்டுக்கொண்டே இருந்தால் 2050 க்குள் பருவநிலை மாற்றம் உச்சமடைந்து இயற்கை சீற்றங்களால் வருடத்திற்கு 39 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்கிறது ஒரு புள்ளவிவரம். நிலக்கரி,கச்சா எண்ணெய் உட்பட புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்கள் உலக வெப்பமயமாதலுக்கு மிகமுக்கிய காரணமாகும். இதேநிலை நீடித்தால் 2030 க்குள் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் கூடிவிடும் என ஐநா சுற்றுச்சூழல் திட்டம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா , ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி20 நாடுகள் அதிக கரியமில வாயுவை வெளியேற்றுவதாக குறிப்பிடுகிறது ஐநா..
'ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான ஆனால் எதிர்த்திசையில் செயல்படக்கூடிய விசை உண்டு' என்ற நியுட்டனின் கூற்றை இயற்கையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் அசாதாரண பேரழிவுகளுக்கு யார் காரணம் என்பது புரியும்.
'இயற்கை ஒவ்வொரு காலத்துக்கும் மற்றும் ஒவ்வொரு பருவத்துக்கும் தனிப்பட்ட சில அழகுகளை கொடுக்கிறது' என்கிறார் ஆங்கிக நாவல் ஆசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் ஆனால் அரசாங்கம் மற்றும் மக்களின் வரைமுறையற்ற செயல்பாடுகளால் அந்த அழகு குலையும் போது தங்களின் வாழ்வும் கோரமாகும் என்பதை உலக மக்கள் அனைவரும் உணரத்தொடங்க வேண்டிய நேரம் இது.
-உ.ஸ்ரீ
(புதியதலைமுறை இதழில் வெளியான கட்டுரை)

Comments
Post a Comment