இளங்காற்று வீசுதே.......! இளம் பிரதமர் சன்னா மரினின் ஸ்டோரி |



இளங்காற்று வீசுதே....

"நான் இந்த நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கேதான் ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு நினைத்த இலக்கை அடையமுடியும். இங்கேதான் ஒரு கேஷியர் நாட்டின் பிரதமராக கூட உயரமுடியும்" இது பிரதமர் மோடியின் குரல் அல்ல, ஃபின்லாந்து நாட்டு லேடியின் குரல். சன்னா மரின் என்ற 34 வயதே ஆன பெண்மணி கடந்த டிசம்பர் 10ம் தேதி ஃபின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட பிறகு பேசிய வார்த்தைகள்தான் இவை.



சன்னா மெரினின் வருகைக்கு பிறகு இளங்காற்று வீசும் இளையோர் மன்றமாக மாறியுள்ளது ஃபின்லாந்து நாடாளுமன்றம். பிரதமர் சன்னா வுடன் கல்வித்துறை அமைச்சராக லீ ஆண்டர்சன், நிதியமைச்சராக கேத்ரி கல்முனி, உள்துறை அமைச்சராக மரியா ஓய்சாலோ ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர். இவர் பெண்கள் என்பதை தாண்டி அனைவரும் 35க்குட்பட்ட இளையோர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நானா செதுக்குனதுடா' என்ற வசனத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக பொருந்தி போகிறார் பிரதமர் சன்னா. பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த சன்னாவின் அப்பா குடிபோதைக்கு அடிமையானவர். உலகம் முழுவதுமே குடிதான் குடித்தனத்திற்கு  முதல் வில்லனாக இருக்கும் போல,தந்தையின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளால் தாய்-தந்தை இருவரும் விவாகரத்து பெற்றுவிட, சிறுமியான சன்னா அம்மாவுடன் வளரத்தொடங்கினார். தன்பால் ஈர்ப்பாளரான சன்னாவின் அம்மா கணவருடனான விவாகரத்திற்கு பிறகு இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கினார். குடிபோதைக்கு அடிமையான அப்பா, தன்பால் ஈர்ப்பாளரான அம்மா, என சகஜத்திலிருந்து சற்று விலகியிருந்த  குடும்பப்பிண்ணனி இதனுடன் சேர்ந்து  கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஏழ்மை என சன்னாவின் இளம் வயது அவ்வளவு இயல்பாக கடந்துவிடக் கூடியதாக இல்லை. விட்டுப்பிரியாத உற்றத்தோழனான ஏழ்மையின் நட்பிலிருந்து எட்டி நிற்க எண்ணி பள்ளி படிக்கும்போதே 15 வயதில் ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார். அதோடு சேர்த்து பத்திரிகைகள் விநியோகம் செய்ய தொடங்கினார். அதன்பிறகு கேஷியர் பணி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தன்னை சுற்றியிருந்த தடைக்கற்களை தகர்த்தெரிய தொடங்கினார் சன்னா. குடும்பத்தில் முதல் ஆளாக கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைத்ததோடு சேர்த்து அரசியலிலும் என்ட்ரி கொடுத்தார் அதுவும் 20 வயதில். சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி 27 வயதில் டாம்பீரின் நகர நகராட்சி தலைவர் ஆனார் சன்னா. அடுத்த மூன்றே வருடத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆகினார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த ஃபின்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சன்னா வின் சமூக ஜனநாயக கட்சி மற்ற 5 கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியை பிடித்து ஆன்டி ரினே பிரதமராக பதவியேற்றார். ரினேவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக சன்னா வுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ஃபின்லாந்து நாட்டின் தபால் ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து மேலும் சில அரசியல் காரணங்களும் உடன் சேர்ந்து கொள்ள பிரதமர் ரினே பதவி விலக நேர்ந்தது. ரினே வுக்கு பிறகு பிரதமர் பதவியில் அமர கூட்டணிக் கட்சிகளின் பெண் எம்.பிக்கள் மற்றும் சன்னா மரினுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இறுதியில், ஒருமனதாக சன்னா மரின் ஃபின்லாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார்..

வசவுகள் வாஸ்து பார்க்காமல் வட்டமிடும் அரசியல் உலகில் சன்னா மீதும் வசவுகள் வாரி வீசப்பட்டன. 34 வயது இளம்பெண் ஒருவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தானா? பிரதமர் பதவியின் கனத்தை இவரால் தாங்க முடியுமா? என பல விமர்சனங்களும் கேள்விகளும் சன்னா மீது பாயத்தொடங்கியுள்ளன. அண்டைநாடான எஸ்தோனிய நாட்டின் அமைச்சர் ஒருவர் "இந்த இளம் வியாபார பெண் ( Sales girl)  என்ன செய்யப்போகிறார் என்பதை பார்ப்போம் என விமர்சித்து விட,இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் கிளம்ப எஸ்தோனியா நாட்டு அதிபரே ஃபின்லாந்து நாட்டு அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் நாட்டு அமைச்சரின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த வசவுகள் விமர்சனங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, பிரதமரான சன்னா வின் திறமையை சோதிக்க  அகதிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, அரசியல் குழப்பங்கள் என பல பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொள்ளப்போகும்  சன்னா வின் சாமர்த்தியத்தை காண உலகமே வெயிட்டிங்.

 ஃபின்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் உள்ள 200 எம்.பி க்களில் 47 சதவீதம் பேர் பெண்கள். சன்னா வின் கேபினட்டில் இடம்பெற்றுள்ள 19 பேரில் 12 பேர் பெண்கள் என ஆட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பில் பல பெரிய ஜனநாயக நாடுகளை விடவும் முன் நிற்கிறது இந்த ஃபின்லாந்து.

இன்னமும் நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீட்டிற்காக போராடிக்கொண்டிருக்கும் இந்திய பெண்களுக்கு, சன்னா மரினும் ஃபின்லாந்தும் மிகச்சிறந்த இன்ஷ்பிரேஷன்...!

- உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review