திமுக-காங்கிரஸ் கூட்டணி சலசலப்பும் பிண்ணனியும்.....

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீட்டில் திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் "இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்" என சத்தியமூர்த்தி பவன் அதிருப்தி அலையை பரவவிட்டுள்ளது. "இது எங்களின் ஆதங்கம்தானே தவிர மிரட்டல் அல்ல" என ப.சி வாய்ஸ் கொடுத்துள்ளார். உண்மையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் என்னதான் பிரச்சனை?


உள்ளாட்சி தேர்தல் பதவி ஒதுக்குவதில்தான் பிரச்சனையா என்றால் இல்லை என்றே சொல்லலாம். திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்ற கொஞ்ச நாளிலே திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் "காங்கிரஸிற்கு இன்னும் ஏன் பல்லாக்கு தூக்கி கொண்டிருக்க வேண்டும்?" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் முக்கிய உடன்பிறப்பான கே.என்.நேரு.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் ஒரு கூட்டத்தில் ஸ்டாலினும் திருநாவுக்கரசும் மேடையில் இருக்கும் போதே "நாங்குநேரி தொகுதியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் ஜெயித்துக்காட்டுகிறோம்" என திருநாவுக்கரசை பார்த்து  உதயநிதி பேச்சுவாக்கில் கொளுத்திப்போட்டிருப்பார். அதேநேரத்தில் காங்கிரஸ் பக்கம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மநீம தலைவர் கமல்ஹாசன் டெல்லிக்கு விசிட் அடித்து ராகுல் காந்தியுடன் ஒரு மீட்டிங்கை முடித்திருந்தார். திமுக வுடன் கூட்டணி பேச்சுகள் ஆரம்பிப்பதற்கு முன்பே தங்களுக்கு கமல், தினகரன் போன்ற வேறு சில ஆப்ஷன்கள் ஓப்பனிலேயே இருப்பதை காங்கிரஸ் திமுக வுக்கு அவ்வபோது காட்டிக்கொண்டே இருந்தது அதன் ரிசல்ட்டாக தான் திமுக விடம் இரட்டை இலக்கத்தில் நாடாளுமன்றத்தில் சீட்டுகளை பெற்றது.

 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகான காங்கிரஸ் கட்சியின் ஒரு  கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருப்பது குறித்தும் எதற்கெடுத்தாலும் திமுக பின்னாலேயே செல்வதையும் குறித்த அதிருப்தியை திருநாவுக்கரசர் வெளிப்படையாகவே பேசியது குறித்த செய்திகளை பார்க்கமுடிந்தது.இதிலிருந்து இந்த கூட்டணி குழப்பம் இன்றல்ல, பல நாட்களாகவே இரு கட்சிகளுக்குள்ளும் புகைந்து கொண்டே இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.


2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங் கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி திமுக வுக்கு ஒதுக்கப்பட்டவுடன் காங்கிரஸை சேர்ந்த ஒரு பகுதியினர் இது காங்கிரஸுன் பாரம்பரியமான தொகுதி என கூறி திமுக போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் இது பெரிதாக வெளியே தெரியவில்லை ஆனால் அந்த போராட்டம் தான் கட்சியின் அடிப்படை தொண்டனின் மனநிலை. எந்த தொண்டனும் அவனது பகுதியில் அவனது கட்சியை சேர்ந்த அவனிலிருந்து வந்த ஒருவன் பதவிக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவான். இது எல்லாக்கட்சி தொண்டர்களுக்கும் பொதுவான மனநிலை.

11ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் புதுக்கோட்டையில் அதிமுக+ஐ விட திமுக+காங் அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் திமுக கடைசிவரை  காங்கிரஸிற்கு துணைத்தலைவர் பதவியை வழங்க பிடிகொடுக்காததால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் அதிமுக வுக்கு ஆதரவளித்து அவர்களை தலைவராக்கி துணைத்தலைவர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளது. 11ம் தேதிதான் இந்த மறைமுக தேர்தல் நடைபெற்றது ஆனால் 10ம் தேதியே கே.எஸ்.அழகிரி கூட்டணி அதிருப்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படி ஒரு வெளிப்படையான அறிக்கை வெளியான பிறகும் திமுக காங்கிரஸிற்கு விட்டுக்கொடுக்காமல் போனதற்கான காரணம் என்ன? எதிர்முனையில் அதிமுக கூட்டணி கூடாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும்.

'இன்றைக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருப்பதற்கே காரணம் பாமக தான் ஆனால் நமக்கு உள்ளாட்சியில் கால் சீட்டும் அரை சீட்டும் ஒதுக்கினார்கள்' என கட்சிக்கூட்டத்தில் அன்புமணி இராமதாஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். 11ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் பாமக வுக்கு தலைவர் பதவியை ஒதுக்கியது அதிமுக. அதேபோல பாஜக வுக்கும் பல இடங்களில் விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்ப்பக்கம் திமுக வலுவான கூட்டணியை கூட்டிவிட்ட நிலையில் நம்மிடம் இருந்து யார் வெளியேறினாலும் சேதம் பெரிதாக இருக்கும் என்பதை உணர்ந்தே இந்த காய் நகர்த்தலை அதிமுக செய்திருக்கும். ஆனால் இதே சேலத்தில் காடையாம்பட்டி ரிசர்வ் ஒன்றிய தலைவர் பதவிக்கு சகலவிதத்தோடும் தயாராக இருந்த விசிக க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக கடைசி நேரத்தில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ஒரு பெண்ணுக்கு ஆதரவளித்து ஒன்றிய தலைவராக்கியுள்ளது திமுக.

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் வலுவான கட்சி திமுக தான். வலுவான கூட்டணி திமுக கூட்டணிதான். இந்த நிலைமை நாளையும் தொடருமா? என்றால் திமுக வின் செயல்பாடுகளை பொறுத்தே அதே கணிக்க முடியும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதினால் திமுக வுக்கு கிடைக்கும் லாபத்தை விட திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் திமுக வுக்கு ஏற்படப்போகும் நஷ்டம் அதிகம் என்பதை திமுக தலைமை உணர வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக மோடி எதிர்ப்பு, சிறுப்பான்மையினர் ஆதரவு என்ற இரு விஷயத்தைதான் தேர்தலை சந்திக்க திமுக மிக முக்கிய யுக்தியாக கையாண்டது. தமிழக அளவிலான பிரச்சனைகளை தாண்டி தேசிய அளவிலான பிரச்சனைகளை கையிலெடுத்தே தமிழகத்தில் சாட்டையை சுழற்றி வருகிறது திமுக. இந்நிலையில் இந்த கூட்டணியிலிருந்து யார் வெளியேறினாலும் அவர்கள் பிரிக்கப்போவது திமுக கையில் உள்ள மோடி எதிர்ப்பு மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளைத்தான். ஒருவேளை காங்கிரஸ் வெளியேறிய பிறகும் திமுக மோடி எதிர்ப்பை பிரதானப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது காங்கிரஸிற்கு செய்யும் இலவச பிரச்சாரமாகத்தான் போய் முடியும்.ரஜினி,கமல் என புதிய ப்ளேயர்கள் களத்தில் இறங்க இருக்கும் இவ்வேளையில் தங்களது கூட்டணியை எவ்வளவு இறுக்கமாக கட்டி வைக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாக திமுக கட்டிவைக்க வேண்டும். சீமானின் நாம் தமிழர், டிடிவி, ரஜினி,கமல் என ஆளுக்கு 15 லட்சம் ஓட்டுக்களை பெற்றாலும் 60 லட்சம் ஓட்டுக்கள் சிதறப்போகிறது. இவர்களோடு சேர்ந்து காங்,விசிக என தற்போது திமுக+ல் உள்ள கட்சியினரும் ஓட்டுக்களை பிரித்தால் அது யாருக்கு சாதகமாக முடியும் என்பதை அறிவாலயம் ஆராய வேண்டும். கடைசியாக காங்கிரஸிற்கு வருவோம், தமிழகத்தில் படுதோல்வி அடையும் பிஜேபி கட்சியை வளர்க்க எவ்வளவு வேலைகளில் ஈடுபடுகிறது. கடந்த 20 வருடங்களில் கட்சியை வளர்க்க காங்கிரஸ் என்ன செய்தது? இப்படியே கூட்டணி வைத்துக்கொண்டே இருந்தால் தமிழகத்தில் இழந்த சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்க எப்போதுதான் முயற்சி செய்வார்கள்? என்ற கேள்வியோடு சுபம் போட்டுக்கொள்கிறேன்.

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review