டெல்லி 'தர்பார்' யாருக்கு? Delhi assembly election analysis in Tamil | #Delhi #ArvindKejriwal #Bjp #Congress #AAP



டெல்லி 'தர்பார்' யாருக்கு?

பிப்ரவரி 8 ம் தேதி டெல்லி 'தர்பார்' யாருக்கு என  நிர்ணயிக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் வெடவெடக்க செய்யும் குளிரிலும் தேர்தல் சூட்டால் தகதகக்கிறது தலைநகரான டெல்லி.




இந்தியாவின் அதிகார மையமாக டெல்லி இருந்தாலும் யுனியன் பிரதேசம் என்பதால் முதல்வர் பதவிக்கான அதிகாரம் சற்றே குறைவுதான். அருகே பாண்டிச்சேரியில் முதல்வருக்கும் கவர்னருக்கும் நடைபெறும் குடும்பிப்பிடி சண்டைகள் அப்படியே டெல்லியிலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. காங்கிரஸ்-பிஜேபி என மாறி மாறி ஆட்சியிலிருந்த தேசிய கட்சிகளுக்கு மாற்றாக 2013 ல் சூறாவளியாக தேர்தலில் நுழைந்தது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. டெல்லியில் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மற்றும் லோக்பால் போராட்டம்  தேசம் முழுவதும் கவனம் பெற்றிருந்த காலகட்டம் அது. அந்த போராட்டங்கள் கொடுத்த மைலேஜ்ஜில் அரசியலில் நுழைந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி ஒரே வருடத்தில் டெல்லியின் முதல்வரானார். யாரை எதிர்த்து அரசியலில் குதித்தாரோ அவர்களின் ஆதரவோடே (காங்கிரஸ்) ஆட்சியமைக்க நேர்ந்த சூழ்நிலையால் 49 நாட்களில் ஆட்சியை கலைத்து அடுத்த தேர்தலுக்கு தயாரானது ஆம் ஆத்மி. மீண்டும் 2015 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வெற்றி பெற்று அசுரபலத்தோடு ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி.


இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த கட்சிகள் ஒதுக்கியதை விட இரட்டிப்பான நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கினார் கெஜ்ரிவால்.ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை அதிகரித்துக்கொண்டே சென்று கடைசி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு மட்டும் 26 சதவீத நிதியை ஒதுக்கியது ஆம் ஆத்மி அரசு. அரசுப்பள்ளியில் மாணவர்களுக்காக நீச்சல் குளம் அமைக்கும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வியத்தகு வகையில் சரிசெய்யப்பட்டிருப்பதும் தனியார் தரத்திலான வகுப்பறைகளை உருவாக்கியதும் ஆம் ஆத்மியின் மெச்சத்தகுந்த பணிகளில் ஒன்று. 2015 லிருந்து இதுவரை கிட்டத்தட்ட 450 க்கும் மேற்பட்ட 'மொஹல்லா' மருத்துவ கிளினிக்குகள் குடியிருப்புகளுக்கு மிக அருகிலேயே திறக்கப்பட்டு நடக்கும் தூரத்தில்  மக்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மின்சாரம், தூய்மையான குடிநீர், பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரெயிலில்  பெண்களுக்கு இலவசப் பயணம் போன்ற எல்லா தரப்பு மக்களையும் திருப்திபடுத்திய திட்டங்கள் ஆம் ஆத்மிக்கு ப்ளஸ் பாய்ண்ட். ஊழலற்ற வளர்ச்சி எனக்கூறி ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் மீதும் கெஜ்ரிவாலின் உறவினர்கள் மீதும் வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும், டெல்லியில் பெரிதாக எந்த வளர்ச்சியையும் கெஜ்ரிவால் உண்டாக்கி விடவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை கூட கெஜ்ரிவால் நிறைவேற்றவில்லை  என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனமும் ஆம் ஆத்மியின் நெகட்டிவ் பக்கங்கள்.


பிஜேபி யை பொறுத்தவரையில் கடைசியாக 1998 ம் ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ் முதல்வராக இருந்ததோடு சரி அதன்பிறகு இந்த 21 வருடத்தில் பிஜேபி ஒரு முறை கூட டெல்லியை கைப்பற்றவில்லை. 2013 ம் ஆண்டு 32 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றாலும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. அதன்பிறகு 2015 சட்டமன்றதேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களை வெற்றிகொண்ட போது எஞ்சிய 3 இடங்களை பிஜேபி கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிகப்படியான சீட்டுகள் பிஜேபிக்கு கிடைக்காவிட்டாலும் தங்களுடைய 34% வாக்குவங்கியை அப்படியே தக்கவைத்துக்கொண்டது. கடைசியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியை மொத்தமாக வெற்றி பெற்ற தெம்போடு தற்போதைய களத்தில் குதித்துள்ளது பிஜேபி. அங்கீகரிக்கப்படாத பெருவாரியான குடியிருப்புகளுக்கு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து அங்கீகாரம் அளித்த விஷயத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்துவருகிறது. இருப்பினும், பிஜேபி யின் வழக்கமான தேர்தல் ஆயுதங்களான மோடி இமேஜ் மற்றும் தேசியவாதம் இரண்டையும் பிரதான யுக்தியாக பயன்படுத்தி வருகிறது.


டெல்லி யுனியன் பிரதேசத்தில்  அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் கட்சிதான். 1998 ம் ஆண்டு தேர்தலில் 52 இடங்களில் வென்று ஷீலா தீக்சித் முதல்வரானார். தொடர்ந்து மூன்று முறை பெரிய அளவில் வித்தியாசம் ஏதுமின்று வெற்றி பெற்று ஷீலா தீட்சித்தே முதல்வராக தொடர்தார். இந்நிலையில் தான் ஆம் ஆத்மி என்ற புதிய புயல் கிளம்பி காங்கிரஸின் ஒட்டுமொத்த வாக்குவங்கியையும் வாரிச்சுருட்டி தனக்குள் போட்டுக்கொண்டது. டெல்லி காங்கிரஸின் முகமாக இருந்து தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த ஷீலா தீட்சித்தே 2015 ம் ஆண்டு நியு டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோற்றுப்போனார். டெல்லியில் காங்கிரஸ் பூஜ்ஜியமானது. இருப்பினும், கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆச்சரியமளிக்கும் வகையில் ஆம் ஆத்மியை பின்னுக்குத்தள்ளி 7 தொகுதிகளில் 5 ல் இரண்டாமிடம் பிடித்து ஆம் ஆத்மி பெற்ற 18% வாக்குகளை விட 4% கூடுதலாக 22% வாக்குகளை பெற்றது. டெல்லி முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ க்கு எதிரான போராட்டம் தேர்தலில் தங்களுக்கு சாதகமானதாக மாறும் என காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு கெஜ்ரிவாலின் அரசியல் நிலைப்பாட்டில் திடீர் மாற்றங்கள் தென்பட தொடங்கியுள்ளன. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்த கெஜ்ரிவால் தேர்தல் தோல்விக்கு பிறகு காஷ்மீர் 370 நீக்கத்துக்கு ஆதரவு, சிஏஏ க்கு சம்பிரதாயமான எதிர்ப்பு என தேசிய பிரச்சனைகளில் தனது வாய்ஸை வெகுவாக குறைத்துள்ளார். பிஜேபி முன்னிறுத்தும் மோடி பிம்பத்தையும் தேசியவாதத்தையும் எதிர்த்து நின்றால் தேர்தல் களம் கடினமாகிவிடும் என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் கொடுத்த படிப்பினையாக எடுத்துக்கொண்டு சிக்கலான எந்த பிரச்சனைகளிலும் தலையை கொடுக்காமல் மிக எளிமையாக டெல்லிக்கு கடந்த 5 வருடத்தில் என்ன செய்தோம் இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டும் முன்னிறுத்தி 'கியாரண்டி கார்டு' வெளியிட்டு  பாசிட்டிவ்வான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார் கெஜ்ரிவால்.


கடைசி ஒரு வருடமாக சட்டமன்ற தேர்தல்களில் சொதப்பி வரும் பிஜேபி இந்த முறையும் தேசியம் தழுவிய சிஏஏ வை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பிஜேபி தலைவர்கள் ஏறும் மேடையெல்லாம் சிஏஏ வைத்தான் பிரதானமாக பேசிவருகின்றனர். கடைசி இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்தித்த பிஜேபி இந்த முறை முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் பிரதமர் மோடியை கெஜ்ரிவாலுக்கு எதிரான முகமாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கெஜ்ரிவால் vs ஹர்ஷவர்த்தன், கெஜ்ரிவால் vs கிரண்பேடி என 2013 மற்றும் 2015 சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திய போது ஆம் ஆத்மி எளிதில் வெற்றிபெற்று பிஜேபியின் யூகங்களை தவிடுபொடியாக்கியது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல்களில் கெஜ்ரிவால் vs மோடி என ஒவ்வொருமுறை வரும்போதும் மக்கள் மோடியையே தேர்வு செய்து ஆம் ஆத்மியை மொத்தமாக வாஷ்-அவுட் ஆக்கியுள்ளனர். இதனால்தான் தற்போது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே அரசியல் செய்துவருகிறது என கணிக்கமுடிகிறது. பிஜேபியின் இந்த நகர்வை ஓரளவு கணித்துவிட்ட கெஜ்ரிவாலும் பிஜேபி கட்டமைக்க முற்படும் கெஜ்ரிவால் vs மோடி மற்றும் தேசியப்பிரச்சனைகள் என்ற திட்டத்தில் தலையைகொடுக்காமல் தனியாக வளர்ச்சியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். முழுமையான அதிகாரமற்ற சட்டமன்றம்தான் என்றாலும் நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல்களில் தங்களுக்கு ஏற்பட்டு வரும் தொடர் சறுக்கலை சமாளிக்க இந்த வெற்றி உந்துகோலாக இருக்கும் என்பதால் பிஜேபி யும் விடாப்பிடியாக பிரச்சாரம் செய்து வருகிறது.


டெல்லி முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏ க்கு எதிரான சிறுபான்மையினர் போராட்டங்களும் அவர்களுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டங்களில் போலீசாரின் தாக்குதலும் அதற்கு வலுவாக வெளிப்படாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் எதிர்க்குரலும் தங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய 12% இஸ்லாமிய மக்களின் வாக்குகளை காங்கிரஸ் பெருவாரியாக நம்பியுள்ளது. கடந்த 2015 தேர்தலில் 10% க்கும் குறைவாக வாக்குகளை பெற்று ஒரு சீட்டை கூட வெல்ல முடியாமல் இருந்த நிலையில் இந்த முறை போராடும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதால் குறிப்பிடத்தக்கவகையில் வெற்றி பெற்றுவிடலாம் என காங்கிரஸ் நம்புகிறது.


21 ம் தேதியோடு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள வாக்களர்களில் அதிகபட்சமாக 32% உள்ள பீகார் பூர்வாஞ்சலிகளின் வாக்குகளை குறிவைத்து மூன்று முக்கிய கட்சியினரும்  வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர் ய்மொத்தமுள்ளள 70 தொகுதிகளில் கிட்டத்தட்ட 27 தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் பரவியுள்ள டெல்லிவாழ் பீகார் பூர்வக்குடிமக்களான பூர்வாஞ்சலிகளின் வாக்குகளை கவர்வதற்காக 12 பூர்வாஞ்சலிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது ஆம் ஆத்மி. பீகார் ஜனதா தள நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்துள்ள பிஜேபி ஜனதா தளத்திற்கு 2 தொகுதிகள் உட்பட மொத்தமாக 10 தொகுதிகளை பூர்வாஞ்சலி வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது. லாலுபிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தோடு கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் மொத்தமாக ஏழு பூர்வாஞ்சலி வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் ஆம் அத்மிக்கு ஆதரவாக வெளியாகியுள்ளதால் ஹாட்ரிக் ஆட்சியை பிடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும், 21 வருடம் கழித்து ஆட்சியை பிடிக்க பிஜேபியும், டெல்லியில் இழந்த சாம்ராஜ்த்தை மீட்டெடுக்க காங்கிரஸும் முயல்வதால் பிப்ரவரி 11 ம் தேதி வாக்குகள் எண்ணி முடியும் வரை பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது.

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review