துப்பாக்கி ஸ்டைலில் வந்திருக்க வேண்டிய படம் ஆனால்......| #MyViews #Darbar #DarbarFDFS #DarbarPongal #Rajinikanth #ARM




'ரஜினி சாருக்கு முதல் ல ஒரு ஸ்டோரி பன்னி வச்சிருந்தேன். பேட்ட படம் பார்த்துட்டு வந்த பிறகு அந்த ஸ்டைல் ல பன்னலாமேன்னு வேற ஒரு ஸ்டோரி பன்னிட்டு ரஜினி சார் ட்ட போனேன். ரஜினி சார் சொன்ன கரெக்சனெல்லாம் உடனே உடனே பன்னிட்டு போயி ஓகே வாங்கிட்டேன்' தர்பார் ப்ரொமோஷனுக்காக  இண்டர்வியூ கொடுக்கும் போது ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய தர்பாரின் முன்கதை இது. உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் என்னும் இயக்குனர் தோற்றுப்போன இடமும் இதுதான்.




மும்பையில் 17 போலீஸ்காரர்களை போலீஸ் ஸ்டேசனிலேயே எரித்துக் கொன்றுவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற அரக்கத்தனமான வில்லனும் ரஃப் அண்ட் டஃப் ஆன ஆதித்ய அருணாச்சலம் எனும் வில்லத்தனமான போலீஸீம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும்? தனிஒருவன் மாதிரியான வெறித்தனமான வில்லன்-போலீஸ் படமாக அமைந்திருக்கும். அப்படி அமைவதற்கான அத்தனை வாய்ப்புகளும் காட்சியமைப்புகளும் இருந்தும் முருகதாஸ் கோட்டைவிட்டிருக்கிறார்.


 இயக்குனர் முருகதாஸ் இந்தப் படத்தை எடுப்பதற்கு பதிலாக ரஜினி வெறியரான முருகதாஸ் இந்தப் படத்தை எடுத்ததுதான் மிகப்பெரிய பிரச்சனை. படத்தில் ரஜினிக்கு 8736 ஸ்லோ மோஷன்கள், 6483  டர்னிங்குகள், 3032  ரஜினி ஸ்மைல்கள் 1857 இண்டிகேட்டர் கையசவுகள் என ரஜினிக்கான பில்டப் ஷாட்கள் தான் படத்தில் அதிகம். படத்தில் ஒரு ஹீரோ இண்ட்ரோடக்ஷன் ஷாட் இருந்தால் பரவாயில்லை  படம் முழுவதுமே ஹீரோ இண்ட்ரோடக்ஷன் ஷாட்டாகவே இருந்தால் என்ன செய்வது? ரஜினி ரசிகர்களே இரண்டு மூன்று குளுக்கோஸ் பாட்டில்களோடு உள்ளே சென்றதால் தான் படம் முழுவதும் கத்தி கூச்சலிட்டு கொண்டாட முடியும்.

அனிருத் கீபோர்டின் நாடி நரம்பில் கூட ரஜினி வெறி ஊறிப்போயிருக்கும் போல மனுசன் சும்மா கிழி கிழின்னு கிழிச்சிருக்காரு. பிண்ணனி இசை படம் முழுவதற்கும் எனர்ஜியை கொடுத்தாலும் கொஞ்சம் குறைவாக வாசித்திருக்கலாம்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஒரு ஹீரோயின் இருந்தே ஆக வேண்டும் என எதுவும் ரூல்ஸ் இருக்கிறதா? கொஞ்சம் சீனியர் நடிகர்களை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல் நண்பர்களாக கதையோட்டத்தோடு வைக்கலாம். ரெண்டு பாட்டும் பாட்டிற்கான பட்ஜெட்டுமாவது குறையும்.

'பேட்ட' என்ற படம் எடுக்கப்பட்டதே பழைய ரஜினியிசத்தை நம்பிதான் அதனால் அதில் பெரிய கதை எதுவும் இருக்காது. ரசிகர்களும் கடைசி சில வருடங்களாக தவறவிட்ட ரஜினியை அந்தப் படத்தில் பக்காவாக காட்டியதால் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் ஏ.ஆர். முருகதாஸ் கஜினி, துப்பாக்கி, கத்தி என இந்திய சினிமாவின் மெகா ஹிட் படங்களை இயக்கியவர். இந்தியாவின் எந்த மூலைக்கு போனாலும் அந்த ஊர் சூப்பர் ஸ்டார்களின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவர் ரஜினியுடன் இணைகிறார் என்றவுடன் தான் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு.

ARM ன் அட்டர் ப்ளாப் படமான 'ஸ்பைடர்' கூட பலரின் ஃபேவ்ரட் லிஸ்டில் இருக்கும். ஏனெனில் அந்தப் படத்தில் அத்தனை ARM டச் கள் இருக்கும். 'ஸ்பைடர்' ல் வடிவமைக்கப்பட்ட வில்லன் கதாப்பாத்திரம் போன்ற வித்தியாசமான கேரக்டர் இந்திய சினிமாவுக்கே புதிது என்று அடித்துக்கூறலாம். கஜினியின் நான்-லீனியர் ஸ்கீரின் ப்ளே, துப்பாக்கியில் ஹீரோ - வில்லன் இடையேயான இண்டலிஜண்ட் ப்ளே, கத்தியில் அந்த ப்ளாஸ் பேக் சீன்ஸ் என ஒவ்வொரு படத்திலும் நினைவில் நிற்கும் வகையில் தரமான காட்சிகளாக கோர்த்திருப்பார். தர்பாரிலும் அப்படிப்பட்ட தரமான காட்சிகள் வைக்க அத்தனை லீட்கள் இருந்தும் அங்கேயெல்லாம் ரஜினியிசம் என்ற பெயரில் ரஜினி ஸ்டைலை மட்டும் சொருகி சொதப்பியிருக்கிறார். உண்மையில் இந்தப் படத்தில் விஜய்யோ சூர்யாவோ நடிப்பதாக நினைத்துக்கொண்டு தனக்குள் இருக்கும் ரஜினி வெறியனை கொஞ்ச நாட்கள் கிடப்பில் போட்டுவிட்டு படத்தில் இருக்கும் ரஜினியிசத்தை எல்லாம் உறுவியெடுத்துவிட்டு  காட்சிகளை அமைத்திருந்தால் படம் பட்டாசாய் அமைந்து மும்பை பேக்ட்ராப்பில் எடுக்கப்பட்ட இன்னொரு 'துப்பாக்கி' யாக இருந்திருக்கும். ரஜினியிசத்துக்காக முருகதாஸ் தன்னை விட்டுக்கொடுத்ததுதான் தர்பாரை 'டல்'பார் ஆக மாற்றிவிட்டது. இதே தவறை கடைசியாக இயக்கிய சர்காரிலும் செய்திருப்பார். விஜய்யின் ஹீரோயிசத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் அது இன்னொரு 'ரமணா' வாக மாறியிருக்கும்.



எங்கேயும் போர் அடிக்காமல் செல்லும் திரைக்கதை, ரஜினி-நிவேதா தாமஸ் காட்சிகள், அனிருத்தின் பிண்ணனி இசை எல்லாவற்றிற்கும் மேலாக வெறித்தனமான ரஜினி ரசிகர்களுக்காக வெறித்தனமான ரஜினியிச மொமண்ட்ஸ் என முருகதாஸ் தன் பாணியில் கோட்டைவிட்டாலும் ரசிகர்களை குறட்டைவிட செய்யாமல் ஒரு முறை ஜாலியாக பார்த்துவிட்டு வரும் வகையிலேயே 'தர்பார்' ஐ படைத்திருக்கிறார்.
ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்....


கடைசியாக, ஒன்னும் பிரச்சனையில்லை, ஹீரோவுக்காக கதை எழுதாமல் தன் ஸ்டைலில் கதை எழுதினால் மீண்டும் அதே பழைய 'கஜினி' முருகதாஸ் அடுத்தப் படத்திலேயே வந்துவிடுவார்.

I am waiting....!

- 'ஜில்' ப்ரோ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்