உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு....- #தசாவதாரம் காதலும் பிரம்மிப்பும் !

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு....

உன்னைப் பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு...

உலகநாயகனே......! உலகநாயகனே....!

தசாவதாரம் !

4 ஆம் வகுப்பு படிக்கும்போது திரையரங்கில் குடும்பத்தோடு பார்த்த படம். அந்த வயதில் இந்தப் படம் புரிந்திருக்க வேண்டுமாயின் நான் ஒரு ஏலியனின் வாரிசாக இருந்திருக்க வேண்டும். புரியவில்லையென்றாலும் அந்த கிழவியா வருவது கமல்தானே அந்த கருப்பானவராக வருவது கமல்தானே என்று ஒரு கியுரியாசிட்டியோடு அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தசாவதாரம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்பட்டது, எத்தனையாவது  முறையாக என்று தெரியவில்லை. இந்த முறை முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன். இந்தமுறை சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பிரம்மிப்பு. இப்படி ஒரு படத்தை 2008 ம் ஆண்டு ஒருவரால் எப்படி எடுத்திருக்க முடியும்?  ஒரு சிறிய கிருமி அது வில்லனிடம் கிடைத்தால் உலகமே பெரும்பிரச்சனையில் சிக்கும் அளவுக்கு நாச வேலைக்கு பயன்பட்டுவிடும். ஹீரோ தன் கையிலிருக்கும் கிருமியை துரத்தும் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதுதான் கதை. இந்த கதை சினிமா உலகத்துக்கு ஒன்றும் புதிதானது அல்ல. ஹாலிவுட் சினிமாக்களில் எப்படியும் ஆயிரத்து லட்சம் ரைட்டர்கள் அடித்து துவைத்திருப்பார்கள். ஆனால் இங்கே  எழுத்துக்களை வடித்திருப்பது கமல்ஹாசன் எனும் சினிமா மொழியின் புதுக்கவிஞன். ஒரு 10 முக்கிய கேரக்டர்களை கதைக்குள் புகுத்தி அந்த 10 கேரக்டர்களுக்கும் அவரே அரிதாரம் பூசிக்கொண்டார். ஹீரோ கேரக்டரும் ஹீரோக்கு இணையான வில்லன் கேரக்டரும் மனதில் பதிந்துவிட்டாலே தமிழ் சினிமாக்கள் அதிரிபுதிரி ஹிட் ஆகிவிடும். தசாவதாரத்தில் கமல் கையிலெடுத்த 10 கேரக்டர்களுமே மனதில் பதிந்து அந்த கேரக்டர்கள் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. 5 நிமிடம் மட்டுமே திரையில் வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கேரக்டரில் கூட அவரது மேனரிசத்தால் கவர்ந்துவிடுகிறார், கடைசி உலகநாயகனே பாடலில் மேடையில் இருக்கும் புஷ் எழுந்து வந்து கூட்டத்தை  பார்த்து கையசைத்துவிட்டு கெத்தாக திரும்புவார் பாருங்கள் அது அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். ஒவ்வொரு கேரக்டருக்கும் இதேபோன்று வித்தியாச வித்தியாசமான மேனரிசங்கள் மூலம் அசத்தியிருப்பார். மோஸ்ட் ஃபேவ்ரட் என்றால் பல்ராம் நாயுடு கேரக்டரையும் கலிஃபுல்லா (அந்த உயர்ந்த மனிதர்) கேரக்டரயும் யோசிக்காமல் சொல்லிவிடுவேன். தசாவதாரம் போன்ற படம்தானே சிறுவயதில் புரியாது ஆனால் பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா போன்ற படங்கள் அப்போதே என்னுடைய ஃபேவரட் லிஸ்டில் இருந்தன, காரணம் காமெடி. கமல்-க்ரேஷி மோகனின் 'மார்கபந்து முதல்சந்து' போன்ற வார்த்தை விளையாட்டுகளுக்கு மிகப்பெரிய ஃபேன் நான்,அன்றும் இன்றும் என்றும். மேலே குறிப்பிட்ட பல்ராம் நாயுடுக்கும் கலிஃபுல்லாக்கும் நடைபெறும் உரையாடல்களில் இந்த வார்த்தை விளையாட்டு ரசிக்க வைக்கும்.

'லாரிக்கார் இடிச்சிட்டாரு சார்'

'தெளிவா சொல்லுங்க இடிச்சது லாரியா காரா'(பல்ராம் வாய்ஸில்)

8 அடி உயர கலிஃபுல்லா வை பார்த்து பல்ராம் கலிfullaaa என்று கூறும் இடமாகட்டும் ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு பின்ladderaa எனக்கேட்கும் இடங்கள் எல்லாம் அட்டகாசம். படம் முழுவதுமே இந்த பல்ராம் கேரக்டர் வரும் இடங்களெல்லாம் சரவெடிதான்.

கேட்குற கேள்விக்கு 'டக்குடக்குன்னு' பதில் சொல்லனும் என்றவுடன் டக்டக் என்று கதவை தட்டும்போது பல்ராம் கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாம் அல்டிமேட். இந்த கேரக்டரை முழுநீளமாக வைத்து சபாஷ் நாயுடு என கமல் தொடங்கிய படம் பாதியிலேயே கைவிடப்பட்டது பெரும் வருத்தம்.

கமல்ஹாசன் மீது வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு அவர் படங்களும் புரியாது, அவர் பேசுவதும் புரியாது என்பதுதான். தசாவதாரத்திற்கும் இந்த விமர்சனங்கள் வந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரையில் இப்படியொரு சிக்கலான கதையை 10 கேரக்டரை வைத்துக்கொண்டு இதற்கு மேல் இவ்வளவு தெளிவாக சாமானியனுக்கும் புரியும் வகையில் கூறிவிட முடியாது. கதையினுடைய மெயின் ப்ளாட்டே அந்த கிருமியும் அதை பரவவிடாமல் தடுக்கும் Nacl பற்றியதுதான் இதை முதல் 20 நிமிடத்திலேயே ஒரு குரங்கை வைத்து தெள்ளத்தெளிவாக்கிவிடுவார் அதன் பின் க்ளைமாக்ஸில் வில்லன் அந்த கிருமியை கடிக்கும்போதும் Nacl ஆல் நிரம்பியுள்ள கடலில் சுனாமி ஏற்பட்டு கிருமியை பரவவிடாமல் தடுக்கும். இந்த எதேச்சயாக இயற்கையாக ஏற்படும் சுனாமி என்ற பேரழிவையும் செயற்கையாக உருவாக்கப்பட்டு பேரழிவை ஏற்படுத்தப்போகும் கிருமியும் சந்தித்துக்கொள்ளும் இடத்தை புரியவைக்கத்தான் முதலிலேயே கேயாஸ் தியரி அல்லது பட்டர்ஃப்ளை தியரி எனப்படும் உலகத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்ற கோட்பாட்டை விளக்கியிருப்பார். கமலின் அந்த 10 கேரக்டர்களுமே இந்த கேயாஸ் தியரி என்னும் கண்ணியால்தான் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இந்த மாதிரியான எதோ ஒன்றை தேடிச்செல்லும் கதைகளும் ஹீரோ வில்லன் துரத்தல் கதைகளும் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வெற்றி பெறாதவை. இந்த மாதிரியான படங்களில் துரத்தலும் மோதலுமே தொடர்ந்து கொண்டிருப்பதால் காட்சியாக எதுவும் பெரிய அளவில் மனதில் நிற்காது. அந்த சமயங்களில் வலுவான கேரக்டர்களை வைத்தும் அந்த கேரக்டர்களின் ட்ராவலை வைத்தும்தான் படத்தை ரசிகனின் மனதில் நிப்பாட்ட முடியும். இந்த வகையில் பேராண்மை படத்தையும் விவேகம் படத்தையும் உதாரணமாக சொல்லலாம். பேராண்மை சூப்பர்ஹிட் ஆனதற்கு விவேகம் சுமாரானதற்கும் அந்த படங்களில் உள்ள கேரக்டர்களின் தன்மையே காரணம். தசாவதாரத்திலும் குறிப்பிட்டு இந்த காட்சி மனதில் நின்றது எனக்கூறுவதை விட அந்த அந்த கேரக்டர்களின் இந்த மேனரிசம் இந்த தன்மை பிடித்திருந்தது என்பதை எளிதில் கூறிவிடலாம். கேரக்டர்கள் மூலம் ட்ராவல் ஆகும் இந்த திரைக்கதைதான் படத்தை இந்த அளவுக்கு இன்று பார்த்தாலும் பிரம்மிப்பூட்டும் வகையில் மாற்றியுள்ளது. இந்த தசாவதாரத்தில் கமல் போட்டிருக்கும் உழைப்பை விட அவருக்கு சினிமாவின் மீதுள்ள காதல்தான் என்னை பெருமளவிற்கு கவர்கிறது. தனக்கு பிடித்த ஒரு ப்ரொஃபஷனை இந்தளவுக்கு ஒருவரால் காதலிக்கமுடியுமா என்ற பிரம்மிப்புதான் தசாவதாரம் மூலம் எடுத்துக்கொள்ளும் டேக் அவே. அந்த காதல்தான் எனக்கான ஊக்கம்.

இந்த இடத்தில் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். டபுள் ஆக்டிங் என்றாலே டபுள் டைம் ஷீட் பன்ன வேண்டியிருக்கும் இன்றைய சூழலில் அன்றே 10 கேரக்டரையும் ஃப்ரேமில் கொண்டுவந்து மிரட்டிவிட்டார்.

தசாவதாரம் - காத(கம)லும் பிரம்மிப்பும் !

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்