நமஸ்தே 'ட்ரம்ப்' - அமெரிக்க அதிபரின் இந்திய ட்ரிப்பும் பின்னாலிருக்கும் அரசியல் பொருளாதார கணக்குகளும்... | #NamasteTrump #Modi #India #America
'கெம்சோ ட்ரம்ப்'
'ஹவ்டி மோடி' என அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த விருந்தோம்பலுக்கு பதில் உபச்சாரமாக 'கெம்சோ ட்ரம்ப்' என்ற பெயரில் இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரவிருக்கும் அதிபர் ட்ரம்புக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்க காத்திருக்கிறார் பிரதமர் மோடி. வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ட்ரம்ப் இருவரும் முதலில் 24 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்.முன்னதாக 50000 பேர் அமரும் வகையில் இருந்த ஸ்டேடியம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் 1,10,000 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் 3 மணி நேரம் பங்கேற்று மீப்பெரும் அரங்கம் நிறைந்த அந்தக்கூட்டத்தின் முன் பிரதமர் மோடியும் ட்ரம்பும் உரையாற்ற இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கும் நேரடியாக செல்கிறார் அமெரிக்க அதிபர்.
சீன அதிபர் ஜீஜின் பிங் மாமல்லபுரம் வந்த போது அவரை வரவேற்க என்னென்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்யப்படதோ அதேபோன்ற முன்னேற்பாடுகள் அகமதாபாத் மாநகராட்சியாலும் செய்யப்பட்டு வருகிறது. சாலைகளை சீரமைத்து சாலையோரங்களில் அழகிய பூச்செடிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுவெளி சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணம் குறித்து அமெரிக்காவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், " மோடி என்னுடைய நல்ல நண்பர். என்னை வரவேற்பதற்காக மட்டும் 70 லட்சம் பேரை தயார்ப்படுத்தியிருக்கிறார். அவர் ஒரு ஜெண்டில்மேன் "எனக்கூறினார். விமானநிலையத்திலிருந்து ட்ரம்புக்கு வரவேற்பு அளிக்க மட்டும் 70 லட்சம் பேரை ஏற்பாடு செய்ய இருக்கிறது அகமதாபாத் மாநகராட்சி. இந்த வரவேற்பு மட்டும் இன்னபிற சீரமைப்பு பணிகளுக்காக மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு ஜரூராக வேலைகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் உள்ள முக்கிய தொழிலதிபர்கள் 1000 பேருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பயணிக்க இருக்கும் அகமதாபாத்தின் ஒரு சாலை ஓரத்திலிருந்த குடிசைகள் நிறைந்த குடியிருப்பு ஒன்றை வெளியே தெரியாமல் இருக்கவேண்டு அரைகிலோ மீட்டருக்கு ஏழு அடி உயர சுவர் எழுப்பி மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளது மாநகராட்சி. ட்ரம்புக்கும் சுவருக்கும் என்ன பந்தமோ தெரியவில்லை அமெரிக்காவானாலும் அகமதாபாத் ஆனாலும் இவர் பெயரில் சுவரினால் ஒரு சர்ச்சை உண்டாகிவிடுகிறது.
கெம்சோ ட்ரம்ப்" என்ற குஜராத்தி மொழி தலைப்புக்கு பதிலாக "நமஸ்தே அதிபர் ட்ரம்ப்" என்னும் பெயர்மாற்றம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் அமெரிக்காவில் நடைபெற்ற "எப்படி இருக்கிறீர்கள் மோடி" என்ற நிகழ்ச்சிக்கு பதில் உபச்சார நிகழ்ச்சியாக மட்டுமே இந்த "எப்படி இருக்கிறீர்கள் ட்ரம்ப்" என்ற நிகழ்ச்சியை பார்த்துவிட முடியாது. மோடி ஏற்பாடு செய்துள்ள இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு பின்னால் உள்ள வேறு சில அரசியல் பொருளாதார அடுக்குகளையும் புரிந்துக்கொண்டால் தான் இந்த நிகழ்ச்சியின் முழுமையை உணர முடியும். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் பல உலக நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எப்போதும் பொருளாதார முட்டல் மோதல்களுடனே இருக்கும் சீனாவுக்கு 2017 லயே சென்றுவிட்டார். பகையாளியாகவும் விசித்திர மனிதராகவும் பார்க்கப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்பட்ட வடகொரிய அதிபரான கிம்ஜங் உன் உடன் வியட்நாமில் விரிவான சந்திப்பு நடத்திவிட்டார்.ஆனால் எப்போதும் அமெரிக்காவின் நட்பிற்குரிய அலைவரிசையில் இருக்கும் இந்தியாவிற்கு மட்டும் ட்ரம்ப் இதுவரை வந்ததில்லை. அதேநேரத்தில் 2014 ல் பிரதமராக பதவியேற்ற மோடியும் பாரபட்சமின்றி பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் அதிகபட்சமாக ஐநா சபை சம்பந்தப்பட்ட கூட்டங்களையும் சேர்த்து அமெரிக்காவுக்குத்தான் அதிக முறை சென்றுள்ளார். 2014,2015 ல் ஒபாமா வின் காலக்கட்டத்தில் இருமுறையும் 2016,2019 ல் ட்ரம்ப்பின் காலக்கட்டத்தில் இருமுறையும் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். கடைசியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான். சொல்லப்போனால் தன்னுடைய பதவிக்காலத்தில் இரண்டுமுறை இந்தியாவிற்கு வந்த ஒரே அமெரிக்க அதிபர் ஒபாமா மட்டுமே. வளர்ந்து வரும் இந்தியா வை சீனாவும் வளர்ந்து வரும் சீனா வை அமெரிக்காவும் ஒருவித நெற்றிச்சுருக்கத்தோடு பார்த்து வருகின்றன. அதன் காரணமாகத்தான் இந்தியாவுக்கு புகைச்சலூட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் சீனாவின் வளர்ச்சிக்கும் இன்னபிற விஷயங்களுக்கும் புகைச்சலூட்டும் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்காவும் இருந்து வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஐநா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவிடாமல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சீன அதிபர் சீஜின் பிங் ன் இந்திய வருகை இந்தியாவுக்கான பாசிட்டாவ்வாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ட்ரம்பின் இந்தியப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலும் ட்ரம்பின் இந்த விசிட்டுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45 லட்சம் இந்தியர்களும் அதிலும் குறிப்பாக 15 லட்சம் குஜராத்திகளும் இருக்கிறார்கள். ஈரானுடனான போர் பதற்றம், பதவி பறிப்பு தீர்மானம் கொடுத்த குடைச்சல் இவற்றையெல்லாம் சமாளித்துவிட்டு இந்தியா வரவிருக்கும் ட்ரம்ப் இங்கேயே தனது அடுத்தக்கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கான தூபங்களை வீசலாம். ஹவ்டி மோடி நிகழ்ச்சியிலேயே ட்ரம்ப்பை அடுத்தும் அதிபராக்கிவிடுங்கள் எனப்பேசிய மோடி தனது சொந்த மண்ணிலும் ட்ரம்ப் க்கு அமெரிக்க இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அரசியல்ரீதியான காரணங்களை தாண்டி இருநாட்டுக்கிடையேயான ஏற்றுமதி இறக்குமதி சார்ந்து எழும் பிரச்சனைகள் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் போன்றவை 25 ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்திலேயே விவாதிக்கப்படும். 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் தன்னை மத்தியஸ்தம் செய்ய சொன்னதாக மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ட்ரம்ப், அதற்கு சரியான மறுப்புகளை இந்தியா தெரிவித்துவிட்டது. இந்த சுற்றுப்பயணத்தில் ட்ரம்ப் பாகிஸ்தான் பிரச்சனை குறித்து பேசுவது சந்தேகம்தான். தேர்தல் நெருங்கும் வேளையில் இருக்கிற பிரச்சனைகளுக்கு மத்தியில் இங்கே தானாக வந்து தலையை கொடுக்கமாட்டார் எனவும் பொதுவாக வழக்கம்போல தீவிரவாதம் குறித்து மட்டுமே பேசுவார் எனவும் நம்பப்படுகிறது. "கெம்சோ ட்ரம்ப்" நிகழ்ச்சி இந்திய-அமெரிக்க உறவில் மேலுமொரு 'அச்சே தின்' ஆக இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
-உ.ஸ்ரீ
Comments
Post a Comment