விஜய்-முருகதாஸ் காம்போ ஒரு சக்ஸஸ்ஃபுல் ப்ராண்ட்தான் இருந்தாலும் முருகதாஸ் அந்த பழைய 'ரமணா' வா வந்தா தளபதி65 பட்டாசுதான்




வெற்றிமாறன், மகிழ் திருமேனி, அருண்ராஜா காமராஜ் என தளபதி65 படத்தின் இயக்குனர் குறித்து அடுத்தடுத்த தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதியாக சுதா கொங்காராதான் தளபதி65 க்கான இயக்குனர் என ஏறக்குறைய உறுதியான செய்திகள் வெளியாக விஜய் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களெல்லாம் தயார் செய்ய தொடங்கிவிட்டார்கள். ரசிகர்களின் இந்த உற்சாகத்திற்கு காரணம், தளபதி65 இயக்குனர் லிஸ்டில் இருந்த எல்லாருமே விஜய்யுடன் இதுவரை இணைந்திராத புது இயக்குனர்கள் அதுவும் இந்த இயக்குனர்கள் தாங்கள் கடைசியாக இயக்கிய படங்கள் எல்லாம் ஆல் செண்டர் ஹிட் அடித்து ஆல் இந்தியா அளவில் ஃபேமஸ் ஆனவர்கள். புது காம்பினேஷோடு புது ஸ்டைலில் விஜய்யை பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது வெளியாகியுள்ள செய்தியால் கொஞ்சம் அப்செட்தான். தளபதி65 சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே விஜய் நடிக்கப்போவதாக தற்போது வெளியாகியுள்ள் செய்தி விஜய் ரசிகர்களிடையேயே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. நான்காவது முறையாக இணையப்போகும் இந்த காம்பினேஷனின் ட்ராக் ரெக்கார்டு ஒரு அலசல்.


துப்பாக்கி: (2012)

வில்லு, குருவி, வேட்டைக்காரன் என தொடர் ஃப்ளாப்களால் கொடுத்த விஜய் தனது 50 வது படமான சுறா மூலம் தனது கேரியரின் உச்சகட்ட வீழ்ச்சிக்கு சென்றார். கட்டாயம் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை. சோர்ந்து போயிருந்த விஜய்க்கு காவலன், வேலாயுதம், நண்பன் என அடுத்தடுத்து பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கு வெளியான மூன்று படங்களும் விஜய்க்கு நல்ல பெயரை கொடுத்து மக்களிடமும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் விஜய் எதிர்பார்த்த அந்த மாஸ் கமர்ஷியல் பளாக்பஸ்டர் ஹிட் அமையவில்லை. இந்த நேரத்தில் தான் முருகதாஸ் துப்பாக்கியோடு வருகிறார். விஜய்யை அதுவரை பார்த்திராத ஒரு ஸ்டைலிஸான க்ளாஸ் லுக்கில் போஸ்டர்கள் வெளியாகின. கூடவே சேர்ந்து பிரச்சனைகளும் முளைக்கத் தொடங்கின போஸ்டர்களில் விஜய் சுருட்டு குடிப்பது போல இருந்த ஸ்டில்லுக்கு சில அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்புகள் தெரிவித்தன. 'துப்பாக்கி' என்ற டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடி 'கள்ளத்துப்பாக்கி' என்ற படக்குழு கோர்ட் படியேறியது. இதையெல்லாம் கடந்து படம் வெளியான பிறகு, இஸ்லாமிய அமைப்புகள் படத்தில் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அவதூறாக காட்டியிருப்பதாக கூறி போராட்டத்தில் இறங்கினர். விஷயம் சீரியஸ் ஆவதை உணர்ந்த படக்குழு படத்தில் சின்ன சின்ன கத்தரிப்புகளை செய்தனர். இந்த பிரச்சனைகளோடு சேர்த்து விஜய்யின் புது லுக், ஆர்மி மேனாக விஜய், விஜய்யின் கூகுள் கூகுள் பாடல் என் எல்லாம் சேர்ந்து படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த முறை விஜய்க்கு அவர் எதிர்பார்த்த மாஸ் ஹிட் துப்பாக்கி மூலம் கிடைத்துவிடும் என நம்பிக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். துப்பாக்கி அதற்கும் மேலே செய்துகாட்டியது. 2012 தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி ஹிட்,சூப்பர் ஹிட் என்பதையெல்லாம் தாண்டி ப்ளாக் பஸ்டர் ஆனது.

ப்ளாக் பஸ்டர் வசூல் சாதனை என்பதை தாண்டி படமும் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியது. வெறும் மாஸ் மசாலா படங்களில் நடித்து வந்த விஜய் இப்படியொரு க்ளாஸ் + மாஸ் அவதாரமெடுத்தது ஆச்சர்யம்தான். விஜய்யின் ஹேர்ஸ்டைல், காஸ்டியூம், பாடி லாங்குவேஜ் என எல்லாவற்றிலும் அப்படியொரு ஃப்ரெஷ்னஸ் இருக்கும். அதிலும் அந்த இன்வெஸ்ட்டிகேட்டிவ் சீன்ஸ், இண்டர்வெல் ப்ளாக், ஐ யம் வெய்ட்டிங், க்ளைமாக்ஸ் ஆகியவற்றோடு சந்தோஷ் சிவனின் கேமிராவும் ஹாரிஸின் பிண்ணனி இசையும் க்ளாஸ் தாண்டவம் ஆடியிருக்கும். கில்லி க்கு பிறகு விஜய்யின் கேரியரில் திரும்ப திரும்ப கூட்டம் கூட்டமாக மக்களை தியேட்டருக்கு இழுத்த படம் துப்பாக்கிதான். விஜய் கடந்த சில ஆண்டுகளாக இழந்திருந்த மார்க்கெட்டை ஒரே படத்தில் மீட்டுக்கொடுத்ததும் இல்லாமல் ரெக்கார்டு ப்ரேக்கிங் வசூலால் விஜய்யை கோலிவுட்டின் உச்சாணிக்கொம்பில் தூக்கி வைத்தவர் முருகதாஸ். இன்றைக்கு விஜய்தான் நம்பர் 1 என்ற செய்திகள் வெளியாவதற்கு அச்சாரம் போட்டவர் முருகதாஸ்தான்.


கத்தி : 2014

மெகா ப்ளாக்பஸ்டர் துப்பாக்கிக்கு பிறகு முருகதாஸ் விஜய் ரசிகர்களின் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக மாறிப்போனார். இந்த காம்போ மீண்டும் எப்போது மீண்டும் இணையும் என எதிர்பார்த்திருக்க ஹிந்திக்கு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் விஜய்யோடு கத்தியாக இணைந்தார் முருகதாஸ். இலங்கையில் தொழில் செய்யும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் சில தமிழ் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. படம் வெளியாகும் முந்தைய நாள் வரை பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு லைகா என்ற பெயரில்லாமல் படத்தை வெளியிட்டது லைகா. இது ஒரு புறமென்றால் மறுபுறம் 'அறம்' இயக்குனர் கோபி நயினார் கத்தி படம் என்னுடைய கதை என்று கோர்ட் படியேற கதைத்திருட்டு பஞ்சாயத்து ஒரு பக்கம் சூடாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மீறி தீபாவளிக்கு வெளியான கத்தியில் துப்பாக்கியிலிருந்த விஜய்யிலிருந்து டோட்டல் சேஞ்ச் ஓவர். விவசாயிகளுக்காக சத்தமாக  கத்தி பேசியிருந்தனர் முருகதாஸும் விஜய்யும். இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் படங்களில் விவசாயிகள் பற்றி ஒரு காட்சியிலாவது பேசிவிடும் ட்ரெண்ட் உருவாக தொடங்கியது.

கதிரேசன்-ஜீவானந்தம் இரண்டு கேரக்டர்களுக்கும் பெரிய அளவில் கெட்ட அப் சேஞ்ச் இல்லாவிட்டாலும் நடிப்பில் அசத்தியிருப்பார் விஜய். அரைமணி நேரத்திற்கும் குறைவாக வரும் அப்பாவியான அதே நேரத்தில் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஜீவானந்தம் என்ற கேரக்டரில் பல வருடங்களுக்கு பிறகு 'நடிகர்' விஜய் மிளிர்ந்திருப்பந்தார். அந்த கேரக்டர் உருவாக்கமும் அதன் பெயரும் அந்த கேரக்டர் பேசும் வசனங்களும் முருகதாஸின் கம்யூனிச குறியீடுகள். கொஞ்சம் பிசகியிருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாமல் போயிருக்கும் இடைவேளைக்கு பிறகான காயின் ஃபைட்டையும் பைப் லைன் போராட்டத்தையும், விவசாயிகளின் வலியை விரிவாக எடுத்துரைத்தன் மூலம் ஈடு செய்திருப்பார். இன்றைக்கு தமிழ் சினிமா வசனகர்த்தாக்கள் வம்பிழுத்துக்கொண்டிருக்கும் விஜய் மல்லையாவை அன்றே அந்த ப்ரஸ் மீட் காட்சியில் சாட்டையடி அடித்திருப்பார் முருகதாஸ். இருந்தாலும் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் 2ஜி யை உள்ளிழுத்து வசனம் வைத்தது பிற்காலத்தில் முருகதாஸின் தவறான முன்முடிவாக மாறிவிட்டது.

படத்தில் பேசப்பட்ட கம்யூனிசமும்-கார்ப்பரேட்டிசமும் விஜய்யின் மாஸால் பட்டிதொட்டியெங்கும் கத்தி பேசியது. கத்திக்கு பிறகு விஜய்யின் எல்லா படங்களும் ப்ரஸ் மீட் சீன்களாலும் சோசியல் மெசேஜ்களாலும் நிறைய தொடங்கின. துப்பாக்கிக்கு இருந்த அந்த ரிப்பீட் வேல்யூ கத்திக்கு இல்லாவிட்டாலும் வியாபார ரீதியாக விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு கத்தி மீண்டும் ஒரு தீபாவளி விருந்தாக அமைந்தது. ரசிகர்களுக்கும் கூட !


சர்கார் (2018) :

விஜய்-முருகதாஸ்-தீபாவளி என்பது துப்பாக்கி கத்திக்கு பிறகு ஒரு ப்ராண்டாக மாறியிருந்தது. மகேஷ்பாபுவுக்கு 'ஸ்பைடர்' என்ற சுமார் படத்தை கொடுத்துவிட்டு கத்திக்கு பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யுடன் இணைந்தார் முருகதாஸ். அரசியல் படம் என்று முதலிலேயே பேசப்பட்டாலும் 'சர்கார்' என்ற டைட்டில் வெளியான பிறகுதான் அது உறுதியானது. மெர்சலுக்கு பிஜேபி கொடுத்த பிரச்சனையால் ஆல் இந்தியா லெவலில் அரசியல் பெரிய தலைகளின் கவனத்தை ஈர்த்த விஜய் இந்த முறையாக நேரடியாக ஒரு அரசியல் படம் அதுவும் ரசிகர்களின் ஃபேவ்ரட் இயக்குனரான முருகதாஸ் இயக்கத்தில் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. தீபாவளி அன்று வெளியான படமும் மாநில அரசை வாரு வாரென வாரியிருந்தது ஆனால் எந்தவித சுவாரஸ்யமுமின்றி வெற்று அரசியல் பிரச்சாரமாக. பேசியிருந்த அரசியலும் உருப்படியா என்றால் அதிலும் பல குழப்பம். இலவசம் வேண்டாம், டீவீட்டிட்டால் ஓட்டு விழும், முதல்வர் பதவி வேண்டாம் என அத்தனையும் அரைகுறை வாட்ஸ் அப் குதறல்கள். முதல் பாதியாவது கொஞ்சம் மாஸாக இருக்க இரண்டாம் பாதி மொத்தமும் விஜய் தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக பேசித்தீர்த்த அரசியல் பிரகடனங்கள். இப்படியொரு படத்தை விஜய்யே டைரக்ட் செய்திருக்கலாம் அதில் எதற்கு முருகதாஸ் என்று புரிபடாமல் தலை சுற்ற வைத்தது சர்கார். சுமாராக போயிருக்க வேண்டிய படத்திற்கு கதைத்திருட்டு பஞ்சாயத்தும் அதிமுகவும் சேர்ந்து கொஞ்சம் கம்பு சுற்றி ப்ரொமோஷன் செய்து தேற்றிவிட்டது. தளபதி-65 படத்தை முருகதாஸ் இயக்குகிறார் என்றவுடன் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைய முழுமுதற்காரணமாக அமைந்தது சர்கார்.


சமீபத்தில் வெளியாகி சொதப்பிய தர்பாரும் விஜய் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு மேலும் ஒரு காரணம்.

விஜய்க்கு ஒரு காலத்தில் கட்டாய வெற்றி தேவைப்பட்ட நேரத்தில் துப்பாக்கி எடுத்து உதவியவர் முருகதாஸ். இப்போது முருகதாஸ் அப்படியொரு சூழலில் இருக்கும்போது விஜய் கைகொடுக்கிறார். தளபதி65 மூலம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி க்கு பிறகு விஜய்யை அதிக முறை டைரக்ட் செய்தவர் என்ற பெருமையை முருகதாஸ் பெறுகிறார். உண்மையில் விஜய் ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு முருகதாஸ் ஒன்றும் அட்டர்-ஃப்ளாப் கொடுக்கும் இயக்குனர் கிடையாது. 'தீனா' 'கஜினி' 'ரமணா' 'துப்பாக்கி' 'கத்தி' என தனது திரைக்கதை மேஜிக்கால் ஜாலம் செய்து காலத்தால் நிலைத்து நிற்கும் படங்களை கொடுத்தவர். மேலே குறிப்பிட்ட அவரின் இந்த சூப்பர் டூப்பர்களிலெல்லாம் அந்தந்த ஹீரோவுக்கான மாஸ் மசாலக்கள் இருந்தாலும் திரைக்கதையை அடுத்தக்கட்டதுக்கு எடுத்து சென்று ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யும் முருகதாஸ்த்தனமான சீக்வென்ஸ்கள்தான் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதில் நிற்கும். 'ஸ்பைடர்' 'தர்பார்' 'சர்கார்' இந்த படங்களிலெல்லாம் முருகதாஸ் தன்னுடைய சுயத்தை முழுவதுமாக இழந்திருப்பார். 'சர்கார்' விஜய் கதை வசனம் எழுதிக்கொடுத்து முருகதாஸ் விஜய்யின் அரசியல் இமேஜ்க்காக எடுத்துக்கொடுத்த படம் போன்றே இருக்கும். அதேபோல் தான் தர்பாரும் படம் முழுவதும் சீனுக்கு சீன் தலைவா தலைவா என காது ஜவ்வு கிழிய நிரப்பப்பட்டிருந்த மாஸ் காட்சிகள் கடுப்பை கிளப்பின. 'சர்கார்' ல் நிரம்பியிருந்த விஜய்யிஸ அரசியலையும் 'தர்பார்' ல் நிரம்பியிருந்த ரஜினியிச ஓவர் டோஸ் மாஸையும் உருவியெடுத்துவிட்டு முருகதாஸின் பேனா அந்த இடங்களிலெல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் இரண்டு படங்களும் இன்னொரு 'ரமணா' 'துப்பாக்கி' யாக மாறியிருக்கும். முருகதாஸ் ஒரு கமர்ஷியல் இயக்குனர்தான். தன்னுடைய படங்களில்
ஒரு கமர்ஷியல் படத்துக்கென்று வகுக்கப்பட்டிருக்கிற வட்டத்தை தாண்டி எங்கேயும் வெளியே சென்றிருக்கமாட்டார் முருகதாஸ். ஆனால் எந்த இடத்திலும் ஒரு சாதாரண கமர்ஷியல் படம் ஏற்படுத்தும் சலிப்பை அவரது படங்கள் உண்டாக்கிவிடாது. அதுதான் முருகதாஸிஸம்

கமர்ஷியல் இலக்கணங்களையெல்லாம் உடைத்து புதிய ஸ்டைலில் படம் எடுப்பது கெத்து என்றால் அதே கமர்ஷியல் வட்டத்துக்குள் நின்று கொண்டு எந்த இலக்கணத்தையும் உடைக்காமல் முருகதாஸ் நிகழ்த்தும் மேஜிக்குகள் மரண கெத்து !

ரமணா படத்தின் கதையை முருகதாஸ் விஜயகாந்த் தரப்பிடம் கூறியபோது அவர்களுக்கு க்ளைமாக்ஸில் விஜயகாந்த் இறப்பது போன்ற காட்சி இருப்பது மட்டும் பிடிக்கவில்லையாம் அதனால் அதை மற்றும் மாற்ற முடியுமா!? என முருகதாஸிடம் கேட்டதற்கு இந்த கதைக்கு இதுதான் செட் ஆகும் என கூறி இறுதிவரை உறுதியாக நின்று படமாக்கினார் முருகதாஸ். ரமணா இன்றும் பேசப்படுகிறான் !

தன்னுடைய திரைக்கதையின் சுயத்தை எந்த காட்சியிலும் ஹீரோ இமேஜ்க்காக இழக்காத அந்த முருகதாஸ்தான் மீண்டு தேவைப்படுகிறார்.

வரனும்....முருகதாஸ் பழைய 'ரமணா' வா திரும்ப வரனும்.

துப்பாக்கி ஃபேன்ஸ் வெயிட்டிங் !

(எதுக்கும் இந்த 'ர' வரிசையில முடியிற டைட்டில் பற்றி மட்டும் கொஞ்ச யோசிங்க டைரக்டர் சார்....

அகிரா !

ஸ்பைடர் !

சர்கார் !

தர்பார் ! )



-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்