அரசியலில் என்னவாக போகிறார் ரஜினி ? #Rajinikanth #Politics #Tamilnadu #RMM

அரசியலில் என்னவாக போகிறார் ரஜினி?

வேறெதுவும் தேவையில்லை.....நீங்கள் முதல்வர் ஆனால் மட்டும் போதும்...!
திருநெல்வேலியில் ரஜினி ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் இது.



ராகவேந்திரா மண்டபத்தின் நாலு எட்ஜூக்குள் நடந்த மீட்டிங் குறித்து வெளியாகியுள்ள யூகங்கள் பற்றி என்னுடைய நாலேஜுக்கு எட்டியதை இங்கே எழுதுகிறேன்.

ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என ரஜினி குறிப்பிட்டிருந்தார் அந்த ஒற்றை ஸ்டேட்மெண்டில் இருந்துதான் அத்தனை யூகங்களும் கிளம்பியுள்ளன. முதலில் இந்த ஏமாற்றம் நிதி சார்ந்ததாக இருக்கும் என சில பத்திரிகையாளர்கள் பேசியிருந்தார்கள்.  என்னை பொறுத்தவரையில் அது நிச்சயம் நிதி சார்ந்த பிரச்சனையாக இருக்காது, அப்படியிருந்தாலும் அது உள்ளே மட்டுமே பேச வேண்டிய விஷயம் அது ரஜினிக்கும் தெரியும். அதனால் அதைப்பற்றி நிச்சயம் குறிப்பிட்டிருக்கமாட்டார்.

பிஜேபியுடனான உறவு, மற்ற கட்சிகளுடன் கூட்டணி என ரஜினியின் ஏமாற்றத்தை சுற்றி பல விவாதங்கள் நீண்டு கொண்டிருக்கும் போதுதான் பாண்டே ஒரு வீடியோவை வெளியிடுகிறார்.அதில்,

*தேவையற்ற கட்சி பதவிகளை நீக்க வேண்டும்.

*48 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கும், மாற்றுக்கட்சியினருக்கும், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் களுக்கும் தான் தேர்தலில் டிக்கெட்.

இறுதியாக மிக முக்கியமாக,

*முதல்வர் பதவியில் எனக்கு விருப்பமில்லை, என்னை தவிர்த்து நாம் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுத்து கட்சியிலிருந்து அவரது செயல்பாடுகளை மேற்பார்வை செய்துகொள்வோம்.

இந்த மூன்றில் கடைசியாக குறிப்பிட்டுள்ள முதல்வர் பதவி வேண்டாம் என்பது மட்டும்தான் தற்போது ப்ரேக்கிங் நியுஸாகியுள்ளது. இந்த மூன்றாவது பாயிண்டை ரஜினியின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் தமிழருவி மணியனும் உறுதி செய்துள்ளார்.

இப்போது என் கருத்துக்கு வருகிறேன், மேலே ரஜினி பேசியதாக வெளியாகியிருக்கும் விஷயங்கள் எல்லாம் நிச்சயம் ஒரு புரட்சிகரமான யோசனைதான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 'சிஸ்டத்தையே மாற்றப்போகிறேன்' என பேசியதற்கு ஓரளவு நியாயம் செய்யும் வகையில் தான் முடிவெடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதில் முதல் இரண்டு பாயிண்டுகளில் அரசியல் ரீதியாக டீகோட் செய்வதற்கு எதுவுமில்லை. ஆனால் மூன்றாவது விஷயமாக கூறியுள்ள 'முதல்வர்' பதவி வேண்டாம் எனக்கூறியுள்ளது இன்றைய தேதிக்கு தமிழக அரசியல் சூழலுக்கு ஒத்துவருமா? அது ரஜினிக்கும் அவர் ஆரம்பிக்கப் போகும் கட்சிக்கும் பலனைக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. தமிழக அரசியல் மட்டுமில்லை இந்திய அரசியல் சூழலே ஒரு தனிப்பட்ட நபரின் அதீத பிம்பம் சார்ந்ததாகத்தான் நான் பார்த்த வரை இருந்துள்ளது. கடைசியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட ஒரு பக்கம் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடி நெஞ்சை நிமிர்த்தி நிற்க மறுபுறம் எதிர்க்கட்சிகள் பிரதம வேட்பாளர் முகத்தை வெளிப்படுத்தாமல் குறுகியே நின்றன.  ராகுல் தான் பிரதமர் என பிரச்சாரம் செய்யப்பட்ட தமிழகத்தின் முடிவுகளையும் ஏனைய இந்தியாவின் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்துவிடும். ஜெ இறப்புக்கு பிறகு ஓபிஎஸ்-ஈபிஎஸ் மாறி மாறி முதல்வர் ஆன போதும் சசிகலா முதல்வர் ஆக துடித்த போதும் 'நாங்கள் ஜெயலலிதாவுக்குத்தானே ஓட்டு போட்டோம் இவர்களுக்கு இல்லையே?' என்ற கேள்வி மக்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் உண்மையில் மக்கள் ஜெ வுக்கா ஓட்டு போட்டார்கள்? இல்லை, தங்கள் தொகுதியில் நிற்கும் எம்.எல்.ஏ வேட்பாளரை ஜெயிக்க வைத்துள்ளனர் அவர்கள் கூடி ஜெ வை தங்கள் முதல்வராக ஏற்றுக்கொண்டனர். ஜெ இல்லாத சூழலில் அடுத்ததாக பன்னீரை அந்த எம்.எல்.ஏ க்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் ஏன் கோபப்பட வேண்டும்? இந்த இடத்தில் தான் தமிழக மக்களின் உளவியலில் ஊறியுள்ள், நான் முன்பு குறிப்பிட்ட அந்த அதீத பிம்பமயமான அரசியலை உணர முடியும். இங்கே எம்.எல்.ஏக்கள் எல்லாம் ஒரு சின்ன சிட்டி ரோபோக்கள் போன்றவர்கள் அந்த சின்ன ரோபோக்களால் ஒன்றும் செய்ய முடியாது அந்த ரோபோக்களை ஒன்றிணைத்து க்ளைமாக்ஸில் உருவாகி நிற்கும் 'மான்ஸ்டர்' தனமான முகம்தான்  கருணாநிதி,ஜெயலலிதா,ஸ்டாலின்,மோடி,ராகுல் இப்போது லேட்டஸ்டாக முதல்வர் பழனிச்சாமி போன்றவர்கள். ரஜினியின் 2017 அரசியல் அறிவிப்பும் அதுபோன்ற ஒரு 'மான்ஸ்டர்' உருவாக்கத்தைதான் ரசிகர்கள் மனதில் எதிர்பார்க்க வைத்தது. 234 தொகுதிகளிலும் தனித்து போடியிடுவோம், கோட்டையை பிடிப்போம் என்றுதானே கூறினேன் முதல்வர் ஆவேன் என சொல்லவேயில்லை என ரஜினி பேசினாலும் பேசலாம். ஆனால் இந்த 'மான்ஸ்டர்' சூழ் அரசியல் உலகிலும் பிம்பமயப்பட்ட மக்கள் திரளிலும் அந்த பேச்சு எடுபடாது. எடுபட்டிருக்க வேண்டுமாயின் முதலிலேயே அதற்கேற்ற பீடிகையோடு அரசியல் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் மெதுமெதுவாக 'கிங் மேக்கர்' போன்ற பிம்பத்தை கட்டமைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இப்போது இப்படியொரு முடிவை ரஜினி ஆலோசித்திருக்கிறார் என்ற பேச்சு வெளியில் பரவுவதே ரஜினிக்கான நெகட்டிவ் தான். ரஜினி எதோ ஒரு கொள்கை பேசி அந்த கொள்கையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்களை தன் கைக்குள் வைத்திருந்தால் ரஜினியின் இந்த முடிவிற்கு அவர் எதிர்பார்த்த பாசிட்டிவ் ஆன எதிர்வினை கிடைத்திருக்கலாம். ஆனால் ரஜினிகாந்த் திரைபிம்பத்தால் கட்டமைக்கப்பட்டவர் அவரின் திரை ஆளுமையை மட்டும் பார்த்து அவருக்கு ரசிகர்கர்களானவரிடம் ரஜினியின் இந்த முடிவு ஏமாற்றத்தை மட்டுமே சந்திக்கும். 'குசேலன்' படத்தில் ரஜினியின் கேரக்டர் முதன்மை கதாபாத்திரமாக இல்லாமல் போனதற்கே கொந்தளித்தவர்கள் ரசிகர்கள் அப்படிப்பட்ட ரசிகர்கள், ரஜினியின் இந்த பதவித்துறவு முடிவை ஏற்பார்கள் என ரஜினி நினைத்தது அபத்தம். இங்கே ஸ்டாலின் vs எடப்பாடி, ஸ்டாலின் vs மோடி என ஒரு களம் செட் ஆகி 21 தேர்தலுக்கு இரண்டு கட்சிகளும் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டன. இந்நிலையில் ரஜினி மீது இப்போது ரசிகர்கள் வைத்திருக்கும் அதீத எதிர்பார்ப்புக்கு அவர் இவ்வளவு நாள் கொடுத்த பில்டப் தான் காரணம் என்பதை உணர்ந்து தன்னை முழுமையாக முன்னிலைப்படுத்தி இந்த தேர்தலை சந்தித்தால்தான் அவர் நினைக்கும் வெற்றியை பெற முடியும். வேண்டுமென்றால் 2026 ல் வேறொருவரை அடையாளம் காட்டிக்கொள்ளலாம். இதுதான் ரஜினி அரசியலில் உயிர்ப்போடு இருப்பதற்கான ஒரே வழி. இல்லை வேறொருவரைத்தான் முன்னிலைப்படுத்துவேன் என்றால் 25 வருடமாக அவரை சுற்றிச்சுழன்ற அரசியல் அத்தியாயங்களுக்கு அவரே அவர் கைப்பட முடிவுரை எழுதும் படலமாகத்தான் ரஜினியின் அரசியல் வருகை இருக்கும். மீண்டும் சொல்கிறேன் ரஜினியின் இந்த முடிவு புதிய சீர்த்திருத்தமாக இருந்திருக்கும், ஒழுங்காக முறைப்படி முதலிலிருந்தே தன்னை சுற்றியிருக்கும் அரசியல் அலைவரிசைகளை இந்த முடிவுக்கேற்றவாறு ட்யுன் செய்திருந்தால். இன்றைய தேதிக்கு இந்த கண்டிஷ்னகள் எல்லாம் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் முதல்வன்-2 எடுப்பதற்காக கொடுத்து வரும் ஐடியாக்களாகத்தான் முடியும். எல்லாவற்றையும் மீறி ரஜினி தனது முடிவில் உறுதியாக இருப்பாராயின் இன்றே எல்லா பட வேலைகளையும் தூக்கியெறிந்துவிட்டு அவர் கைகாட்ட போகும் ஆளோடு அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும். அப்படியில்லாமல் தீபாவளிக்கு ஒரு படம் பொங்கலுக்கு ஒரு படம் என ரிலீஸ் செய்து கொண்டே இருந்தால் மக்கள் மத்தியில் ஒரு தேர்தல் போட்டியாளாராக ரஜினி கருதப்படமாட்டார்.

கடைசியாக ரஜினியின் இந்த முடிவு,

தவறான ப்ரொமோஷனுடன் தவறான தேதியில் ரீலீசாகி சொதப்பும் சிறந்த படம்.

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்.....!

வெறும் ஏணியாய் நானிருந்து ஏமாற்றமாட்டேன்...!

-உ.ஸ்ரீ


Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review