என்ன செய்தார் மோடி !? #1YrofModi2.0
என்ன செய்தார் மோடி!?
நான்கு ஆண்டு ஆட்சிக்கு பிறகு 'இந்தியா ஒளிர்கிறது' என பிரச்சாரம் செய்த வாஜ்பாய்க்கு மீண்டும் கிடைக்காத வாய்ப்பு, 'சௌகிதார்' - நாட்டை பாதுகாக்க வந்த காவலனே நான் தான் என கூறிய போது மோடிக்கு கிடைத்தது. வாஜ்பாய்-அத்வானி காலத்தில் அமைந்த மூன்று அரசும் கூட்டணி குருமாக்கள். குறைந்தபட்ச செயல்திட்டத்தால் கையை கட்டிக்கொண்டு அமைதியாக ஆட்சியில் இருக்க வேண்டிய நிலை. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சியை பிடித்து நின்றுவிட்டது என்பது மட்டுமே பெருமை. மோடி-அமித்ஷா காலம் வித்தியாசமானது. வியாபாரிகளின் பூமியான குஜராத்தில் இருந்து புறப்பட்ட மோடி ப்ராண்ட் இந்தியா முழுவதும் கல்லா கட்டியது. (அதே குஜராத் மாடலை இன்றைக்கு கொரோனா நேரத்தில், நீதிமன்றங்கள் சாட்டையடி கேள்விகளால் வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.) வளர்ச்சி அரசியலை முன் வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தான் இந்தியாவுக்கான 'அட்சே தின்' என மோடி எடுத்துக்காட்டிய குஜராத் மாடலை நம்பி 10வருடங்களுக்கு பிறகு மீண்டும் தாமரையை மலரச்செய்தனர் மக்கள். முழு மெஜாரிட்டியை நெருங்கிய பிரம்மாண்ட வெற்றி. இந்த முதல் 5 ஆண்டு காலத்தில் பல திட்டங்களையும் நிறைவேற்றியிருந்தாலும் தங்களது கனவுத்திட்டங்களை கொஞ்சம் கிடப்பிலேயே போட்டிருந்தது மோடி அரசாங்கம். பணமதிப்பிழப்பு-ஜிஎஸ்டி போன்ற திட்டங்களின் மீதான் அதிருப்தியால் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிப்பதற்கு சாத்தியமே இல்லை தொங்கு பாராளுமன்றம் தான் அமையும் என பல கருத்துக்களும் வெளியாகின. மாநிலக்கட்சிகளும் ஒரு பக்கமாக அணி சேரும் முயற்சியில் கொல்கத்தாவில் மாநாடு போட்டனர். அந்த முயற்சியும் அந்த மாநாட்டோடு முடித்து வைக்கப்பட்டது. இது பாஜக வுக்கு கொஞ்சம் வலுசேர்க்க, புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த பிறகு மோடி முன்னெடுத்த 'சௌகிதார்' பிரச்சாரம் மோடி எனும் ப்ராண்ட்டுக்கு இன்னும் வட மாநிலங்களில் மவுசு இருப்பதை நிரூபித்தது. இந்திய இராணுவம் 'மோடியின் சேனை' என பாஜக பேசிய தேசியவாதத்திற்கு முழு மெஜாரிட்டியை தூக்கி பரிசாக அளித்தனர் வட இந்தியர்கள். காணாமல் போனது காங்கிரஸ். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கிளம்பிய சந்திரபாபு நாயுடுவின் கூடாரமே காலியானது. தென்னிந்தியாவில் இந்த முறையும் மோடி அலை எழுச்சி பெறாமலேயே அஸ்தமனமானது. மோடிக்கு ஆட்சியமைக்க தென்னிந்தியா தேவைப்படவில்லை. அரியணையேறியது மோடி 2.0 அரசாங்கம். கூட்டணிக்கட்சிகளின் ஃபோன் அழைப்புகளை கண்டு பதறிய வாஜ்பாய் காலத்து பாஜக வாக இல்லாமல், கூட்டணிக்கட்சிகளுக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் அதுவும் சில கட்சிகளில் தங்களுக்கு விருப்பமானவருக்குதான் பதவி என கறார் காட்டியது மோடி 2.0 எப்படி இருக்க போகிறது என்பதற்காக காட்டப்பட்ட ட்ரெய்லர். முதல் கூட்டத்தொடரிலேயே பாராளுமன்ற வரலாற்றிலேயே அதிக மசோதாக்களை தாக்கல் செய்தது. இவற்றில் பல மசோதாக்கள் சர்ச்சை குண்டுகளாக வெடித்தன. தேர்தலுக்கு முன் இணைய விரும்பாத எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அவையினுள் கூச்சல் மட்டுமே எழுப்ப முடிந்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய படிப்பினை.
370 பிரிவு நீக்கம், சிஏஏ என உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்த அதிரடிகளை அரங்கேற்றினார். முழு மெஜாரிட்டி அத்தனையையும் சாத்தியப்படுத்தியது. அயோத்தியில் ராமர் கோவிலை உச்சநீதிமன்றம் சாத்தியப்படுத்தியது. இந்த தொடர் நடிவடிக்கைகள் யாவும் குறிப்பிட்ட சமூகத்தின் மீதான தொடர் தாக்குதலாகவும் பிஜேபியின் கனவான 'அகண்ட பாரதத்தின்' ஆரம்பப்புள்ளியாகவுமே பார்க்கப்பட்டது. சிஏஏ வால் அசாமில் ஏற்பட்ட அமைதியின்மை சுமூகமான இந்திய சமூகம் மொத்தத்துக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என மீண்டும் திரியை கொளுத்தியது மத்திய அரசு. மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு பிறகு 'ஏதாவது ஒரு மொழி' என பின்வாங்கியது. இப்படி ஆழம் பார்க்க காலை விட்டு எதிர்ப்புகளுக்கு பிறகு இந்த ஒரு வருடத்தில் பல முறை பேக் அடித்திருக்கிறது மோடி 2.0. 11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது ஜிடிபி. '5 ரூபாய் பிஸ்கட் வாங்குவதற்கு கூட மக்கள் யோசிக்கின்றனர்' என ஆட்டோமொபைல் துறை அலறியது. வேலைவாய்ப்பின்மையில் ரெக்கார்ட் அடித்தது இந்தியா. உடைந்து போன பொருளாதாரத்தை ஒட்ட வைக்க முயற்சி நடந்துக்கொண்டிருக்கும் போதே கொரோனா உள்ளே வந்து ஒட்டுமொத்தமாக இந்திய பொருளாதாரத்தை நொறுக்கி போட்டது. பட்ஜெட்டில் வரிநீக்கம் எதிர்பார்த்த மத்திய தர குடும்பங்களை இரண்டு டிசைனான வரிவிதிப்பு முறைகளை அறிமுகப்படுத்திக் தலைசுற்ற வைத்தது. வரிவிலக்கு இருக்கா இல்லையா ? எனக் கேட்டால் இருக்கு ஆனா இல்லை எனக்கூறி குழப்பித்தள்ளியது. அந்த குழப்பம் கடைசியாக அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பு வரையில் நீள்கிறது. உடனடியாக நேரடி பணப்பயனை எதிர்பார்த்த சாமானியன் மீது இந்த முறையும் கலர் கலர் ஜிகினாக்களை அள்ளி வீசியுள்ளார் நிதியமைச்சர். 1 கிலோ கொண்டகடலையை வைத்து உடம்புக்கு சத்தளிப்பதா மனதுக்கு சத்தளிப்பதா? எது எப்படியோ கிடைத்த வரை லாபம். திட்டங்களின் பெயர் கூட எல்லாருக்கும் பொதுவாக இல்லாத ஆட்சியில் பயன் மட்டும் எல்லாருக்கும் பொதுவானதாக இருந்துவிடும் என நினைப்பது எதிர்பார்ப்பாளர்களின் முட்டாள்த்தனம். மகாராஷ்டிராவில் இரவோடு இரவாக பட்னாவிஸ் ஆட்சியை பிடித்ததும் அதிகாலையிலேயே பிரதமரிடமிருந்து வந்த வாழ்த்துச்செய்தி ஜனநாயகத்தின் மீது விழுந்த சவுக்கடிக்கான வரலாற்று பதிவாக என்றும் நிலைத்து நிற்கும்.
வெளியுறவுத்துறையை பொறுத்தவரை குட்டியான நேபாளம் கூட கொஞ்சம் உரசிப்பார்த்தாலும் உலகளவில் எல்லா தலைவர்களோடும் நல்லவிதமான உறவையே பேணி வருகிறார் மோடி. 370 நீக்கத்தை உலக பிரச்சனையாக மாற்ற முற்பட்ட பாகிஸ்தானை டீல் செய்த விதம் சிறப்பு. ஒரு பக்கம் ஓட்டை ஏற்பட்டாலும் மறுபக்கத்தின் சப்போர்ட்டோடு சமாளித்துக்கொள்ளும் விதமாக எல்லா தலைவர்களோடும் நட்பு பாராட்டுவது வளர்ந்து வரும் இந்தியாவுக்கு பெரிய அளவில் உதவுகிறது.
மோடி 2.0 வை பற்றி பேசும் போது எதிர்க்கட்சிகள் குறித்தும் பேசியே ஆக வேண்டும். தேசிய அளவில் பிஜேபியை எதிர்க்கும் வலுவுள்ள காங்கிரஸ் தடம் தெரியாமல் தடுமாறி வருவது வேதனையளிக்கக்கூடிய விஷயம். முன்பெல்லாம் மோடியே 'காங்கிரஸில்லாத இந்தியா' என்ற சொற்றொடரை அதிகம் பயன்படுத்துவார், ஆனால் இப்போது அப்படி சொல்ல வேண்டிய தேவையே இல்லாமல் செய்திருக்கிறது காங்கிரஸ். 'காங்கிரஸ் இல்லா இந்தியா' என்பதை கதர் சட்டைக்காரர்களே உணர ஆரம்பித்து கூடாரத்தை காலி செய்து வருகின்றனர். தலைவர் இல்லாமல் தறிகெட்டு போயிருக்கும் காங்கிரஸின் லகான பிடித்து சரியான திசையில் செலுத்த வலுவான ஒரு முகம் காலத்தின் கட்டாயம். ராகுல் ஒரு உறுதியான முடிவெடுக்காமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் வரை காங்கிரஸின் கைகள் உயர வாய்ப்பில்லை. வலுவாக இடித்துரைக்கும் எதிர்க்கட்சி இந்தியாவின் உடனடி தேவை.
இரவோடு இரவாக விளக்கேற்ற சொன்னாலும் மோடி மீதான நம்பிக்கையில் இந்தியா முழுவதையும் ஒளிரவிடுகின்றனர் மக்கள். அந்த நம்பிக்கையின் எதிர்வினையாக தெருக்கோடியில் நடந்து சென்று கொண்டிருக்கும் அப்பாவி தொழிலாளி தொடங்கி இந்தியாவின் உச்சபட்ச பணக்காரர் உள்ளடக்கிய எல்லாருக்கும் சேர்த்து வளர்ச்சி ஒளியை ஏற்றிவிடுங்கள் பிரதமரே....
Nice Article
ReplyDelete