விஜய்யின் 63 படங்களும் 63 குட்டி ஸ்டோரிஸும் - Part1 #HBDVijay

தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெசலாக அவர் நடித்து இதுவரை வெளியாகியுள்ள 63 படங்கள் பற்றிய சுவாரஷ்ய தகவல்களுடனான குட்டி ரீவைண்ட் இங்கே...

1.நாளைய தீர்ப்பு :

வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி என தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹீரோவாக அறிமுகமான முதல் படம்.

விஜய்யின் அம்மா ஷோபா தான் நாளைய தீர்ப்பின் கதாசிரியர். இயக்கம் எஸ்.ஏ.சி.

'அன்புள்ளம் கொண்டோரே.....வணக்கம் எங்களை போன்றே எங்கள் மகன் விஜய்யையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்' என டைட்டில் கார்டில் எஸ்.ஏ.சியின் வாய்ஸ் ஓவரோடு ஒரு மாஸ் ஹீரோவுக்கே உரித்தான ஸ்டைலில் விஜய்யை அறிமுகப்படுவார்கள்.

'நடு ரோட்ல நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவிய அடிக்கிறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது' என அநியாயத்தை கண்டு வெகுண்டெழும் ஆங்க்ரி யங் மேன் டைப் கதாப்பாத்திரம் விஜய்யுடையது. விஜய் தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து 'நாளைய தீர்ப்பு' என்ற பத்திரிகை நடத்தி சமூக அட்டூழியங்களை தட்டிக்கேட்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

விஜய்க்கு நாளைய தீர்ப்பு ஒரு தோல்வி படமாகவே அமைந்தது. பெரிய மாஸ் ஹீரோ செய்யவேண்டிய விஷயங்களை ஒரு புதுமுகம் செய்ததால் மக்களுக்கு கனெக்ட் ஆகாமல் இருந்திருக்கலாம். கில்லி-திருப்பாச்சி நேரத்தில்தான் இந்த ஆங்க்ரி யங் மேன் டைப் கேரக்டர்கள் விஜய்க்கே சரியாக செட் ஆக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

2. செந்தூரப்பாண்டி :

நாளைய தீர்ப்பிற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து 1993 ல் ரிலீசான படம் செந்தூரப்பாண்டி.

விஜய்யை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் முனைப்பில் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் விஜயகாந்திடம் தேதி வாங்கி விஜய்-விஜயகாந்த் இருவரையும் வைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுத்தார் எஸ்.ஏ.சி.

இந்த படத்தில் விஜய்க்கு காதல் காட்சிகளே அதிகம். மற்றபடி மாஸ்-ஆக்சன் காட்சிகளெல்லாம் விஜயகாந்த் க்குதான்.

கௌதமி,மனோரமா, விஜயக்குமார் என பிரபலமான நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த படம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இந்த படத்தில் நடிக்க எஸ்.ஏ.சி யிடம் சம்பளம் வாங்க விஜயகாந்த் மறுத்ததாகவும், படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சி வற்புறுத்தி சம்பளம் கொடுத்ததாகவும் செய்திகள் உண்டு...

3.ரசிகன் :

நாளைய தீர்ப்பு மாதிரியான மாஸ் ஒர்க் அவுட் ஆகாது என தெரிந்த பிறகு நரம்பு புடைக்கும் புரட்சிகளையெல்லாம் ஓரம்கட்டி விட்டு விஜய்க்காக எஸ்.ஏ.சி எடுத்த காதல் கதைதான் ரசிகன்.

சங்கவின் க்ளாமரும், கிளுகிளு காட்சிகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இந்த படத்தில்தான் முதல் முறையாக கவுண்டமணி செந்திலுடன் காமெடி காட்சிகளில் நடித்திருந்தார். அதேபோல விஜய் முதல் முதலாக சொந்தக்குரலில் பாடிய 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' பாடலும் செம ஃபேமஸ். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ரசிகன் படத்தின் தயாரிப்பிற்கும் உதவியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சோலோவாக நடித்து விஜய்க்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்த படமாக ரசிகன் அமைந்தது.

4.தேவா :

விஜய்யை ஒரு மார்க்கெட் உள்ள ஹீரோவாக நிலைநிறுத்த போராடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கிய படம்.

செந்தூரப்பாண்டி ஸ்டைலிலே காதல்-பஞ்சாயத்து-ஆக்சன் ஃபார்முலாதான்.சிவக்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கோலிவுட்டில் ஒரு பெரிய ப்ரேக் கிடைக்கும் வரை விஜய்க்கு களத்தில் நிலைத்து நிற்க கிடைத்த சின்ன சின்ன வெற்றிகளில் தேவாவும் ஒன்று.

இன்னொரு முக்கியமான விஷயம் விஜய்க்கு முதன் முதலாக 'இளைய தளபதி' என பட்டம் சூட்டப்பட்டது தேவாவில்தான்.

5.ராஜாவின் பார்வையிலே :

இன்று இரண்டு துருவங்களாக இருக்கும் விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம்.

இந்த படத்திற்கு முன் விஜய்-அஜித் இருவருமே ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தனர். தங்களுக்கென தனி மார்க்கெட் உருவாவதற்கு முன் இருவரும் சேர்ந்து நடித்த படம். விஜய்க்கு படம் முழுக்க ஹீரோவாக வருவார். அஜித் ப்ளாஸ்பேக்கில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார். விஜய் இதன்பிறகு சில ஆண்டு கழித்து நடித்த ஷாஜகான் படத்தின் கதையை போன்றதுதான் ராஜாவின் பார்வையிலே.

விஜய்யின் படத்திற்கு முதன்முதலாக இசைஞானி இசையமத்ததால் 'ராஜாவின் பார்வையிலே' என டைட்டில் வைத்திருக்கலாம். டைட்டில் ஃபாண்டிலும் இளையராஜாவின் முகம் இடம்பெற்றிருக்கும்.

எஸ்.ஏ.சி இயக்கமில்லாமல் ஜானகி சௌந்தர் என்பவர் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் வெற்றியை பெறவில்லை.

6.விஷ்ணு :

மீண்டும் எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய். இந்த முறை ஆக்சன் கதைக்களம். ரசிகனுக்கு பிறகு விஜய்-சங்கவி ஜோடி மீண்டும் இணைந்த படம். விஜய்க்கு அப்பாவாக மூத்த நடிகர் ஜெய்சங்கர் நடித்திருப்பார். விஜய் பாடிய 'தொட்டபெட்டா' பாடல் செம பேமஸ். பாட்டு-டான்ஸ்-ஆக்சன் என விஜய் ஒரு சில படங்களிலே திறமையை வளர்த்துக்கொண்டு நன்றாக நடித்த படம் இருந்தும் விஜய் எதிர்பார்த்த பெரிய ஹிட் வாய்க்கவில்லை.

7.சந்திரலேகா:


எம்.ஜீ.ஆர் க்கு நெருக்கமாக இருந்த நம்பிராஜன் என்பவரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விஜய் நடித்த படம். ரஜினிகாந்த் க்ளாப் அடித்து தொடங்கி வைத்த ஒரு சில விஜய் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தின் டைட்டில் கார்டில் மட்டும் ஏனோ விஜய்க்கு இளைய தளபதி பட்டம் இடம்பெற்றிருக்காது.

ராஜாவின் பார்வையிலே க்கு பிறகு விஜய்யுடன் இந்த படத்தில் மீண்டும் காமெடி கூட்டணி அமைத்திருப்பார் வடிவேலு. தனி ட்ராக்காக இல்லாமல் விஜய்யிடன் காம்பினேஷன் காட்சிகளும் வடிவேலுக்கு அதிகம் இருக்கும். பிக்பாஸ் புகழ் வனிதா விஜயக்குமார் அறிமுகமான முதல் படம். விஜய் இறப்பது போன்று க்ளைமாக்ஸ் உள்ள இரண்டே படங்களில் இதுவும் ஒன்று.

8.கோயம்புத்தூர் மாப்பிள்ளை :

எஸ்.ஏ சி இல்லாமல் விஜய் வெளி இயக்குனர் படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு வெளியான குறிப்பிடத்தக்க படம் கோயம்புத்தூர் மாப்பிள்ளை. இயக்குனர் ரங்கநாதன்

மீண்டும் விஜய்-சங்கவீ கூட்டணி. படத்தின் பாடல்களும் விஜய்யின் நடனமும் குறிப்பிடத்தக்கவகையில் சிறப்பாக இருக்கும். விஜய்க்கு காமெடி ஒர்க் அவுட் ஆன முதல் படம் என்று இதை சொல்லலாம். விஜய்-கவுண்டமணி இருவரும் வேலைக்கு போவதாக ரீல் விடும் காட்சிகள் ரசிக்கத்தக்கது.

9.பூவே உனக்காக :

திரையுலகில் அறிமுகமாகி நான்கு வருடங்கள் ஆகியும் ஒரு ப்ளாக்பஸ்டருக்காக ஏங்கிக்கொண்டிருந்த விஜய்க்கு விக்ரமன் கொடுத்த எவர்க்ரீன் ஹிட்தான் பூவே உனக்காக.

விஜய்க்கு இதற்கு முன்பிருந்த இமேஜை எல்லாம் சுக்குநூறாக்கி விஜய்யை ஒரு அக்மார்க் ஃபேமில் ஆடியன்ஸ்களின் நடிகராக மாற்றிய படம். நாகேஷ், ஜெமினி கணேசன் என பழம்பெரும் நடிகர்களுக்கு மத்தியிலும் பேர் செல்லும் வகையில் சிறப்பாக நடித்திருப்பார் விஜய். அதிலும் விஜய்யின் நடிப்பில் அந்த க்ளைமாக்ஸ் ஒரு மாதிரி ஃபீல் ஆக்கிவிடும். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் மென்மையான பாடல்களும் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

இன்று விஜய் பெரிய நடிகராக எத்தனையோ ப்ளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்தாலும் விஜய் கெரியரில் ஒரு மறக்கமுடியாத வெற்றிப்படம் என்றால் அது பூவே உனக்காக தான்.

10.வசந்த வாசல்:

பூவே உனக்காக 1996 பிப்ரவரியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே மார்ச் மாதம் ரிலீசான இன்னொரு விஜய் படம் வசந்த வாசல். நடிகனாக ஆசைப்படும் இளைஞராக இந்த படத்தில் விஜய் நடித்திருப்பார். எந்தவித பரபரப்புமின்றி பூவே உனக்காக அலையில் காணாமல் போன படமானது.

11.மாண்புமிகு மாணவன் :

சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தந்தை எஸ்.ஏ.சி யுடன் கூட்டணி. வழக்கமான ரவுடி அரசியல்வாதி புரட்சி ஹீரோ என எஸ்.ஏ சி படங்களுக்கான டெம்ப்ளேட் நிறைந்திருந்த படமாக இருந்ததால் பெரிய வெற்றியை பெறவில்லை...

12.செல்வா :

நல்ல கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்ட வெங்கடேஷின் இரண்டாவது படம். விஜய்க்கு இவர் முதலில் தயார் செய்தது ஒரு காதல் கதை. ஒரு நல்ல ஆக்சன் படம் கொடுக்க வேண்டும் என விஜய் தரப்பு விரும்பியதால் பின்னாளில் இயக்குனரான மஜித்தின் ஆக்சன் கதையை விஜய்க்காக இயக்கினார் வெங்கடேஷ்.

கடத்தல் கும்பலை சேர்ந்த ரகுவரன் விஜய்யின் அப்பா இது தெரியாமல் இருக்கும் விஜய்க்கு க்ளைமாக்ஸில் வில்லனாக அப்பாவே இருப்பதுபோல் திரைக்கதை. விஜய் எதிர்பார்த்த ஆக்சன் காட்சிகள் சிறப்பாகவே இருக்கும். ரிஸ்க்கான க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் விஜய் நடிக்க வேண்டாம் எஸ்.ஏ.சி எவ்வளவோ வலியுறுத்திய பிறகும் பிடிவாதமாக விஜய் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடித்ததாக இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். விஜய் எதிர்பார்த்த ஆக்சன் வெற்றியாக அமைந்தது செல்வா.

13.காலமெல்லாம் காத்திருப்பேன் :

மீண்டும் ஒரு முழு நீள காதல் கதையில் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் நடித்த படம். பணக்கார திமிர் பிடித்த இளைஞன் திருந்தி காதலுக்காக ட்ரைவர் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். சொல்லும் அளவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதாக தெரியவில்லை

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review