சும்மா இருக்க கத்துக்கனும்.... #Lockdown #Quarantine
சும்மா இருக்க கத்துக்கனும் !
21 நாட்கள் முழு ஊரடங்கு என்ற செய்தியை முதல் முறையாக கேட்டு திக்குமுக்காடி திகைத்து போனவர்கள் எல்லாம் 60 நாள் தொடர் ஊரடங்கை அசால்ட்டாக கடந்துவிட்டோம். இன்னும் நீண்டாலும் பரவாயில்லை எல்லாம் பழக்கப்பட்டுவிட்டது என்ற ஜென் நிலைக்கு வந்துவிட்டோம். பிழைத்திருத்தலே பெரும்பாடு என்ற இந்த சூழ்நிலையிலும் டிசைன் டிசைனான சேலஞ்ச்களால் சமூகவலைதளங்கள் பரபரக்கின்றன. இந்த லாக்டவுண் நாட்கள் முழுவதும் தாங்கள் புதிதாஜ கற்றுக்கொண்ட விஷயங்களை வீடியோவாகவும் ஸ்டேட்டஸ்களாகவும் போட்டு அங்கலாய்த்து வருகின்றனர் இணையவாசிகள். காலம் பொன் போன்றது என்ற பழைய பழமொழியை நன்கு உணர்ந்து கிடைத்த நேரத்தை தங்கள் திறமைகளை கூராக்கவும் புதுவிஷயங்களை கற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள், நல்ல விஷயம் தான். ஆனால் இதை பார்த்துவிட்டு ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் மனஉளைச்சலுக்கு தங்களை ஆற்படுத்திக்கொள்வது வருந்ததக்கது. ஒன்றுமே செய்யாமல் மூணு வேளை தின்றுவிட்டு முக்காடு போட்டு தூங்குபவர்களுக்கு, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யூடியூப் பை பார்த்து சமையல் தொடங்கி சாம்பிராணி புகை போடுவது வரை கற்றுக்கொண்டு திரியும் சமகால ஏகலைவன்களை பார்த்தால் கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகத்தான் இருக்கும். இந்த குற்ற உணர்ச்சி நமது ஜீனிலேயே ஊறிப்போனது. ஒன்பதாம் வகுப்பு காலாண்டு விடுமுறையிலேயே பத்தாம் வகுப்பு பப்ளிக் பரீட்ச்சைக்கு கணக்கு டியுசன் செல்வதில் தொடங்குகிறது காலம் பொன் போன்றது கான்செப்ட். சும்மா இருந்து டைம் வேஸ்ட் பண்றதுக்கு எதாவது கத்துகிடட்டுமேன்னு LKG பையனை ஆன்லைன் க்ளாஸ் சேர்த்துவிட்டிருக்கும் கதைகள் எல்லாம் கேட்டு ஒரு நிமிடம் தலைசுற்றிவிட்டது.
ஜென் z தலைமுறைக்கு அந்த வயதிலேயே சும்மா இருத்தல் தேசியக்குற்றமாக கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு விநாடியின் முழு ஆயுளையும் பயனுறு பயணமாகவே மாற்றிக்கொள்ள யத்தனிக்கப்படுகிறோம். 5G வேகத்தில் காலம் காற்றில் கரைந்துக்கொண்டிருந்ததை நம்முடைய விநாடி விரட்டல்களுக்கு காரணமாக கூறிக்கொள்ளலாம். ஆனால் இன்று உலகமே ஒரு கிருமிக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் உறைந்து போய் நிற்கிறது. நாளை நோய்த்தொற்று எந்த வீரியத்தில் இருக்கும் என யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் பிறரின் செயல்பாடுகளோடு நம்மை ஒப்பிட்டு பார்த்து குறைபட்டுக்கொள்ளும் மனப்போக்கு அதிகரித்துள்ளது.
ஒரு நடிகர் இந்த லாக்டவுணில் தினமும் 8 மணி நேரம் ஒர்க் அவுட் செய்வதாக இணையத்தில் பதிவிட்டால் அதை பார்த்துவிட்டு நாமும் இந்த லாக்டவுணில் ஒர்க் அவுட் செய்து உடலை ஃபிட் ஆக்க தவறவிட்டுவிட்டோமே என நம்மை நாமே குற்றப்பட்டுக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டிய நோய். நடிகருக்கு தன்னுடைய உடம்பை முறையாக பேணிக்காத்து கொள்வதுதான் அவருடைய முதன்மையான வேலை அதை அவர் சரியாக செய்கிறார், நமக்கு அப்படியில்லையே சிக்ஸ்பேக் என்ற பெயரில் வயிற்றில் வீக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? அதனால் நமக்கு என்ன ப்ரயோஜனம்? அதைபோன்றுதான் மற்ற இணையவாசிகளும் நண்பர்களும் தங்களுக்கு ஆர்வமுள்ள வேலைகளை கற்றுக்கொள்ளும் போது நாம் ஏன் அவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொண்டு தேவையில்லாத மன இறுக்கங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும்?அவர்களுக்கு அந்த வேலையின் மீது ஆர்வமும் விருப்பமும் இருக்கிறது செய்கிறார்கள் அதனால் நமக்கும் அதன் மீது விருப்பம் உண்டாக வேண்டும் என நினைப்பது மூளை நமது மனதிடம் நிகழ்த்தும் சர்வாதிகாரம். இதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்தாலே அத்தனை மன உளைச்சல்களும் தூள் தூளாகி விடும்.
இருந்தா 'மே' ல மீட் பண்ணுவோம், இல்லாட்டி மேல மீட் பண்ணுவோம், என நெட்டிசன்கள் வடிவேலு பாணியில் தெறிக்கவிட்ட பகடிகள் பல உலக தத்துவங்களை நொடிப்பொழுதில் கடத்திவிடுகின்றன. வேலையிழந்து குடும்பக்கஷ்டத்தில் மன அழுத்தத்தில் வைரஸோடு வாழப் பழகி உயிர் பிழைத்திருத்தலே இமாலய சாதனைதான். இந்நேரத்தில் போய் ஆக்டிவ்வாக இருக்கும் சில நண்பர்களை பார்த்துவிட்டு, இந்த 60 நாட்களையும் வீணடித்துவிட்டோமே என புலம்புவதெல்லாம் தேவையற்ற விஷயம் பாஸ். இத்தனை நாள் ரேஸ் குதிரையாக வேகமெடுத்தவர்களுக்கு ஒரு ஓரமாக குடிசையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள அற்புதமான நாட்கள் கிடைத்துள்ளன. 60 நாட்களில் 70 ஆன்லைன் கோர்ஸ் முடித்தவனுக்கும் சரி ஒன்றுமே செய்யாமல் சும்மா ஜாலியாக இருந்தவர்களுக்கும் சரி உலகம் ஒரே நாளில்தான் கதவை திறந்துவிட போகிறது. அப்போது வேகமெடுத்து ஓடிக்கொள்ளலாம். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மனதும் உடலும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொள்ளட்டுமே.
கோடி கோடியாய் கொடுத்தாலும் இதேபோன்று குடும்பத்தோடு நான்ஸ்டாப்பாக செலவிடும் நாட்களை யாராலும் மீண்டும் உருவாக்கிவிட முடியாது. இப்போது எந்த குழப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல் மனதை சமநிலையாக வைத்து சும்மா ஜாலியா இருங்க பாஸ், தப்பில்லை.
சும்மா இருக்க கத்துக்கனும், இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கனும் !
(புதியதலைமுறையில் வெளியான கட்டுரை)
Comments
Post a Comment