ஆஸியில் கோலியை கிங் ஆக்கிய அந்த 5 இன்னிங்ஸ்கள்! #Kohli #Australia
ஆஸி மண்ணில் கோலியை கிங் ஆக்கிய டாப்-5 பெர்ஃபார்மென்ஸ்கள்..
வெளிநாட்டு தொடர் என்றாலே இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பதான் செய்வார்கள். ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் இந்திய மைதானங்களிலேயே ஆடிவிட்டு வெளிநாட்டு மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க திணறுவர் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் கோலி இதையெல்லாம் மாற்றி எழுதத்தொடங்கினார். எங்கேயெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்களோ அங்கேயெல்லாம் அசால்ட்டாக பெர்ஃபார்ம் செய்து வெறித்தனம் காட்டியிருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல. டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான காலக்கட்டத்திலிருந்து இதுவரை 12 போட்டிகளை ஆஸி மண்ணில் ஆடி 6 சதங்களை அடித்திருக்கிறார் கோலி. இதில் சில சதங்கள் ஆஸி வீரர்களை மிரட்சியாக்கி உறைய வைத்திருக்கிறது. ஆஸி மண்ணில் கோலியின் டாப்-5 பெர்ஃபார்மென்ஸ்கள் இதோ..
1. மெய்டன் சென்ச்சூரி:
2011 ம் ஆண்டே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தாலும் கோலியின் முதல் சதம் ஆஸ்திரேலிய மண்ணில் 2012 ம் ஆண்டுதான் பதிவாகியிருக்கிறது. 2011-12 ல் நடைபெற்ற அந்த டெஸ்ட் சீரிஸில் ஆஸியில் க்ளார்க், ரிக்கி பாண்டிங், மைக் ஹஸ்ஸி என பெரிய கைகளும் இந்தியாவில் சச்சின், சேவாக், கம்பீர், ட்ராவிட், லக்ஶ்மண் என ஆஸியை விட பெரிய கைகளும் இருந்தனர். ஆனால் ரிசல்ட் என்னவோ, வழக்கம்போல இந்திய அணி சொதப்பல்தான். ஆஸிக்கு
மைக் ஹஸ்ஸி, பாண்டிங், க்ளார்க் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களும் 100-200-300 என ஒவ்வொரு ஆட்டத்திலும் சென்ச்சூரிக்களாக அடித்து தள்ளினர். க்ளார்க் ஒரு முச்சதம்+இரட்டை சதம் என இந்த சீரிஸில் வெளுத்து வாங்கினார். இந்தியா சார்பில் அத்தனை பெரிய வீரர்கள் இருந்தும் ஒரு சதம் கூட பதிவாகியிருக்காது. இந்நிலையில்தான் தொடர்ந்து மூன்று டெஸ்ட்களில் தோற்றுவிட்ட பிறகு இறுதி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த டெஸ்ட்டில் ஆஸி முதல் பேட்டிங் செய்து பாண்டிங், க்ளார்க் இருவரும் இரட்டைசதம் போட்டு ஸ்கோரை 600+ ஆக்கிவிடுவர். இப்போது இந்தியா பேட்டிங். கம்பீர்-சேவாக் ஓப்பனிங் கூட்டணி சொதப்ப அடுத்து வந்த ட்ராவிட்-சச்சின்-லக்ஷ்மண் க்ளாஸ் கூட்டணிகளும் ஒரு 50 பார்ட்னர்ஷிப் கூட போடாமல் சொதப்ப நம்பர் 6 ல் கோலி களமிறங்கினார். இந்த சீரிஸ் முழுவது இந்திய பேட்ஸ்மேன்கள் என்னவெல்லாம் செய்ய தவறினரோ அதையெல்லாம் கோலி செய்தார். அப்படி ஒரு க்ளாஸ் இன்னிங்ஸ். அதுவும் டெய்ல் எண்டர்களோடு கூட்டணி போட்டு. ரையான் ஹாரிஸ், ஹில்ஃபனாஸ் என ஆஸியின் வேகப்புயல்களை அசால்ட்டாக கவர் ட்ரைவும் ஃபிளிக்கும் ஆடி மிரட்டினார். 'India's Player for the future' என சொல்லப்பட்டதற்கிணங்க தன்னால் எல்லா ஃபார்மட்டிலும் ஜொலிக்க முடியும் என்பதை கோலி அடிலெய்டில் நிரூபித்தார். அந்த சீரிஸில் இந்தியா சார்பில் பதிவான ஒரே சதம் கோலி அடித்ததுதான். அந்த 116 ரன்கள் மூலம் அந்த சீரிஸில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராகவும் கோலி மாறினார்.
2. அதே அடிலெய்டில் மீண்டும் ஒரு சம்பவம்: 2014
2012 ல் இந்தியாவின் இளம் வீரராக இருந்த கோலி. இனிமேல் இந்தியாவுக்கு எல்லாமே கோலிதான் என நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருந்த சமயத்தில் 2014ல் நடந்த தொடர் இது. இங்கே கோலி இப்படி மிரட்டிக் கொண்டிருந்தால் அங்கே ஆஸிக்கு ஸ்மித் தனி ராஜபாட்டை நடத்திக்கொண்டிருந்தார். தோனி காயம் காரணமாக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாமல் போக அந்த டெஸ்ட்டுக்கு முதல் முதலாக கேப்டனாக பொறுப்பேற்றார் கோலி. ஒரு சில வீரர்களின் வாழ்க்கையில் ஒரு சில மைதானங்களை எப்போதும் மறக்கமுடியாது. கோலிக்கு அப்படிப்பட்ட மைதானம்தான் அடிலெய்டு. முதன்முதலாக கேப்டனாக அடிலெய்டு மைதானத்தில்தான் கோலி காலடி எடுத்து வைத்தார். ஆஸி முதல் பேட்டிங் செய்து ஸ்மித், க்ளார்க், வார்னர் என மூவரும் சதம் போட ஸ்கோர் 500+க்கு போக ஆஸி டிக்ளேர் செய்தது. விஜய், புஜாரா, ரஹானே என மூவரும் அரைசதம் போட்டாலும் தேவைப்பட்ட சென்ச்சூரி கோலியின் பேட்டில் இருந்துதான் வந்தது. ஸ்லெட்ஜிங்கில் வெறுப்பேத்தும் ஜான்சனை குறிவைத்து அடித்தார் கோலி. அடித்ததில் முக்கால்வாசி பவுண்ட்ரிகள் இவருடைய பந்தில்தான் வந்தது. கடைசியில் 115 ரன்னில் ஜான்சன் பந்திலேயே அவுட்டும் ஆகிவிடுவார் கோலி. 444 என ஒரு கௌரவமான ஸ்கோரையும் இந்தியா எட்டிவிடும். இது பெரிய விஷயம் அல்ல, இரண்டாவது இன்னிங்ஸில் கோலி செய்ததுதான் தரமான சம்பவம். ஆஸி செகண்ட் இன்னிங்ஸை முடித்து 364 ஐ இந்தியாவுக்கு டார்கெட்டாக கொடுத்தது. 65-2 என்ற நிலையில் ஒரே ஒரு நாள் மட்டுமே மீதமிருந்த நிலையில் கோலி பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். எப்படியும் ட்ராவுக்குதான் ஆடுவார்கள் என ஆஸி வீரர்கள் மட்டுமில்லை இந்திய ரசிகர்களுமே நினைத்திருப்பர். But Kohli had other ideas, கோலி வெற்றிக்காக ஆடத் தொடங்கினார். அதுவும் க்ளியர் ப்ளானோடு முதல் இன்னிங்ஸில் டார்கெட் செய்த ஜான்சன் உட்பட வேகப்பந்து வீச்சாளர்கள் யாரையும் தொடாமல் லயனின் பந்தை வைத்து வெளுத்தெடுத்திருப்பார். கோலி அடித்த அடியில் ஆஸி வீரர்களின் கண்களிலேயே தோல்வி பயம் தெரிய தொடங்கி விட்டது. ஸ்கோரும் 300 ஐ தாண்டி செல்ல இந்தியா ஜெயித்துவிடும் என்ற நிலையில் லயனின் பந்துவீச்சிலேயே கோலி அவுட் ஆகி வெளியேற இந்தியாவும் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால், இனிமேலும் இந்தியாவை நீங்கள் லேசாக எண்ண முடியாது, எங்களுக்கும் எதிர் தாக்குதல் செய்ய தெரியும் என்கிற வலுவான மெசேஜை ஆஸிக்கு கடத்திவிட்டார் கிங் கோலி.
3.பாக்ஸிங் டே டெஸ்ட்:
அதே 2014 சீரிஸின் 3 வது டெஸ்ட் போட்டி இது. இந்த சீரிஸே கொஞ்சன் வித்தியாசமானது. இதை இரண்டு நாடுகள் மோதிக்கொண்ட தொடர் என்பதை விட, உலகின் தலைசிறந்த இரண்டு வீரர்கள் மோதிக்கொண்ட சீரிஸ் என்றுதான் சொல்ல வேண்டும். கோலி-ஸ்மித் இருவருமே வரிந்துக்கட்டி கொண்டு தங்கள் அணிக்காக ரன்களை குவித்துக்கொண்டிருந்தனர். முதல் இன்னிங்க்சில் ஸ்மித் ஒரு சென்ச்சூரி போட்டால் போட்டிக்கு கோலி ஒரு சென்ச்சூரியை போட்டார். இந்த பாக்சிங் டே டெஸ்ட்டிலும் அப்படித்தான் ஆஸிக்காக ஸ்மித் முதல் இன்னிங்ஸில் வெறித்தனமாக ஒரு 192 அடிக்க கோலி ரிட்டனாக ஒரு 169 அடித்து மிரட்டினார். இந்த இன்னிங்ஸிலும் ஜான்சனை விட்டுவைக்கவில்லை,அடித்து துவம்சம் செய்தார். சும்மா..சும்மா கோலியை நோண்டிக்கொண்டிருந்தால் ரிசல்ட் இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த சீரிஸில் ஜான்சன் புரிந்துக்கொண்டிருப்பார். மொத்தத்தில் அந்த பாக்சிங் டே டெஸ்ட் ஒரு சூப்பரான கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக அமைந்தது. அந்த சீரிஸில் மொத்தமாக நான்கு சென்ச்சூரிகளோடு ஸ்மித் 769 ரன்களை அடிக்க கோலி 4 சென்ச்சூரிகளோடு 692 ரன்களை அடித்திருப்பார்.
4.பெர்த் க்ளாஸ்:
2012, 2014 சீரிஸ்களை போல் அல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக அமைந்த சீரிஸ். ஆஸிக்கு வார்னர்-ஸ்மித் என இரண்டு பெரிய ப்ளேயர்கள் இல்லாமல் அணி குழம்பிப்போய் இருந்த காலம். இன்னொரு பக்கம் இந்தியா நல்ல பலமான அணியாக இருந்தது. இந்த முறைதான் முதல் முறையாக இந்திய அணி ஆஸியில் டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால், நாம் இப்போது குறிப்பிட போகும் கோலியின் இந்த இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆட்டத்தில் வந்தது இல்லை. முதல் டெஸ்ட்டை இந்தியா வென்றிருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸி கொஞ்சம் தட்டுத்தடுமாறி 326 ரன்களை எடுத்துவிட பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியில் ஓப்பனர்கள் ராகுலும் விஜய்யும் வந்த வேகத்தில் வெளியேறினர். ஸ்கோர் 8-2 இந்நிலையில்தான் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ஒரு மாஸ்டர் க்ளாஸ் டெஸ்ட் இன்னிங்ஸை ஆடினார் கோலி. கோலியிடம் எப்போதும் இல்லாத ஒருவித அதீத பொறுமையையும் நிதானத்தையும் இந்த போட்டியில் வெளிப்பட்டது. 'புஜாரா எப்போதும் ஆடும் ஆட்டத்தை கோலி இன்றைக்கு ஆடிக்கொண்டிருக்கிறார்' என கமெண்ட்ரி பாக்ஸில் ஹர்ஷா போக்ளே பேசிக்கொண்டிருந்தார். அந்த போட்டியில் 257 பந்துகளில் 123 ரன்களை அடித்திருப்பார் கோலி. 161 டாட் பால்களை ஆடியிருந்தார். சென்ச்சூரி போட்டுவிட்டு என்னுடைய பேட் மட்டும்தான் பேசும் என கோலி சைகை செய்திருப்பார். ஆஸி இந்த போட்டியை வென்றிருந்தாலும் ஒட்டுமொத்த ஆஸி அணியும் இந்த டெஸ்ட்டை குறிப்பிட்டு புகழ்ந்து தள்ளியதை The Test அமேசான் வெப் சீரிஸில் பார்க்கலாம்.
5. ஹோபர்ட் வெறியாட்டம்: 2012
இது டெஸ்ட் போட்டியும் கிடையாது. ஆஸிக்கு எதிரான போட்டியும் கிடையாது. ஆனால், ஆஸியில் நடைபெற்ற போட்டி இது. கோலியின் ஆஸி பெர்ஃபார்மென்ஸ்களை பற்றி பேசும்போது இதைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்தியா-ஆஸி-இலங்கை மூன்று நாடுகளும் ஆஸியில் வைத்து மோதிய 2012 ம் ஆண்டு ட்ரை சீரிஸ் ODI அது. இந்தியாவுக்கு கேப்டன் தோனி பல பரிட்சாத்த முயற்சிகளை செய்து பார்க்க ஒரு சில தோல்விகள் ஏற்பட்டதால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாத நிலை இருந்தது. ஆஸியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டுமெனில் இலங்கைக்கு எதிரான அந்த போட்டியை 38 ஓவருக்குள் வென்றாக வேண்டும். முதலில் பேட் செய்த இலங்கை தில்ஷனின் அதிரடியான 150 மூலம் 321 ரன்களை இந்தியாவுக்கு டார்கெட்டாக்கியது. 38 ஓவர்களில் 321 இன்றைய தேதிக்கு கூட இது பெரிய டாஸ்க்தான். ஆனால், இந்தியா 2012 ல் இந்த போட்டியை 37 ஓவருக்குள் முடித்து சாதனை படைத்தது. சேவாக் ஓப்பனிங்கில் தனது வழக்கமான பாணியில் அதிரடி தொடக்கம் கொடுக்க நம்பர் 4 ல் வந்த கோலியும் நம்பர் 5 ல் வந்த ரெய்னாவும் நின்று இந்தியாவை ஜெயிக்க வைத்திருப்பார்கள். இருவரும் வெறியாட்டம் ஆடினர். மலிங்காவின் ஒரே ஓவரில் 24 ரன்களை அடிப்பார் கோலி. கடைசியில் ரெய்னா 24 பந்துகளில் 40 அடிக்க கோலி 86 பந்துகளில் 133 ரன்களை அடித்திருப்பார். ஒரு ஓவரை மீதம் வைத்து 37 வது ஓவரிலேயே இந்தியா ஜெயித்துவிடும். வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியில் இலங்கை ஆஸியை தோற்கடிக்க இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லாமல் தொடரைவிட்டு வெளியேறியிருக்கும்.ஆஸிக்கு எதிராக இல்லாவிட்டாலும் ஆஸி மண்ணில் நடைபெற்ற இந்த சம்பவம் கோலியின் கரியரில் ரொம்பவே முக்கியமானது.
- Vj Sriram
Comments
Post a Comment