வாழ வைக்கும் சென்னை கொஞ்சம் வாழட்டுமே ப்ளீஸ்! #Nivar #Cyclone #Chennai
வாழவைக்கும் சென்னை கொஞ்சம் வாழட்டுமே ப்ளீஸ்...!
'சிங்கார சென்னை' 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' போன்ற அலங்கார மேற்கோள்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்னையை மையமாக வைத்து புல்லட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று 'மீண்டும்' ஒரு பதற்ற நிலையை உண்டாக்கியுள்ளது. மீண்டும் என்ற வார்த்தை யை இங்கே பயன்படுத்த அழுத்தமான காரணங்கள் இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் எத்தனை முறை சென்னை இதே போன்ற இயற்கையின் கோரதாண்டவத்தின் பிடியில் சிக்கியுள்ளது என்பதை பாருங்கள். புயல், வெள்ளம், மழை, வறட்சி என கிட்டத்தட்ட வருடா வருடம் எதாவது ஒரு பேரிடரில் சிக்கி சின்னாபின்னாமாகி அடுத்த பேரிடருக்கு ரெடியாகி கொண்டிருக்கும். இப்போது ஒரு கிருமி. ஒவ்வொரு முறை இயற்கை சூறையாடி சென்ற பிறகும் இந்த மாநகரத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து தீர்வுகளை நோக்கி பயணப்பட முயற்சிக்கிறோமா என்றால் இல்லவே இல்லை.
யாரும் கணித்திடமுடியாத இயற்கையின் வினைகளுக்காக ஒரு நகரத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீது சந்தேகப்பார்வையை செலுத்திட முடியுமா!? செலுத்திதான் ஆக வேண்டும். சென்னையின் மீதான தொடர் இயற்கை தாக்குதல்கள் எதிர்பாராதவை இல்லை, இந்த நகரத்தை மூச்சு முட்ட செய்யும் மனித தவறுகளுக்கும், தவறான கொள்கை முடிவுகளுக்கும் இயற்கை ஆற்றும் எதிர்வினை அது. நான்கு பேருக்கு தேவையான எல்லாமும் உள்ள வீட்டில் 30 பேர் சூறையாடிக் கொண்டிருப்பதற்கு பெயர் வளர்ச்சியா? சென்னையும் இப்படி வளர்ச்சி என்ற பெயரில் சூறையாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. 1950 இந்தியா குடியரசான போது சென்னையின் மக்கள் தொகை 14 லட்சம் தான். இன்று ஏறக்குறைய 1 கோடியே 10 லட்சம். வருடத்திற்கு சராசரியாக கிட்டத்தட்ட 2.5% அளவுக்கு மக்கள் தொகை பெருக்கமடைந்து கொண்டே இருக்கிறது. சென்னையின் இந்த 2.5% பெருக்கம் மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களின் வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி சதவீதத்தை விட அதிகம். ஆண்டு முழுவதும் சாரை சாரையாக சென்னையில் குடியேறி கொண்டிருக்கும் மற்ற ஊர்க்காரர்கள்தான் சென்னையின் பெருக்கத்திற்கு முக்கிய காரணம். மற்ற ஊர்க்காரர்களின் இந்த புறப்படல்களுக்கு பின்னால் இருக்கும் வாழ்வியல் பிரச்சனைகளை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.தமிழகத்தின் எதோ ஒரு மூலையில் பிழைப்பு தேடி அலையும் சாமானியன், இங்கே போனால் எதோ ஒரு வேலையை பிடித்து அடிப்படை வாழ்வியல் வசதிகளையாவது பெற்றுவிடலாம் என யோசித்த அடுத்த கணமே அவனுக்கு சென்னையும் கோயம்புத்தூரும் தான் நியாபகம். இந்த இரு நகரங்களும் பொதிந்து வைத்துள்ள தொழிற்கட்டமைப்பு மிகப்பெரியது. இந்த தொழிற்காரணிதான் சென்னையை இன்றைக்கு வளர்ச்சி என்ற பெயரில் வீக்கமடைய செய்துள்ளது. சென்னையின் மக்கள் தொகை பெருக்க புள்ளிவிவரங்களை பார்க்கும்போது 2000 ஆம் வருடத்திலிருந்து 2015 க்குள் ஒரு உட்சபட்ச பெருக்கத்தை அடைந்துள்ளதை காணமுடியும். 2000 த்தில் 65 லட்சமாக இருந்த சென்னையின் மக்கள் தொகை 2015 ல் ஏறக்குறைய 1 கோடியாக உருமாறியிருக்கிறது. காரணம், இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் உட்சபட்ச வளர்ச்சி பெற்ற ஐடி துறை. வேலைவாய்ப்பை பொறுத்தவரையில் ஐடி துறை ஒரு உதாரணம் மட்டும்தான். இதேபோல பல வேலைவாய்ப்புகளை தன்னகத்தே மட்டும் ஒழித்து வைத்திருக்கிறது சென்னை. கல்லூரி படிப்பை முடித்த ஒரு மாணவனுக்கு அந்த படிப்புக்கேற்ற வேலை தன்னுடைய ஊரிலேயே கிடைப்பதில்லை. தொழில்நுட்பம்,வணிகம்,அரசியல்,சினிமா என கவனம் பெறும் அத்தனையும் சென்னையையே மையம் கொண்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு சென்னையின் கழிவுநீர்-குப்பை-குடிநீர் மேலாண்மை போன்றவற்றில் வளர்ச்சி உண்டாகியிருக்கிறதா என்பது கேள்விக்குறியே. வேலைவாய்ப்பு தொழிற்வளர்ச்சி மட்டுமில்லை இவற்றின் கண்ணியாக நீளும் மற்ற விஷயங்களும் மற்ற மாவட்ட மக்களை மாற்றாந்தாய் பிள்ளையாக நினைக்க வைக்கிறது. திருச்சி ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த போது சென்னையிலிருந்து மீட்பு கருவிகள் வரட்டும் என காத்திருந்தது மீட்புப்படை. உண்மையில் தமிழகத்தின் மையம் திருச்சிதான் அங்கிருந்து தமிழகத்தின் எந்த பகுதிக்கும் 6 மணி நேரத்தில் சென்றுவிட முடியும். அங்கேயே ஒரு திறம் வாய்ந்த பேரிடர் மீட்புக்குழுவும் கருவிகளும் இருந்திருக்க வேண்டாமா!? இந்த ஒரு விஷயம் போதும் சென்னையின் மீதான அதீத அதிகார குவிப்புக்கும் கவனக்குவிப்புக்கும் உதாரணமாக சொல்ல. இந்த ஒருபக்க குவிப்புதான் வளர்ச்சி என்ற பெயரில் வெடித்து சிதறும் நிலையில் சீழ் பிடித்த வீக்க நிலைக்கு சென்னையை தள்ளியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் குறித்து கவலைப்படும் பலரும் ஒரே நகரத்தின் மீதான அதீத மக்கள் தொகை குவிப்பு பற்றி கவலைப்படுவதில்லை. சென்னையின் ஒரு சதுர கி.மீட்டரில் மட்டும் 26000 பேர் வசிக்கிறார்கள். இதில் எங்கே சமூக இடைவெளியெல்லாம் கடைபிடிக்க!? இன்னும் 50 வருடங்களில் சென்னையை கடல் தண்ணீர் காவு வாங்கிவிடும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் அடுத்தக்கட்ட நகர்வுக்கு எந்த நகரை கட்டமைத்து வைத்துள்ளார்கள்?தலைநகரங்களுக்கும் அடுத்தக்கட்ட நகரங்களுக்குமான வளர்ச்சிவிகித வேறுபாடு குறித்து பெரிதாக விவாதிக்க வேண்டும்.
இன்றைக்கு சென்னை அடைந்திருக்கும் வளர்ச்சியும் அதன் தொழிற்கட்டமைப்பும் தமிழகத்தின் வேறு எந்த நகரத்தில் உள்ளது?நிலவள ஆதார காரணிகள் தேவைப்படாத ஐடி நிறுவனங்கள் கூட சென்னையை மட்டுமே மொய்க்குமாறு செய்துள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை வளர்ந்துள்ளது சரிதான் அதைத்தாண்டி எந்த நகரங்களில் வேலைவாய்ப்புகளும் தொழிற்காரணிகளும் வளர்ந்துள்ளது. திருச்சி,திருநெல்வேலி, மதுரை பேருந்து நிலையங்களில் இரவு முழுவதும் இட்லிக்கடைகளில் விளக்கெறிந்து கொண்டிருப்பதை மிகப்பெரிய வணிகமாகவோ தொழிலாகவோ கருதி சென்னை கோவையோடு ஒப்பிட முடியுமா?
ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே நூற்றாண்டு நூற்றாண்டாக தலைநகராக இருப்பதும் பிரச்சனைதான். அதற்காக ஜெகன் மோகன் ரெட்டி செய்ததை போல மூன்று தலைநகர அறிவிப்பு விடுவதும் பிரச்சனைதான். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எதோ ஒரு தீர்வை உடனடியாக தேடிப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். சென்னையின் மீதான வளர்ச்சி குவிப்பை அனைத்து மாவட்டங்களுக்கும் மடைமாற்றிவிடுவது சென்னையை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும்.
'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்பது பேரறிஞர் அண்ணா மத்திய அரசை பார்த்து எழுப்பிய உரிமைக்குரல். இதே குரலை தமிழகத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு மாநில அரசை பார்த்து நாம் எழுப்பினாலும் சரியாக பொருந்திபோகும். வடக்கின் சென்னை வளமாக வாழ்ந்து இப்போது 'வாழ்ந்து கெட்ட குடும்பமாக' மாறிக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் இருக்கும் அவசரம் இந்த வளர்ச்சி குவிப்பு பிரச்சனைக்கு மாற்று கண்டுபிடிப்பதிலும் இருக்க வேண்டும்.
'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற வரவேற்பு போர்டுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க இவ்வளவு நாள் வாழவைத்த சென்னை கொஞ்சம் வாழ்ட்டுமே ப்ளீஸ்....
- உ.ஸ்ரீ
(புதியதலைமுறையில் வெளியான கட்டுரை)
Comments
Post a Comment