ஷேம்பைன் இல்லை....செலிப்ரேஷன் இல்லை..250 ரூபாய் சம்பளம்...இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி இப்படித்தான் இருந்தது...
ஷேம்பைன் இல்லை....செலிப்ரேஷன் இல்லை..250 ரூபாய் சம்பளம்...இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி இப்படித்தான் இருந்தது...
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை செய்திருக்கிறது. இந்தியாவில் வைத்து மட்டும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் வென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை இரண்டு முறை வென்றுவிட்டது. ஆனால், இந்த வெற்றிகளைவிட எல்லாம் சிறப்பானது இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி. அங்கே இருந்துதான் எல்லாமும் தொடங்கியிருக்கிறது. 68 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்துதான் இந்தியாவுக்கு அந்த முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்தது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக. இப்போது இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற இருக்கிற சூழ்நிலையில் இந்தியாவின் அந்த முதல் டெஸ்ட் வெற்றி குறித்த சின்ன ரீவைண்ட் இதோ...
போர்பந்தர் மகாராஜா தலைமையில் இந்திய அணி 1932 ம் ஆண்டு தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆடுவதற்கு இங்கிலாந்துக்கு பயணப்பட்டது. போர்பந்தர் மகாராஜா தலைமையில் இந்திய அணி சென்றிருதாலும் லார்ட்ஸில் இந்திய அணி ஆடிய முதல் போட்டியில் அவரால் ஆடமுடியவில்லை. எனவே C.K.Naidu தலைமையில் இந்திய அணி அந்த போட்டியில் ஆடியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆடிய இந்த முதல் போட்டியில் தோல்வியையே தழுவியது.இங்கிலாந்து அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்றது.
அதன்பிறகு, 1933 ல் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட வந்தது. இந்த 3 போட்டிகளில் இரண்டில் இங்கிலாந்து அணி வென்றது. ஒரு போட்டி ட்ராவில் முடிந்திருந்தது. இந்த சீரிஸிலும் இந்திய அணியால் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யமுடியவில்லை. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற 3 வது போட்டியில் இங்கிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இப்படியே காலங்கள் உருண்டோடி 20 ஆண்டுகளை தாண்டி செல்கிறது. 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்ட இந்திய அணியால் ஒரு வெற்றியை கூட பெற்றிருக்க முடியவில்லை. இந்நேரத்தில்தான், 1952 இல் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு இங்கிலாந்து அணி முதல் முறையாக இந்தியாவிற்கு வந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது.
முஷ்டக் அலி, பங்கஜ் ராய், கேப்டன் விஜய் ஹசாரே, லாலா அமர்நாத், மங்கட், உம்ரிகர் என இந்திய அணி இந்த முறை பல நல்ல வீரர்களை உள்ளடக்கியிருந்தது. ஆனாலும், முதல் 4 போட்டிகளில் இந்திய அணியால் ஒரு போட்டியை கூட வெல்ல முடியவில்லை. இங்கிலாந்து அணி ஒரு போட்டியை வென்றிருந்தது. 3 போட்டிகள் ட்ரா ஆகியிருந்தது.
இந்நிலையில்தான் தொடரின் கடைசி மற்றும் 5 வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்த தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இந்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
டொனால்டு கேர் தலைமையிலான இங்கிலாந்து அணி டாஸை வென்று முதலில் பேட் செய்தது. ஓப்பனர் ஃப்ராங்க் லோசனை தத்து பத்கர் 1 ரன்னில் வெளியேற்றி இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்திருப்பர். ஆனால், அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். அன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 244-5 என்ற நல்ல நிலையில் இருந்தனர். மன்கட் 3 விக்கெட்டுகளையும் பத்கர் மற்றும் விஜய் ஹசாரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் இங்கிலாந்தை சேர்ந்த மன்னர் ஒருவர் இறந்ததால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
244-5 என்ற நிலையிலிருந்து மூன்றாவது நாளில் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்து 22 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 5 விக்கெட்டை இழந்து ஆல் அவுட் ஆனது. அந்த 5 விக்கெட்டையும் மன்கட் தான் வீழ்த்தியிருந்தார். முதல் இன்னிங்ஸில் மங்கட் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் முஷ்டக் அலி 22 ரன்னில் வெளியேறினாலும் மற்றுமொரு ஓப்பனரான பங்கஜ் நின்று ஆடி சதமடித்தார். அவருக்கு கேப்டன் விஜய் ஹசாரே, மன்கட், லாலா அமர்நாத் ஆகியோர் கொஞ்ச நேரத்தில் வெளியேற லோயர் மிடில் ஆர்டரில் தத்து பத்கரும் உம்ரிகரும் சேர்ந்து சிறப்பாக ஆடினர். பத்கர் அரைசதம் அடித்து அவுட் ஆக, உம்ரிகர் சதம் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருப்பார். இந்திய அணி 457 ரன்களை எட்டியவுடன் கேப்டன் விஜய் ஹசாரே டிக்ளேர் செய்துவிடுவார். உம்ரிகர் 130 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருப்பார்.
இந்திய அணி 191 ரன்கள் லீட் எடுத்துவிடும். இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகிவிடும். இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் மன்கட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பார்.
'அப்போது எங்களுக்கு வெற்றியை கொண்டாட யாரும் ஷேம்பைன் பாட்டில்களையெல்லாம் வாங்கித் தரவில்லை. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். பந்து வீசினோம். கேட்ச்சுகளை பிடித்தோம். எங்கள் வேலையை சரியாக செய்தோம். வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் காற்றில் துள்ளிக் குதிக்கவில்லை. மைதானத்தில் உருளவில்லை. ஒருவருக்கொருவர் கைகளை மட்டும் குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டோம்.' என்கிறார் கோபிநாத். தமிழக வீரரான கோபிநாத்தும் அந்த 1952 இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். வலதுகை பேட்ஸ்மேனான கோபிநாத் முதல் இன்னிங்ஸில் உம்ரிகருடன் சேர்ந்து 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்டு இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார். அந்த போட்டியில் விளையாடியவர்களில் கோபிநாத் மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கிறார்.
இன்றைக்கு நாம் இந்திய அணியின் ஒவ்வொரு வெற்றியையும் ஒவ்வொரு வீரரையும் பெரிய அளவில் கொண்டாடுகிறோம். ஆனால், அன்று வரலாறு படைத்த இந்த இந்திய அணிக்கு பெரிய பாராட்டுகளும் வெகுமதியும் கிடைக்கவில்லை. அன்றைக்கு அவர்களுக்குரிய 250 ரூபாய் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சென்னக் சேப்பாக்கம் மைதானம் என்றைக்கும் அழிக்கமுடியாத வரலாறாக நிற்பதற்கு இந்த போட்டிதான் மிக முக்கிய காரணமாக அமைந்தது.
- Vj Sriram
Comments
Post a Comment