ரஹானேவை புகழ்வதற்காக...கோலியை திட்ட வேண்டாமே! #Kohli #Rahane #IndVsAus

ரஹானேவை புகழ்வதற்காக...கோலியை திட்ட வேண்டாமே! அடிலெய்டில் வாங்கிய முரட்டுத்தனமான அடிக்கு மெல்பர்னில் வைத்து ரஹானே தலைமையில் ஆஸிக்கு பலத்த அடி கொடுத்தது இந்தியா. கோலி இல்லை....ரோஹித் இல்லை...ஷமி இல்லை....நிச்சயமாக இந்திய அணி ஜெயிக்காது என ஆருடம் கூறியவர்களின் வாக்குகளையெல்லாம் பொய்யாக்கி காட்டினார் ரஹானே. இந்த வெற்றியை கொண்டாட்டத்துக்கு இடையிலேயே இன்னொரு விவாதமும் எழுந்துள்ளது. அதாவது, கோலியை விட ரஹானே கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். எனவே ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக்கிவிடலாம் என்கிற வாதம் பரவலாக அனைத்து தரப்பினராலும் எடுத்துவைக்கப்பட்டது. கோலி என்ன அவ்வளவு மோசமான கேப்டனா?? ஒரு தோல்வியை வைத்து அவரின் கேப்டன்சியை அளந்துவிட முடியுமா?? மெல்பர்ன் வெற்றி மட்டுமே ரஹானேவை கேப்டனாக்குவதற்கு போதுமா?? கோலியின் கேப்டன்சி மீதான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் புதிதானவை ஒன்றும் கிடையாது. ஐ.பி.எல் முடிந்த போது கூட மும்பைக்காக ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித்தை இந்திய அணிக்கு கேப்டன் ஆக்கிவிடலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. ரோஹித் காயம் காரணமாக ஆஸி தொடரை தவறவிட்டதால் இந்த பேச்சுகள் கொஞ்சம் மங்கியிருந்தது. இந்நிலையில்தான், ரஹானேவை கேப்டனாக்க வேண்டும் என்கிற குரல்கள் எழத்தொடங்கியுள்ளது. இப்படி ஒவ்வொரு வீரராக முன்னிறுத்தி கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க சொல்லும் அளவுக்கு அவரின் கேப்டன்சியில் அவ்வளவு குறைகள் இருந்ததா?? எல்லா கேப்டன்களை போலவுமே கோலியின் கேப்டன்சியிலும் சில குறைகள் இருக்கவே செய்தது. ஆனால், இவர்கள் இப்படி பூதாகரமாக்கும் அளவுக்கு கோலி ஒன்றும் ஆஃப் பாயில் கேப்டன் கிடையாது. இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டன் என கொண்டாடப்படும் தோனியை விட அதிக டெஸ்ட் போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சீரிஸை வென்று வரலாறு படைத்திருக்கிறார். உலக கிரிக்கெட்டில் கொஞ்ச காலம் முன்பு வரை ஆஸ்திரேலியாவுக்கு இருந்த மிரட்டலான பிம்பம் இப்போது கொஞ்சமேனும் இந்திய அணிக்கு இருக்கிறதென்றால் அதற்கு கேப்டன் கோலிதான் காரணம். அப்படியிருந்தும் அவரை ஏன் தூற்றிக்கொண்டே இருக்க வேண்டும்?? இதை ரசிகர்களின் உளவியல் சார்ந்த விஷயமாகத்தான் பார்க்க முடியும். ஒரே விஷயத்தை நீண்ட காலமாக பார்த்து பழகியவர்களுக்கு அந்த விஷயத்தின் மீது ஒரு அயற்சி உண்டாக தொடங்கிவிடும். ஆட்சியில் இருக்கும் கட்சி மீது ஏற்படும் 'anti incumbency' மனநிலையை போன்றது இது. அவர்கள் மீது பெரிய அளவில் எந்த குற்றச்சாட்டும் இல்லாவிடிலும், மக்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு எதோ ஒரு மாற்றம் தேவைப்படும். இதே மாதிரியான அயர்ச்சியும் மாற்றத்தை விரும்பும் மனநிலையும்தான் கோலியின் கேப்டன்சி மீதும் விமர்சனங்களை வாரி இறைக்க காரணமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. டெஸ்ட்டில் 2014 லிருந்து இதுவரை 6 வருடமாக கோலியின் கேப்டன்சி ஸ்டைலை சலிக்க சலிக்க பார்த்தாயிற்று, இனிமேல் அவர்களின் சுவாரஸ்யத்திற்காக வேறுமாதிரியான கேப்டன்சியை எதிர்பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. சரி, மாற்றம் வேண்டும் என நினைத்தாலும் மக்கள் எல்லா மாற்றுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. ரஹானே, மிகச்சரியாக கேப்டன்சிப் செய்து தன்னுடைய தனித்துவமான அணுகுமுறை மூலம் மிளிர்ந்ததால் மட்டுமே அவரை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், ரஹானே அவ்வாறு கேப்டன்சியில் மிளிர்ந்ததற்கு கோலிதான் காரணம் என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா!? ஆம், ரஹானே இவ்வளவு சிறப்பாக மெல்பர்னில் கேப்டன்சி செய்ததற்கு கோலிதான் மிக முக்கிய காரணம். கேப்டன்சிப் என்பதே முதலில் Continuing process of Evolution என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய அணியின் ஒவ்வொரு காலக்கட்டதிலும் கேப்டனாக இருப்பவர் செய்யும் சரி தவறுகளிலிருந்து அடுத்து வரும் கேப்டன் எதோ ஒரு பாடத்தை கற்றுக்கொண்டே இருக்கிறார். அந்த படிப்பினைதான் இந்திய அணியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தி சென்றுக் கொண்டே இருக்கிறது. 90களில் இந்திய அணி எப்போதுமே மந்தமாகத்தான் ஆடும் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அணிக்கு கேப்டனான கங்குலி முதலில் மாற்ற தொடங்கியது அந்த மந்தமான தன்மையைத்தான். இந்தியாவுக்கும் எதிர்த்து அடிக்க தெரியும் என்கிற ரீதியில் கங்குலி வெளிப்படுத்திய கேப்டன்சி அணுகுமுறை 'மந்தமான அணி' என்கிற குற்றச்சாட்டு கொடுத்த படிப்பினையின் வெளிப்பாடுதான். 2007 உலகக்கோப்பை மற்றும் கங்குலி-ட்ராவிட் கேப்டன்சி கொடுத்த படிப்பினைதான் தோனியை இளம் வீரர்களை அதிகம் நம்ப வைத்தது. அதேமாதிரிதான், தோனி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் படிப்பினையாக கொண்டு தன்னுடைய கேப்டன்சியை வடிவமைத்துக் கொண்டார் கோலி. 'தோனி பெரிதாக அசாத்தியமான விஷயங்களை செய்ய எத்தனிக்கமாட்டார். ட்ராவுக்காக ஆடக்கூடியவர். ஒரு வீரர் சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி கொண்டே இருப்பவர்' என தோனி கேப்டன்சி மீது ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் இருந்தது. கோலி 2014 ல் ஆஸிக்கு எதிராக கேப்டன் ஆனதும், தோனி மீது என்னவெல்லாம் குற்றச்சாட்டாக இருந்ததோ அதையெல்லாம் மாற்றினார். கோலி எப்போதுமே ட்ராவுக்காக ஆடமாட்டார். இதை அவர் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் அடிலெய்டு டெஸ்டிலேயே காட்டியிருப்பார். தோனி எப்போதும் டிஃபன்சிவ்...கோலி எப்போதும் அக்ரஸிவ். தோனி அணியில் நான்கு போட்டிகளில் சொதப்பினாலும் ஐந்தாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். கோலி அணியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. தோனி வேகப்பந்து வீச்சில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. கோலியின் பெரும் நம்பிக்கையே வேகப்பந்து வீச்சாளர்கள்தான். இப்படி தோனி கேப்டன்சியில் நம் கண் முன்னால் தெரிந்த குறைகளையெல்லாம் படிப்பினைகளாக எடுத்துக்கொண்டு திருத்திக்காட்டியவர் கோலி. கங்குலி தொடங்கி கோலி வரை இந்த நூற்றாண்டில் நாம் பார்த்த கேப்டன்கள் அனைவருமே தங்களுக்கு முந்தைய கேப்டன்கள் செய்த தவறுகளிலிருந்தே பாடம் கற்று தங்கள் தலைமையில் அணியை உயர்த்தியிருக்கின்றனர். அதனால்தான், இந்திய அணியின் வளர்ச்சியை எதோ ஒரு கேப்டனின் பெயரில் எப்போதுமே எழுதிவிட முடியாது. மெல்பர்ன் டெஸ்ட்டில் ரஹானே செய்ததும் இதைத்தான். 'ப்ளேயிங் லெவன் சரியில்லை...ஃபீல்டிங் சுமார்...அஸ்வினை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம்' ஆகியவை அடிலெய்டு டெஸ்ட்டில் கோலி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள். உன்னிப்பாக பார்த்தால் மெல்பர்ன் டெஸ்ட்டில் ரஹானே இந்த மூன்று விஷயங்களில்தான் முழுக்கவனத்தையும் செலுத்தி சரியாக்கியிருப்பார். மேலும், போஸ்ட் மேட்ச் ப்ரசண்டேசனில் 'நாங்கள் இப்படியான ஒரு கேரக்டரைத்தான் வெளிப்படுத்த விரும்பினோம்' என அந்த கூலான அட்டிடியுட் குறித்து ரஹானே பேசியிருந்தார். இதுவும், கோலியின் அக்ரஸிவ் அணுகுமுறையிலிருந்து ரஹானேவுக்கு கிடைத்த படிப்பினைதான். ஆக, ரஹானேவும் இந்த Evolutionல் தன்னை சரியாக இணைத்துக்கொண்டு வென்றிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது மட்டுமே ஒரு வெற்றிகரமான கேப்டன் ஆவதற்கு போதுமா? நிச்சயம் போதாது. முந்தையவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே. அதன்பிறகு, அவர்கள் தனிப்பட்ட முறையில் நீண்ட கால அடிப்படையில் எப்படி செயல்படுகிறார். தனக்கான ஒரு அணியை எத்தகு தன்மைகளோடு வடிவமைத்து கொள்கிறார் என்பதை பொறுத்துதான் ஒரு கேப்டனை நாம் அளவிட முடியும். ரஹானே தனது கேப்டன்சியில் ஒரு ஆரம்பப்புள்ளியை மட்டும்தான் சரியாக வைத்துள்ளார். இதை வைத்து மட்டுமே ரஹானேவை நிரந்தர கேப்டன் ஆக்கிவிட வேண்டும் என்று சொல்வதில் பெரிதாக நியாமில்லை. மேலும், கோலி தன்னை அந்த ஆரம்பப்புள்ளியில் நிரூபித்துவிட்டு , தனக்கான ஒரு அணியை கட்டமைத்து வைத்துக்கொண்டு வெற்றிகரமாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய நியாயமான காலமே இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே குறைந்தபட்சம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்குமாவது கோலியின் கேப்டன்சியை தொந்தரவு செய்து அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுக்காமல் இருப்பதே சிறப்பாக இருக்கும். ரஹானேவுக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்தால்தானே தன்னை நிரூபிப்பார்? என கேள்வி கேட்கலாம். ரஹானே ரொம்ப சிறப்பாகத்தான் செயல்பட்டார். ஆனால், ரஹானேவுக்கு முழுமையான கேப்டன்சி வாய்ப்பை கொடுப்பதற்கு இது சரியான நேரமில்லை என்பதுதான் உண்மை. எல்லாவற்றையும் விட ஒரு கேப்டனை மாற்றிவிடுவதால் மட்டுமே ஒரு அணியின் செயல்பாடு அப்படியே தலைகீழாக மாறிவிடும் என அறுதியிட்டு கூறிவிடவும் முடியாது. இரண்டாவது போட்டியில் சதம் அடித்த ரஹானே முதல் போட்டியின் செகண்ட் இன்னிங்ஸில் பொறுப்பை உணர்ந்து ஒரு சதம் அடித்திருந்தாலே இந்தியா வென்றிருக்குமே. எப்போதுமே அணியின் வெற்றி கேப்டனிகளின் கையில் மட்டுமே இருப்பதில்லை. எனவே, ரஹானேவை புகழ்வதற்காக...கோலியை திட்ட வேண்டாமே! - Vj Sriram

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review