Letter to Thalapathy Vijay #Master #Vijay

'மாஸ்டர்' விஜய்க்கு 'பிகில்' அடிக்க தயார்; சொம்படிக்க தயாரில்லை.. ரசிகர்களை நெஞ்சில் வைத்து போற்றும் விஜய் அவர்களுக்கு, உங்களின் ஒவ்வொரு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கும் முண்டியத்துக் கொண்டு டிக்கெட் வாங்கி தியேட்டர் வாசல்களிலேயே தீபாவளிக்களையும் பொங்கலையும் கொண்டாடி வரும் வெறிபிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன் என்கிற உரிமையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். 'பிகில்' படம் வெளியாவதற்கு முன்பே மாஸ்டர் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வித்தியாசமான படங்களை கொடுக்கும் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் நீங்கள் இணைகிறீர்கள் என்பதை அறிந்தவுடன் அளவில்லா மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. இதுவரை பார்த்திடாத விஜய்யை திரையில் பார்த்துவிடலாம் என்கிற எதிர்பார்ப்பு எகிறியது. அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளும் போஸ்டர்களும் பாடல்களும் இந்த எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் சரியான தீனியாக இருந்தது. ஏப்ரல் 9 எப்படியும் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற நிலையில் திடீரென கொரோனா பரவல் காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட மாஸ்டரை திரையில் பார்க்கமுடியாமல் மிகுந்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. மே,ஜீன்,ஜீலை., ஆகஸ்ட்...என மாதங்கள் ஓடிக்கொண்டே இருக்க மாஸ்டர் படம் வெளியாவதற்கான எந்த அறிகுறியுமே தெரியாமல் இருந்தது. இதற்கு முன் உங்களுடைய எந்த படமும் தயாராகி வெளியாவதற்கு இவ்வளவு தாமதம் ஆனதில்லை. தலைவா படம் அரசியல் பிரச்சனைகளால் சொன்ன தேதியிலிருந்து சில நாட்கள் தள்ளி ரிலீசானது. அதன்பிறகு, புலி படம் சில கிராபிக்ஸ் வேலைகள் மீதமிருந்ததால் சொன்ன தேதியிலிருந்து சில நாட்கள் தள்ளி ரிலீசானது. மற்றபடி, நீங்கள் சொன்ன தேதிக்கு எப்போதுமே படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறீர்கள். கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையுமே வெகுவாக பாதித்ததால் மாஸ்டர் ரிலீஸுக்கான தாமதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. இடையிலேயே சில பெரிய படங்கள் ஓடிடி க்களுக்கு விற்கப்பட்டு ரிலீஸான போதும் 'என்னுடைய படம் தியேட்டருக்குத்தான் வர வேண்டும். என் ரசிகர்கள் தியேட்டரில்தான் படத்தை கொண்டாட வேண்டும்' என நீங்கள் சொன்னதாக வெளியான செய்திகள் கேட்டு புல்லரித்துப்போனோம். எங்க தளபதிக்கு பணம் பெரிதல்ல ரசிகர்களின் சந்தோஷம்தான் பெரிது என காலரை தூக்கி விட்டு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டிருந்தோம். மாஸ்டர் மீதான எதிர்பார்ப்பும் ஈர்ப்பும் இன்னும் பல மடங்கு எகிறியது. இதுவரைக்கும் எந்த பிரச்சனையுமே இல்லை. பிரச்சனை எல்லாமே இனிமேல்தான். திரையரங்குகளில் 50% இருக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சரை சந்தித்த விஜய் 100% இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்ததாக செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து இப்போது தமிழக அரசும் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதான் மிகப்பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 'குளிரூட்டப்பட்ட பூட்டிய அறையில் 3 மணி நேரம் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து படம் பார்க்கும் போது கொரோனா தொற்று மிக எளிமையாக பரவக்கூடும். இது ஒரு 'தற்கொலை முடிவு' போன்றது' என மருத்துவர்கள் தரப்பில் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இது சார்ந்துதான் இப்போது எனக்கு சில கேள்விகள் எழுகிறது. 1. உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில் முதல்வரை ரகசியமாக சந்தித்து 100% இருக்கைக்கு அனுமதி கேட்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது விஜய்?? 2. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் இன்னமும் சமூகத்தில் தொற்று இருக்கத்தான் செய்கிறது. தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்த செய்திகளையெல்லாம் அறிந்துதான் 100% இருக்கைக்கு அனுமதி கேட்க முதல்வர் வீட்டுக்கு இரவோடு இரவாக சென்றீர்களா?? 3. சென்னையின் 5 நட்சத்திர ஹோட்டல்களை மையமாகக்கொண்டு கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதால் 'மாஸ்டர்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறதே. உச்சப்பட்ச சௌகரியங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் ஒரு சிலர் மட்டுமே பங்குப்பெற்று நடக்கவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பை உங்களின் நலன் கருதி ரத்து செய்கிறீர்களே. நாங்கள் மட்டும் கூட்ட நெரிசலுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி டிக்கெட் எடுத்து அடித்துபிடித்து ஹவுஸ்புல் தியேட்டரில் நெருக்கியடித்து படம் பார்க்க வேண்டுமா?? 4. குறைந்தபட்சம் எப்படியும் 600 தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியாகும். ஒரு தியேட்டருக்கு ஒரு ஷோவுக்கு 500 நபர்கள் என்றாலும், குறைந்தபட்சமாக 15 லட்சம் ரசிகர்கள் ஒரேநாளில் தியேட்டர்களில் குமியப்போகிறோம். இதில் எங்கே இருந்து சமூக இடைவெளியெல்லாம் பின்பற்றுவது?? எங்களுக்கு கொரோனா தொற்று பரவினால் பரவாயில்லயா விஜய்? 600 தியேட்டர்களில் ஏதேனும் ஒரு தியேட்டரை மையமாக கொண்டு கூட கொரோனா பரவல் ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படியே ஏற்பட்டுவிட்டாலும் எந்தெந்த ரசிகர்கள் படம் பார்க்க வந்தார்கள் என்பதை எப்படி சுகாதாரத்துறையால் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்த முடியும்? 'தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்ளாத ரசிகன் எனக்கு தேவையே இல்லை' என பல முறை பேசியிருக்கிறீர்களே. என் பிடிவாதத்தால் முதல் நாள் முதல் காட்சி 'மாஸ்டர்' பார்க்க சென்று தொற்றை ஏந்திக்கொண்டு வந்து நடுத்தர வயதை கடந்த எங்களுடைய அப்பா அம்மாவுக்கு பரப்பிவிட்டால் அதன் மூலம் ஏற்படப்போகும் இழப்புக்கு நீங்கள் பொறுப்பேர்ப்பீர்களா விஜய்? 5. சரி, 100% இருக்கை என்பதே இருக்கட்டும். அந்த கோரிக்கைகாக முதல்வரை சந்தித்த நீங்கள், 'என் ரசிகர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, முறையான சமூக இடைவெளியை கடைபிடித்துதான் படம் பார்க்க வர வேண்டும்' என சிறியதாக ஒரு விழிப்புணர்வு வீடியோ அல்லது குறைந்தபட்சமாக ஒரு துண்டு அறிக்கையாவது வெளியிடுவீர்களா?? இந்த கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால், கொரோனா மிகத்தீவிரமாக பரவிக்கொண்டிருந்த காலத்திலேயே தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விடுத்த மரம் நடும் சேலஞ்ச்சை ஏற்றுக்கொண்டு போட்டோவுடன் ட்வீட் போட்ட நீங்கள், கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு வரி கூட இன்றைக்கு வரைக்கும் ட்வீட் செய்யவில்லையே? இதில் ஒருக்கூட்டம், முதல் நாள் முதல் காட்சிக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து ரசிகர்களோடு அமர்ந்து 'மாஸ்டர்' பார்ப்பீர்கள் எனக் கூவிக்கொண்டிருக்கிறது. நிஜமாகவே, அப்படி ஏதேனும் ஐடியா இருக்கிறதா விஜய்? இன்னும் சிலர் அரசியல் கட்சிகள் எவ்வளவு தொண்டர்களை கூட்டி பிரச்சாரம் செய்கின்றனர். அங்கேயெல்லாம் பரவாத கொரோனா தியேட்டரில் மட்டும் பரவிவிடப்போகிறதா எனக் கேட்கிறார்கள். இதே கேள்வி உங்களுக்கும் கூட எழுந்திருக்கலாம் விஜய். 200 ரூபாய்க்கும் சோற்றுப் பொட்டலத்துக்கும் கூடும் கூட்டமும் அன்பினால் கூடும் கூட்டமும் வேறு. உங்களை விரும்பி உங்கள் மீது எல்லைக்குள் அடங்கா அன்பு செலுத்தும் ரசிகனுக்கு எந்த நன்மையும் செய்யாவிடிலும், உயிருக்கும் உடல் நலத்துக்குமாவது ஊறு விளைவிக்கும் காரியங்களை செய்யாமல் இருக்கலாமே? 100% இருக்கையோடு 10 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடப்போகிற மாஸ்டர் ப டம் 50% இருக்கையோடு 20 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிவிட்டு போகட்டுமே. முழு வசூலும் கிடைப்பதில் ஒரு சில நாட்கள் தாமதம் உண்டாகலாம். இத்தனை வருடமாக உங்களை கொண்டாடி தீர்த்து உச்சத்தில் வைத்திருக்கும் ரசிகனுக்காக அந்த தாமதத்தை கூட பொறுத்துக்கொள்ள முடியாதா? ஒரு படத்திற்காக இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகிறாரே என்கிற அழிக்க முடியாத கறை உங்கள் மீது படிவதை பார்க்க விரும்பவில்லை. வீணாக ரசிகச்சண்டை போட்டு நேரத்தை வீணடிக்காமல் சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசுங்கள் என பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களாகிய எங்களுக்கு நீங்கள் அறிவுரை கூறியிருந்தீர்கள். நீங்கள் சொன்ன சமூக அக்கறையின் வெளிப்பாடுதான் மேலே கேட்கப்பட்ட கேள்விகள். ஒரு பகுத்தறிவுமிக்க ரசிகனாக எங்களின் 'மாஸ்டர்' விஜய்க்கு என்றைக்கும் பிகில் அடிக்க தயாராக இருக்கிறோம். உங்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் சொம்படிக்க தாயாராக இல்லை. நெய்வேலியில் உங்களுக்கு எதோ பிரச்சனை என்றவுடன் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஆதரவு அளித்த ரசிகர்களை ஒரு நிமிடம் கண் முன் கொண்டு வந்து பாருங்கள். தளபதி விஜய்யாகிய உங்களுக்கு 'மாஸ்டர்' மற்றுமொரு படம்; அதில் நஷ்டமடைந்தாலும் உங்களுக்கு பெரிய இழப்பிருக்காது. ஆனால், ரசிகர்களுக்கு இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். பார்த்து முடிவு எடுங்கள் 'மாஸ்டர்' விஜய்! -உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review