டிண்டா - இந்திய டெஸ்ட் அணி தவறவிட்ட ரெட்பால் ஸ்பெசலிஸ்ட்!! #AshokDinda #India #Bengal #Ganguly

டிண்டா- இந்திய டெஸ்ட் அணி தவறவிட்ட திறமைசாலி! ஒட்டுமொத்தமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார் அசோக் டிண்டா. இந்திய அணிக்காக 13 ஓடிஐ போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 29 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். கொண்டாடும் வகையில் இந்த எண்களில் எந்த விசேஷமுமில்லை என்பதால் ரசிகர்கள் டிண்ட்டாவை கொண்டாடமல் விட்டதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், இந்த டிகேடில் ரசிகர்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டிருப்பவரும் டிண்ட்டாதான். எந்த பௌலர் எந்த ஆட்டத்தில் எந்த அணிக்கெதிராகவும் அதிக ரன்களை கொடுத்துவிட்டால் போதும் அவர்களுக்கு உடனே டிண்ட்டா அகாடெமியில் அட்மிஷனை போட்டுவிடுவார்கள் ரசிகர்கள். உமேஷ் யாதவ், சிராஜ் எல்லாம் அந்த அகாடெமியின் முதல் பெஞ்ச் மாணவர்களாக முத்திரைக் குத்தப்பட்டவர்கள். உண்மையிலேயே இந்தளவுக்கு மோசமான கிரிக்கெட்டையா ஆடிவிட்டு சென்றிருக்கிறார் டிண்டா? டிண்டா அதிக ரன்களை கொடுத்துவிடுவார் என்பதுதான் அவர் ட்ரோல் செய்யப்படுவதற்கான அடிப்படை காரணமாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக அவர் 13 ஓடிஐ க்களில் ஆடி 12 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். எக்கானமி 6.18. இது அவ்வளவு பெரிய மோசமான எக்கானமியாக தெரியவில்லையே. 9 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார். எக்கானமி 8.17. இது கொஞ்சம் கூடுதல் போல தெரிந்தாலும் இவரை விட அதிகமான எக்கானமி உடைய பௌலர்களும் தொடர்ந்து பல அணிகளில் ஆடிக்கொண்டேதான் இருக்கின்றனர். ஐ.பி.எல் ல் அவருடைய எக்கானமியும் 8 க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஐ.பி.எல் ல் தான் அவர் அதிகமான போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். அங்கே ஒரு சில போட்டிகளில் அவர் அதிக ரன்களை கொடுத்ததை வைத்துக்கொண்டு அவரை ட்ரோல் மெட்டீரியலாகவை மாற்றிவிட்டனர். ஐ.பி.எல் ஐ மட்டும் வைத்துதான் ஒரு வீரரின் திறன் அளவிடப்பட வேண்டுமா? சிராஜ் டிண்டா அகாடெமியின் ஸ்டூடண்ட், குட்டி உமேஷ் என்றெல்லாம் விமர்சித்தோம். அதே சிராஜ்தான் ரெட் பாலை கையில் எடுத்தவுடன் காபாவில் 5விக்கெட் ஹால் எடுத்து இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார். சிராஜ் ஒரு ரெட் பால் ஸ்பெசலிஸ்ட். ரெட்பால் கிரிக்கெட்டில் அவருக்கான வாய்ப்புகள் வரும் வரை அவரும் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டவர்தான். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது இன்றைக்கு சிராஜ் கிரிக்கெட் கனவோடு வாழும் பல ஏழைக்குடும்பங்களின் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன். திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான வாய்ப்புகள் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. டிண்டாவும் சிராஜை போல ஒரு ரெட் பால் ஸ்பெசலிஸ்ட்தான். 15 ஆண்டுக்கும் மேலாக ரஞ்சி போட்டியில் ஆடியிருக்கிறார். 116 போட்டிகளில் ஆடி 420 விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். பெங்கால் அணிக்காக கடைசி 9 சீசன்கள் ஒரு சீசன் தவிர மற்ற எல்லா சீசன்களிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர் டிண்டாதான். முதலில் பெங்கால் அணியில் டிண்டாவின் பெயர் இடம்பெறவில்லை. தாதா கங்குலிதான் டிண்டா திறமையான வீரர் என்பதை அறிந்து 16 வது வீரராக அவரை அணிக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் ஓய்வு முடிவை அறிவிக்கும் போதும் கங்குலிக்கு தனியாக நன்றி சொல்லியிருக்கிறார் டிண்டா. கங்குலியின் மற்ற கண்டுபிடிப்புகளான யுவராஜ், கெய்ஃப் மாதிரியே டிண்டாவும் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் புகழ் அடைந்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக 2005 இல் தான் டிண்டா பெங்கால் அணிக்கு அறிமுகமாகியிருக்கிறார். 2005 க்கு பிறகு சேப்பல் காலத்தில் அணிக்குள் கங்குலிக்கு என்ன மரியாதை இருந்தது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒருவேளை கங்குலி பழைய தாதாவாக வே அப்போது இருந்திருந்தால் டிண்டாவுக்கு அப்போதே டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கக்கூடும் ஒருவேளை டிண்டாவும் ஒயிட்பாலில் முதலில் அறிமுகமானதற்கு பதிலாக ரெட்பாலில் முதலில் அறிமுகமாகியிருந்தால் இன்று அவரும் ஒரு தவிர்க்கமுடியாத இந்திய வீரராக மாறியிருக்கலாம். பெங்காலில் எங்கோ ஒரு சிறிய ஊரில் பிறந்து சிறுவயதிலேயே தந்தையை இழந்து சகோதரர்களின் தியாகத்தால் கிரிக்கெட் ஆட வந்து ஜெயித்த அவரின் கதையும் இன்று பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆகியிருக்கக்கூடும். சிராஜுக்கு கிடைத்த அந்த ஒரு வாய்ப்பு டிண்டாவுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை என்பது மட்டுமே இங்கே பிரச்சனை. அதை உணராதவர்கள்தான் இன்னும் டிண்டா அகாடெமியில் உட்கார்ந்து அட்மிஷனுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 'Never judge someone without knowing the whole story' டிண்டா 400 விக்கெட்டுகளை எடுத்த போது இலங்கை வீரரான உடானா டிண்டா குறித்து இப்படி கூறியிருந்தார். எதை தின்றால் பித்தம் தெளியும் என தெரியாமல் சகட்டுமேனிக்கு கிடைப்பவர்களையெல்லாம் வைத்து கலாய்த்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. அவர்களால் டிண்டாவின் உள்ளூர் சாதனைகளும் வெளியே தெரியாமல் மழுங்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கேலி கிண்டல்களுக்கென்று ஒரு வரைமுறை எப்போதும் இருக்க வேண்டும். ராகுல் திவேதியா க்ரீஸில் தடுமாறிக் கொண்டிருக்கும் போது அவர் மீது அத்தனை ட்ரோல்கள். அந்த நிமிடத்தில் உலகில் அதிகம் வெறுக்கப்பட்ட மனிதராக ராகுல் திவேதியாதான் இருந்திருப்பார். ஆனால், அந்த 5 சிக்சர் அந்த வெற்றி எல்லாவற்றையும் மாற்றியது. 5 நிமிடம் முன் அவரை வெறுத்தவர்கள் எல்லாம் இப்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஒரு மனிதனை அவனுடைய திறமையை ஒரு வெற்றியை மட்டுமே வைத்து அளவிட்டுக் கொண்டிருக்கும் யாரும், நாமும் எப்போதும் வெற்றியை மட்டுமே அடையப்போவதில்லை என்பதை உணருவதில்லை. அப்படிப்பட்டவர்கள்தான் டிண்டாவை இன்னமும் விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள். இந்திய டெஸ்ட் அணி தவறவிட்ட திறமையான வேகப்பந்து வீச்சாளர்களில் டிண்ட்டாவும் ஒருவர் என்பதை அவர் பெங்கால் அணிக்காக செய்திருக்கும் சாதனைகள் என்றைக்கும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். - Vj Sriram

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review