'நூற்றுக்கு நூறு...தரம்...தரம்..' ஜோ ரூட் அசத்தல்!
'நூற்றுக்கு நூறு...தரம்...தரம்..' ஜோ ரூட் அசத்தல்!
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களான டாம் சிப்லேவும் ஜோ ரூட்டும் சிறப்பாக ஆடியிருக்கின்றனர். குறிப்பாக, 100 வது போட்டியில் ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
ஜோ ரூட் தனது அறிமுக போட்டியையும் இந்தியாவில்தான் ஆடியிருக்கிறார். 50 வது போட்டியையும் இந்தியாவில்தான் ஆடியிருக்கிறார். இப்போது 100 வது போட்டியையும் இங்கேதான் ஆடிக்கொண்டிருக்கிறார். மூன்று போட்டிகளிலுமே குறைந்தபட்சம் அரைசதமாவது அடித்திருக்கிறார். அதுமட்டுமில்லை இந்தியாவில் ஆடியுள்ள 7 போட்டிகளிலுமே குறைந்தபட்சம் அரைசதமாவது அடித்திருக்கிறார். ஆவரேஜ் 53 ஐ விட அதிகம்.
2012 இல் ஜோ ரூட் இந்தியா வரும்போது அறிமுக வீரர். அடுத்து 2016 இல் வரும்போது துணை கேப்டன். இப்போது கேப்டன். இந்தியாவில் ஜோ ரூட் பதித்துள்ள இந்த தடங்களின் மூலமே இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவரின் வளர்ச்சியையும் புரிந்துக்கொள்ள முடியும்.
கெவின் பீட்டர்சன் மாதிரியான முக்கியமான பெரிய வீரர் அணியில் இல்லாத குறையை நீக்க வேண்டிய பொறுப்பு ஜோ ரூட்டுக்கு இருந்தது. இந்தியாவில் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்தவர் அடுத்த ஆண்டே நியுசிலாந்துக்கு எதிராக சதம், ஆஷஸில் லார்ட்ஸில் வைத்து அடித்து பெரிய சதம், இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் என தொடர்ச்சியாக நல்ல இன்னிங்ஸ்களை ஆடி இங்கிலாந்துக்கான எதிர்கால நம்பிக்கை என்ற பெயரை பெற்றார். இந்தியாவில் இங்கிலாந்து சீரிஸை இழந்த பிறகு குக் விலக, கேப்டன் பதவி ஜோ ரூட்டுக்கு கிடைத்தது.
2015 உலகக்கோப்பைக்கு பிறகு மூன்று ஃபார்மட்களுக்கு மூன்று வெவ்வேறு அணி மூன்று வெவ்வேறு கேப்டன்கள் என்கிற இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் பாணி அவருக்கு பெரிதாக உதவியது. ரூட் மூன்று ஃபார்மட்களிலும் ஆட வீரராக இருந்தாலும் எந்த அழுத்தமும் இன்றி டெஸ்ட்டில் அதிக கவனம் செலுத்துவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் அந்த முடிவும் காரணமாக இருந்தது.
கோலி, ஸ்மித், வில்லியம்சன் உடன் இணைத்து Fab 4 பேட்ஸ்மேன் என புகழப்பட்டாலும் கடந்த சில மாதங்களாக ரூட் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. 15 இன்னிங்ஸ்களாக சதமே அடிக்காமல் இருந்தார். லாக்டவுணுக்கு பிறகு இங்கிலாந்து சம்மரில் வலுக்குறைந்த வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. அந்த சீரிஸ்களில் பட்லர் இவரை விட படுமோசமாக சொதப்பிக் கொண்டிருந்ததால் விமர்சகர்களின் கண்ணிலிருந்து ஜோ ரூட் தப்பித்திருந்தார்.
கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்பு ஜோ ரூட்டின் மீதும் விமர்சனங்கள் எழ தொடங்கியது. ஆனால், இந்த இலங்கை தொடரில் மிகச்சிறப்பாக ஆடி அசத்திவிட்டார் ரூட். ஒரு இரட்டை சதம் மற்றும் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருந்தார்.
பொதுவாக வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஆசிய சூழல்களில் ஸ்பின்னை எதிர்கொள்ள தடுமாறுவார்கள் என பேசப்படும். ஆனால், ரூட் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவரின் மொத்த ஆவரேஜை விட ஆசியாவில் அவரின் ஆவரேஜ் அதிகம். இலங்கையிலும் ஸ்பின்னர்களை ஸ்வீப் ஆடியும் இறங்கி வந்து ஆடியும் அசத்தியிருப்பார்.
அதே இலங்கை மனநிலையோடுதான் இந்தியாவுக்கும் இன்று வந்து தனது 100 வது போட்டியில் சதமடித்திருக்கிறார் ஜோ ரூட்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் குறிப்பாக ஜோ ரூட் இந்திய ஸ்பின்னுக்கு எதிராக ஸ்வீப்பைதான் ஆயுதமாக பயன்படுத்தப்போகிறார் என்பது வெளிப்படையாக பல பேட்டிகள் மூலம் போட்டிக்கு முன்பே தெரிந்துவிட்டது. அப்படியிருந்தும் இந்திய அணியால் இன்று ரூட்டை கட்டுப்படுத்த முடியவில்லை.
முதல் செஷனின் கடைசிக்கட்டத்தில் அஸ்வின் ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றுதான் ஓப்பனிங் வீரரான ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். ஏற்கனவே போட்டிக்கு முன்பாகவே அஸ்வினை பார்த்து ஜாக்கிரதையாகத்தான் ஆட வேண்டும் என்கிற மனநிலையோடு இருந்த ரூட்டுக்கு இந்த விக்கெட் ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துவிட்டது. இதனால் அஸ்வினின் ஓவரில் ரூட் பெரிதாக ரிஸ்க் எடுக்கவில்லை. இரண்டாவது செஷனில் அஸ்வின் பந்தை காற்றில் நன்கு ட்ரிஃப்ட் செய்து வீசிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ரூட் ஸ்வீப் ஆடவோ அல்லது இறங்கி ஆடவோ முயற்சி செய்திருந்தால் விக்கெட்டை விட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். எனவே, அஸ்வினை விட்டுவிட்டு வாஷிங்டன் சுந்தரையும் நதீமையும் டார்கெட் செய்து அடித்தார் ரூட்.
ரூட் தனது திட்டம் போலவே ஸ்வீப் ஷாட்களை எந்த தடுமாற்றமும் இன்றி ஆடி ரன்களை சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல் போட்டிகளில் குட் லெந்துக்கும் ஃபுல் லெந்துக்கும் இடையில் ஒரு லெந்தை பிடித்து தொடர்ந்து வீசியிருந்தார். இந்த லெந்த் பேட்ஸ்மேனை Front foot/ Back foot ஷாட் செலக்சனில் குழப்பி தடுமாற செய்யும். இந்த லெந்த்தான் அவரின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது. ஆஸியிலும் இதே லெந்தைதான் வீசியிருப்பார். இடையிடையே ஃபுல் லெந்தை வீசியிருப்பார். ஆனால், இன்று முழுவதுமாகவே ஃபுல் லெந்தாக வீசி ரூட்டையும் சிப்லேவையும் முடிந்தால் ஸ்வீப் ஆடுங்கள் என்று சேலஞ்ச் செய்வது போல வீசினார். வாஷியிடமும் ஸ்பின் இருக்காது, பிட்ச்சிலும் ஒன்றுமே இல்லை என்பதால் இந்த லெந்த் அட்டாக் ரூட் ஸ்வீப் ஆடுவதற்கு வசதியாக அமைந்துவிட்டது.
ஷபாஷ் நதீம் ரூட் ஸ்வீப் ஆடுவதை தடுப்பதற்காக ஷாட் பிட்ச்சாக வேகமாக வீசி அடிபட்டுக்கொண்டிருந்தார். அஸ்வினை முதலில் அமைதியாக எதிர்கொண்ட ரூட் இன்றைய நாள் முடிகிற நேரத்தில் ஸ்வீப் ஆடி சிக்சர் அடித்து மிரட்டினார்.
நியுபால் எடுப்பதற்கு முன்பாக வாஷி 78 வது ஓவரில் ஒரு சிங்கிள் தட்டி தனது 20 வது சதத்தை அடித்தார். 128 ரன்களோடு நாட் அவுட்டாக இன்றைய நாளை முடித்திருக்கிறார்.
ஆசியாவில் ரூட் அடிக்கும் ஹாட்ரிக் சதம் இது. இதன் மூலம் ஃபார்ம் அவுட்டின் போது இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்
இந்த சதத்தின் மூலம் 100 வது போட்டியில் சதமடித்த 9 வது வீரர் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இரண்டாவது வீரர் என்கிற சாதனையை படைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் முதலிடத்திற்கு சென்றுவிட்டார். இங்கிலாந்து அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிவிட்டார்.
நாளை ரூட் தொடர்ந்து ஆடும்பட்சத்தில் இன்னும் பல சாதனைகள் உடைபடும்.
- Vj Sriram
Comments
Post a Comment