தமிழகத்தில் தேர்தல் எப்போது?? #Elections #Tamilnadu
தமிழகத்தில் தேர்தல் எப்போது?? #Elections #Tamilnadu
தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவிருக்கிறது.
தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் நடைபெறும் நாளுக்கும் இடையே குறைந்தப்டசம் ஒரு மாதமாவது இடைவெளி இருப்பது வழக்கம்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 10 ம் தேதி வெளியானது. எட்டுக் கட்டங்களாக நடைபெற்ற அந்த தேர்தலில் முதல் கட்டம் ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கியது. சரியாக ஒரு மாத இடைவெளி. தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி தேர்தல் நடந்தது.
தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 24 ம் தேதியோடு முடிவடைகிறது.
இன்று பிப்ரவரி 26, தேர்தல் அறிவிப்பு வெளியாகப்போகிறது. சரியாக ஒரு மாதம் என கணக்கிட்டால் மார்ச் கடைசியில் தேர்தல் இருக்க வேண்டும். ஆனால், அவ்வளவு சீக்கிரமாக நெருக்கி தேர்தல் வைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் மார்ச் கடைசி வாரம் என்கிற ஆப்சன் அடிபட்டுவிடுகிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 21 இல் தான் தேர்வுகள் முடிவுகிறது. தேர்தல் வேலையில் ஆசியர்கள்தான் பயன்படுத்தப்படுவார்கள். மேலும், பள்ளிகளில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்பதால் ஒரு மாநிலத்தின் பள்ளித்தேர்வுகளை மனதில் வைத்தே தேர்தல் ஆணையம் தேர்தல்களை அறிவிக்கும். மேலும், தமிழகத்தில் 67,000 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை கொரோனா காரணமாக இந்த முறை 97000 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே வழக்கத்தை விட அதிக பள்ளிகளும் ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட போகிறார்கள். ஆக, மே மாதம் தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.
மார்ச்சும் இல்லை மே வும் இல்லை என்பதால் ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்து ஏப்ரலுக்குள்ளாகவே புதிய அரசு பதவியேற்றுவிடும் என்றே தெரிகிறது.
- உ.ஸ்ரீ
Comments
Post a Comment